under review

மா. சண்முகசிவா

From Tamil Wiki
மா. சண்முகசிவா

மா. சண்முகசிவா (அக்டோபர் 25, 1950), மலேசிய நவீன தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'பத்தாங்கட்டை பத்துமலை' எனும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். 'அகம்' எனும் இலக்கிய அமைப்பை நிறுவி, ஈராயிரத்தின் தொடக்கத்தில் உருவான பல இளம் தலைமுறை எழுத்தாளர்களை தீவிர இலக்கியம் நோக்கி வழிநடத்தினார்.

பிறப்பு, கல்வி

மா. சண்முகசிவா அக்டோபர் 25, 1950-ல் அலோஸ்டார் கெடாவில் பிறந்தார். இவர் தந்தை மாணிக்கம்பிள்ளை தமிழகத்தில் மானாமதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். தாயாரின் பெயர் விசாலாட்சி. மா.சண்முகசிவா ஆரம்பக்கல்வியை அலோஸ்டாரில் உள்ள சுல்தான் அப்துல் ஹலிம் ஆங்கிலப்பள்ளியில் கற்றாலும் இராமசாமி செட்டியார் எனும் ஆசிரியர் வழி வீட்டிலேயே தமிழ் கற்றார். ஆரம்பக் கல்வியை மலேசியாவில் முடிந்தபிறகு, உயர்கல்வியை மானா மதுரையில் உள்ள ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்தார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் விலங்கியல் துறையில் பட்டப்படிப்பை முடிந்தார்.

தியாகராசர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே டெல்லியில் இராணுவ உயர் அதிகாரிக்கான பயிற்சியில் இணைந்து, மலேசிய குடியுரிமையை இழக்க விரும்பாமல் பாதியிலேயே வெளியேறினார். பின்னர் மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர் அஸ்திரியா தலைநகரான வியன்னாவில் தோல் வியாதிக்கான மேற்படிப்பைத் தொடர்ந்தார். தொடர்ந்து அயர்லாந்தில் தொழிலியல் மருத்துவ கல்வி கற்று மலேசியாவில் தோல் வியாதி மருத்துவராகப் பணியாற்றுகிறார்.

தனிவாழ்க்கை

டிசம்பர் 1977-ல் பானுமதி அவர்களை திருமணம் செய்துக்கொண்ட இவருக்கு இரண்டு ஆண்கள் ஒரு பெண் என மூன்று பிள்ளைகள்.

இலக்கியப் பணிகள்

மா.சண்முகசிவா மருத்துவ கல்லூரியில் படித்தபோது ஜெயகாந்தன், வி. ச. காண்டேகர், ந.பார்த்தசாரதி, கல்கி ஆகியோரை வாசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு இலக்கிய வாசகர் ஆனார். நண்பர்களோடு இணைந்து 'களம்' என்ற இதழை கல்லூரி அளவில் நடத்தினார்.1972 வெளியான இவ்விதழில் அவரது முதல் கவிதை பிரசுரமானது. பின்னர் 1980-ல் மலேசியாவில் வெளிவந்த 'தமிழ் மலர்' நாளிதழில் இவரது கவிதை மற்றும் சிறுகதைகள் வெளிவரத்தொடங்கின.

1982-ல் மயில் மாத இதழில் சிறுகதை சிந்தனை எனும் கட்டுரைத் தொடரை எழுதினார் சண்முகசிவா. அதன் வழி தமிழில் பெரிதும் அறியப்படாத தீவிர எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகம் செய்து, அவற்றை உள்வாங்கும் விதத்தை உரையாடலாகத் தொடக்கி வைத்தார்.

1985-ல் அரு. சு. ஜீவானந்தன், சாமி மூர்த்தி, அன்புச்செல்வன், மலபார் குமார் போன்றவர்கள் இணைந்து நடத்திக்கொண்டிருந்த இலக்கியச் சிந்தனை எனும் அமைப்பில் பார்வையாளராக பங்கெடுத்து அவ்வமைப்பின் தீவிரம் குறைந்த பின்னர், 1987-ல் 'அகம்’ எனும் இலக்கிய அமைப்பைத் தொடங்கினார். இவ்வமைப்பின் வழி தீவிர இலக்கியங்களை வாசித்து விவாதிப்பதை தொடர் செயல்பாடாக்கினார்.

