under review

உமாசந்திரன்

From Tamil Wiki
எழுத்தாளர் உமாசந்திரன்

உமாசந்திரன் (பூர்ணம் ராமச்சந்திரன்; ஆகஸ்ட் 14, 1914 - ஏப்ரல் 11, 1994) எழுத்தாளர், நாடக ஆசிரியர். திரைப்படக் கதை-வசன ஆசிரியர் என இயங்கியவர். அகில இந்திய வானொலியில் பல பொறுப்புகளை வகித்தவர். பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளித்தவர்.

பிறப்பு, கல்வி

உமாசந்திரன், ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில், ஆகஸ்ட் 14, 1914 அன்று பூர்ண கிருபேஸ்வர ஐயர்-உமா பார்வதி இணையருக்குப் பிறந்தார். இயற்பெயர் ராமச்சந்திரன். திருநெல்வேலியில் உள்ள முன்னீர்பள்ளம் இவர்களது சொந்த ஊர். அவ்வூரில் உறையும் பூர்ண கிருபேஸ்வரர் இவர்கள் குடும்ப குல தெய்வம். அதனால், இறைவனின் நினைவாக, 'பூர்ணம்’ என்பதை அடைமொழியாகக் கொண்டே குடும்பத்து ஆண்கள் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டனர். ராமச்சந்திரன், பூர்ணம் ராமச்சந்திரன் ஆனார். நடிகரும் நாடகவியலாளருமான பூர்ணம் விஸ்வநாதன், ருஷ்ய நூல்களை மொழியாக்கம் செய்த பூர்ணம் சோமசுந்தரம் (பூ. சோமசுந்தரம்), பூர்ணம் பாலகிருஷ்ணன் மூவரும் இவரது சகோதரர்கள்.

உமாசந்திரன், பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். விடுதலை உணர்வால் சுதந்திர உணர்வைத் தூண்டும் பல போராட்டங்களில் கலந்து கொண்டார். இண்டர்மீடியட் முடித்ததும் ஆசிரியர் பணி கிடைத்தது.

தனி வாழ்க்கை

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளை நன்கு அறிந்திருந்தார் உமா சந்திரன். ஆசிரியராகவும் பின்னர் வானொலி நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பணியாற்றினார்.

உமாசந்திரனின் மனைவி பெயர் கமலா. பூர்ணிமா, பாரதி என இரு மகள்கள். நட்ராஜ், கிஷோர் என இரு மகன்கள். நட்ராஜ் தமிழக அரசின் காவல்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

இலக்கிய வாழ்க்கை

உமா சந்திரனின் முதல் சிறுகதை, 'சொர்ணத்தேவன்' 1937-ல் வெளியானது. தொடர்ந்து முன்னணி இதழ்களுக்கு எழுத ஆரம்பித்தார். தாயின் மீது கொண்ட அன்பு காரணமாக, தாயின் பெயருடன் தன் பெயரை இணைத்துக் கொண்டு 'உமா சந்திரன்’ என்ற புனை பெயரில் எழுத ஆரம்பித்தார். அஜந்தா, காதம்பரி, பாரிஜாதம், கல்கி, ஆனந்தவிகடன் என பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்தன.

உமாசந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவல் அவருடைய முதன்மையான படைப்பாகக் கருதப்படுகிறது. நேபாளத்திற்குச் சென்ற அனுபவங்களை ஒட்டி எழுதிய 'குமாரி காவு'என்னும் நாவல் மாலைமதி இதழில் வெளியாகி வாசகர் கவனத்தை ஈர்த்தது. சி.சு.செல்லப்பா, ஜெயகாந்தன், மணியன், மாயாவி எனப் பல இலக்கியவாதிகளின் நண்பர் உமாசந்திரன். நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவற்றுள் சில ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

வானொலிப் பணிகள்

உமாசந்திரனுக்கு வானொலி நிலையத்தில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. டில்லியில் சிலகாலம் பணியாற்றினார். பின்னர் திருச்சிக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னை வானொலி நிலையத்திற்குப் பணி மாற்றம் நிகழ்ந்தது. நிகழ்ச்சி அமைப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், வர்ணனையாளர், ஒருங்கிணைப்பாளர், தயாரிப்பாளர் என வானொலியில் பலதரப்பட்ட பணிகளை மேற்கொண்டார். அரசின் ஐந்தாண்டுத் திட்டங்கள் பற்றிய செய்திகளையும், விளக்கங்களையும் மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். வானொலி நாடகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். 25-க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதி இயக்கினார்.

