under review

வ. சௌந்தரராஜன்

From Tamil Wiki
வ. சௌந்தரராஜன்

வ. சௌந்தரராஜன் (ஆஸ்டின் சௌந்தர்) (பிறப்பு: 1964) கட்டுரையாளர், பண்பாட்டுச் செயல்பாட்டாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யும் பணிகளை ஒருங்கிணைக்கிறார். லாப நோக்கமற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்ட அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கியம், எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் இலக்கிய விழாக்கள், கருத்தரங்கங்கள், செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

வ. சௌந்தரராஜன் தமிழ் நாட்டின் கரூரில் ப. வரதப்பன், எல்லம்மாள் இணையருக்கு கடைசி மகவாக 1964-ல் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் ஒரு அண்ணன். திருச்சி தேசியக்கல்லூரியில் மண்ணியலில் (geology) இளங்கலைப் பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் பயன்பாட்டு மண்ணியலில் (Applied Geology) முதுகலைப் பட்டம் பெற்றார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கணினி சம்பந்தமான டிப்ளமா (PGDCA) பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

அ. முத்துலிங்கம், ராதா, ஆஸ்டின் சௌந்தர், சஹா, ராஜன் சோமசுந்தரம்

வ. சௌந்தரராஜன் அக்டோபர் 18, 1993-ல் ராதாவை மணந்தார். மகன் சஹா. அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் மாநகரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

பணி

வ. சௌந்தரராஜன் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ (PSNA) பொறியியல் கல்லூரி மற்றும் ஆர்.வி.எஸ்(RVS) பொறியியல் கல்லூரிகளில் 1987 முதல் 1989 வரை சிவில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பயன்பாட்டு மண்ணியல் நடத்தும் கல்லூரி விரிவுரையாளராக இருந்தார்.

டிசம்பர் 1989 முதல் 1996 வரை மத்திய அரசாங்க நிறுவனமான தேசிய தகவல் மையத்தில் (NIC) கணினி நிரலராகப் (programmer) பணியில் இருந்தார். 1997-ல் அமெரிக்கா வந்தார். அமெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணினித்துறையில் உயர் அதிகாரியாகப் பணியில் இருந்து ஓய்வு பெற்று முழு நேர இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அமைப்புச் செயல்பாடுகள்

கி.ரா-வுடன் க.நா.சு கலந்துரையாடல் நிகழ்வு

சௌந்தரராஜன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கா என்ற அமைப்பை நண்பர்களுடன் இணைந்து 2019-ல் ஆரம்பித்தார். இவ்வமைப்பு ஏப்ரல் 2021-ல் லாப நோக்கமற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. சௌந்தர் இதன் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். இதன் கிளை அமைப்புகள் டாலஸ், பே ஏரியா, நியூ ஜெர்ஸி, வாஷிங்டன் டி.ஸி ஆகிய இடங்களில் மாதாந்திர இலக்கியக் கூடுகைகளை நடத்தி வருகின்றன.

சௌந்தர் 2022 முதல் வருடம் ஒரு முறை அமெரிக்காவில் நிகழும் பூன் முகாமை ஒருங்கிணைக்கிறார். காலாண்டுக்கு ஒரு முறை ஜூம் செயலி வழியாக நடக்கும் க.நா.சு அரங்கை ஒருங்கிணைக்கிறார். இதன் வழியாக சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் எழுத்தாளருக்கு $325/- பங்களிப்புத் தொகையாக வழங்கப்படுகிறது. நாஞ்சில் நாடன், அ.கா. பெருமாள், தியடோர் பாஸ்கரன், கி.ராஜ நாராயணன், இயக்குனர் மணி ரத்னம் உள்ளிட்ட ஆளுமைகளுடனான உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சௌந்தர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்காவின் வழிகாட்டுதல் மற்றும் நிதி உதவியுடன் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யும் பல பணிகளை ஒருங்கிணைக்கிறார்.

ஆஸ்டின் சௌந்தர் நாஞ்சில் நாடனுடன்

இலக்கியப் படைப்புகள், எழுத்தாளர்கள் தொடர்பான ஆவணப்படங்கள், இசைக் கோவைகள் அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நிதி மற்றும் வழிகாட்டுதலுடன் உருவாக்கப்படுகின்றன. வெண்முரசு ஆவணப்படம், வெண்முரசு பாடல், கி.ரா கும்மிப் பாடல், ஜெயகாந்தன் நினைவுப்பாடல், அ. முத்துலிங்கம் பாடல், வாழும் தமிழ் தீம் பாடல் ஆகியவை அவற்றில் சில. இதன் ஒருங்கிணைப்பாளராகவும் ஆஸ்டின் சௌந்தர் உள்ளார்.

2026 முதல் இந்த அமைப்பின் சார்பாக வாழும் தமிழ் இலக்கியத் திருவிழாவை ஒருங்கிணைக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

வ. சௌந்தரராஜன் கல்லூரியில் 'பூங்காற்று' என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். இவரின் முதல் கவிதை 'சுட்டி' இதழில் வெளியானது.

ஆஸ்டின் சௌந்தர் என்ற பெயரில் எழுதி வருகிறார். அ. முத்துலிங்கம் கதைகள் குறித்த கட்டுரைகளைத் தொகுத்து 2022-ல் விஜயா பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டார். 'காற்றின் நிழல்' என்ற தனது தளத்திலும், சொல்வனம் இதழிலும் இலக்கிய ரசனைக் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆதர்ச எழுத்தாளர்களாக க.நா. சுப்ரமணியம், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி. ராஜநாராயணன், ஜெயமோகன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

குறும்படம்

ஆஸ்டின் சௌந்தர் அவர் மனைவி ராதாவுடன் இணைந்து 'தாரை' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். இதன் முதல் குறும்படம் 'தாமரை' ரவி சுப்பிரமணியன் இயக்கத்தில் வெளியானது. என். ஸ்ரீராம் எழுதிய 'தாமரை நாச்சி' என்ற சிறுகதையைக் கருவாகக் கொண்டு அறிவு வளர்ச்சிக் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படம்

நூல் பட்டியல்

தொகுப்பாசிரியர்
  • ஆறாம் திணையின் கதவுகள் (கட்டுரைகள்)

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2026, 07:24:45 IST