under review

சுபா

From Tamil Wiki
எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ் + பாலா)

சுபா (டி.சுரேஷ் - ஏ.என். பாலகிருஷ்ணன்) தமிழில் துப்பறியும் கதைகளை எழுதிய எழுத்தாளுமை. டி.சுரேஷ் - ஏ.என். பாலகிருஷ்ணன் என்னும் இருவரின் கூட்டு. இருவரின் பெயர்களின் முதலெழுத்துக்களாலானது சுபா என்னும் பெயர். தமிழில் துப்பறியும் கதைகளை எழுதியவர்களில் இவர்கள் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த முக்கியமான மூவரில் ஒருவர் என மதிப்பிடப்படுகிறார்கள்.

பிறப்பு, கல்வி

டி.சுரேஷ், ஏப்ரல் 15, 1955 அன்று, பூனாவில், தண்டபாணி - பார்வதி இணையருக்குப் பிறந்தார். மதுரை அரசுப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்தார். பூனா சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கற்றார். மேல்நிலைக் கல்வியை மைலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

ஏ.என். பாலகிருஷ்ணன், பிப்ரவரி 2, 1955 அன்று, கும்பகோணத்தில் நரசிம்மன் – கமலா இணையருக்குப் பிறந்தார். ஹிந்து சீனியர் செகண்டரி பள்ளியில் கல்வி கற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். முதுகலை இந்திக்குச் சமமான பிரவிண் ஏழாவது நிலை வரை கற்றார்.

தனி வாழ்க்கை

டி.சுரேஷ் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். மனைவி: ஜெயந்தி. மகள்: கிருத்திகா. மகன்: சு. ஜெய்கிருஷ்ணா. சுரேஷின் மனைவி ஜெயந்தி அனுராதாரமணனின் சகோதரி. மகள் கிருத்திகா, மணிரத்னத்தின் உதவி இயக்குநர். பாடலாசிரியர். கடல், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றினார்.

ஏ.என். பாலகிருஷ்ணன் பேங்க் ஆஃப் பரோடாவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். மனைவி: யசோதா(அமரர்) மகள்: ஸ்ரீவைஜெயந்தி. மகன்: ஸ்ரீகமல்குமார். மகள் ஸ்ரீவைஜெயந்தி, ஓர் எழுத்தாளர்.

சுபா - முதல் சிறுகதை
சுரேஷின் நாடகம்

இலக்கியவாழ்க்கை

தொடக்கம்

சுரேஷ், மைலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் நூலகத்தால் வாசிப்பு ஆர்வம் பெற்றார். கண்ணன் சிறுவர் இதழில் சிறுகதைகள் எழுதினார். கண்ணனில் பணியாற்றிய லெமன் சுரேஷை ஊக்குவித்தார். தொடர்ந்து த. சுரேஷ் என்ற பெயரில் சில சிறுகதைகளை, நாடகங்களை எழுதினார்.

சுரேஷ், பாலகிருஷ்ணன் இருவரும் தி. ஜானகிராமன், கல்கி, சுஜாதா எழுத்துக்களால் ஈர்கப்பட்டனர். இருவரும் இணைந்து சுபா (சுரேஷ் + பாலகிருஷ்ணன்) என்ற பெயரில் எழுதினர். கல்கி மர்மச் சிறுகதைப் போட்டியில் சுபா எழுதிய ’விசித்திர உறவுகள்’ என்னும் முதல் சிறுகதைக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. 1979-ல், தினமணி கதிர் தீபாவளி மலரில் எழுதிய ‘அவர்கள் வயதுக்கு வரவில்லை’ சிறுகதை வரவேற்பைப் பெற்றது.

