சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி
- சரஸ்வதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சரஸ்வதி (பெயர் பட்டியல்)
- சுவாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுவாமி (பெயர் பட்டியல்)
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி (1955) (பிரம்மானந்தர், பிரம்மானந்தா) மலேசியாவின் முதன்மையான ஆன்மிக ஆளுமை. தியான ஆசிரமம் எனும் அமைப்பின் மூலம் இடைவிடாத ஆன்மிக பணிகளைச் செய்து வருபவர். நவீன இலக்கிய வளர்ச்சிக்காகப் பங்களிப்பவர். பிரஹ்ம வித்யாரண்யம் எனும் மையத்தை நிறுவி ஆன்மிகம், கலை இலக்கியம், தத்துவம் என அறிவார்ந்த தளத்தில் ஓர் இயக்கமாகச் செயல்படுபவர்.
பிறப்பு, கல்வி
பிரம்மானந்த சரஸ்வதி ஜனவரி 20, 1955-ல் கெடா மாநிலத்தில் உள்ள கூலிம் வட்டாரத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் முனுசாமி. தாயாரின் பெயர் ராஜம்மாள். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் முனியாண்டி. குடும்பத்தில் கடைசி பிள்ளையான இவருக்கு ஏழு சகோதர சகோதரிகள். இவரது பெற்றோர் சொந்த தோட்டத்தில் ரப்பர் உற்பத்தியாளர்களாகப் பணி செய்தனர்.
பிரம்மானந்த சரஸ்வதி 1962-ல் கூலிம் வட்டாரத்தில் உள்ள பிலாம் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். கல்வியில் சிறந்த மாணவர்கள் மட்டுமே பயிலும் பட்லிஷா இடைநிலைப்பள்ளியில் தனது இடைநிலைக்கல்வியை 1968-ல் தொடர்ந்தார். 1973-ல் ஐந்தாம் படிவம் தேறி,1974-75 ஆண்டுகளில் பினாங்கு மெத்தடிஸ் இடைநிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் முடித்தார்
படிவம் ஆறு தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தவர், ஓராண்டுகள் (1976 - 1977) பாடாங் செராய் இடைநிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியர் தொழிலில் நாட்டம் ஏற்படவே கிளந்தான் மாநிலத்தில் அமைந்துள்ள கோத்தா பாரு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஈராண்டுகள் (1977 - 1978) இணைந்து டிப்ளோமா பெற்றார்.
தொழில்
பிரம்மானந்த சரஸ்வதி 1979-ல் உட்புற கிளந்தான் பகுதியான 'பத்து ஜோங்'கில் அமைந்திருந்த தேசியப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலைக்கு அமர்த்தப்பட்டார். 1981 - 1983 வரை கிளந்தானில் அமைந்திருந்த கேரளா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பணி செய்தார். 1984 - 1986 கிளந்தான் தலைநகரான கோத்தா பாருவில் அமைந்திருந்த சபாக் தேசிய பள்ளியில் பணியாற்றினார். 1986-ல் மீண்டும் கெடா மாநிலம் திரும்பியவர் மஹாங் தேசிய பள்ளியில் இணைந்தார். ஈராண்டுகள் அங்கு வேலை செய்தவர் 1988 - 1989 ஈராண்டுகள் லுனாஸ் இடைநிலைப்பள்ளியில் பணியாற்றினார். 1989-ல் தன் 33-ஆவது வயதில் ஆசிரியர் தொழிலில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
ஆன்மிக நாட்டம்
பிரம்மானந்த சரஸ்வதிக்கு பினாங்கு மெத்தடிஸ் இடைநிலைப்பள்ளியில் படிவம் ஆறு பயின்ற காலங்களில் ஆன்மிக நாட்டம் ஏற்பட்டது. பினாங்கில் அமைந்திருந்த ராமகிருஷ்ண மடம் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. இடைநிலைப்பள்ளியின் வரலாற்று ஆசிரியர் பக்கிரிசாமி மூலம் இந்து சமய அடிப்படைகள் குறித்த விளக்கங்களையும் அறிவியல் பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் பரம் மூலம் அடிப்படை பகவத் கீதை மற்றும் சமஸ்கிருத மொழி குறித்த அறிமுகத்தையும் பெற்றார். அதன் நீட்சியாக 1975-ல் மெத்தடிஸ் இடைநிலைப்பள்ளியில் இந்து அமைப்பு ஒன்றைத் தொடங்கி அதை வழிநடத்தினார். சைவ சமய நெறியாளர் புலவர் அருணாச்சலம் (மலாயா பல்கலைக்கழக பேராசிரியர்), மேஜர் சாத்தையா, ஆசிரியர் கோவிந்தசாமி (மலாக்கா சார்), எஸ்.எம். பொன்னையா (அன்றைய இந்து சங்கத் தலைவர்) ஆகியோருடன் இணைந்து கெடா, பினாங்கு, கோலாலம்பூர் என சமய முகாம்கள் செய்வதில் ஈடுபட்டார்.
