எழுத்து கவிதை இயக்கம்: Difference between revisions

From Tamil Wiki
Line 17: Line 17:


====== தொகுப்புகள் ======
====== தொகுப்புகள் ======
1962ல் எழுத்து இதழ் இரண்டு தொகுப்புகளை கொண்டுவந்தது. ந.பிச்சமூர்த்தி 1938 முதல் 1962 வரை எழுதிய நவீனக் கவிதைகளின் தொகுப்பு காட்டுவாத்து என்ற பெயரில் எழுத்து வெளியீடாக வந்தது. எழுத்து இதழில் எழுதப்பட்ட கவிதைகளை தொகுத்து சி.சு.செல்லப்பா ’புதுக்குரல்கள்’ என்றபெயரில் வெளியிட்டார். எழுத்து வெளியிட்ட 200 கவிதைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 63 கவிதைகள் கொண்டது புதுக்குரல்கள் என்னும் நூல். இவ்விரு தொகுப்புகளும் தமிழில் நவீனக் கவிதைக்கான அடித்தளத்தை உறுதி செய்தன. காட்டு வாத்து நூலுக்கு ந.பிச்சமூர்த்தி எழுதிய எதிர்நீச்சு என்னும் முன்னுரையும் புதுக்குரல்கள் தொகுப்புக்கு சி.சு.செல்லப்பா எழுதிய நுழைவாசல் என்னும் முன்னுரையும் புதுக்கவிதை என்னும் வடிவின் அழகியலை வரையறுப்பவையாகவும், அதன் மீதான எதிர்ப்புகளுக்கு பதில் கூறுவனவாகவும் அமைந்தன. புதுக்குரல்கள் தொகுப்பில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் ஆகியோர் எழுத்து காலகட்டத்திற்கு முந்தையவர்கள். எஞ்சியவர்கள் எழுத்தில் எழுதியவர்கள். இந்தத் தொகுப்பு வெளிச்சம் என்ற பெயரில் 1973ல் மறுபதிப்பாகி கல்லூரிகளில் பாடமாகியது. அவ்வாறாக புதுக்கவிதை கல்வித்துறை ஏற்பையும் அடைந்தது. அதற்கு உதவியவர் மார்க்ஸிய விமர்சகரான பேராசிரியர் சி.கனகசபாபதி.
1962ல் எழுத்து இதழ் இரண்டு தொகுப்புகளை கொண்டுவந்தது. ந.பிச்சமூர்த்தி 1938 முதல் 1962 வரை எழுதிய நவீனக் கவிதைகளின் தொகுப்பு காட்டுவாத்து என்ற பெயரில் எழுத்து வெளியீடாக வந்தது. எழுத்து இதழில் எழுதப்பட்ட கவிதைகளை தொகுத்து சி.சு.செல்லப்பா ’[[புதுக்குரல்கள்]]’ என்றபெயரில் வெளியிட்டார். எழுத்து வெளியிட்ட 200 கவிதைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 63 கவிதைகள் கொண்டது புதுக்குரல்கள் என்னும் நூல். இவ்விரு தொகுப்புகளும் தமிழில் நவீனக் கவிதைக்கான அடித்தளத்தை உறுதி செய்தன. காட்டு வாத்து நூலுக்கு ந.பிச்சமூர்த்தி எழுதிய எதிர்நீச்சு என்னும் முன்னுரையும் புதுக்குரல்கள் தொகுப்புக்கு சி.சு.செல்லப்பா எழுதிய நுழைவாசல் என்னும் முன்னுரையும் புதுக்கவிதை என்னும் வடிவின் அழகியலை வரையறுப்பவையாகவும், அதன் மீதான எதிர்ப்புகளுக்கு பதில் கூறுவனவாகவும் அமைந்தன. புதுக்குரல்கள் தொகுப்பில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் ஆகியோர் எழுத்து காலகட்டத்திற்கு முந்தையவர்கள். எஞ்சியவர்கள் எழுத்தில் எழுதியவர்கள். இந்தத் தொகுப்பு வெளிச்சம் என்ற பெயரில் 1973ல் மறுபதிப்பாகி கல்லூரிகளில் பாடமாகியது. அவ்வாறாக புதுக்கவிதை கல்வித்துறை ஏற்பையும் அடைந்தது. அதற்கு உதவியவர் மார்க்ஸிய விமர்சகரான பேராசிரியர் சி.கனகசபாபதி.