நாவல் முயற்சிகள்

சுபாவின் முதல் நாவல், ‘மயான பிரசவங்கள்’, சுஜாதா மாத இதழில் வெளிவந்தது. முதல் குறுநாவல் ‘குயில் முட்டை’யும் சுஜாதா இதழில் வெளியானது. முதல் தொடர் ‘மேலே சில கழுகுகள்’ சாவி இதழில் வெளியானது. தொடர்ந்து ஆனந்த விகடன், குமுதம், மாலைமதி, குங்குமச்சிமிழ், பாக்கெட் நாவல், நாவல் லீடர், ராணி முத்து எனப் பல இதழ்களில் நாவல், குறுநாவல்களை எழுதினர். சுபாவின் நாவல்களை வெளியிடுவதற்கென்றே எஸ்.பி. ராமுவால் ‘சூப்பர் நாவல்’ தொடங்கப்பட்டது. சுபா நாடகங்கள் சிலவற்றையும் எழுதினார்.

சுபா, 600-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை, 600-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதினர். நூற்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகளை வெளியிட்டனர். இதழ்களில் ஆன்மிகக் கட்டுரைகள், சுற்றுலாப் பயணக் கட்டுரைகளை எழுதினர். சங்கர்லால் – இந்திரா, விவேக். ரூபலா, பரத் – சுசீலா போன்ற துப்பறிவாளர் பாத்திரங்கள் வரிசையில் சுபா படைத்த நரேந்திரன் – வைஜெயந்தி; ஜான் சுந்தர் – அனிதா பாத்திரங்கள் இடம் பெற்றன.

காஷ்யபன் நூல்கள்

ஆன்மிகம்

சுபா 'காஷ்யபன்’ என்றபேரில் ஆன்மிக ஆசிரியர்கள், திருத்தலங்கள் பற்றி கட்டுரைகள் எழுதினார்கள். ஆன்மிக ஆசிரியர் ஜக்கி வாசுதேவிடம் பேட்டி கண்டு ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற தலைப்பில் எழுதிய தொடர் அவரை தமிழில் பரவலாக அறிமுகம் செய்தது.

வானொலி

சுபா, 1975-ல், சென்னை வானொலி நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றினர். இளைய பாரதம் நிகழ்ச்சிக்காகப் பல உரைச் சித்திரங்களைத் தயாரித்தளித்தனர். கிராமங்களில் வங்கிகளின் செயல்பாடுகள் பற்றிய நேர்காணல்களை அளித்தனர். பல விழா நிகழ்வுகளைப் பதிவு செய்து ஒலிபரப்பினர். ’தேன்கிண்ணம்’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்களித்தனர். 1983 வரை சென்னை வானொலியில் பகுதி நேரமாகப் பணியாற்றினர்.

கலைமகள் சிறப்பு விருது

இதழியல்

சுரேஷ், நண்பர் வி.எல். ரமேஷுடன் இணைந்து ‘சிறுவர் மலர் சோலை’ என்ற கையெழுத்து இதழை நடத்தினார். சுரேஷ்-பாலா, சுபா ஆன பின் ‘ஜெயமன்மதன்’ என்ற புனை பெயரில் ஐந்து வருடங்கள் கல்கியில் சினிமா விமர்சனம் எழுதினர். கல்கி ராஜேந்திரனால் ஊக்குவிக்கப்பட்டனர். ‘மாதம் ஒரு மாவட்டம்’ என்ற தலைப்பில் அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று அதன் பிரச்சனைகள், தேவைகளைப் பற்றிய கட்டுரைகளை எழுதினர். பல்வேறு குறைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பல பன்மொழித் திரைப்படங்களைச் சுருக்கிச் சிறுகதை வடிவில் ‘கல்கி’ இதழில் எழுதினர்.

பட்டுக்கோட்டை பிரபாகருடன் இணைந்து ‘உங்கள் ஜூனியர்’ என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தினர்.

பதிப்பு

ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் சுபா

சுபா, நூல் வெளியீட்டிற்காக ‘தங்கத்தாமரை பதிப்பகம்’ என்ற பதிப்பகத்தை 2007-ல், தொடங்கினர். குற்றப்புதினங்கள், ஆன்மிக நூல்கள், சிறுகதைத் தொகுப்புகள், ஜோதிட நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் போன்றவற்றை வெளியிட்டனர். ‘மகாபலிபுரம் – உங்களுடன் வரும் ஓர் வழிகாட்டி’ என்னும் பயணநூல் தமிழ், ஆங்கிலம், ப்ரெஞ்சு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் வெளியானது.

