under review

திலகவதி

From Tamil Wiki
திலகவதி (நன்றி:ipswomen)

திலகவதி (பிறப்பு: 1951) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். ‘கல்மரம்’ நாவலுக்காக 2005-ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானவர். தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனர்.

பிறப்பு, கல்வி

திலகவதி தர்மபுரி மாவட்டம் குமரசாமிப்பேட்டையில் கோவிந்தசாமி ரெட்டியாருக்கு மகளாக 1951-ல் பிறந்தார். தந்தை முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரர், தாய் ஆசிரியர். பள்ளிப்படிப்பை தர்மபுரியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். வேலூர் ஆக்சிலியம் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

தனிவாழ்க்கை

இந்தியப் பொதுப்பணியாளர் தேர்வு (UPSC) எழுதி, இந்தியக் காவல் பணிக்கு(IPS) தமிழகத்திலிருந்து முதல் பெண்ணாகத் தேர்வானார். முப்பத்தி நான்கு ஆண்டுகள் காவல் துறையில்பணியாற்றி ஓய்வு பெற்றார். தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனராகவும் பணியாற்றினார்.

திலகவதி இளங்கோவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகள் ஜாய்ஸ்ரேகா. மகன் பிரபுதிலக். இளங்கோவிடமிருந்து மணவிலக்கு பெற்றார். 1982-ல் நாஞ்சில் குமரனை மணந்தார். இவர்களின் மகள் திவ்யா. 1987-ல் நாஞ்சில் குமரனிடமிருந்து மணவிலக்கு பெற்றார்.

அமைப்புப் பணிகள்

  • மகளிர்நல ஆணய உறுப்பினர்
  • சாகித்ய அகாதெமி உறுப்பினர்

அரசியல் வாழ்க்கை

திலகவதி 2013-ல் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

இதழியல்

திலகவதி ‘அம்ருதா’ என்ற மாதப்பத்திரிக்கையைத் தொடங்கினார். கலை, இலக்கியம், சமூகம் ஆகியவற்றை பேசுபொருளாகக் கொண்ட இதழ். அரசியல், சினிமா, சமூகம், அறிவியல், சூழலியல், நேர்காணல், சிறுகதை, கவிதை, ஆய்வு, மொழிபெயர்ப்பு போன்ற பலவற்றைப் பேசும் இதழாக உள்ளது.

பதிப்பகம்

திலகவதி 'அம்ருதா பதிப்பகம்', 'அக்ஷரா பதிப்பகம்' என்ற இரு பதிப்பகங்களைத் தொடங்கினார். அதன் மூலம் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார். ’முத்துகள் பத்து’ என்ற புத்தக வரிசையில் புகழ்பெற்ற மற்றும் புகழ் பெறாத எழுத்தாளர்களின் பத்து கதைகள் கொண்ட தனித்தனி தொகுப்புகளை வெளியிட்டது குறிப்பிடத்தகுந்த முன்னெடுப்பு.

இலக்கிய வாழ்க்கை

திலகவதி பத்து வயதிலிருந்து கவிதைகள் எழுதினார். அவரது முதல் சிறுகதை ’உதைத்தாலும் ஆண்மக்கள்’ 1987-ல் தினகரன் இதழில் வெளியானது. கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார்.

திரைப்படம்

திலகவதியின் 'பத்தினிப்பெண்' நாவல் 1983-ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

விருதுகள்

  • சாகித்ய அகாதெமி விருது கல்மரம் நாவலுக்காக (2005)
  • தமிழ்நாடு அரசின் சிறந்த சிறுகதை எழுத்தாளர் பரிசு (1987)
  • தமிழ்நாடு அரசின் சிறந்த சிறுகதை எழுத்தாளர் பரிசு (1988)
  • கலைமகள் நாராயணசாமி ஐயர் நினைவு முதல் பரிசு
  • தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்ற விருது
  • இலக்கியச்சிந்தனை விருது
  • திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது
  • தமிழ்நாடு அரசு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2020)

