முத்தம்மாள் பழனிசாமி
- பழனிசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பழனிசாமி (பெயர் பட்டியல்)
முத்தம்மாள் பழனிசாமி (பிப்ரவரி 5, 1933 - ஏப்ரல் 10, 2024) ஓர் மலேசிய எழுத்தாளர். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இவரது நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது 'நாடு விட்டு நாடு' என்ற நூல் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க சுய வரலாற்று நூல்.
பிறப்பு, கல்வி
முத்தம்மாள் பழனிசாமி பிப்ரவரி 5, 1933-ல் சித்தியவான் வட்டாரத்தில் அமைந்துள்ள செமாலுன் கம்பத்தில் பழனிசாமி, பழனியம்மாள் இணையருக்குப் பிறந்தார். ஐந்து சகோதரிகள் இரு சகோதரர்கள் உள்ள குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை வால்புரோக் தோட்ட தமிழ்ப்பள்ளியில் பயின்றவர் இடைநிலைக்கல்வியை தைப்பிங் நகரில் அமைந்துள்ள கான்வென்ட் பள்ளியில் தொடர்ந்தார். பின்னர் சித்தியவானில் அமைந்துள்ள ஏ.சி.எஸ் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயிற்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
முத்தம்மாள் பழனிசாமி 1960-ல் ஸ்பென்ஸ்(Spence) ஐத் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு நான்கு பிள்ளைகள். முப்பத்து ஐந்து வருடங்கள் பணியாற்றி, 1988-ம் ஆண்டு தலைமை ஆசிரியராகப் பணி ஓய்வு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
இந்தியன் மூவி நியூஸ் இதழில் 'கடல் கன்னி' எனும் சிறுகதையை 1950-களில் எழுதி இலக்கிய உலகில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தியன் மூவி நியூஸில் படைப்புகளை எழுதினார். தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆசிரியர் தொழில் குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார். 2003-ல் தன் பேரக்குழந்தைகளுக்குக் குடும்ப வரலாற்றைச் சொல்லும் பொருட்டு ஆங்கிலத்தில் இவர் எழுதிய நூல் 'From Shore to Shore'. பின்னர் 2005-ல் அந்நூலை தமிழில் 'நாடு விட்டு நாடு' எனும் தலைப்பில் முதல் பாகத்தை வெளியிட்டார். 2006-ல் விரிவான பதிப்பாக இந்நூல் வெளிவந்து கவனம் பெற்றது. 2008-ல் 'நாட்டுப்புறப் பாடல்களில் என் பயணம்' என்ற தலைப்பில் மலேசிய நாட்டுப்புற பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டார்.
சிறப்புகள்
- 2011-ல் வல்லினம் இலக்கியக் குழு இவரது படைப்புலகம் குறித்த உரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தது.
இலக்கிய இடம்
முத்தம்மாள் பழனிசாமி 'நாடு விட்டு நாடு' தமிழில் வந்த குறிப்பிடத்தக்க சுய வரலாற்று நூல்களில் ஒன்று. இந்நூலில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் கோயம்பத்தூரிலிருந்து சஞ்சிக்கூலியாக மலேயா வந்து முன்னேறிய குடும்பத்தின் கதையைப் பதிவு செய்துள்ளார். இவர் தொகுத்த 'நாட்டுப்புற பாடல்களில் என் பயணம்' முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.
இறப்பு
முத்தம்மாள் பழனிசாமி ஏப்ரல் 10, 2024 அன்று காலமானார்.
நூல்கள்
- From Shore to Shore - 2003
- நாடு விட்டு நாடு (பாகம் 1) - 2005
- நாடு விட்டு நாடு (பாகம் 2) - 2006
- நாட்டுப்புற பாடல்களில் என் பயணம் - 2008
உசாத்துணை
- மீண்டு நிலைத்த நிழல்கள் - ம.நவீன்
- நினைவும் வரலாறும்: முத்தம்மாள் பழனிசாமியின் "நாடு விட்டு நாடு" நூலை முன்வைத்து: சுரேஷ் பிரதீப்: நீலி மின்னிதழ்
இணைய இணைப்பு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
06-Sep-2023, 08:59:18 IST