under review

நினைவுச்சின்னம்

From Tamil Wiki
நினைவுச்சின்னம்

நினைவுச்சின்னம் ( 2005) மலேசிய எழுத்தாளர் அ.ரெங்கசாமி எழுதிய நாவல். மலேசியா வழியாக ஜப்பானியர் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் உருவாக்கிய சயாம் மரண ரயில் என அழைக்கப்படும் ரயில்பாதை அமைப்பதற்காக கட்டாய உழைப்புக்கு இழுத்துச் செல்லப்பட்டு உயிர்துறந்த தமிழர்களின் வரலாற்றை இந்நாவல் சொல்கிறது.

வரலாற்றுப் பின்புலம்

சயாம் மரண ரயில்பாதை என அழைக்கப்படும் ரயில்பாதையை 1942-ல் ஜப்பானியர் அமைத்தனர். ஜப்பானியர் இரண்டாம் உலகப்போரின் இரண்டாம் கட்டத்தில் 1942-ல் மலாயாவை ஆட்சி செய்த பிரிட்டிஷாரை தோற்கடித்து சிங்கப்பூரையும் மலேசிய மையநிலத்தையும் கைப்பற்றினர். அந்நிலப்பகுதியை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றால் துறைமுகத்தில் இருந்து உள்நாடுகளுக்கு செல்லும் ரயில் இணைப்பு தேவை என உணர்ந்தனர். மேலும் சயாம் (தாய்லாந்து) நாட்டில் உள்ள பாங்காங் துறைமுகத்தில் இருந்து பர்மா வழியாக இந்தியா வரை ஓர் இருப்புப்பாதை போடப்பட்டால் தரைவழியாகப் படைகளைக் கொண்டுசென்று இந்தியாவை கைப்பற்றலாம் என திட்டமிட்டனர். ஆகவே பாங்காங் முதல் பர்மாவின் ரங்கூன் வரை ஒரு ரயில்பாதை போடப்பட்டது. மிகக்குறுகிய காலத்தில் இந்த ரயில்பாதை போடப்பட்டது. சிறைக்கைதிகளுடன் மலேசியாவில் இருந்து வலுக்கட்டயாமாக அழைத்துவரப்பட்ட பல்லாயிரக்கணக்கான தோட்டத்தொழிலாளர்களும் அதில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களை வரச்செய்யும்பொருட்டு தோட்டங்கள் செயற்கையாக மூடப்பட்டன. முற்றிலும் எதிர்மறையான சூழலில் கடுமையான மழையிலும், மலேரியா போன்ற நோய்களிலும், மிகக்குறைவான உணவாலும் பல்லாயிரம் தமிழ் உழைப்பாளிகள் அந்த ரயில்பாதைப்பணியில் உயிர்துறந்தனர்.1945 ல் மீண்டும் பர்மாவும் தாய்லாந்தும் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்டன. மலேசியத் தொழிலாளர்கள் திரும்பிச்சென்றனர். நினைவுச்சின்னம் இந்த வரலாற்றுப்பின்னணியில் எழுதப்பட்டது (பார்க்க சயாம் மரண ரயில்பாதை )

முன்னோடி நாவல்

சயாம் மரண ரயில்பாதையின் வரலாற்றுப் பின்னணியில் சயாம் மரணரயில் என்னும் நாவல் ஆர்.சண்முகம் எழுதி 1993-ல் வெளியாகியிருக்கிறது.

எழுத்து, வெளியீடு

1990-ல் மயில் என்னும் மலேசிய வார இதழில் இந்நாவல் தொடராக வெளிவந்தது. 2005-ல் இது சிலாங்கூர் : பிந்தான் அச்சகம் வெளியீடாக நூல்வடிவம் கொண்டது

