under review

கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சி (1941)

From Tamil Wiki
ஆர்.எச்.நாதன்

கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சி (1941) : மலேசியாவில் நிகழ்ந்த தொழிலாளர் கிளர்ச்சி. மார்ச் 1941 தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள ரப்பர் தோட்டங்களில் பணிபுரிந்து வந்த இந்தியத் தொழிலாளர்கள் தொடர்ச்சியான பல வேலை நிறுத்தங்களை நடத்தினர். அப்போராட்டம் தீவிரம் அடைந்தபோது, அன்றைய மலேசிய கூட்டாட்சி அரசு வன்முறையைப் பயன்படுத்தி அதனை ஒடுக்கியது. அதன் விளைவாகச் சிலர் உயிர் இழந்தனர். இதுவே கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சி என அழைக்கப்படுகிறது. அன்றைய மலாயாவில் முதன்முறையாகப் பெரிய அளவில் நடைபெற்ற அந்த வேலை நிறுத்தத்திற்கு மூல காரணமாக இருந்தவர் ஆர்.எச். நாதன்.

வரலாற்றுப் பின்புலம்

பத்திரிக்கை செய்தி

1933 - 1936 ஆண்டுகளில் ரப்பர் விலை 250 சதவிகிதம் உயர்ந்தது. ஆனால் முதலாளிகள் பொருளாதார வீழ்ச்சியின்போது குறைத்த நாள் சம்பளமான 40 காசையே வழங்கினர். 1937-ல் தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் சுரண்டப்படுவதை உணரத்தொடங்கினர். இதனால் தோட்டத்தொழிலாளர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் காட்டி, தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் குறைக்கப்பட்டது குறித்து இந்தியாவிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. 1938-ல் மலாயா ஐக்கிய தோட்ட அதிபர்கள் சங்கம், சரிந்து வரும் பொருளாதார வீழ்ச்சியைச் சரிகட்டும் முகமாக, மேலும் ஓர் ஊதியக் குறைப்பைப் பரிந்துரைத்தது. பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் அதற்கெதிர் நடவடிக்கையாக, தனிப்பயிற்சியற்ற (unskilled) தொழிலாளர் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. இதன் காரணமாக தோட்ட முதலாளிகள் தொழிலாளர்களிடம் பேரம்பேசும் நிலைக்கு வந்தனர். அப்போதைய உற்பத்தி நிலையை அதிகரிக்கவோ அல்லது அதே அளவில் பராமரிக்கவோ தொழிலாளர்களுக்குச் சலுகைகள் அளிக்க வேண்டிய நிலைக்கு தோட்ட அதிபர்கள் தள்ளப்பட்டார்கள். இறுதியில் நாள் சம்பளம் 50 காசாக உயர்த்தப்பட்டது.

அதே காலக்கட்டத்தில் ஐரோப்பாவில் நடைபெற்று வந்த போர், ரப்பர் தேவையை அதிகரித்தது. 1940-ன் பிற்பகுதியிலும் ஜனவரி 1941-லும் சம்பளத்தையும் அடிப்படை வசதிகளையும் உயர்த்துமாறு இந்தியத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பிப்ரவரி 1, 1941-ல் மலேசிய ஐக்கிய தோட்ட அதிபர்கள் சங்கம் ஆண்களுக்கு 55 காசும் பெண்களுக்கு 45 காசும் தருவதாக பரிந்துரைத்தது. இதில் திருப்தி அடையாத தோட்டத் தொழிலாளர்கள் அடுக்கடுக்கான வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர்.

நிலையைச் சரிகட்ட தொழிலாளர் ஆணையர் சி. டபிள்யு. வில்சன் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் சார்பில் பேச மலாயா மத்திய இந்திய சங்கம் (ம.ம.இ.ச)சார்பாக ராகவனை அனுமதித்தது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ராகவனும் ஆர். எச். நாதனும் வேலை நிறுத்தக் காரர்களைச் சந்தித்து ஏப்ரல் 9 வரை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஏப்ரல் 9 ஆண்களுக்கு 60 சென் பெண்களுக்கு 50 சென் என அறிவிக்கப்பட்டது. இதே காலக்கட்டத்தில் சீனர்களின் நாள் சம்பளம் 1.50 காசாகும்.

தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பினாலும் பிற கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்காததால் 1941 ஏப்ரல் மாதம் மீண்டும் ஆங்காங்கு போராட்டங்கள் வெடித்தன. மே 8-ஆம் திகதி அது கலகமாக மாறியது. கலவரங்கள் மே இறுதிவரை நீடித்தது.