சி.என். அண்ணாத்துரை மறைந்தபோது, லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இறுதி ஊர்வல நிகழ்வை வானொலியில் நேரடி வர்ணனை செய்தவர் உமாசந்திரன். காமராஜர் மறைந்தபோதும் அந்த நிகழ்ச்சியை நேர்முக வர்ணனை செய்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், சம்ஸ்கிருதம், ஹிந்தி எனப் பல மொழிகள் அறிந்த உமாசந்திரன், அகில இந்திய வானொலியில் 34 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

திரைப்படப் பங்களிப்புகள்

உமாசந்திரன் பல திரைப்படங்களுக்குக் கதை ஆலோசகராகவும், வசனம் எழுதுபவராகவும் பங்களித்திருக்கிறார். 'தாய் உள்ளம்’ படத்திற்கு எஸ்.டி.சுந்தரம் அவர்களுடன் இணைந்து கதை-வசனம் எழுதினார். 'மனம் போல் மாங்கல்யம்’ படத்தின் கதையை கே.வி. ஸ்ரீநிவாசனுடன் இணைந்து எழுதினார். ’கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்திற்கும் கே.வி.சீனிவாசன், வி.சதாசிவப்ரம்மம் உடன் இணைந்து வசனம் எழுதினார். மொகல் ஏ ஆஸம்’ தமிழில் ’அக்பர்’ என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியானபோது அதற்கான வசனத்தினை எழுதினார். உமா சந்திரன் எழுதிய 'முள்ளும் மலரும்' நாவல் மகேந்திரன் இயக்கத்தில் திரைப்படமாகியது.

விருதுகள்

கல்கி வெள்ளிவிழா பரிசுத் திட்டத்தில் முதல் பரிசு ரூ.10000/- 'முள்ளும் மலரும்’ நாவல் தொடருக்காக.

மறைவு

உமாசந்திரன், உடல்நலக்குறைவால் ஏப்ரல் 11, 1994-ல் காலமானார்.

இலக்கிய இடம்

பொது வாசிப்புக்குரிய வகைமைக்குள் இலக்கியத்தரத்தோடு எழுதியவர் உமாசந்திரன். "மினுக்கும், தளுக்கும், குலுக்கும் அறியாத, அவருக்கு அவசியம் இராத பழைய இலக்கிய மரபைச் சேர்ந்தவர் உமாசந்திரன். அவருக்கு மத்தாப்பு போடத் தெரியாது. பட்டாசு வேலைகளை அறியார். ஆனாலும் அவருடைய படைப்புகள் முற்றிலும் புதுமை நிரம்பியவை" என்று மதிப்பிடுகிறார், மீ.ப.சோமு. உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்’ நாவலை, சிறந்த சமூக மிகு கற்பனைப் படைப்புகளுள் ஒன்றாக மதிப்பிடுகிறார் ஜெயமோகன். [1]

உமாசந்திரன் நாவல்கள்
உமாசந்திரனின் நாவல்கள்
உமாசந்திரன் சிறுகதைகள்

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • புகையும் பொறியும்
  • விண்ணாசை
  • திரும்பவில்லை
நாவல்கள்
  • வாழ்வுக்கு ஒரு தாரகை
  • ஒன்றிய உள்ளங்கள்
  • பாச வியூகம்
  • பொழுது புலர்ந்தது
  • காயகல்பம்
  • புகையும் பொறியும்
  • அன்புச்சுழல்
  • அன்புள்ள அஜிதா
  • ஆகாயம் பூமி
  • முள்ளும் மலரும்
  • பெண்ணுக்கு நீதி
  • வேர்ப்பலா
  • முழு நிலா
  • ஒன்றிய உள்ளங்கள்
  • திரும்ப வழியில்லை
  • சக்கரவியூகம்
  • பண்பின் சிகரம்
  • வாழ்வே வா
  • அனிச்சமலர்
  • இதய கீதம்
குறுநாவல்
  • விஷப்பரீட்சை
  • பரிகாரம்
  • கலாவின் கல்யாணம்
  • மன்னித்தாளா
  • உரிமைக்கு ஒருத்தி
  • குமாரிகாவு
நாடகங்கள்
  • மனமாளிகை
  • ஸஹதர்மிணி
  • பெற்றமனம்
  • அவன் வஞ்சம்
கட்டுரை நூல்
  • வானொலியில் சங்கமித்த இதயங்கள்
மொழிபெயர்ப்பு
  • பன்கர்வாடி (மராத்தி மூலம்: வெங்கடேஷ் மாட்கூல்கர் - தமிழாக்கம்: உமாசந்திரன்)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page