under review

எம். துரைராஜ்

From Tamil Wiki
எம். துரைராஜ்

எம். துரைராஜ் (நவம்பர் 11, 1934 - ஆகஸ்டு 24, 2018) மலேசியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர். மதுரம், பூவரசன் என்ற பெயர்களில் எழுதியுள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பத்து ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.

பிறப்பு

எம். துரைராஜ்

எம். துரைராஜ் நவம்பர் 1, 1934-ல் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகிலுள்ள தெம்மாப்பாட்டு எனும் ஊரில் மந்தயா பிள்ளை, சொர்ணம் அம்மாள் இணையருக்குப் பிறந்தார். நான்கு பிள்ளைகள் பிறந்த குடும்பத்தில் அவர் இரண்டாவது பிள்ளை.

கல்வி

எம். துரைராஜ் தன் ஆரம்பக் கல்வியை தமிழகத்தில் பயின்றார். ஆசிரியர் முருகையா இவருக்கு தமிழறிவை போதித்தார். எஸ். எஸ். எல். சி வரை தமிழகத்தில் கற்றார்.  பின்னர் தந்தையுடன் சிங்கப்பூர் சென்று ஒரு தனியார் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார்.ஆங்கிலம், தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.

தனி வாழ்க்கை

பாதைகளும் பயணங்களும்

எம். துரைராஜின் துணைவியாரின் பெயர் சரோஜா.  இவர்களுக்கு நான்கு புதல்விகள்.

இதழியல்

புதுயுகம், மலாயா நண்பன்

எம்.துரைராஜ் 1955-ல் 'புது யுகம்' என்ற சிங்கப்பூரின் வார இதழுக்கு நிருபராகவும் பின்னாளில் அப்பத்திரிகைக்கே ஆசிரியராகவும் பொறுப்பேற்றார். பின்னர் சிங்கையில் வெளிவந்த 'மலாயா நண்பன்' நாளிதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார்.

தமிழ் நேசன்

எம்.துரைராஜ் மலேசியாவில் தமிழ் நேசன் நாளிதழின் துணையாசிரியராகவும் ஞாயிறு பதிப்பின் பொறுப்பாசிரியராகவும் பொறுப்பேற்று எழுத்தாளர்களுக்கு ஊக்கம் கொடுத்தார். 1950 முதல் 1960 வரை அரசியல் விவகாரங்கள், நாடாளுமன்ற சிறப்பு அங்கங்கள், வெளிநாட்டுச் சிறப்பு கட்டுரைகள் மற்றும் தமிழ் இலக்கிய படைப்புக்களை தான் பணியாற்றிய தமிழ் நேசனில் எழுதிவந்தார்.

சங்கமணி

எம்.துரைராஜ் தேசியத் தோட்டத் தொழிற்சங்க மாதந்திரப் பத்திரிகையான சங்கமணியின் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். தேசிய பத்திரிகையாளர் சங்கத்தின் ஆர்வமிக்க உறுப்பினராகவும் திகழ்ந்தார்.

தொலைக்காட்சி

1963-ல் கோலாலம்பூரில் மலேசிய தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டபோது,  எம். துரைராஜ் தமிழ்ச் செய்திப் பிரிவின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 1964-ல் மலேசியத் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு அதிகாரியாக பொறுப்பேற்று பலரையும் அத்துறையில் வளரச் செய்தார். டத்தோஶ்ரீ சாமிவேலு போன்ற பலரை செய்திவாசிப்பாளராக அறிமுகப் படுத்தியவர் திரு. எம். துரைராஜ். அரசுப் பணியிலிருந்து அவர் 1989-ல் ஓய்வு பெற்றார்.

உதயம்

துரைராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அரசாங்க பிரச்சார ஊடகமான 'உதயம்’ பதிரிகைக்கு 1971-ல் கூடுதல் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதில் 14 ஆண்டுகள் பணியாற்றினார்.

இதயம்

ஓய்வு பெற்ற பின்னர் 1990-ஆம் ஆண்டு அவர் 'இதயம்’ மாத இதழைத் தொடங்கினார். பெரும்பாலும் நவீன இலக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்து உருவான அவ்விதழ் பல இளம் எழுத்தாளர்களை வளர்த்தது. எம். துரைராஜ், தன் சமகாலத்திலும்  தனக்குப் பிறகும், தமிழ் பத்திரிகை துறையில் மிக முக்கியமான பத்திரிகையாளர்களை உருவாக்கினார்.

இலக்கிய வாழ்க்கை

1953-ஆம் ஆண்டில் தனது பத்தொன்பதாவது வயதிலேயே எம். துரைராஜ் எழுதத் தொடங்கினார். முதலில் எழுதிய வடிவம் கவிதை. தொடர்ந்து சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் போன்றவற்றை எழுதினார். பயணக்கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்

அமைப்புப் பணிகள்

1963-ல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பதிவு பெற்றபோதே எம். துரைராஜ் அதில் செயலாளரானார். பல பொறுப்புகளை மாறி மாறி ஏற்று 1977-ல் அச்சங்கத்தின் தலைவர் ஆனார். 1977 முதல் 1987 வரை பத்தாண்டுகள் அவர் அப்பதவியில் இருந்தார். சங்கத்தின் அறநிதி திட்டம் உருவாவதற்கு இவர் உழைப்பு முதன்மையானது.

மரணம்

எம். துரைராஜ் ஆகஸ்டு 24, 2018 அன்று தன்  84-ஆவது வயதில் மறைந்தார்.

பங்களிப்பு

எம். துரைராஜ் தன் வாழ்நாளில் ஆதி. குமணன், வே. விவேகானந்தன், சங்கு சண்முகம் போன்ற முதன்மையான பத்திரிகையாளர்களை உருவாக்கினார். அவர் எழுதிய பாதைகளும் பயணங்களும் சுய வரலாற்று நூல் நாட்டில் நடந்த பல்வேறு வரலாற்று தருணங்களைப் பதிவு செய்துள்ளதில் முக்கிய ஆவணமாகத் திகழ்கின்றன

விருதுகள்

  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் அவருக்கு 'வெள்ளிவிழா நாயகர்' எனும் விருது வழங்கப்பட்டது
  • திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை விருது பெற்றுள்ளார்.

நூல்கள்

  • நேரம் வந்துவிட்டது (நாவல்) - 1980
  • பாதைகளும் பயணங்களும் (தன்வரலாற்று நூல்) - 2001
  • நினைக்கத் தெரிந்த மனமே (கட்டுரை நூல்) பினாங்கு பயனீட்டாளர் சங்க வெளியீடு - 2005

உசாத்துணை

  • பாதைகளும் பயணங்களும் - எம். துரைராஜ் (2001)