சுவாமி பிரம்மஶ்ரீ சிவானந்தா அறிமுகம்
1980-ல் மலேசியா வந்த சுவாமி பிரம்மஶ்ரீ சிவானந்தா அவர்களின் ஆளுமையில் ஈர்க்கப்பட்டு அவர் வழிகாட்டலில் தியானம், யோகப்பயிற்சிகள், ஜபம், மந்திர பாராயணம், மூச்சுப் பயிற்சி, எளிமையான யோகாசனங்கள் என ஈடுபட்டார். பத்து ஆண்டுகள் தொடர்ந்த சுவாமி பிரம்மஶ்ரீ சிவானந்தா அவர்களின் மலேசிய வருகையைப் போலவே புதுக்கோட்டை அருகில் பொன்னமராவதியில் அமைந்திருக்கும் அவரது மடத்துக்கு பிரம்மானந்த சரஸ்வதியும் சென்றுவரத் தொடங்கினார். ஓர் ஆன்மிக சாதகனாக ஜபங்கள், மந்திர பாராயணங்கள், நீண்ட தியானம் என ஈடுபட்டார்.
கூலிமில் லட்சுமி பூஜா தியான மன்றத்தின் தோற்றம்
பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் 1980-ல் தான் வசித்த வீட்டில் 'தியான ஆசிரமம்' நிறுவினார். வீட்டின் ஒரு பகுதியில் தன் தாயாருடன் வாழ்ந்தார். தியான ஆசிரமத்தில் பிரதானமாக சமய வகுப்புகளை நடத்தினார். சுவாமி பிரம்மஶ்ரீ சிவானந்தா வருகைக்குப் பிறகு அது லட்சுமி பூஜா தியான மன்றம் எனப் பெயர் மாற்றம் கண்டது.
சின்மயா மிசனில் கல்வி
1989-ல் விருப்பப் பணி ஓய்வு பெற்ற பிரம்மானந்த சரஸ்வதி அதே ஆண்டு மும்பாயில் அமைந்துள்ள சின்மயா மிஷனில் வேதாந்த கல்வி பயிலச் சென்றார். மூன்று ஆண்டுகள் கல்வி கற்றவருக்கு பிரம்மச்சரிய தீட்சை கிடைப்பதில் தடைகள் ஏற்பட்டது. மலேசியாவில் சின்மயா மிசன் கிளை ஒன்றை உருவாக்கினால் மட்டுமே தீட்சை பெற தகுதி பெற்றவராக முடியும் எனும் விதி இருந்தது. ஆன்மிக வாழ்வுக்கு முற்றும் முழுதான சுதந்திரமே தேவை எனக்கருதியதால் பிரம்மானந்த சரஸ்வதி அதற்கு இணங்கவில்லை. 1991-ல் பிரம்மானந்தா எனும் பெயர் சூட்டப்பெற்று தீட்சை பெறாமல் ரிஷிகேஷுக்குப் பயணமானார். ஆன்மிகம் குறித்த பல்வேறு கேள்விகளோடு இந்தியா முழுவதும் அலைக்கழிந்த மனதுடன் திரிந்தார். காசி, ஜெகநாத் பூரி, கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்திரி போன்ற இடங்களில் மூன்று மாதங்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளும் வேட்கையுடன் அலைந்தார். ஆன்மிகம் என்பது உலக நடைமுறையில் இருந்து முற்றிலும் விடுபடுதல் எனும் அவரது நம்பிக்கைக்கும் மூன்றாண்டுகள் அவர் கற்ற தத்துவத்திற்கும் இடையில் நடந்த பல்வேறு அக மோதல்களுக்கிடையில் கோயம்பத்தூர் வந்து சேர்ந்தார்.சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிமுகத்தைப் பெற்றார்.
