under review

சை. பீர்முகம்மது

From Tamil Wiki
சை. பீர்முகம்மது

சை. பீர்முகம்மது (ஜனவரி 11, 1942- 26 செப்டெம்பர் 2023) மலேசியாவில் நவீன இலக்கிய முன்னோடிகளில் ஒருவர். 'ஞானாசிரியன்' எனும் புனைப்பெயராலும் அறியப்பட்டவர். புனைக்கதைகள் மட்டுமல்லாமல் திறனாய்வு, இலக்கியப் பேச்சு, கட்டுரைகள் என தொடர்ந்து இயங்குபவர். தொண்ணூறுகளுக்குப் பின்னர் மலேசியாவில் சிறுகதை வளர்ச்சிக்குப் பங்காற்றிவர்களில் முக்கியமான ஆளுமையாகக் கருதப்படுகிறார்.

பிறப்பு ,கல்வி

ஜனவரி 11, 1942-ல் சை. பீர்முகம்மது பிறந்த காலத்தில், மலேசியாவில் ஜப்பானியர் ஆட்சி தொடங்கியது. எனவே குண்டு வெடிப்புகளும் கலவரங்களும் சூழ்ந்த நிலையில்தான் அவர் வளர்க்கப்பட்டார். தமிழத்தின் தேவகோட்டையைச் சேர்ந்த அவரது தந்தை சயாம்-பர்மா தண்டவாளம் அமைக்க அழைத்துச்செல்லப்பட்டதால் பெரியப்பாவின் அரவணைப்பில் வளர்ந்தார். சை. பீர்முகம்மது வீட்டின் ஒரே ஆண் வாரிசு. அவருக்கு ஒரு ஃசைதுன் மற்றும் கத்திஜா என இரு தங்கைகள் உள்ளனர்.

சை.பீர்முகம்மது ஏழு வயதை எட்டியபோது அவரது தாயார் ஃபாத்திமா மரணமடைந்தார். அவரது குடும்பம் வறுமையான சூழலுக்குத் தள்ளப்பட்டது. தண்டவாளப் பணியிலிருந்து மீண்ட தந்தையினால் உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலையில் பீர்முகம்மது சேர்க்கப்பட்டார். எனினும், பக்கத்து வீட்டு கிருஸ்தவ குடும்பத்தினரின் முயற்சியால் இவர் பள்ளி வாழ்க்கைத் தொடர்ந்தது. அவர் பள்ளியில் படிப்பதற்கு தந்தையின் எதிர்ப்பு இருக்கவே பனிரெண்டு வயதில் வீட்டை விட்டு ஓடினார். ஒரு பஞ்சாபி குடும்பத்தில் அடைக்கலமாகி அவர்கள் வளர்க்கும் மாடுகளை பார்த்துக்கொள்ளும் வேலையில் மாதம் முப்பது ரிங்கிட் எனும் சம்பளத்தில் இணைந்தார். அவர்கள் மூலமாகவே கல்வியையும் தொடர்ந்தார். பின்னர் அவரது பெரியப்பாவின் ஆதரவு மீண்டும் கிடைத்து படிவம் 5 வரை இரவுப் பள்ளியில் பயின்றார்.

தனிவாழ்க்கை

இந்திய கைத்தறி நிலைய பணியாளர், இராணுவ முகாம் ஊழியர் என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டவர் பதினான்கு ஆண்டுகள் இலக்கியத்திலிருந்து முழுவதுமாக விடுபட்டு சாலை அமைக்கும் குத்தகை தொழிலில் ஈடுபட்டார். அதில் மலேசியாவில் குறிப்பிடத்தக்க குத்தகையாளரும் ஆனார்.

இவரது மனைவியின் பெயர் சமாரியா. இவருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இலக்கிய வாழ்க்கை

மலேசியாவில் கோ.சாரங்கபாணி நடத்திய 'தமிழ் முரசு' நாளிதழில் வந்த சிறுகதைகள், மர்ம நாவல்கள் என வாசிப்பைத் தொடங்கியவர் அண்ணாதுரை, மதியழகன், நெடுஞ்செழியன் ஆகியோரின் திராவிட இயக்கிய நூல்களைத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தார். இவரது முதல் சிறுகதை 1961-ல் சிங்கப்பூரின் 'மாணவன்' இதழில் வெளிவந்தது. நாளிதழ்கள் நடத்திய போட்டிகளில் பங்கு பெற்றதன் மூலமாகத்தான் சை.பீர்முக்கமதுவின் எழுத்துப் பணி தொடங்கியது. எழுபதுகளில் 'ஆனந்த விகடன்' இதழின் மூலம் ஜெயகாந்தனை அறிந்து இலக்கியத்தின் இன்னொரு முகத்தை புரிந்துகொண்டார். அது இவரது எழுத்தில் மாற்றத்தைக் கொண்டுவரவும் மலேசியாவில் அறியப்பட்ட எழுத்தாளராக உருமாறினார். மலேசியாவுக்கு வந்த நா. பார்த்தசாரதியுடன் அணுக்கமான நட்பு ஏற்பட்டது தன்னை மேலும் சிந்தனை மாற்றம் அடையச் செய்ததாக நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார். இந்த நட்பின் விளைவாக நா. பார்த்தசாரதி நடத்திய 'தீபம்' இதழில் எழுதத்தொடங்கியவர் பிற தமிழக இலக்கிய இதழ்களான கலைமகள், காலச்சுவடு, புதிய பார்வை, கணையாழி, ஓம் சக்தி போன்றவற்றில் தொடர்ந்து தன் படைப்புகள் இடம்பெறச் செய்தார்.