கதைச்சுருக்கம்

1943-ஆம் ஆண்டு தோட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் சயாமுக்கும் பர்மாவுக்கும் இடையில் இரயில் பாலம் அமைக்க விலங்குகளைப்போல மேல் கூரையில்லாத மொட்டை இரயில் வண்டிகளில் அடைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதிலிருந்து 'நினைவுச்சின்னம்’ நாவல் தொடங்குகிறது. அதிகபட்சம் பதினைந்து பேர் மட்டுமே அமரக்கூடிய ஒரு பெட்டியில் முப்பது பேர் வரையில் அடைக்கப்படுகின்றனர். இரவின் குளிரும், பகல் புழுக்கமும், மழையின் சாரலும் உடலை வதைக்க வழி நெடுகிலும் மரணங்களைச் சந்தித்தபடியே நிகழும் நெடிய பயணம் அது. இரயில் பயணம் ஒரு கட்டத்தில் முடிய, 'போம் போங்’ எனும் இடத்திலிருந்து இருவர் ஒரு அரிசி மூட்டையைச் சுமந்து செல்ல வேண்டும் என்ற கட்டளையோடு. அவர்களின் நடைப்பயணம் ஏழு நாட்கள் தொடர்கிறது. ஆங்காங்கே ஜப்பானியர்களால் கொடுக்கப்படும் புழுக்கள் நெளியும் உணவை புழுக்களை பொறுக்கி எறிந்துவிட்டு உண்ணும் அளவிற்கு துயரம் பழக்கமாகிவிடுகிறது.

ஏழு நாள் பயணத்தின் பின் பாட்டாளிகள் வேலை செய்ய வேண்டிய இடத்தை அடைகின்றனர். ஏற்கனவே பல ஆயிரம் பேர் தங்கிச் சென்ற அல்லது மாண்ட பூத்தாயான (தங்குமிடம்) அதில் துர்வாடையும் மலத்தின் மிச்சங்களும் பிசுபிசுக்கின்றன. களைப்பில் வேறுவழியில்லாத பாட்டாளிகள் அதிலேயே உறங்குகின்றனர். கடுமையான மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு குடிலுக்குக் கீழ்ப் பகுதியில் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பிணங்கள் வெளியேறுகின்றன. அங்கே மிகக்கடுமையான சூழலில் தமிழர்கள் ஜப்பானியர்கள் நடுவே அடிமைகளாக வேலை செய்கிறார்கள். அவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுகிறார்கள். மழைக் காலங்களிலும் நனைந்தபடியே வேலை செய்ய வேண்டியிருக்கிறது. காலராவில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இதற்கு முன் இறந்தவர்களின் பிணங்களோடு சேர்த்து அடுக்கப்படுகின்றனர். வேலையில் பழுதான உடல் பாகங்கள் எவ்வித கேள்வியும் இல்லாமல் இரம்பத்தால் அறுக்கப்பட்டு அகற்றப்படுகின்றன. மரணம் அனைவருக்கும் பழக்கமாகிறது. இன்றும் மரணம் நடக்குமா என்ற கேள்வி மெல்ல அழிந்து, இன்று இறக்கப் போவது யார் என்றே எல்லோர் வாயிலும் எழுகிறது

ஏறத்தாழ மூன்று வருடங்கள் இந்தக் கொடுமையை அனுபவித்தவர்கள் ஆங்கிலேயர்களின் ஜப்பானியர்களைத் தாக்கத் தொடங்கியதும் இறந்தவர்களையும் காணாமல் போனவர்களையும் மறந்துவிட்டு ஊர் திரும்புகின்றனர். இரப்பர் காடு மீண்டும் அவர்களை வரவேற்கிறது.

இலக்கிய இடம்

நினைவுச்சின்னம் சயாம் மரணரயில் நிகழ்வின் அவலங்களை தனித்தனி நிகழ்வுகளாக பதிவுசெய்கிறது. அந்நிகழ்வுகளின் அரசியல் பின்னணியையோ, அத்தகைய நிகழ்வுகளில் மனிதர்கள் கொள்ளும் வெவ்வேறு உளநிலைகளையோ தேடிச்செல்லவில்லை. ஜப்பானியர், தமிழர் அனைவரும் எளிமையாக ஒற்றைப்படைத் தன்மையுடன் காட்டப்படுகின்றனர். தமிழர்கள் அப்பாவிகளாகவும், கேள்விகளில்லாமல் சாகும் எளிய மக்களாகவும், நல்லியல்புகள் மட்டுமே கொண்டவர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். "சயாம் மரண இரயில் போடச் சென்ற தமிழ்ப் பாட்டாளிகளின் சோகக் கதைகளை மட்டுமே தொகுக்க முயன்றுள்ளார். வரலாறு என்பது ஒற்றைப்படையானது அல்ல. அதன் ஆசிரியர் நாவல் வழி பல்வேறு தரப்பினரின் மனங்களில் ஊர்ந்து செல்ல வேண்டுமே தவிர குறிப்பிட்ட ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு அதற்கேற்ப மொத்த வரலாற்றையும் கணிப்பது புனைவில் உள்ள ஒரு குறைபாடுதான்." என ம. நவீன் இந்நாவலை மதிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page