சுவாமி தயானந்த சரஸ்வதி அறிமுகம்
1991ல் சுவாமி தயானந்த சரஸ்வதி கோயம்புத்தூர் அருகே ஆனைக்கட்டி எனும் இடத்தில் அமைத்திருந்த ஆர்ஷ் வித்யா குருக்குலத்தில் ஆறு மாதங்கள் தங்கி அங்கு நடந்த வேதாந்த அறிமுக முகாமில் கலந்துகொண்டார். சின்மயா மிசனின் முன்னால் மாணவரான சுவாமி தயானந்த சரஸ்வதி தனித்து சுதந்திரமாகச் செயல்படுவது பிரம்மானந்த சரஸ்வதியை ஈர்த்தது. தான் கொண்டிருந்த கேள்விகளுக்கு அந்த ஆறு மாதங்களில் தெளிவுகளைப் பெற்றார். துறவிக்குறிய சுதந்திரத்தை சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களும் கொண்டிருந்ததார். அத்தன்மை அவரை குருவாக ஏற்க வைத்தது. ரிஷிகேஷில் சுவாமி தயானந்த சரஸ்வதியிடமே 1995-ல் சன்யான தீட்சை பெற்றார். சிருங்கேரி மரபில் வந்தவர் எனும் அடையாளமாக அவர் பெயருடன் 'சரஸ்வதி' எனும் பாரம்பரியத்தின் அடையாளம் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களால் இணைக்கப்பட்டது.
தியான ஆசிரமம்
1991-ல் மலேசியா திரும்பிய பிரம்மானந்த சரஸ்வதி லட்சுமி பூஜா தியான மன்றத்தில் பஜகோவிந்தம், பகவத் கீதை போன்ற வேதாந்த வகுப்புகளை நடத்தத் தொடங்கி நாடுதழுவிய அளவில் சமய, ஆன்மிக உரைகளையும் நிகழ்த்தத் தொடங்கினார். தியானம் மற்றும் லட்சுமி பூஜையில் பழக்கப்பட்டிருந்த மன்றத்தில் இதனால் சில முரண்களும் கருத்துவேறுபாடுகளும் ஏற்பட்டன. எனவே 1992-ல் பிரம்மானந்த சரஸ்வதி சுயமாக 'தியான ஆசிரமம்' எனும் பெயரில் இயங்கத் தொடங்கினார்.
பிரஹ்ம வித்யாரண்யம்
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி தனது அறிவியக்க செயல்பாடுகளுக்கு மேலும் ஒரு களத்தை உருவாக்க முயன்றார். 2014-ல் சுங்கை கோப் மலைச்சாரலில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் பிரஹ்ம வித்யாரண்யம் எனும் ஆசிரமத்தைக் கட்ட முடிவெடுத்து 2016-ல் முழுமையாக நிறைவு செய்தார். 200 பேர் தங்கும் வசதியும் 500 பேர் அமரக்கூடிய மண்டபமும் என அந்த ஆன்மிக மையத்தை உருவாக்கினார். ஆன்மிக, இலக்கிய முகாம்கள், ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டி பட்டறைகள், பள்ளி மாணவர்களுக்கான முகாம்கள், இசை, சமயப் பயிற்சிகள் என இடைவிடாது இயங்கச்செய்தார்.
