under review

வல்லினம் விருது

From Tamil Wiki
வல்லினம் விருது

வல்லினம் விருது, வல்லினம் இலக்கியக் குழுவினால் 2014-ம் ஆண்டு முதல் மலேசிய தமிழ் எழுத்துலகில் முதன்மையான ஆளுமைகளைச் சிறப்பு செய்யும் வகையில் வழங்கப்படும் விருது ஆகும்.

நோக்கம்

மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலுக்கு புனைவுகள், ஆய்வுகள், செயல்பாடுகள் என பங்களிக்கும் ஆளுமைகளை பொதுவெளியில் கவனப்படுத்தவும் கௌரவப்படுத்தவும் இவ்விருது வழங்கப்படுகிறது. எனவே இவ்விருது குறிப்பிட்ட கால எல்லை வரையறை என இல்லாமல் முதன்மையான ஆளுமைகளுக்கும் பங்களிப்புகளுக்கும் திட்டமிடப்பட்டு வழங்கப்படுகிறது.

விருது பெற்ற ஆளுமைகள்

2014-ல் ஐயாயிரம் ரிங்கிட் ரொக்கப் பணமும், கேடயமும் ஆக இவ்விருது தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வல்லினம் விருது விழாவை ஒட்டியும் விருது பெறுபவரின் புதிய நூல்கள் வெளியிடப்படும். மேலும் விருது பெறும் எழுத்தாளரின் ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு விருது விழாவை ஒட்டி வெளியிடப்படும். விருது விழாவுக்கு முன்பே பல்வேறு ஊடகங்கள் வழியாக விருது பெறும் ஆளுமை குறித்த விரிவான அறிமுகங்கள் வழங்கப்படும்.

விருது பெற்றோர்
2014
அ. ரெங்கசாமிக்கு வல்லினம் விருது

முதல் வல்லினம் விருது எழுத்தாளர் அ. ரெங்கசாமிக்கு வழங்கப்பட்டது. இவ்விருது விழா நவம்பர் 2, 2014-ல் கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் மதியம் 2 மணிக்கு நடைபெற்றது. விருதை வழக்கறிஞர் சி. பசுபதி வழங்க எழுத்தாளர் அ. ரெங்கசாமி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கவிஞர் லீனா மணிமேகலை சிறப்புப் பிரமுகராகக் கலந்துகொண்டார். மலேசிய இந்தியர்களின் பல்வேறு இக்கட்டான காலக்கட்டங்களை புதியதோர் உலகம், நினைவுச்சின்னம், லங்காட் நதிக்கரை, இமயத் தியாகம், விடியல் என வரலாற்று நாவல்களாக எழுதியதை முன்னிட்டு அ. ரெங்கசாமிக்கு இவ்விருது வழங்கப்பட்டது. மேலும் அ. ரெங்கசாமியின் முழு வாழ்க்கை வரலாறு அடங்கிய 'சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை' எனும் நூலும் இந்த விருது விழாவில் வல்லினம் பதிப்பகம் மூலம் வெளியீடு கண்டது. மேலும் எழுத்தாளர் ம.நவீன் இயக்கத்தில் அ. ரெங்கசாமியின் ஆவணப்படமும் வெளியீடு கண்டது.

2019

இரண்டாவது வல்லினம் விருது எழுத்தாளர் சை. பீர்முகம்மது அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விருது விழா டிசம்பர், 2019-ல் கூலிமில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்த விருது விழா நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சு. வேணுகோபால் மற்றும் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி ஆகியோர் சிறப்புப் பிரமுகர்களாகக் கலந்துகொண்டனர். 90-களில் சோம்பிக்கிடந்த மலேசிய சிறுகதை உலகை, தன் சுயமுனைப்பின் காரணமாக 'வேரும் வாழ்வும்' எனும் மலேசிய எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை மூன்று பெரும் தொகுப்புகளாக நூலுருவாக்கியதோடு அதை பரவலான கவனத்துக்கு எடுத்துச் செல்ல எழுத்தாளர் ஜெயகாந்தனை மலேசியாவுக்கு வரவழைத்து கூட்டங்கள் நடத்தியவர் சை.பீர்முகம்மது. மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலகத் தமிழ் வாசகர்களிடம் எடுத்துச் சென்ற முன்னோடி எனும் அடிப்படையில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. எழுத்தாளர் ஜெயமோகன், இவ்விருதினை எழுத்தாளர் சை. பீர்.முகம்மது அவர்களுக்கு எழுத்து வழங்கினர். இவ்விருது விழாவை ஒட்டி சை.பீர். முகம்மது எழுதிய 'அக்கினி வளையங்கள்' எனும் நாவல் வல்லினம் பதிப்பில் வெளியீடு கண்டது. மேலும் சை. பீர்முகம்மதுவின் ஆவணப்படமும் இந்த விழாவில் எழுத்தாளர் ம.நவீன் இயக்கத்தில் வெளியீடு கண்டது.

2022
சை. பீர்முகம்மதுவுக்கு வல்லினம் விருது
மா. ஜானகிராமனுக்கு வல்லினம் விருது

மூன்றாவது வல்லினம் விருது எழுத்தாளர் மா. ஜானகிராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விருது விழா பிப்ரவரி 27, 2022-ல் தைப்பிங்கில் அமைந்துள்ள கிராண்ட் பேரொன் தங்கும் விடுதியில் மதியம் 2 மணிக்கு நடைபெற்றது. இவ்விருது விழாவில் எழுத்தாளர் மா. சண்முகசிவா, சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி ஆகியோர் சிறப்புப் பிரமுகர்களாகக் கலந்துகொண்டனர். மலேசிய இந்தியர்களின் சொல்லப்படாத வரலாற்றை தொகுப்பது, அதனை ஆங்கில மொழியாக்கம் மூலம் உலக கவனத்திற்கு எடுத்துச் செல்வது, இளம் தலைமுறையினரிம் மலேசிய இந்தியர் வரலாறு சென்று சேர தொடர்ந்து முனைவது எனும் பணிகளுக்காக மா. ஜானகிராமன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் மா. சண்முகசிவாவும் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களுக்கும் இவ்விருதினை அவருக்கு எடுத்து வழங்கினர். இவ்விருது விழாவை ஒட்டி மா. ஜானகிராமன் அவர்களின் 'மலேசிய இந்தியர்களின் மறக்கப்பட்ட வரலாறு' எனும் நூல் வெளியீடு கண்டது. மேலும் இந்த விழாவில் எழுத்தாளர் அரவின் குமார் இயக்கத்தில் மா. ஜானகிராமன் ஆவணப்படமும் வெளியீடு கண்டது.

உசாத்துணை


✅Finalised Page