திரைப்படம்

சுபா பல படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதினர். சில படங்களுக்குக் வசனம் மட்டும் எழுதினர். கீழ்க்காணும் படங்களில் பங்களித்தனர்.

  • நாமிருவர் நமக்கிருவர்
  • ரெண்டு
  • கனா கண்டேன்
  • அயன்
  • அனேகன்
  • கோ
  • 180
  • மாற்றான்
  • வேலாயுதம்
  • ஆரம்பம்
  • யட்சன்
  • தனி ஒருவன்

மற்றும் பல.

தொலைக்காட்சி

சுபா, சன் தொலைக்காட்சியில் வெளியான பஞ்சவர்ணக்கிளி தொடர் தொடங்கி பல தொடர்களுக்குக் கதை, வசனம் எழுதினர்.

விருதுகள்

  • இலக்கிய சிந்தனை விருது
  • சிறந்த எழுத்தாளருக்கான கலைமகள் விருது
  • திரைப்படப் பங்களிப்பிற்காகப் பல விருதுகள்

இலக்கிய இடம்

தமிழில் குற்றப்புலனாய்வு எழுத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் சுபா. முதல் தலைமுறையில் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் , ஆரணி குப்புசாமி முதலியார் ,ஜெ.ஆர். ரங்கராஜுஆகியோர் முதன்மையானவர்கள். இரண்டாம் தலைமுறையில் மேதாவி, ரா.கி.ரங்கராஜன் , தமிழ்வாணன் போன்றவர்களும் மூன்றாவது தலைமுறையில் புஷ்பா தங்கதுரை ,சுஜாதா , ராஜேந்திரகுமார் போன்றவர்களும் தமிழில் குற்றப்புலனாய்வுக் கதைகளை எழுதியவர்கள். நான்காம் தலைமுறையில் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ஆகியோர் குற்றப்புலனாய்வுக் கதைகளை எழுதுபவர்களில் முதன்மையானவர்கள்.

சுபாவின் கதைகள் குற்றப்புலனாய்வின் அறிவியல்முறைமைகளை கூடுமானவரை கடைப்பிடிப்பவை என்றும், வாசகர்களில் அடுத்த படிநிலைகளிலுள்ளவர்களுக்கானவை என்றும் மதிப்பிடப்படுகிறது. நகர்ப்புறக்குற்றங்களை புலனாய்வு செய்யும் படைப்புகள் இவை