கலை, இலக்கிய ஆர்வம்
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதிக்கு இளமையில் இருந்தே கலை இலக்கியங்களில் ஈடுபாடு இருந்தது. இளமையில் அடிப்படை இசை பயிற்சிகளைப் பெற்றார். இடைநிலைப்பள்ளியில் தமிழ் இலக்கியங்கள் அறிமுகமாகின. பாரதியார், மு. வரதராசன், அகிலன், நா. பார்த்தசாரதி எனத் தொடங்கி ஜெயகாந்தனின் வாசகராக இலக்கிய வாசிப்பைத் தொடர்ந்தார். 2008-ல் எழுத்தாளர் ஜெயமோகனை வாசிக்கத் தொடங்கியவருக்கு நவீன இலக்கியம் மேலும் தீவிரமாக அறிமுகமானது. 2008-க்குப் பிறகு நவீன இலக்கிய வாசிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் கெடா மாநில எழுத்தாளர்களோடு சேர்ந்து 'கூலிம் நவீன இலக்கியக் களம்' எனும் இலக்கியக் குழுவை ஒருங்கிணைத்து தியான ஆசிரமத்திலேயே நவீன இலக்கியம் குறித்த உரையாடல்களை ஒழுங்கு செய்தார். தொடர்ந்து விஷ்ணுபுரம், காடு, கொற்றவை ஆகிய நாவல்களை வாசித்தபிறகு 2009-ல் ஜெயமோகனை அவர் வீட்டில் சந்தித்தார். 2010-ல் நிகழ்ந்த ஜெயமோகனின் மலேசிய வருகையால் ஆன்மிகம் அளவுக்கே இலக்கியத்தையும் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி தன் வாழ்வில் முதன்மை படுத்தத் தொடங்கினார். 2014, 2017, 2018, 2019 என தொடர்ச்சியாக தமிழின் முதன்மையான படைப்பாளிகளைக் கொண்டு இலக்கிய முகாம்களை ஏற்பாடு செய்தார்.
தியான ஆசிரமம், பிரஹ்ம வித்யாரண்யம் பங்களிப்பு
இருபது ஆண்டுகளில் தியான ஆசிரமம் மலேசியாவில் முதன்மையான ஆன்மிக மையமாக தன்னை நிறுவிக்கொண்டது. பிரம்மானந்த சரஸ்வதி மற்றும் அவரது மாணவர்களால் அதன் பல்வேறு செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன.
- ஆன்மிக வகுப்புகள் - 1991 முதல் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி வாரம் முழுவதும் பகவத் கீதை வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாநிலம் என ஏழு நாட்களும் தொடர் பயணத்தில் இருந்தார்.
- பள்ளிகளில் சமய வகுப்பு - முன்னால் பள்ளி ஆசிரியர் என்பதால் பிரம்மானந்த சரஸ்வதி அவர்களுக்குப் பள்ளிகளில் வரவேற்பு இருந்தது. பள்ளி ஆசிரியர்கள் சிலர் அவரது ஆன்மிக மாணவர்களாக இருந்ததால் பள்ளிகளில் சமய வகுப்புகளை 1991 முதல் உருவாக்கினர்.
- தனிநபருக்கான ஆலோசனை சேவை - பிரம்மானந்த சரஸ்வதி தன்னை எப்போதும் சமூகத்துடன் பிணைத்து வைத்திருந்தார். எனவே குடும்பம், வணிகம், திருமணம், தொழில் என பல்வேறு நிலைகளில் சிக்கல் உள்ள தனிநபர்களின் குழப்பங்களைக் களைய ஆலோசகராகச் செயல்பட்டார். மன ரீதியான குழப்பங்களைத் தெளிவடையச் செய்தார்.