இலக்கியச் செயல்பாடு

சை.பீர்முகம்மது ஜெயகாந்தனுடன்

முத்தமிழ் படிப்பகம், மணிமன்றம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் போன்ற இயக்கங்களில் இணைந்து இலக்கிய வளர்ச்சிக்காக செயல்பட்ட சை.பீர்முகம்மது, தொண்ணூறுகளுக்குப் பின்னர் எந்த இயக்கத்தையும் சாராமல் தனியனாக முயன்று 'வேரும் வாழ்வும்' என்ற மூன்று பெரும் சிறுகதை தொகுப்புகளைப் பதிப்பித்தார். இம்முயற்சிக்காக தன் நிலத்தை விற்றார். இத்தொகுப்புகள் மலேசியாவின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளின் சிறந்த ஆவணமாக அமைந்தது. இந்தத் தொகுப்பு மலேசியா முழுவதும் கவனம் பெற்றதும் எழுத்தாளர் ஜெயகாந்தனை மலேசியாவுக்கு அழைத்து வந்து நாடு முழுவதும் ஏற்பாடு செய்த இலக்கிய நிகழ்ச்சிகளால் மலேசிய சிறுகதை உலகம் புத்துயிர் பெற்றது.

தொண்ணூறுகளுக்குப் பின்னர் சை. பீர்முகம்மதுவின் முன்னெடுப்புகள் மலேசிய இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் அமைந்தன. 'முகில்' எனும் பதிப்பகம் தொடங்கி தமிழகத்தில் மலேசிய எழுத்தாளர்களின் இருபது நூல்களைப் பதிப்பித்தார். அதன் வழி மலேசிய இலக்கியங்கள் தமிழகத்தில் கிடைக்க முயற்சிகளை மேற்கொண்டார். இந்திரா பார்த்தசாரதி, வாசந்தி போன்ற எழுத்தாளர்களை மலேசியாவிற்கு அழைத்து தொடர் இலக்கிய உரையாடல்களை ஏற்படுத்தினார்.

குறுநாவல், பயண கட்டுரை நூல்கள், இலக்கியக் கட்டுரை நூல்கள் என அடுத்தடுத்து வெளியீடு செய்தவர் 2000-க்குப் பின்னர் இளம் படைப்பாளிகளுடன் இணைந்து தன் பணிகளைத் தொடர்ந்தார். 'விருட்சம் மாலை' எனும் குழுவை உருவாக்கி சமகால நவீன கவிதைகள் தொடர்பான உரையாடலை தென்றல் இதழின் அலுவகத்தில் தொடக்கினார். 'சடக்கு' எனும் புகைப்பட ஆவண தளத்திற்காக படங்களைத் தேடிச் சேகரித்த பணியில் இவர் தன்னை இணைத்துக்கொண்டது குறிப்பிடத் தக்க பங்களிப்பு.

ஏற்புகள்,விருதுகள்

மலேசியாவில் இவரது நூல்களுக்கு மாணிக்க வாசகம் விருது இருமுறை கிடைத்துள்ளது, 'பெண் குதிரை' என்ற இவரது நாவல் இந்தியில் மொழிப்பெயர்க்கப்பட்டதுடன் நாமக்கல் சின்னப்பபாரதி அறக்கட்டளையின் விருதையும் பெற்றுள்ளது. மேலும் இவரது சில சிறுகதைகள் மலாய் மற்றும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன.

2019-ல் வெளிவந்த இவரது 'அக்கினி வளையங்கள்' நாவல் கூட்டுறவு சங்கத்தின் விருதைப் பெற்றது.

2019-ல் மலேசிய நவீன இலக்கியத்திற்கான இவரது பங்களிப்பை போற்றும் வகையில் 'வல்லினம் விருது' வழங்கப்பட்டது.

