under review

துடுப்பதி ரகுநாதன்

From Tamil Wiki
துடுப்பதி ரகுநாதன்

துடுப்பதி ரகுநாதன் (செ. ரகுநாதன்) (பிறப்பு: அக்டோபர் 13, 1940) எழுத்தாளர். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை, நாவல்களை எழுதினார். வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். எழுத்துச் செம்மல் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

துடுப்பதி ரகுநாதன், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதியில், அக்டோபர் 13, 1940 அன்று, செல்லப்பன் – செல்லம்மாள் இணையருக்குப் பிறந்தார். பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். கூட்டுறவுத்துறை குறித்துப் பயின்று பட்டயம் பெற்றார்.

தனி வாழ்க்கை

துடுப்பதி ரகுநாதன் 1961-ல் மத்தியக் கூட்டுறவு வங்கிப் பணியில் சேர்ந்து பணியாற்றினார். 1971-ல் சென்னையில் உள்ள மாநில நிலவள வங்கியில் சேர்ந்து, 1991-ல் கணக்குப் பிரிவு அலுவலராக ஓய்வுபெற்றார். மணமானவர். மனைவி சுமதி ரகுநாதனும் ஓர் எழுத்தாளர்.

எழுத்தாளர் துடுப்பதி ரகுநாதன் நூல்கள்
எழுத்தாளர் துடுப்பதி ரகுநாதன்

இலக்கிய வாழ்க்கை

துடுப்பதி ரகுநாதனின் முதல் சிறுகதை மதுரை கருமுத்து தியாகராஜர் நடத்திய ‘தமிழ்நாடு’ நாளிதழில் வெளியானது. தொடர்ந்து ஆனந்த விகடன், கலைமகள், குமுதம், குங்குமம், சாவி, அமுதசுரபி, மங்களம் (தமிழ்), திராவிட நாடு, காஞ்சி, சுமங்கலி, தாய், 'லண்டன் முரசு'போன்ற இதழ்களில் துடுப்பதி ரகுநாதனின் சிறுகதைகள் வெளியாகின. முதல் நாவல், ‘மாஞ்சோலை மன்மதன்’ மாலைமதியில் வெளியானது. தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல், நாவல், தொடர்கதை என்று 500-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதினார்.

துடுப்பதி ரகுநாதன் மு.வரதராசன், ஜெயகாந்தன், சாண்டில்யன், கவிஞர் முத்துலிங்கம், இளையராஜா உள்ளிட்டோரைச் சந்தித்து நேர்காணல் செய்தார். அவற்றின் தொகுப்பு, ‘‘மறக்க முடியாத சந்திப்புகள்’ என்ற தலைப்பில் நூலாக வெளியானது. ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதினார். துடுப்பதி ரகுநாதனின் படைப்புகள் நூல்களாகவும் மின்னூல்களாகவும் வெளியாகின.

நாடகம்

துடுப்பதி ரகுநாதன் நாடகங்கள் பலவற்றை எழுதினார். அவற்றில் சில வானொலியில் ஒலிபரப்பாகின. 1967-ல் கோவை ‘நவ இந்தியா’ நாளிதழில் எழுதிய ‘உறவு தான் என்னவோ’ என்ற தொடர்கதை, மேடை நாடகமாக்கப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் பலமுறை அரங்கேற்றம் கண்டது.

பொறுப்பு

  • கோவை தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.
சிறந்த சிறுகதை நூலுக்கான நினைவுப் பரிசு
சிறந்த நாவலுக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
எழுத்துச் செம்மல் விருது