== எதிர்ப்புகள் ==
== எதிர்ப்புகள் ==

Revision as of 22:40, 15 February 2022

புதுக்குரல்

எழுத்து கவிதை இயக்கம் ( 1959 -1965) எழுத்து சிற்றிதழை ஒட்டி உருவான கவிதை இயக்கம். வசனக்கவிதை என்ற பேரில் யாப்பற்ற கவிதை பாரதியால் எழுதப்பட்டு பின்னர் மணிக்கொடி எழுத்தாளர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அதற்கு புதுக்கவிதை என்னும் பெயர் உருவானதும், அதன் வடிவ இலக்கணங்கள் உருவானதும், அதன் முன்னோடிக் கவிஞர்கள் அறிமுகமானதும் எழுத்து இதழ் வழியாகவே. எழுத்து கவிஞர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி கவிதைமுறை கொண்டவர்களானாலும் எழுத்து உருவாக்கிய கவிதைவடிவம் பொதுவானது. அதுவே பின்னாளில் தமிழ்ப் புதுக்கவிதைக்கான அடிப்படையாக ஆனது. (பார்க்க எழுத்து)

வரலாறு

தொடக்கம்

தமிழில் புதுக்கவிதைக்கான அடித்தளத்தை அமைத்தவர் சி.சுப்ரமணிய பாரதியார். அவர் 1922ல் வசனத்தில் எழுதிய கவிதைகள் தமிழில் புதுக்கவிதையின் தோற்றத்திற்கு அடித்தளம் அமைத்தன. உபநிஷதங்களின் மொழியாக்கம், வால்ட் விட்மானின் புல்லின் இதழ்கள் ஆகியவை அவருக்கு முன்னுதாரணமாக அமைந்தவை. பின்னர் ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் ஆகியோர் மணிக்கொடி இதழிலும் கலாமோகினி இதழிலும் வசன கவிதைகளை எழுதினார்கள். அவை புதுமைப்பித்தன் போன்ற நவீன இலக்கிய முன்னோடிகளால்கூட ஏற்கப்படவில்லை. மரபார்ந்த தமிழறிஞர்கள், கல்வித்துறையினர், இடதுசாரியினர், திராவிட இயக்கத்தவர் ஆகியோரும் வசனக் கவிதையை அழிவுச்சக்தியாகவே கண்டனர். ஆனால் க.நா. சுப்ரமணியம் வசனக்கவிதைக்காக தீவிரமாக வாதாடி வந்தார். எஸ்ரா பவுண்ட், டி.எஸ்.எலியட் ஆகியோரை முன்னுதாரணமாகக் கொண்டு நவீன கவிதையை முன்வைத்த க.நா.சுப்ரமணியம் எஸ்ரா பவுண்ட் எழுதிய “A Retrospect” என்னும் கட்டுரையை முன்னுதாரணமாகக் கொண்டு அவர் நவீனக் கவிதையின் ஒரு முன்வரைவை உருவாக்கினார்.

ந.பிச்சமூர்த்தி

க.நா.சுப்ரமணியம் 1939ல் நடத்திய சூறாவளி என்னும் சிற்றிதழின் நான்காவது இதழில் மயன் என்ற பெயரில் அவர் மணப்பெண் என்னும் வசனக் கவிதையை வெளியிட்டார். அக்கவிதை கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. மகாராஜன் என்ற பெயரில் வெளியான கடிதம் verse libre என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் உருவான நோய் தமிழையும் தாக்கிவிட்டது என்று கூறியது. அதற்கு க.நா.சுப்ரமணியம் பதிலளிக்கையில் புதுக்கவிதை என்னும் சொல்லை பயன்படுத்தினார். கலாமோகினி இதழில் ந.பிச்சமூர்த்தி காற்றாடி, மழைக்கூத்து என்னும் இரண்டு வசனக் கவிதைகளை எழுதினார். அவையும் கவிதைகள் அல்ல என்று நிராகரிக்கப்பட்டன. வல்லிக்கண்ணன், எம்.வி.வெங்கட்ராம் போன்றவர்கள் கிராம ஊழியன் போன்ற இதழ்களில் தொடர்ந்து வசனக் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தனர்.

எழுத்து இதழ்
க.நா.சுப்ரமணியம்

க.நா.சுப்ரமணியம் 1945 முதல்1947 வரை நடத்திய சந்திரோதயம் சிற்றிதழில் இணைந்து சி.சு. செல்லப்பா செயல்பட்டார். அப்போது க.நா.சுப்ரமணியத்தின் கவிதைக்கொள்கையால் ஈர்க்கப்பட்டார். 1959ல் சி.சு.செல்லப்பா எழுத்து இதழை தொடங்கியபோது முதல் இதழிலேயே ந.பிச்சமூர்த்தி எழுதிய பெட்டிக்கடை நாரணன் என்னும் கவிதை மறுபிரசுரம் செய்யப்பட்டது. க.நா.சுப்ரமணியம் மயன் என்னும் புனைபெயரில் எழுதிய கவிதையும், அவர் மொழியாக்கம் செய்த ஒரு நவீனக் கவிதையும் பிரசுரமாகியது. 1920 முதல் நிகழ்ந்த வசனகவிதை பற்றிய உரையாடல்களால் தூண்டுதல் பெற்றிருந்த இளைய தலைமுறைக் கவிஞர்கள் தொடர்ச்சியாக எழுத்து இதழுக்கு வசனக் கவிதைகளை அனுப்பினார்கள். பசுவய்யா (உன் கை நகம்) தி.சொ.வேணுகோபாலன் (கவி வேதனை) நகுலன் (காத்தபானை) பிரமிள் (டி.சி.ராமலிங்கம் என்றபெயரில் எழுதிய விடிவு உட்பட ஐந்து படிமக்கவிதைகள்) சி.மணி (குகை) எஸ்.வைத்தீஸ்வரன் (கிணற்றில் விழுந்த நிலவு) ஆகியவை புதிய அலையின் தொடக்கமாக அமைந்தன. வல்லிக்கண்ணன், சிட்டி , எஸ்.வைத்தீஸ்வரன், மா.இளையபெருமாள், கி.கஸ்தூரி ரங்கன், சி பழனிச்சாமி, சக்ரதாரி, சுப.கோ.நாராயணசாமி ,சு.சங்கரசுப்ரமணியன் என பலர் எழுத்து இதழில் புதுக்கவிதைகளை எழுதினார்கள். மூன்றாண்டுகளில் 90 கவிதைகளை எழுத்து இதழ் வெளியிட்டது.

