மா. இராமையா
மா. இராமையா (ஜூலை 30, 1930 - நவம்பர் 13, 2019) மலேசியத் தமிழ் எழுத்தாளர். தமிழ்ச்செல்வன், மலைநாடன், எம்மார்வி போன்ற புனைபெயர்களிலும் எழுதியவர். 1953-ல் இவர் மா. செ. மாயதேவனுடன் இணைந்து வெளியிட்ட 'இரத்த தானம்' மலேசியாவிலேயே பிறந்து தமிழ் கற்றவரால் வெளியிடப்பட்ட முதல் சிறுகதை நூல். 'இலக்கியக் குரிசில்' எனும் இலக்கிய இதழை பல ஆண்டுகள் நடத்தினார். மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியத்தை தொகுத்தவர்.
பிறப்பு, கல்வி
மா. இராமையா ஜொகூர் மாநிலத்தில் உள்ள தங்காக் நகரில் ஜூலை 30, 1930-ல் பிறந்தார். பெற்றோர் சி. மாணிக்கம், பாக்கியம். 1941-ல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதால் நான்காம் ஆண்டு வரை மட்டுமே ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர் ஜப்பானியர் தொடங்கிய பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார். போர் ஓய்ந்தபிறகு ஆங்கிலப் பள்ளியில் சீனியர் கேம்பிரிட்ஜ் வரை பயின்றார்.
தனி வாழ்க்கை
ஏப்ரல் 1, 1953 அன்று அஞ்சல் அதிகாரியாகப் பணியில் இணைந்து ஓய்வு பெற்றார். நவம்பர் 21, 1957-ல் சீர்திருத்தத் திருமணம் புரிந்து கொண்டார் மா. இராமையா. இவர் மனைவி சுந்தரமேரி. இருவருக்கும் ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
இலக்கிய வாழ்க்கை
1946-ல் 'காதல் பரிசு' எனும் சிறுகதையைத் தமிழ் நேசன் நாளிதழில் முதலில் எழுதினார். 1950-ல் சுப. நாராயணன் 'தமிழ் முரசு' நாளிதழ் வழி தொடங்கிய கதை வகுப்பில் கலந்துகொண்டு எழுதும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். பின்னர் கு. அழகிரிசாமி நடத்திய 'இலக்கிய வட்டத்திலும்' பங்கெடுத்தார். திராவிட இலக்கியங்கள் அவரைக் கவரவே முற்போக்கு கருத்துகளைக் கருவாகக் கொண்டு இலக்கியம் படைக்கத் தொடங்கினார். தன் வாழ்நாள் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் 1000-திற்கும் மேற்பட்ட கட்டுரைகளும் 50-க்கு மேற்பட்ட கவிதைகளும் 12 நாவல்களும் எழுதியுள்ளார். பல ஆண்டுகள் 'இலக்கியக் குரிசில்' எனும் சிற்றிதழை நடத்தி வந்தார்.
சமூகப் பணிகள்
1951-ல் தமிழ் இளைஞர் மன்றம் வழி சமூகப் பணியில் ஈடுபடத் தொடங்கினார் மா. இராமையா. அவ்வியக்கத்தில் செயலாளராக இருந்து பின்னர் தலைவராகப் பொறுப்பேற்றார். அதுபோல 1950-களில் அகில மலாயா தமிழர் சங்கம் மற்றும் கோ. சாரங்கபாணி பகுத்தறிவு படிப்பகம் ஆகியவற்றில் செயலாளராகத் தன் பணிகளைச் செய்துள்ளார். 1978-ல் ஜொகூர் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் பின்னர் அவ்வியக்கத்தின் தலைவராகவும் திகழ்ந்தார். 1990-களின் தொடக்கத்தில் தங்கா தமிழர் சங்கத்தின் தலைவராக விளங்கினார். உலகத் தமிழப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர், மலேசியப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர், தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவர், அனைத்துலக தமிழர் ஆவணக் காப்பக இயக்குனர் என பல பொறுப்புகளில் அமர்ந்து இறுதி காலம் வரை சுறுசுறுப்பாக இயங்கினார்.1953-ல் இவர் மா. செ. மாயதேவனுடன் இணைந்து வெளியிட்ட 'இரத்த தானம்' மலேசியாவிலேயே பிறந்து தமிழ் கற்றவரால் வெளியிடப்பட்ட முதல் சிறுகதை நூல். '
இலக்கிய இடம்
1996-ல் மா. இராமையா அவர்கள் தொகுத்த 'மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்' அவர் மலேசிய நவீன இலக்கியத்திற்குச் செய்த கொடை. மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் ஆய்வாளர்களுக்கு இன்று இந்த நூல் முதன்மை தரவுகளை வழங்குகிறது.
பரிசும் விருதுகளும்
- 1978-ல் சென்னை கவிஞர் பாசறை, இலக்கிய குரிசில் எனும் விருதை வழங்கியது
- 1979-ல் ஜொகூர் மாநில சுல்தான், பி.ஐ.எஸ் எனும் விருதினை வழங்கினார்.
- 1992-ல் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் நடத்திய சோலை இருசன் மணி விழாவில் எழிற்கவி ஏந்தல் விருது வழங்கப்பட்டது.
- 1993-ல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், பொற்கிழி அளித்து கௌரவித்தது.
- 1994-ல் அமெரிக்கா உலகப் பல்கலைக்கழகம், இலக்கியத்துக்காக முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
மறைவு
மா. இராமையா நவம்பர் 13, 2019-ல் மரணமடைந்தார்.
நூல்கள்
நாவல்கள்
- மூங்கிற் பாலம் (1965)
- எதிர் வீடு (1978)
- பயணங்கள் முடிவதில்லை (1988)
- அழகின் ஆராதனை (1992)
- சுவடுகள் (1994)
- சங்கமம் (1995)
- மன ஊனங்கள் (2001)
கட்டுரைகள்
- மலேசிய தமிழ் இலக்கிய வரலாறு (1978)
- மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் (1996)
சிறுகதை தொகுப்பு
- பரிவும் பாசமும் (1979)
- சங்கொலி சிறுகதைகள் (1993)
- திசை மாறி பறவைகள் (1998)
- அமாவாசை நிலவு (2000)
- ஆயிரத்தில் ஒருத்தி (2015)
கவிதை தொகுதி
- கவி மஞ்சரம் (1976)
மா.செ. மாயதேவனுடன் இணைந்து எழுதியவை
- இரத்ததானம் (1953 சிறுகதைத்தொகுதி)
- நீர்ச்சுழல் -நாவல் (1958)
உசாத்துணை
- மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு - மா. இராமையா
- மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் - மலேசிய எழுத்தாளர் சங்கம்
இணைய இணைப்பு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:47 IST