under review

லக்ஷ்மி ரமணன்

From Tamil Wiki
லக்ஷ்மி ரமணன்

லக்ஷ்மி ரமணன் (ஆர். சுப்புலட்சுமி; ரஷ்மி; லட்சுமி ரமணன்) (பிறப்பு: ஏப்ரல் 16, 1940) எழுத்தாளர். பொது வாசிப்புக்குரிய நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதினார். தனது இலக்கிய முயற்சிகளுக்காக கலைமகள் இதழின் விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

லக்ஷ்மி ரமணன், பாலக்காட்டில் உள்ள சித்தூரில், ஏப்ரல் 16, 1940 அன்று, ராமஸ்வாமி ஐயர் - கல்யாணி இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த இவர், டெல்லியில் உள்ள இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honors) பட்டம் பெற்றார். ஆங்கிலம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். இசை கற்றார்.

தனி வாழ்க்கை

லக்ஷ்மி ரமணன் மணமானவர். கணவர் டி.வி. ரமணன், இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றினார்.

லக்ஷ்மி ரமணன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

லக்ஷ்மி ரமணன், ஆனந்த விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் ஆர். சுப்புலட்சுமி என்ற பெயரில் எழுத்துலகுக்கு அறிமுகமானார். 'இதுவும் தியாகம் தான்' என்னும் தலைப்பிலான முதல் சிறுகதை 1959-ல் வெளியானது. தொடர்ந்து விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் பேசுகிறது போன்ற பல இதழ்களில் லக்ஷ்மி ரமணின் சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் வெளியாகின. 'ரஷ்மி' என்ற புனைபெயரிலும் எழுதினார். முதல் நாவல் 1987-ல் வெளியானது. மாலைமதி உள்ளிட்ட பல மாத வெளியீடுகளில் இவரது படைப்புகள் வெளியாகின.

லக்ஷ்மி ரமணன் 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், ஐந்து நாவல்களையும், 45 குறுநாவல்களையும் எழுதினார். லக்ஷ்மி ரமணின் படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்து மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றார்.

மொழிபெயர்ப்பு

லக்ஷ்மி ரமணன், கும்ப ராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டன. அவை, மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட் தீப்' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டன.

நாடகம்

லக்ஷ்மி ரமணன் நாடகங்கள் சிலவற்றை எழுதினார். சென்னை தொலைக்காட்சியில் அவை ஒளிபரப்பாகின. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் சிலவற்றை எழுதினார்.

கலைமகள் விருது (படம் நன்றி: தினசரி இதழ் - https://dhinasari.com/)

விருதுகள்

லக்ஷ்மி ரமணன் பத்திரிக்கைகள் நடத்திய பல சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றார்.

  • கலைமகள் இதழ் நடத்திய அமரர் ராமரத்னம் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு (1987)
  • அமுதசுரபி குறுநாவல் போட்டியில் ரூ. 1000/- பரிசு (1988)
  • கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு
  • இதயம் பேசுகிறது இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு
  • 'விபுலா' தெலுங்கு இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு
  • கலைமகள் இதழ் அளித்த சிறந்த எழுத்தாளருக்கான விருது - 2024

மதிப்பீடு

லக்ஷ்மி ரமணன் மர்மம், வரலாறு, சமூகம், குடும்பம், நகைச்சுவை ஆகியவற்றைப் பின்னணியாகக் கொண்டு பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். குடும்பக் கதைகளை அதிகம் எழுதியவர்களான லக்ஷ்மி, கோமகள், விமலா ரமணி, அனுராதா ரமணன் போன்றோரின் வரிசையில் இடம்பெறத்தக்கவராக மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • பிரும்மோபதேசம்
  • உறவுகள் மென்மையானவை
  • தூங்காதே வர்ஷா
  • தென்றல் தப்ப முடியாது
  • உயில் வேட்டை
  • கொலை செய்யக் கிளம்பு
  • மீரா பள்ளிக்கூடம் போகிறாள்
  • உறவைத் தேடி
  • ஒரு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது
  • காவேரி
  • மாயமான்
  • வானத்திலே பூத்த வண்ண நிலா
  • மாமல்லன் 88 மர்மம்
  • மறைந்திருக்கும் மர்மம்
  • மெல்லத்திறந்தது வழி
  • கங்கா நதி தீரத்திலே
  • தென்றல் தப்பமுடியாது
  • மீண்டும் சம்யுக்தை
  • மறக்குமா நெஞ்சம்
  • நினைக்கத் தெரிந்த மனமே
  • சமர்ப்பணம்
  • கரையை தேடும் அலைகள்
  • அனுஷா அப்படித்தான்
  • நெஞ்சுக்குள் என்றென்றும் நீ தானே
  • தெரிந்து கொள்ளலாமே
  • அணையாவிளக்கு
  • வாழ்வியல் கட்டுரைகள்
  • கானல்நீர்
  • இன்னொரு யுத்தம்
  • மேற்கே வீசிய தென்றல்
  • அம்மா
  • சகுந்தலா
  • கொஞ்சம் சிரிக்கலாமே
  • எழாமல் வந்த வரம்
  • சிட்டுக்குருவி
  • லக்ஷ்மி ரமணின் சிறுகதைகள்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Dec-2024, 20:40:05 IST