under review

மாலைமதி (இதழ்)

From Tamil Wiki
மாலைமதி டிசம்பர் (1-15) இதழ், 2024
மாலைமதி இதழ்கள்
மாலைமதி காமிக்ஸ்
மாலைமதி, ஜெயலலிதா எழுதிய நாவல்

மாலைமதி (1974) குமுதம் குழுமம் வெளியிட்ட பொது வாசிப்புக்குரிய நாவல்களுக்கான இதழ். மாத இதழ், மாதம் இருமுறை இதழ், வார இதழ், வாரம் இருமுறை இதழாக வெளிவந்தது. இடையில் நின்று போன இவ்விதழ் 2017 முதல் மாதம் இருமுறை இதழாக மீண்டும் வெளிவருகிறது.

பிரசுரம்

குமுதம் இதழின் நிறுவன ஆசிரியராக இருந்த எஸ்.ஏ.பி.அண்ணாமலை, 1974-ல், நாவல்களை வெளியிடுவதற்காகத் தொடங்கிய இதழ் மாலைமதி. இவ்விதழ் முதலில் மாத இதழாக வெளிவந்தது. 1980-களின் பிற்பகுதியில் மாதமிருமுறை இதழாக வெளியானது. 1990-களில் வார இதழாக வெளிவந்தது. பின் வாரமிருமுறை இதழாக வெளிவந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் நின்றுபோனது. 2017 முதல் மீண்டும் மாதம் இருமுறை இதழாக வெளியாகிறது.

இதழ் அமைப்பு

மாலைமதி, இதழின் முகப்பில் கடல் அலைகளின் மீது முழு சந்திரன் தோன்றுவதைத் தனது சின்னமாகக் கொண்டிருந்தது. ஆசிரியர் குழுவின் மதிப்பீடுடன் குமுதம் இதழ் பதிப்பாளர் பி.வி. பார்த்தசாரதி நாவல்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டார். அவரது மறைவுக்குப் பின் ஆசிரியர் குழுவினர் நாவல்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டனர்.

தொடக்க கால மாலைமதி இதழில் நாவல்கள் மட்டுமே வெளிவந்தன. பிற்காலத்தில் நாவல்களுடன் கவிதைகள், துணுக்குச் செய்திகள், திரைப்படச் செய்திகள், சிறுகதைகள் வெளிவந்தன. செல்லம்மாளின் சமையல் குறிப்புகள் நீண்ட காலம் வெளிவந்தன.

ராஜேஷ்குமார் தொடங்கி பல எழுத்தாளர்களின் முதல் நாவல்கள் மாலைமதியில் வெளியாகின.

மாலைமதி காமிக்ஸ்

மாலைமதி இதழுடன் மாலைமதி காமிக்ஸ் என்னும் இதழ் 1975 முதல் படக்கதைகளுக்காக வெளியிடப்பட்டது. இதில் ரிப் கெர்பி, கிஸ்கோ கிட் போன்ற ஐரோப்பிய படக்கதைகள் உரிமம் பெற்று தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டன. தமிழிலும் சில படக்கதைகள் உருவாக்கப்பட்டன. விரைவிலேயே இந்த இதழ் நின்றுவிட்டது.

நாவல்கள்

  • பாவம் டல்பதடோ
  • இன்று நீ நாளை நான்
  • மூங்கில் பூக்கள்
  • ஒரு தற்கொலை நடக்கப் போகிறது
  • விபரீத கோட்பாடு
  • மேகத்தைத் துரத்தினவன்
  • என்னைத் தருகிறேன் உன்னைத் தா
  • வணக்கத்துக்குரிய காதலியே
  • ஒருத்திக்கே சொந்தம்
  • குமாரி காவு
  • வாடகைக்கு ஓர் உயிர்
  • சுடச்சுட ரத்தம்
  • கடைசி அத்தியாயம்
  • தேடி வந்த தேவதை
  • வைஜயந்தி எஸ்.ஓ.எஸ்.
  • அது வந்து நிற்கிறது
  • திகில் மாளிகை
  • கடலில் ஒரு குற்றம்
  • தங்கத்தாமரையில் ஒரு கொலை
  • ஒரு குல்மொஹர் மரத்தின் கீழே
  • கொலைகார ரோமியோ
  • திகிலுடன் நர்மதா
  • கிராமத்து அத்தியாயம்
  • கொல்லுவதெல்லாம் உண்மை
  • சின்னஞ்சிறு கிளியே
  • ஆக்டோபஸ் அதிர்ச்சிகள்
  • கடலோரக் கொலைகள்
  • நடுவில் எழுந்த சுவர்
  • மாஞ்சோலை மன்மதன்
  • ரத்தம் இனிக்குதடா
  • கேபிள் விபரீதம்

பங்களிப்பாளர்கள்

இதழ் இடை நிறுத்தம்

மாலைமதி இதழ் ஒரு கட்டத்தில் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையானது. நாளடைவில் தொலைக்காட்சிகளின் வரவால் விற்பனையில் தேக்கம் கண்டது. பின் நின்றுபோனது. 2017 முதல் தற்போது மாதம் இருமுறை இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது.

மதிப்பீடு

மாலைமதி, பொது வாசிப்புக்குரிய நாவல்களை வெளியிடுவதற்காகத் தொடங்கப்பட்ட இதழ். குற்றப் புதினங்கள், சமூகம், குடும்பம், காதல் கதைகளை அதிகம் வெளியிட்டது. இலக்கியம் சார்ந்த ஒரு சில படைப்புகளும் அவ்வப்போது வெளியாகின. பல நூற்றுக்கணக்கான நாவல்களை மாலைமதி இதழ் வெளியிட்டது. வெகு ஜன வாசகர்களை வாசிப்பின் பால் ஈர்த்த முக்கிய இதழாக மாலைமதி இதழ் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Dec-2024, 20:30:58 IST