நூல்கள்

நாவல்கள்
  • நான் உங்கள் எதிரி
  • தொலைந்த நட்சத்திரம்
  • ரகசிய ராத்திரிகள்
  • மணல் மனிதன்
  • பாரதியின் நைட்டிங்கேல்
  • இறுதி இலக்கு
  • இறுதி யாத்திரை
  • சாகச இரவுகள்
  • உள்ளே ஒரு குரல்
  • அச்ச மாளிகை
  • உன்னைத் தேடும் ஒற்றன்
  • கண்மணி சுகமா
  • காத்திருக்கிறேன்
  • மணல் மனிதன்
  • மீண்டும் மலர் வளையம்
  • மெய்க்காப்பாளன்
  • மூடாத கல்லறை
  • நதிக்கரை ஞாபகம்
  • அபாயச் சாவி
  • ஆபத்தே வா, வா!
  • இரவின் முடிவில்
  • அன்புள்ள கொலைகாரா
  • தேவதை வேட்டை
  • எரியும் சொர்க்கம்
  • இரவுக் குற்றம்
  • கடைசிப் பயணம்
  • கடைசி எதிரி
  • மற்றொரு ரகசியம்
  • முடிவுக்கு மூன்று சொர்க்கம்
  • இந்தியக் கழுகு
  • ஆரம்பம் புதிது
  • அனல் மேல பூந்துளி
  • வணக்கம் வஞ்சகனே
  • புதிர் வருது புதிர்
  • கண்மணிக்குக் கைவிலங்கு
  • செல்வாவை சீண்டாதே
  • நீயா நானா
  • நெஞ்சை தொட்டுச் சொல்
  • நேற்று வரை
  • ஒப்பனை முகங்கள்
  • பருவகாலக் கனவுகள்
  • புதிரே ஒரு புன்னகை
  • ரம்பா ஊர்வசி மேனகா
  • தீர்த்து விடுகிறேன் வா
  • உயிர் வீயூகம்
  • உயிரே உறங்காதே
  • வேட்டை நாய்
  • அன்பின் வலிமை
  • இலக்கில்லா பயணம்
  • உயிர் விடுகதை
  • கரையாத காதலுடன்
  • கருப்புச் செய்தி
  • சிரிக்கும் பெண்ணே
  • பூமிக்குப் புதியவன்
  • முடிவு என் கையில்
  • எல்லை நெருப்பு
  • நாளை முடிவு நாள்
  • வா மோதலாம்
  • துப்பாக்கிக் கலாச்சாரம்
  • துணிந்து நில் செல்வா
  • அடிமை ராஜ்ஜியம்
  • துப்பாக்கி நாட்கள்
  • உயிர்ப் பயணம்
  • முதல் குற்றம்
  • காத்திரு கண்மணி
  • உயிரே உயிரே விலகாதே
  • நிழல் போல் வா
  • முடிவுக்கு ஒரு முன்னோட்டம்
  • பச்சை ரகசியம்
  • துடிக்கத் துடிக்க
  • தூங்கு டார்லிங் தூங்கு
  • நிழல் தடயம்
  • கலைடாஸ்கோப்
  • பகை வீழ்ச்சி
  • இன்னும் ஓர் இரவு
  • ஓர் ஆவிக்காகச் சில கொலைகள்
  • ரகசிய ஆயுதம்
  • தூண்டில் கயிறு
  • உன் மேல் ஒரு மின்னல்
  • அன்று இரவு மணி: 10.10
  • சாவதற்குள் ஒரு சாகஸம்
  • ஒற்றனின் ஒளிவிடம்
  • ஒரு துளி ரத்தம்
  • அகப்பட்டவன்
  • மற்றொரு ரகசியம்
  • தீர்த்து விடுகிறேன் வா
  • துப்பாக்கிப் பார்வை
  • வெல்கம் டு இண்டியா
  • வைஜயந்தி S.O.S
  • திரும்பி வா வசந்தமே
  • நூறு நாள் சதி
  • சதிகள் தொடரும்
  • புகையும் துப்பாக்கி
  • ஓடு, ஒளிந்து கொள்
  • தேனிலவுக் குற்றங்கள்
  • ரத்தப் பந்தயம்
  • உளவு வளையம்
  • பிடி வைத்த கத்தி
  • புதைத்தாலும் வருவேன்
  • சொ. கொ. தூரம்
  • சென்னை பயங்கரம்
  • ஓடு பெண்ணே ஓடு
  • தீர்க்க வேண்டிய கணக்கு
  • அறை எண் 777
  • அதுதான் நரேந்திரன்
  • கல்லறையில் ஒரு கால்
  • வா நண்பனே
  • ரத்தம் சிந்து!
  • மௌன முழக்கம்
  • ஆயுத ஆட்சி
  • ஜூன் 12 முதல் ஜூன் 12 வரை
  • ஓடு ஒற்றா ஓடு!
  • சித்திரமே, என்னைக் காதலி
