under review

ஆர்னிகா நாசர்

From Tamil Wiki
ஆர்னிகா நாசர்

ஆர்னிகா நாசர் (வி.ச. நாசர்) (பிறப்பு: நவம்பர் 13, 1960) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், நாவல்களையும், குற்றப் புதினங்களையும் எழுதினார். இஸ்லாமிய மார்க்க நூல்கள், இஸ்லாமிய நீதிக்கதைகளை எழுதினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளராகப் பணியாற்றினார். தமிழ் மாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

வி.ச. நாசர் என்னும் இயற்பெயரை உடைய ஆர்னிகா நாசர், நவம்பர் 13, 1960-ல், மதுரை கோரிப்பாளையத்தில், சம்சுதீன் – ரகிமா இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியை மதுரை நேருஜி ஆரம்பப் பள்ளியில் படித்தார். உயர்நிலைக் கல்வியை திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியில் பயின்றார். பூண்டி புஷ்பம் கல்லூரியில் அறிவியலில் இளங்கலைப் பட்டம்(BSc) பெற்றார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்கள் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று சமூகவியலில் எம்.பில் பட்டம் பெற்றார். அழகப்பா பல்கலையில் பயின்று மருத்துவ மேலாண்மை நிர்வாகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். வெகுஜனத் தொடர்புக்கான முதுகலைப் பட்டயம், மருத்துவ நிர்வாகத்தில் பட்டயம் பெற்றார். தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கான மொழிபெயர்ப்புத் தேர்வு, மெடிக்கல் கோட் தேர்வு, அக்கவுண்ட் தேர்வுகள், யூஜிசி நெட் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். மதுரை காமராஜர் பல்கலையில் சமூகவியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.

எழுத்தாளர் ஆர்னிகா நாசர்

தனி வாழ்க்கை

ஆர்னிகா நாசர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளராகப் பணியாற்றினார். மணமானவர். மனைவி: வகிதா. மகள்: ஜாஸ்மின். மகன்: நிலாமகன்.

ஆர்னிகா நாசர் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

ஆர்னிகா நாசர் வாண்டுமாமா, தமிழ்வாணனின் நூல்களால் இலக்கிய ஆர்வம் பெற்றார். ஆர்னிகா நாசரின் முதல் சிறுகதை, 'முதல் வகுப்பு டிக்கெட்' 1985-ல், குங்குமம் இதழில் வெளியானது. தொடர்ந்து குமுதம், தினமலர் – வாரமலர், தினமலர் – கதைமலர், கல்கி போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். முதல் தொடர் ‘குற்றாலக் கொலை சீசன்’ தினமலர் – வாரமலர் இதழில் வெளியானது. முதல் நாவல் ‘சுடச்சுட ரத்தம்’ அக்டோபர், 1988-ல், மாலைமதியில் வெளியானது. தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் குறுநாவல்கள் எழுதினார்.

துப்பறியும் நாவல்கள்

ஆர்னிகா நாசர் ’கல்கண்டு' இதழில் பல தொடர் கதைகளையும், ஜி.அசோகனின் 'பாக்கெட் நாவல்' இதழில் பல நாவல்களையும் எழுதினார். சங்கர்லால், கணேஷ்=வசந்த், விவேக், பரத் போன்ற துப்பறியும் நாவல்களில் இடம்பெறும் துப்பறிவாளர்களின் வரிசையில், ஆர்னிகா நாசரும், ‘டியாரா ராஜ்குமார்’ என்ற துப்பறிவாளரைத் தனது படைப்புகளில் அறிமுகம் செய்தார்.

லிம்கா சாதனை

அக்டோபர், 1993-ல், சிதம்பரத்தில், தனது பதினாறு புத்தகங்களை ஒரே மேடையில் வெளியிட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். ஆர்னிகா நாசரின் படைப்புகளை ஆய்வு செய்து ஒருவர் இளம் முனைவர் பட்டமும், மூவர் முனைவர் பட்டமும் பெற்றனர்.

பிற படைப்புகள்

ஆர்னிகா நாசர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள், இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட தொடர்கதைகள், குறுநாவல்களை எழுதினார். நூற்றுக்கணக்கானவர்களை நேர்காணல் செய்தார். 100 விஞ்ஞானச் சிறுகதைகள், 250 இஸ்லாமிய நீதிக்கதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவலை எழுதினார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்து வெளியிட்டார். நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதினார். கவியரங்குங்களுக்குத் தலைமை, மேடைப்பேச்சு, தன்னம்பிக்கைப் பேச்சு, விழாத் தொகுப்பு எனப் பல களங்களில் செயல்பட்டார்.

ஊடகம்

ஆர்னிகா நாசர், பத்துக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதினார். ஆர்னிகா நாசரின் 'நீலக்குயிலே கண்ணம்மா' என்ற படைப்பு, ஜீ தொலைக்காட்சியில் தொடராக வெளியானது. திரைப்படங்களிலும் வசனம் மற்றும் காட்சி ஆலோசகராகப் பங்களித்தார்.

இதழியல்

ஆர்னிகா நாசர், திண்டுக்கல் முகமதியாபுரத்தில் வசித்தபோது ‘ஆர்னிகா’ என்ற கையெழுத்து இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்தினார்.