2023-ல் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பிரதமர் அன்வார் இப்ராகிம் பீர் முகம்மதுவின் இலக்கியச் சேவைகளுக்காக அவருக்கு சிறப்பு செய்தார்

மறைவு

சை.பீர்முகம்மது 26 செப்டெம்பர் 2023-ல் கொலாலம்பூரில் மறைந்தார்.

இலக்கிய இடம்

சை.பீர் முகமது படைப்புகள் கலை நுட்பத்துடன் எழுதப்படுவதைக் காட்டிலும் கருத்துகளை முன் வைப்பதையும் பண்பாட்டு அதிர்ச்சியை உருவாக்குவதையும் முற்போக்கு பிரச்சாரத்தை முன்வைப்பதையும் பிரதானமாகக் கொண்டவை. அதனால் மிகை உணர்ச்சியை அதிகம் ஏற்றுள்ளவை. மார்க்ஸியம், பெண்ணியம் தொடங்கி 1990-களில் அதிகம் பேசப்பட்ட மாய எதார்த்தம், பின்நவீனத்துவம் வரை சை.பீர் தன் புனைவுகளில் முயன்றுள்ளார். நேர்கோட்டு கதை சொல்லலில் இருந்து மாறுபட்டு புனைவு உத்தியில் வித்தியாசம் காட்டியதில் சை. பீர்முகம்மது மலேசியத் தமிழ் இலக்கியத்தில் முன்னோடியாகத் திகழ்கிறார்.

இப்படி படைப்பை புறவயமாக மட்டுமே அணுகியதால் அவரது சிறுகதைகளும் குறுநாவலும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இவரது 'வாள்' மற்றும் 'வெண்மணல்' மலேசியாவில் எழுதப்பட்ட சிறந்த கதைகள் பட்டியலில் இடம் பெறத் தக்கவை. இவர் கடைசியாக எழுதிய 'அக்கினி வளையங்கள்' என்ற நாவல் மலேசிய கம்யூனிஸ்ட்டுகளின் சிக்கலான வாழ்வினூடாக பயணிக்கும் ஒரு நிலக்கிழாரின் வாழ்வை பேசும் நாவல். உள்ளடக்கத்திலும் கலை நுட்பத்திலும் இதுவே இவரது முக்கியப் பங்களிப்பாகக் குறிப்பிடப்படுகிறது. மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தை கடல் கடந்து அறிமுகம் செய்த முன்னோடி இவர்.

விருதுகள்

 • செந்தமிழ் மாமணி (1998) - சென்னை தாய்மண் இலக்கியக் கழகம் வழங்கியது
 • எழுத்துச் செம்மல் - பழனி தமிழ் நாட்டுக் கவிஞர் பேரணி வழங்கியது
 • தங்க விருதும் தமிழ்ச் செம்மல் விருதும் தமிழ் நாட்டுப் பாட்டாளி மக்கள் கட்சி வழங்கியது
 • பணமுடிப்பு (1996) - பாரதிதாசன் விழாக் குழுவினர் வழங்கியது
 • மணிச்சுடர் - பினாங்கு மணிமன்றம் வழங்கியது
 • கோ. சாரங்கபாணி விருது (1984) - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கியது
 • தான் ஶ்ரீ ஆதிநாகப்பன் விருது (2007)
 • வல்லினம் விருது (2019)
 • அக்கினி வளையங்கள் நாவல் டான் ஶ்ரீ கே. ஆர் சோமா மொழி இலக்கியத்தின் அனைத்துலக புத்தகப் பரிசு போட்டியின் மலேசியப் பிரிவில் 10,000 ரிங்கிட் பரிசு பெற்றது (2021)

நூல்கள்

சிறுகதை தொகுப்பு
 • வெண்மணல் (சிறுகதைத் தொகுப்பு - 1984)
 • பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் (சிறுகதை - 2008)
கட்டுரைகள்
 • கைதிகள் கண்ட கண்டம் (பயணக் கட்டுரை - 1997)
 • மண்ணும் மனிதர்களும் (பயணக் கட்டுரை - 1998)
 • மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும் (தொகுப்பாசிரியர், 2001)
 • திசைகள் நோக்கிய பயணங்கள் (கட்டுரை, 2006)
கவிதை
 • சந்ததிகளும் ரப்பர் உறைகளும் (புதுக்கவிதை - 2010)
நாவல்
 • பெண் குதிரை (நாவல் - 1997)
 • அக்கினி வளையங்கள் (நாவல் - 2019)
பிற படைப்புகள்
 • வேரும் வாழ்வும் - பாகம் 1 (தொகுப்பாசிரியர், 1999)
 • வேரும் வாழ்வும் - பாகம் 2 (தொகுப்பாசிரியர், 2001)
 • வேரும் வாழ்வும் - பாகம் 3 (தொகுப்பாசிரியர், 2001)

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:19 IST