இச்சம்பவம் பெரும்பாலும் சிலாங்கூர் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிள்ளான் வட்டாரத்தைச் சுற்றியே நடந்தன. ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு சதுரமைல் பரப்பில் இருந்த தோட்டங்கள் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டன. போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது இருபதாயிரம் பேர் அதில் ஈடுபட்டிருந்தனர் என ஜெனரல் ஈ. பேகோட்டின் தனது அறிக்கையில் கூறுகிறார்.

ஆங்கிலப் பத்திரிகை செய்தி

போராட்ட நிலைகள்

கிள்ளான் போராட்டத்தை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.

முதல் பகுதி

சி ஐ ஏ எம் மற்றும் உப்பாம் இடையிலான சம்பளப் பேச்சு வார்த்தையில் முடிவு உண்டாகவில்லை. உப்பாம் வலியுறுத்திய சம்பள உயர்வை, ஆர். எச். நாதன் தலைமையிலான கிள்ளான் வட்டார இந்தியர் சங்கம் ஆட்சேபித்தது. இதன் காரணமாக வேலை நிறுத்தங்கள் பரவ ஆரம்பித்தன. 1941-ஆம் ஆண்டு பிப்ரவரி துவக்கம் முதல் ஏப்ரல் 8 வரை நடைபெற்ற வேலைநிறுத்தங்கள் அமைதியாக நடைபெற்றன.

இரண்டாம் பகுதி

கலந்தாலோசனைக்குப் பின் ஆண் தொழிலாளர்களுக்கு 60 காசும் பெண் தொழிலாளர்களுக்கு 50 காசும் தரவிருப்பதாக உப்பாம் அறிவித்தது. இவ்வறிவிப்பு நடந்த ஒருவாரத்தில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. ஏப்ரல் 15 முதல் மே 3 வரை 28 தோட்டங்களில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. நிர்வாகம் இதனை எதிர்த்து 24 மணி நேரமும் தண்ணீர் இணைப்பை நிறுத்தியது. ரேஷன் வழங்குவதைத் தடை செய்தது. பட்டினியில் வாடும் தொழிலாளர்களுக்கு உதவ நகரத்திலிருந்து உணவு வழங்க வந்த உறவினர்களையும் நண்பர்களையும் உள்ளே நுழையவிடாமல் தடுத்தது. துணிவு பெற்ற தொழிலாளர்கள் தோட்ட வாயில்களில் காங்கிரஸ் கொடிகளைப் பறக்க விட்டனர். காந்தி தொப்பிகளை அணிந்து தங்கள் மறுப்புகளை வெளிப்படையாகக் காட்டினர்.

மூன்றாம் பகுதி

ஆர். எச். நாதன் மே 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து போராட்டங்கள் தொடங்கின. கிள்ளான் வட்டாரம் முதல் ஜெராம் வரை போராட்டங்கள் பரவின. உணர்வு பொங்க தொழிலாளர்கள் சைக்கிள்களில் அறிக்கைகளை எடுத்துக்கொண்டு தோட்டம் தோட்டமாகச் சுற்றினர். நாதனின் கைது தோட்டத்தொழிலாளர்களை எழுச்சியுற செய்தது. தொழிலாளர்கள் ஆர். எச். நாதனை ஒரு கதாநாயகனாகவே பார்த்தார்கள். எனவே மே 7-ஆம் தேதி கோலாலம்பூர் தொழிலாளர் அலுவலகத்தின் முன்பும் மே 10-ஆம் தேதி கிள்ளான் காவல் நிலையம் முன்பும் திரண்டனர். தோட்டங்களில் ரப்பர் மரங்கள் சாய்க்கப்பட்டன. தோட்டச் சாலைகள் மூடப்பட்டன. தொலைப்பேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. போலிசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் கைகலப்புகள் மூண்டன. அரசாங்கம் கலவரத்தை அடங்க ஈப்போவிலிருந்து பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தை அனுப்பியது. மே 17 அன்று வேலை நிறுத்தங்கள் முடிவுக்கு வந்தன.

போராட்டத்தை முன்னெடுத்தவர்கள்

மலாயா தொழிலாளர் போராட்டங்கள்

கிள்ளான் தொழிலாளர்களின் நலன் கருதி 1940-ல் உருவாக்கப்பட்ட கிள்ளான் வட்டார இந்தியர் தொழிற்சங்கமே மலாயாவின் முதல் இந்தியர் தொழிற்சங்கமாகக் கருதப்படுகிறது. இந்தச் சங்கத்தின் துணை கொண்டே வேலை நிறுத்தங்கள் நடந்தன. இந்தச் சங்கம் சட்ட விரோதமாக செயல்பட்டதாகக் கூறப்படுவதால் முறையான ஆவணங்கள் இல்லை. ஹெச். ஈ. வில்சன் இது குறித்து வாய்மொழி வரலாறாகவே சேகரித்துள்ளார்.

