under review

முள்ளும் மலரும்

From Tamil Wiki
முள்ளும் மலரும்

முள்ளும் மலரும் (1966) உமாசந்திரன் எழுதிய நாவல். கல்கி வெள்ளிவிழா நாவல்போட்டியில் பரிசு பெற்றது. திரைப்படமாகவும் வெளிவந்தது

முள்ளும் மலரும்

எழுத்து வெளியீடு

உமாசந்திரன் வானொலியில் பணியாற்றிய காலத்தில் குந்தா அணைத் திட்டம் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அனுப்பி . அங்கு சென்று தங்கி, மலைவாழ் மக்களின் வாழ்க்கையை அவதானித்து எழுதிய 'முள்ளும் மலரும்’ நாவல் கல்கி வெள்ளிவிழா பரிசுத் திட்டத்தில் முதல் பரிசு ரூ.10000/- பெற்றது. சி.ராஜகோபாலாச்சாரியார் அந்தப் பரிசை உமாசந்திரனுக்கு அளித்தார்.

ராஜாஜியிடமிருந்து பரிசு

ஆகஸ்ட் 7, 1966, அன்று கல்கி வெள்ளி விழா இதழில் ஆரம்பித்த 'முள்ளும் மலரும்’ தொடர், தொடர்ந்து 36 வாரங்கள் வெளியாகி ஏப்ரல் 9, 1967 இதழோடு முற்றுப்பெற்றது.

கதைச்சுருக்கம்

உதகமண்டலத்திலுள்ள சம்பா நீர்த் தேக்கத்துக்கு அருகிலுள்ள மலைக்கிராமங்களான வேலன் கடவு, உச்சிக் கடவு போன்ற ஊர்களில் கதை நிகழ்கிறது. இளமையிலேயே தாய் -தந்தையரை இழந்த காளி `வின்ச் ஆப்பரேட்டராக' வேலை செய்கிறான். முரடனான காளியின் தங்கை வள்ளி. பிழைப்பு தேடி வரும் தாய் வெள்ளாத்தாளுடன் வரும் மங்கா மீது காளிக்கு காதல் பிறக்கிறது. புதிதாக வேலைக்கு வரும் பண்பான என்ஜினீயர் குமரனுடன் காளி வெறுப்பு கொள்கிறான். மங்காவை தாக்கவந்த சிறுத்தைப் புலியை தடுக்கமுயலும் காளி ஒரு கையை இழக்கிறான். என்ஜீனியருக்கு காளியின் தங்கை வள்ளியின் மீது காதல் என அறிந்த காளி கோபம் அடைகிறான். பெட்டிக்கடை முனியாண்டியை வள்ளிக்கு மணமுடிக்க சம்மந்தம் பேசுகிறான். காளியை எதிர்த்துப் பேச முடியாத வள்ளி அதற்கு சம்மதம் தெரிவிக்கிறாள். வள்ளியின் நிலையைப் புரிந்து கொண்டு அந்த சூழ்நிலையில் குமரன் விலகிச் செல்கிறான்.

ராணுவத்தில் சேர்ந்து வட இந்தியா செல்லும் குமரனுக்கு போரில் காயம் ஏற்படுகிறது. அங்கே மருத்துவர் அகிலா குமரனைக் காதலிக்கிறாள். ஆனால் வள்ளியைத் தவிர வேறு ஒரு பெண்ணை தன்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்று குமரன் மறுத்துவிடுகிறான். ராணுவப்பணி முடிந்து குமரன் உச்சிக்கடவு மற்றும் வேலன்கடவு போன்ற இடங்களைச் சுற்றிக்கொண்டு இருக்கும் போது வள்ளி இன்னும் மணமாகாமல் இருக்கிறாள் என்பதைத் தெரிந்து அவளுக்காக தானும் காத்துக்கொண்டிருப்பதைத் தெரியப்படுத்துகிறான்.காளியின் சம்மதம் இல்லாமல் இருவரும் கோவிலில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். வள்ளியும் குமரனும் 'வின்ச் மெஷினில்' கீழிறங்கும் போது இயந்திரத்தில் கோளாறு செய்து அவர்களைக் கொல்ல காளி முயல வள்ளியைக் காப்பாற்ற தறிகெட்டு ஓடும் இயந்திரத்தில் மங்கா பாய்கிறாள். மங்காவைக் காப்பாற்ற காளியும் இயந்திரத்தில் பாய்கிறான். மங்காவும் காளியும் இறந்து விடுகிறார்கள்.

திரைவடிவம்

முள்ளும் மலரும் மகேந்திரன் இயக்கத்தில் 1978-ல் திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்றது.

இலக்கிய இடம்

எதிர்பாராத திருப்பங்களும், செயற்கையான உச்சங்களும் கொண்டு இலக்கில்லாது செல்லும் கதையோட்டம் உடைய பொதுவாசிப்பு நாவல். கதைக்களத்தின் புதுமை, கதைநிகழ்வுகளின் வேகமான ஓட்டம் ஆகியவற்றால் விரும்பி படிக்கப்பட்டது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:39:02 IST