ஆய்வு செய்யப்பட்ட திலகவதியின் படைப்புகள்

  • திலகவதி புதினங்களில் பெண்கள் (முனைவர் பட்ட ஆய்வேடு) (இராசு, சி.பி.எம்.கல்லூரி, கோயம்புத்தூர், 1998)
  • திலகவதி நாவல்களில் பாத்திரப்படைப்பு (முனைவர் பட்ட ஆய்வேடு) (பியூலஜா தி க; 2017, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி)
  • திலகவதி நாவல்கள் ஒரு பெண்ணியப் பார்வை (இளம்முனைவர் பட்ட ஆய்வேடு) (இ. உமாமகேஸ்வரி, புதுவைப் பல்கலைக்கழகம், 2000)
  • திலகவதி நாவல்களில் பெண் சித்திரிப்பு (முனைவர் பட்ட ஆய்வேடு) (எஸ். ஆஞ்சல் ஜெயலட்ராணி, அருள் பதிப்பகம், சென்னை)
  • திலகவதியின் நாவல்களில் சமுதாயக் கருத்துகள் (இளம்முனைவர் பட்ட ஆய்வேடு) (டோலி, ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி, நாகர்கோவில்)
  • திலகவதியின் 'தேவை ஒரு தேவதைக்கதை'யில் சமுதாயச் சிந்தனைகள் (கலைமுதுவர் பட்ட ஆய்வேடு) (தீபலட்சுமி, தெ.தி.இந்துகல்லூரி, நாகர்கோவில்)
  • திலகவதி நாவல்களில் சமூதாயச் சிக்கல்களும் தீர்வுகளும் (கோ. தனலட்சுமி, ஸ்ரீ.கா.சு.சு. கலைக் கல்லூரி, திருப்பனந்தாள்)

நூல்கள்

கவிதை
  • அலை புரளும் கரையோரம்
நாவல்
  • இனிமேல் விடியும் (மாலைமதி,1989)
  • உனக்காகவா நான் (அம்ருதா பதிப்பகம்,2007)
  • ஒரு ஆத்மாவின் டயரி சில வரங்கள்
  • கல்மரம் (அம்ருதா பதிப்பகம்,2005)
  • கனவைச் சூடிய நட்சத்திரம் (2001)
  • கைக்குள் வானம்
  • சொப்பன பூமியில் (அம்ருதா பதிப்பகம்,1998)
  • தமிழ்க்கொடியின் காதல் (அம்ருதா பதிப்பகம்,2007)
  • தீக்குக் கனல் தந்த தேவி
  • திலகவதி நாவல்கள் 1 & 2(தொகுப்பு) (புதுமைப்பித்தன் பதிப்பகம், 2004)
  • நேசத்துணை (அம்ருதா பதிப்பகம்,2007)
  • பத்தினிப்பெண்
  • வானத்துக்கு வரம்பில்லை
  • வார்த்தை தவறிவிட்டாய்
  • கங்கை வந்து நீராட்டும்
  • மின்னல் பூக்கள்
  • உனக்காகவா நான்
  • வேர்கள் விழுதுகள்
  • செராமிக் சிற்பங்கள்
  • நிலவுக்குள் சூரியன்
  • வாழ்க்கையே காட்சிகளாய்
  • நெஞ்சில் ஆசை
சிறுகதைகள்
  • தேயுமோ சூரியன்
  • அரசிகள் அழுவதில்லை
  • பொழுதெப்போ விடியும்
  • நாற்காலியும் நான்கு தலைமுறைகளும்
  • கடற்கரைக்குப்போகும் பாதை
  • சக்கரவியூகம்
  • வெளிச்சத்திற்கு வராத டைரி
  • கைக்குள் வானம்
  • பட்டாபி கதைகள்
கட்டுரை
  • முடிவெடு
  • வேர்கள் விழுதுகள்
  • சமதர்மப் பெண்ணியம்
  • மானுட மகத்துவங்கள்
  • கோபம் – கோபமேலாண்மை
  • என்னைக்கவர்ந்த நூல்கள்
  • சினிமாவுக்குச்சில கேள்விகள்
  • காலந்தோறும் அறம்
  • உங்களுக்காக உலக சினிமா
வாழ்க்கை வரலாறு
  • சேகுவேரா
மொழிபெயர்ப்பு
  • அன்புள்ள பிலாத்துவுக்கு (பால் சக்காரியா)
  • இத்வா முண்டாவுக்கு வெற்றி (மகாசுவேதா தேவி) (நேஷனல் புக் டிரஸ்ட்)
  • உதிரும் இலைகளின் ஓசை (உருது சிறுகதைகள்) (குர்ரத்துலைன் ஹைதர்) (சாகித்திய அகாதெமி)
  • போலுவும் கோலுவும் (பங்கஜ் பிஷ்ட்) (நேஷனல் புக் டிரஸ்ட்)
தொகுப்புகள்
  • தொப்புள்கொடி (சிறுகதைகள்)
  • மரப்பாலம் (தென்கிழக்காசியச் சிறுகதைகள்)
  • கோடை உமிழும் குரல்
  • காலத்தின் கண்ணாடி
  • அறிஞர் அண்ணா சிறுகதைகள்
  • தினம் ஒரு திருமுறை
  • தினம் ஒரு திருமந்திரம்
  • பெரியபுராணத்துள் ஒரு விண்பயணம்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page