வல்லிக்கண்ணன்

மூன்றாண்டுகளுக்குப் பின் அக்கவிதைகளை தொகுத்துப் பார்த்து ஓர் உரையாடலை எழுத்து இதழின் ஆசிரியர் தொடங்கிவைத்தார். எழுத்து இதழின் வரலாற்றில் 1962 முக்கியமானது. அது பல கவிதைச் சாதனைகள் நிகழ்ந்த ஆண்டு என வல்லிக்கண்ணன் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். ந.பிச்சமூர்த்தியின் காட்டுவாத்து, சி.மணி எழுதிய நரகம் ஆகிய நீள்கவிதைகள் எழுத்து இதழில் வெளியாயின .தொடர்ந்து பத்தாண்டுகளுக்குள் எழுத்து ஏராளமான வசன கவிதைகளை வெளியிட்டு நவீன கவிதையை ஓர் இயக்கமாக தொடங்கி வைத்தது.

சி.சு.செல்லப்பா
தொகுப்புகள்

1962ல் எழுத்து இதழ் இரண்டு தொகுப்புகளை கொண்டுவந்தது. ந.பிச்சமூர்த்தி 1938 முதல் 1962 வரை எழுதிய நவீனக் கவிதைகளின் தொகுப்பு காட்டுவாத்து என்ற பெயரில் எழுத்து வெளியீடாக வந்தது. எழுத்து இதழில் எழுதப்பட்ட கவிதைகளை தொகுத்து சி.சு.செல்லப்பா ’புதுக்குரல்கள்’ என்றபெயரில் வெளியிட்டார். எழுத்து வெளியிட்ட 200 கவிதைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 63 கவிதைகள் கொண்டது புதுக்குரல்கள் என்னும் நூல். இவ்விரு தொகுப்புகளும் தமிழில் நவீனக் கவிதைக்கான அடித்தளத்தை உறுதி செய்தன. காட்டு வாத்து நூலுக்கு ந.பிச்சமூர்த்தி எழுதிய எதிர்நீச்சு என்னும் முன்னுரையும் புதுக்குரல்கள் தொகுப்புக்கு சி.சு.செல்லப்பா எழுதிய நுழைவாசல் என்னும் முன்னுரையும் புதுக்கவிதை என்னும் வடிவின் அழகியலை வரையறுப்பவையாகவும், அதன் மீதான எதிர்ப்புகளுக்கு பதில் கூறுவனவாகவும் அமைந்தன. புதுக்குரல்கள் தொகுப்பில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் ஆகியோர் எழுத்து காலகட்டத்திற்கு முந்தையவர்கள். எஞ்சியவர்கள் எழுத்தில் எழுதியவர்கள். இந்தத் தொகுப்பு வெளிச்சம் என்ற பெயரில் 1973ல் மறுபதிப்பாகி கல்லூரிகளில் பாடமாகியது. அவ்வாறாக புதுக்கவிதை கல்வித்துறை ஏற்பையும் அடைந்தது. அதற்கு உதவியவர் மார்க்ஸிய விமர்சகரான பேராசிரியர் சி.கனகசபாபதி.

எதிர்ப்புகள்

எழுத்து உருவாக்கிய கவிதை இயக்கம் பல தரப்பினராலும் கடுமையாக கண்டிக்கப்பட்டது. கல்வித்துறை சார்ந்த அறிஞர்கள் பெரும்பாலும் அனைவருமே நவீனக் கவிதையை எதிர்த்தனர். இடதுசாரிச் சிந்தனையாளர்களில் ப.ஜீவானந்தம், நா.வானமாமலை, ஜெயகாந்தன், தி.க.சிவசங்கரன் போன்றவர்கள் எழுத்து உருவாக்கிய புதுக்கவிதை மரபை கடுமையாக விமர்சனம் செய்தனர். தாமரை இதழில் தி.க.சிவசங்கரன் கடுமையான மறுப்புகளை வெளியிட்டுவந்தார். பின்னர் 1971ல் வானம்பாடி கவிதை இயக்கம் உருவானபோதுதான் இடதுசாரிகளும் மரபுத்தமிழ் கற்றவர்களும் புதுக்கவிதையை ஏற்று அவர்களுக்குரிய வடிவத்தை உருவாக்கிக் கொண்டனர்.

உசாத்துணை