- ஜோதிடம் - ஜோதிட வழிகாட்டல், ஜோதிட வகுப்பு போன்றவை பிரம்மானந்த சரஸ்வதி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
- எழுத்து - மொழியில் ஆர்வம் இருந்ததால் வானம்பாடி, பயனீட்டாளர் குரல், மக்கள் ஓசை போன்ற நாளிதழ்களில் ஆன்மிகக் கட்டுரைகள், மனோவியல் கட்டுரைகளை எழுதினார். போலி ஆன்மிகம், வணிக ஆன்மிகம் என பல்வேறு தரப்புகளுக்கு எதிராக அவர் எழுதிய கட்டுரைகள் சர்ச்சைக்கு உள்ளாகின.
- எம். ஏ. இளஞ்செல்வன், கோ. புண்ணியவான், சை. பீர்முகம்மது, கே. பாலமுருகன், மா. ஜானகிராமன் என மலேசிய படைப்பாளிகளின் நூல்களை வெளியிடும் தளமாகவும் தனது ஆசிரமத்தை இயங்கச்செய்தார்.
- ஆதரவற்ற மாணவர் பராமரிப்பு - ஆதரவற்ற மாணவர்களின் பராமரிப்பு இல்லமாகவும் தியான மன்றம் செயல்பட்டது. ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி புகட்டி அவர்களை நம்பிக்கையுடன் சமூகத்திற்கு அனுப்புவதில் தியான மன்றம் முனைப்பு காட்டியது.
- முதியோர் பராமரிப்பு - 2022-ல் முதியோர்களின் பராமரிப்புக்கான தளமாகவும் பிரஹ்ம வித்யாரண்யம் செயல்பட்டு வருகிறது.
- அருளாளர் விருது - கலை இலக்கியத் துறையில் தீவிரமான தொடர் செயல்களால் நேர்மறையான விளைவுகளை உருவாக்கும் ஆளுமைகளை கௌரவிக்கும் நோக்கில் 'அருளாளர் விருது' சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. கலை இலக்கியங்கள் வழி பங்களிப்பை வழங்கியவர்களின் வாழ்நாள் சாதனையைப் போற்றி விருதுத் தொகையாக ஐயாயிரம் ரிங்கிட் வழங்கப்படுகிறது. இசைச்சுடர் சிவசுப்ரமணியம், வயலின் இசைக்கலைஞர் ஜெயலட்சுமி குலவீரசிங்கம், ஆய்வாளர் மருத்துவர் ஜெயபாரதி, பத்திரிகையாளர் எம். துரைராஜ், ஆன்மிக சேவைக்காக சங்கபூஷணம் ருக்மிணி அம்மாள் மற்றும் கர்னல் கரு. சாத்தையா, எழுத்தாளர் அ. ரெங்கசாமி, எழுத்தாளர் ஜெயமோகன் என இவ்விருது மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பொறுப்புகள்
- தியான ஆசிரமம்/ பிரஹ்ம வித்யாரண்யம் தோற்றுனர்
- மலேசிய இந்து சங்கத்தின் ஆலோசகர்
- ஆச்சாரியர் சபா தலைவர்
நூல்கள்
கட்டுரை
- மனமே சுகமே (2003)
- வாழ்வே தவம் (2006)
- குறையொன்றுமில்லை (2014)
- தனியன் (2016)
விருது
- மனமே சுகமே நூலுக்கு மாணிக்கவாசகம் புத்தக விருது - 2004
உசாத்துணை
- பிரம்மானந்த சரஸ்வதி நேர்காணல் - கே. பாலமுருகன்
- குறையொன்றுமில்லை நூல் குறித்து கோ. புண்ணியவான்
- கூலிம் நவீன இலக்கிய கள அகப்பக்கம்
- தியான ஆசிரமம் அகப்பக்கம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:55 IST