சங்கத்தின் முதல் தலைவராக இருந்தவர் ஒய். கே. மேனன். இவர் ஒரு தோட்ட குமஸ்தா. மே 1941-ல் இவர் சிங்கப்பூருக்கு மாற்றப்பட்டதால் ஆர். எச். நாதன் தலைவராக நியமிக்கப்பட்டார். நாதன் 1936-ல் தனது 24-வது வயதில் மலாயா வந்தவர். தமிழ் நேசன் நாளிதழில் முதலில் நிருபராகவும் பின்னர் துணை ஆசிரியராகவும் பணியாற்றிக்கொண்டிருந்தார். இவர் பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்.

தீவிர காங்கிரஸ் ஆதரவாளர்களான மேனனும் ஆர். எச். நாதனும் பலமான சோசலிஸ்ட் கொள்கைப் பிடிப்பு கொண்டவர்கள். தொழிற்சங்கங்கள் உருவாவதற்கு முன்பே தொழிலாளர்கள் நலனுக்காக உழைத்தவர்கள். இருவரும் மலாயா மத்திட இந்தியச் சங்கத்தின் உறுப்பினர்கள். இருவரது நடவடிக்கைகளும் சட்ட விரோதமானவை, ஆபத்தானவை என தோட்ட நிர்வாகம் கருதியது. மார்ச் 11, 1941-ல் இருவரையும் நெருக்கடிகால விதிகளின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வேலை நிறுத்தத்தின்போது முன்வைத்த கோரிக்கைகள்

1. இந்திய - சீனத் தொழிலாளர்களுக்கு இடையே உள்ள ஊதிய வேறுபாடு களையப்பட வேண்டும்.

2. தொழிலாளர்களைக் கொடூரமாக நடத்தும் தோட்ட அலுவலர்களாக இருந்த இலங்கையர்களையும் மலையாளிகளையும் மாற்றி அவர்களுக்குப் பதிலாக தமிழ் பேசும் அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

3. குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும்.

4. ஐரோப்பியர்களாலும் கறுப்பு ஐரோப்பியர்களாலும் தொழிலாளர் குடும்பத்துப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

5. முறையான மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

6. கள்ளுக் கடைகள் மூடப்பட வேண்டும்.

7. சுதந்திரமாகக் கூட்டம் கூடும் உரிமையும் பேச்சுரிமையும் வழங்கப்பட வேண்டும்.

8. உறவினர்களும் நண்பர்களும் எஸ்டேட்டுகளினுள் சுதந்திரமாக வந்துபோக அனுமதிக்க வேண்டும்.

9. ஐரோப்பிய, ஆசிய மேலாளர்கள் வரும்போது கீழிறங்கிச் செல்லாமல், சைக்கிள் இருக்கையிலேயே அமர்ந்தவாறு பயணிக்க தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

10. 10 - 12 மணி நேர வேலை கைவிடப்பட வேண்டும்.

11. நிர்வாகக் குறைகளை தெரிவிப்போர் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கக்கூடாது.

12. தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தொழிலாளர்கள் ஒன்று திரளவும் சங்கம் ஒன்றை அமைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட வேண்டும்.

விளைவுகள்

இராணுவம் மேற்கொண்ட அடக்குமுறையில் 5 பேர் மண்டனர். 386 பேர் கைதாகினர். 21 பேர் நாடு கடத்தப்பட்டனர். 95 பேர் தன்னிச்சையாக இந்தியா திரும்பினர். 49 பேர் கிள்ளான் வட்டாரத்தில் இருந்து வெளியேறினர். ஆர். எச். நாதன் மே 19-ல் நாடு கடத்தப்பட்டார். மரணமடைந்தவர்கள் மாயாண்டி, ரெங்கசாமி, ஏழுமலை, கொந்நேரி, அங்கப்பன் என ஆய்வாளர் சாமிநாதன் முனுசாமி தன் ஆய்வின் வழி அடையாளம் கண்டுள்ளார்.

புனைவுகளில் கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சி

  • அ. ரெங்கசாமி எழுதிய விடியல் இந்தப் போராட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். (2012)
  • கிள்ளான் கிளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்த சீனத்தொழிலாளர் இந்தியர் தொழிலாளர் சம்பள வித்தியாசத்தை கபாலி திரைப்படம் பதிவு செய்தது. (2016)

உசாத்துணை


✅Finalised Page