1999-களில் இவரது சிந்தனையால் உருவான இதழ்தான் செம்பருத்தி. அவ்விதழ் இலக்கியத்தை முன்னெடுத்ததோடு சமூகச் சிக்கல்களையும் அடையாளம் காட்டும் விதமாக வளர்ந்தது. 2000-க்குப் பின்னர் 'கவிதை நதிக்கரையில்' எனும் தொடரை 'மலேசிய நண்பன்' நாளிதழில் எழுதி நவீன கவிதைகளை விரிந்த தளத்தில் அறிமுகம் செய்தார். 'மலேசிய நண்பன்' மற்றும் 'மயில்' சஞ்சிகையில் மா. சண்முகசிவா எழுதிய மருத்துவ கேள்வி பதில்கள் இலக்கிய துணுக்குகளுடன் இணைந்து வந்ததால் மலேசியாவில் பிரபலமாகின. தொடர்ந்து ஆஸ்ட்ரோ தனியார் தொலைக்காட்சியிலும் மருத்துவ கேள்விகளுக்கு பதில் சொல்லத் தொடங்கியவர் அதே தொலைக்காட்சியில் 'இலக்கிய மேடை' எனும் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மலேசிய இலக்கியவாதிகளை அறிமுகம் செய்தார். 2006-க்குப் பின்னர் வல்லினம் வழி உருவான இளம் எழுத்தாளர்களோடு அவர் இலக்கியப் பயணம் தொடர்ந்தது.

சமூகச் செயல்பாடுகள்

1990-க்குப் பிறகு மா. சண்முகசிவாவின் கவனம் சமூக சேவை பக்கம் திரும்பியது. தொடக்கத்தில் கம்போங் காந்தி, கம்போங் லிண்டுங்கான் போன்ற ஏழ்மையான இந்தியர்கள் வாழும் பகுதிகளில் இலவச மருத்துவம் மற்றும் கல்வியை வழங்கியவர், கவிஞர் அகிலன் தொடங்கிய பாரதி இளைஞர் மையத்தில் இணைந்து சேவையாற்றினார். வழக்கறிஞர் பசுபதி அவர்களுடன் இணைந்து EWRF என்ற அறவாரியத்தில் ஆலோசகராக பங்காற்றியவர் 2010-ல் மை ஸ்கில்ஸ் அறவாரியம் என்ற பள்ளி வாழ்விலிருந்து விடுபட்ட மாணவர்களுக்கான ஆளுமை உருமாற்ற கல்லூரியை வழக்கறிஞர் பசுபதியுடன் இணைத்து தோற்றுவித்தார்.

ஆன்மிகம்

1992 முதலே சண்முகசிவா ஆன்மிக ஈடுபாட்டில் தீவிரம் காட்டினார். இலக்கிய வாசிப்பின் வழி வள்ளலாரை அறிந்தவர் வள்ளலாரின் தீவிர பக்தராக மாறினார். அன்பை போதனையாக மாற்ற முடியும் என அறிவியல் ரீதியாகப் பல உரைகள் ஆற்றியுள்ளார். அதன் அடுத்தப் பரிணாமமாக 'அன்பேற்றுதல்' எனும் நூலை எழுதியுள்ளார்.

இலக்கிய இடம்

மா. சண்முகசிவா மலேசிய தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியவர். இவரது கூத்தானின் வருகை, சாமி குத்தம், ஓர் அழகியின் கதை, தவிப்பு போன்றவை வண்ணதாசன், எஸ்.ராமகிருஷ்ணன், இமையம், சு.வேணுகோபால் என பல குறிப்பிடத்தக்க தமிழகப் படைப்பாளிகளால் சிலாகிக்கப்பட்டவை. மலேசியாவில் நவீன இலக்கியம் தொடர்ந்து வளர இளம் தலைமுறையினரிடம் மையமாக இருந்து செயல்பட்டவர்.

நூல்கள்

  • வீடும் விழுதுகளும் (சிறுகதைகள் - 1998)
  • மனதிலிருந்தும் மருந்திலிருந்தும் (மருத்துவ கேள்வி பதில் - 2013)
  • மா.சண்முகசிவா சிறுகதைகள் (தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - 2018)
  • சிறைக் கைதிகளுக்கான மனமாற்ற வழிகாட்டி நூல் - 2020
  • வள்ளலார் வாழ்வும் வாக்கும் (கட்டுரை 2022)
  • அன்பேற்றுதல் (கட்டுரைகள் - 2022)

உசாத்துணை

  • மீண்டு நிலைத்த நிழல்கள் - ம.நவீன்
  • புனைவுநிலை உரைத்தல் - கங்காதுரை

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:48 IST