விருதுகள்

  • தினமலர் வாரமலர் சிறுகதைப் போட்டியில் 'ஆறு பவுண்டு ரோஜாக்குவியல்' என்ற சிறுகதைக்காக முதல் பரிசு
  • பல்வேறு சிறுகதை, நாவல், குறுநாவல் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள்
  • இஸ்லாமிய இலக்கியக் கழகம் வழங்கிய இலக்கியச் சுடர் விருது
  • தமிழ்மாமணி விருது

சர்ச்சை

ஆர்னிகா நாசர், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'எந்திரன்' படத்தின் கதை தன்னுடைய கதை என்று கூறி காவல்துறையில் புகார் அளித்தார். ஜூலை 1995-ல், தான் எழுதி மாலைமதி இதழ் வெளியிட்ட ‘ரோபாட் தொழிற்சாலை’ என்ற நாவலிலிருந்து பல சம்பவங்கள், தன் அனுமதியின்றி, படத்தில் முக்கியமான காட்சிகளாகப் படமாக்கப்பட்டுள்ளதாகப் புகார் கூறினார்.

மதிப்பீடு

ஆர்னிகா நாசர், பொது வாசிப்புக்குரிய குற்றப் புதினங்கள், விஞ்ஞானக் கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகள், சமூகக் கதைகள் எனப் பலவிதமான படைப்புகளை எழுதினார். இஸ்லாமிய சமயம் சார்ந்த நெறிமுறைகளை இஸ்லாமிய மக்களுக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் இஸ்லாமிய நீதிக் கதைகளை எழுதினார்.

ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற துப்பறியும் நாவலாசிரியர்கள் வரிசையில் ஆர்னிகா நாசரும் இடம்பெறுகிறார்.

நூல்கள்

நாவல்கள்
  • இரத்தப்பந்து
  • தூண்டில் சூரியன்
  • கொன்றுவிடு விசாலாட்சி
  • தாக்கு மின்னலே தாக்கு
  • பரபரப்பு பூகம்பம்
  • ஆக்டோபஸ் விபரீதங்கள்
  • சூழ்ச்சிகளுடன் போரிடு
  • தெய்வம் தந்த பூவே
  • எலிப்பொறி
  • இருள் தேசத்து சதி
  • ஒரு துளி நரகம்
  • தமிழ்ச்செல்வி
  • நொடிக்குநொடி
  • சுடச்சுட ரத்தம்
  • யாழினி
  • எல்லாப் பூக்களும் எனக்கே
  • நூறு கோடி தாகம்
  • கனாக் கண்டேன் கண்ணே!
  • ரோஜா ஓவியம்
  • தீ தித்திக்கும் தீ
  • கொலை வயல்
  • வசீகரா வசீகரா
  • குற்ற ரோஜா
  • பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே
  • கனகசிந்தாமணி
  • லப்டப் லடாக்
  • ஆக்ஸிஜன் நரகம்
  • மின்மினி பிரபஞ்சம்
  • கிருமி
  • மம்மி
  • மரணக்காடு
  • செக்கச்சிவந்த தங்கம்
  • கொஞ்சம் கொல்லுங்கள் ராஜாவே
  • சாத்தானின் கவிதைகள்
  • சாத்தான் தேவதை
  • மானே மயிலே மஞ்சரி
  • மழைக்குருவித் திருவிழா
  • சாமியம்மா
  • இரத்த சமுத்திரம்
  • ஆர்னிகாவும் 1001 ஆவிகளும்
  • ரோபோட் தொழிற்சாலை
  • திமிங்கல வேட்டை
  • பாதரச நிலவில் மரணப்புயல்
  • ஆப்பிள் தேவதைகள் (சிறார் நாவல்)

மற்றும் பல.

சிறுகதைத் தொகுப்புகள்
  • பவளச் சூரிய மயக்கம்
  • தீபாவளித் தாத்தா
  • நூறுகோடி தாகம்
  • ஆர்கானிக் இலக்கியம்
  • அம்மாவும் புஸ்ஸிக்குட்டியும்
  • பத்துத் தலை தெரிவை
  • நாளை நமது நாள்
  • ஒரு வாசகனின் மரணம்
  • ஐஸ்வர்யா ராய்களும் கோவை சரளாக்களும்
  • டாஸ்மாக் எச்சரிக்கை
  • தொலைந்து போன தோழிக்கு
  • ஜிப்ஷா காத்திருக்கிறாள்

மற்றும் பல.

இஸ்லாமிய மார்க்க நூல்கள்
  • உலகப் பொதுமறை திருக்குர் ஆன் – நீதிக்கதைகள்
  • சொந்தமாய் ஒரு கபர்ஸ்தான் – இஸ்லாமிய நீதிக்கதைகளின் தொகுப்பு
  • திருமறை நபிமொழி – இஸ்லாமிய நீதிக்கதைகள் (பத்து தொகுதிகள்)

மற்றும் பல.

கட்டுரை நூல்கள்
  • சூரியன் சந்திப்பு: நேர்காணல் தொகுப்பு (இரண்டு பாகங்கள்)

மற்றும் பல

உசாத்துணை


✅Finalised Page