விருதுகள்/பரிசுகள்

  • ‘என் உயிர்த் தோழி நீ அல்லவா’ நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது.
  • ஆனந்த கண்ணீர் சிறுகதைத் தொகுப்புக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசை கவி ஓவியா இதழ் வழங்கியது.
  • சென்னை தங்கமுத்து அறக்கட்டளை, ‘அம்மா உன் நினைவாக’ நூலை சிறந்த சிறுகதை நூலாகத் தேர்ந்தெடுத்தது.
  • ‘இன்னொரு அன்னை தெரசா’ என்ற சிறுகதைக்கு வானதி பத்திரிகை நிறுவனம் விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • பாவையர் மலர் சிறுகதைப் போட்டிப் பரிசு.
  • ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு
  • குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நினைவுப் போட்டியில் பரிசு
  • ராஜம் கிருஷ்ணன் நினைவுப் போட்டியில் பரிசு
  • 2015-ம், ஆண்டின் சிறந்த நாவலுக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, ‘மாயமான் காப்பகம்’ நாவலுக்கு.
  • ’நானும் கூட’ நாவல், சிகரம் இலக்கிய இதழால் 2018-ன் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்ட து.
  • ராஜபாளையம் மணிமேகலை மன்றம் வழங்கிய ‘எழுத்துச் செம்மல்’ விருது
  • மலேசிய தமிழ் மணி மன்றம், திருமூர்த்திமலை தென் கயிலைத் தமிழ்ச் சங்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழாவில் அளிக்கப்பட்ட ‘சிந்தனைச் சிகரம்’ விருது.
  • சிறுகதைச் செம்மல் விருது
  • சாதனைச் செம்மல்
  • வெற்றித் தமிழன்
  • இலக்கியச் சுடர் பட்டம்

மதிப்பீடு

துடுப்பதி ரகுநாதன், சிறுகதை, கட்டுரை, குறுநாவல், நாவல், தொடர்கதை எனப் பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். 62 ஆண்டுகளாக எழுத்துலகில் இயங்கி வரும், துடுப்பதி ரகுநாதன், சமுதாய நோக்கோடும் சமூக அக்கறையுடனும் எழுதிய மூத்த எழுத்தாளராக அறியப்படுகிறார்.

நூல்கள்

  • நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்!
  • நூறு ஒரு பக்கக் கதைகள்!
  • தனிக் குடித்தனம்!
  • சிந்தனைக்கு விருந்து
  • முன்னேற்றம் உங்கள் கைகளில்!
  • # ME TOO நானும் கூட!
  • திரும்பிப் பார்க்கிறேன்
  • கடவுளும் கந்தசாமி பிள்ளையும்!
  • படி, கொடு, வரமாக வாழு!
  • இன்பத் தமிழ்!
  • ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி வழக்குத் தீர்ப்பு மூலம் உச்ச நீதி மன்றம் இந்திய மக்களுக்கு சொல்வது என்ன?
  • அரசியல் மாற்றமும், தமிழ் நாடும்!
  • நீதி, நிர்வாகம் இரண்டும் சீர்குலைந்தால்... நம் நாட்டின் கதி?...
  • நாட்டைப் பிடித்த நான்கு பீடைகள்!
  • முதுமையிலும் நிம்மதியாக வாழ முடியும்!...... எப்படி?
  • எல்லா உயிரினமும் நமக்குப் பாடமே!!
  • மர்ம நோய்!
  • என் இனிய தமிழ் சொந்தங்களே!.
  • அனுபவம் பேசுகிறது!
  • சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகள்!
  • ஒரு நிமிடக் கதைகள்!
  • பிறவி நடிகர்கள்!
  • அது தான் இந்தியா!
  • வேலைக்குப் போகும் பெண்களும், மூன்றாவது 'ஷிப்ட்'டும்!
  • இணையதளம் ஒரு போதையா?
  • நல்ல குடும்பங்களே சமுதாய மறுமலர்ச்சியின் வித்துக்கள்!
  • மகர ஜோதியும் மக்கள் மனசும்!
  • கதை படிக்கத் தேவை ஒரு நிமிடம்!
  • வெற்றி உங்கள் காலடியில்!
  • சிந்தனைக்கு விருந்து
  • லிவ்விங் டுகெதர்!
  • தனிக் குடித்தனம்!
  • தமிழ் நாட்டு நடப்பு!......சிந்திக்க சில விஷயங்கள்!..
  • எதிர் காலம் உங்கள் கைகளில்!
  • ஒரு நிமிடத்தில் படிக்கலாம்!
  • அப்துல் கலாமின் கடைசி அறிவுரை!
  • நாடு எங்கே போகிறது?
  • அவன் மாற்றுத் திறனாளி அல்ல! உலகை மாற்றும் திறனாளி!
  • என் உயிர் தோழி அல்லவோ?

உசாத்துணை


✅Finalised Page