  • நனைந்த இரவு
  • தேடப்படுபவன்
  • ரிவால்வர்
  • குறி தவறாதே
  • கத்தியுண்டு, ரத்தமுண்டு
  • ஆட்ட நாயகன்
  • நீயுமா?
  • எதிர்க்காற்று
  • இன்று நீ, நாளை நான்!
  • தயங்காதே, தாக்கு!
  • ஆயிரம் முத்தங்கள்
  • கடைசி வினாடி
  • விடாதே பிடி..!
  • உன்னதமான சூழ்ச்சி
  • முடிவதற்குள் முத்தம்
  • இது நரேந்திரன் நேரம்
  • காதல் கல்வெட்டு
  • சிறப்பு உத்தரவு
  • இதுவும் நரேந்திரன் நேரம்
  • அவசர அழைப்பு
  • ஒற்றை ரோஜா
  • சிறைக் கதவு
  • என்நாடு! என்மக்கள்! என்ரத்தம்!
  • ஹலோ, அவசரம் ஈகிள்ஸ் ஐ
  • இதயத்தில் எழுது
  • காமினி
  • இன்னொரு நரகம்
  • காற்றில் கரைந்தவன்
  • இரண்டாவது ஒற்றன்
  • மலை வீடு மர்மம்
  • மிஸ்டர் 302
  • ஸார், ஒரு ஸீன் சொல்ட்டா? (சினிமா அனுபவம்)
  • உலக திரைப்படக் கதைகள்
  • நிழல் வாரிசு
  • இருள் பழக்கம்
  • உலகை வென்றவன்
  • ரோஜாப் படுக்கை
  • கழுகு நிலம்
  • துரோகம் துரத்தும்
  • மேலே சில கழுகுகள்
  • சவுக்குத் தோப்பு
  • கிருபாவுக்கு முன், கிருபாவுக்கு பின்
  • உளவுக்காரி
  • ராணுவக் கட்டளை
  • மழை நாள் மரணம்
  • காணாமல் போன கவிதை
  • 6 விரல் அங்க்கிள்
  • என்னைத் தேடு
  • ஜன்னல் நிலா
  • இரும்புக்கவசம்
  • அசையாதே ஆபத்து
  • மெய்க்காப்பாளன்
  • வா, ஜெயித்துக் காட்டுவோம்!
  • நத்திங் பட் நரேந்திரன்
  • கனவோடு கனவாக
  • வினோத் எனும் விபத்து
  • மன்னிக்க மறுத்து விடு
  • எதிர்த்து வெல் நரேன்
  • ரத்த முத்திரை
  • வெற்றி நாள்
  • கடைசிக் கனவு
  • ரயிலைப் பதுக்கியவன்
  • ரோஜா ரகசியம்
  • நான்தான் நரேந்திரன்
  • உயிரே உறங்காதே
  • வேட்டை விளையாட்டு
  • இமைக்காத இரவுகள்
  • உயிர் எண்ணிக்கை
  • கரையாத காதலுடன்
  • இரவோடு இரவாக
  • ஒரு சதிகாரன், ஒரு சதிகாரி
  • குமுதாவின் குற்றங்கள்
  • நரேந்திரன் + நரேந்திரன்
  • சாவதற்கு ஒரு சட்டம்
  • நீயின்றி என்னாவேன்?
  • விரும்பாத விபரீதம்
  • உனக்காகக் காத்திருப்பேன்
  • வேண்டாம் செல்வா, வேண்டாம்
  • ரகசியமனிதன்
  • அன்பு ராஜாவும், காற்றுக் குதிரையும்
  • யட்சன்

மற்றும் பல

சிறுகதைத் தொகுப்பு
  • சுபா சிறுகதைத் தொகுதி – 3 பாகங்கள்
ஆன்மிக நூல்கள்
  • சக்தி தரிசனம் (இரண்டு பாகங்கள்)
  • சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்
  • திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
  • தேவியின் திருவடி
  • புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள்
  • மண்ணில் உதித்த மகான்கள்
  • ஸ்ரீ ராகவேந்திரர்
  • திருப்பதி வேங்கடாசலபதி
  • அள்ள அள்ள அருள்தரும் அதியமான் கோட்டை கால பைரவர்
  • அஹோபில யாத்திரை - ஒரு தரிசன வழிகாட்டி
  • ஹனுமான் சாலீசா
  • பஞ்ச துவாரகை யாத்திரை – ஒரு தரிசன வழிகாட்டி
  • மஹா பெரியவா எனும் துருவ நட்சத்திரம்

உசாத்துணை


✅Finalised Page