under review

தியடோர் பாஸ்கரன்

From Tamil Wiki
பாஸ்கரன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாஸ்கரன் (பெயர் பட்டியல்)

To read the article in English: Theodore Baskaran. ‎

Theodore-1.jpg
தியடோர் பாஸ்கரன் 1979
தியடோர் பாஸ்கரன் இயல் விருது
தியடோர் பாஸ்கரன் மனைவியுடன்
தியடோர் பாஸ்கரன் தாய் தந்தையுடன் குழந்தையாக
தியடோர் பாஸ்கரன் மனைவியுடன் 1998
தியடோர் பாஸ்கரன் ராஜீவ்காந்தியுடன் 1985

சு. தியடோர் பாஸ்கரன் (பிறப்பு: ஏப்ரல் 1, 1940) தமிழக எழுத்தாளர், திரைப்பட வரலாற்றாய்வாளர். தமிழில் சுற்றுச்சூழலியல் மற்றும் கானியல் சார்ந்த எழுத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். தமிழகக் கலை, தொல்லியல் சார்ந்தும் எழுதிவருகிறார். ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதுகிறார்.

பிறப்பு, இளமை

தியடோர் பாஸ்கரன் தாராபுரத்தில் தனலட்சுமி, சுந்தரராஜ் இணையருக்கு ஏப்ரல் 1, 1940-ல் பிறந்தார். பாளையங்கோட்டை புனித ஜான் கல்லூரியில் இடைநிலை வகுப்புப் படித்து பின்னர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் 1960-ல் முதுகலை (வரலாறு) பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

தியடோர் பாஸ்கரன்

பாஸ்கரன் பட்டம் பெற்ற பின், தமிழக அரசு ஆவணக் காப்பகத்தில் ஆய்வாளராக இரண்டாண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் 1964-ல் குடிமைப்பணித் (Centra Civil Service) தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அஞ்சல் பணியில் (Indian Postal Service) சேர்ந்தார். திருச்சியில் இரண்டாண்டுகளும், வேலூரின் இரண்டு ஆண்டுகளும். கோட்ட மேலாளராகப் பணிபுரிந்து பின்னர் மேகாலயாவிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்த போது 1971-ல் வங்காளதேச விடுதலைப் போர் மூண்டது. அப்போது பாஸ்கரன் தபால் தந்தித் துறையையும் பாதுகாப்புத் துறையையும் இணைக்கும் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1985-ல் National Defence College இல் ஓராண்டு பயிற்சி பெற்றார். அப்போது ரஷியா, ஜெர்மனி, மாரிஷியஸ் ஆகிய நாடுகளுக்கு பயணித்தார். 1996-ல் ஐ.நா. சபையின் சார்பில் கென்யா நாட்டில் இரண்டு மாதம் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். அதே ஆண்டு ஜப்பானில் மூத்த அதிகாரிகளுக்கான பன்னாட்டு பயிற்சி பெற்றார். அஞ்சல் துறையில் தமிழ் நாட்டின் தலைமை அஞ்சல் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பணி நிறைவிற்குப்பின், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் (1998 - 2001) பணியாற்றினார்.

தியடோர் பாஸ்கரன் மனைவி திலகா. மகள் நித்திலா, மகன் அருள். தியடோர் பாஸ்கரனின் மனைவி திலகா பாஸ்கரன் ஓர் உணவியல் நிபுணர், எழுத்தாளர். உணவியல் சார்ந்தும் மருத்துவம் சார்ந்தும் எழுதியிருக்கிறார். பாஸ்கரனின் தம்பி சு.கி.ஜெயகரன் நிலவியலாளர், எழுத்தாளர்.

அறிவுலகப் பங்களிப்பு

Theodore.jpg
தொடக்கம்

தியடோர் பாஸ்கரன் கலை மற்றும் வரலாற்றாய்வு சார்ந்த கட்டுரைகளை 1967 முதல் ஆங்கில நாளிதழ்களில் எழுதிவந்தார். தமிழக தொல்லியல்தடையங்கள் பற்றியும், சமண பௌத்த பண்பாடு பற்றியும் எழுதினார். கசடதபற இதழ் சார்ந்த குழுவினரான கிரியா எஸ்.ராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ஞானக்கூத்தன் ஆகியவர்களோடு தொடர்பு உருவானது. அப்பொழுது யுனைடட் ஸ்டேட்ஸ் இன்ஃப்ர்மேஷன் சர்வீஸ் அரங்கத்தில் திரையிடப்பட்ட, ஆனந்த குமாரசுவாமியின் வாழ்க்கை பற்றி சிதானந்ததாஸ் குப்தா இயக்கிய DANCE OF SIVA என்ற படத்தைப்பார்த்து அதைப்பற்றி கசடதபற மார்ச், 1975 இதழில் தன் முதல் தமிழ் கட்டுரையான 'சிவதாண்டவம் ஓர் அஞ்சலி' யை தேவபிச்சை என்ற பெயரில் எழுதினார். பின்னர் எஸ்.வி.ராஜதுரை ஆசிரியத்துவத்தில் வந்த இனி பத்திரிக்கையிலும் இதே புனைப்பெயரில் சில கட்டுரைகள் எழுதினார்.

தொல்லியல், வரலாறு

தியடோர் பாஸ்கரன் மாணவராக இருக்கையில் இந்திய தொல்லியல் துறையின் முன்னோடிகளில் ஒருவரான மார்ட்டிமர் வீலரை சந்தித்திருக்கிறார். வரலாற்றாய்வாளர்களான கிரேஸ் மார்லி, மயிலை சீனி. வேங்கடசாமி, சுரேஷ் பிள்ளை, சமண ஆய்வாளரான ஜீவபந்து ஶ்ரீபால் ஆகியோருடன் அறிமுகம் உருவாகியது. ஆங்கில இதழ்களில் வரலாறு, தொல்லியல் பற்றிய கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதி வந்தார். பின்னர் தமிழிலும் வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வுநூல்களை எழுதினார். தமிழில் கல்மேல் நடந்த காலம் தொல்லியல் சார்ந்து தியடோர் பாஸ்கரன் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கது.

திரைப்படம்

தியடோர் பாஸ்கரன் 1970-ல் பெனெலொப் ஹூஸ்டன் (Penelope Houston) எழுதிய The Contemporary Cinema என்ற நூலை வாசித்தார். அதன் தாக்கத்தில் திரைப்படங்கள் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 1974-ல் புனே தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக ஆனார். 1974-ல் அவருக்கு Tamilnadu Council of Historical Research அமைப்பின் நிதிநல்கை கிடைத்தது. அதை பயன்படுத்தி சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் சினிமாவின் பங்களிப்பு பற்றி ஆய்வு செய்தார். அலிகர் வரலாற்றாய்வு கருத்தரங்கில் (Indian History Congress) 1976-ல் பிரிட்டிஷ் இந்தியாவில் திரைப்படத் தணிக்கை முறை அரசியல் கட்டுப்பாட்டுக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டதைப் பற்றிய ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தார். பின்னர் சினிமா சார்ந்த கட்டுரைகள் அடங்கிய The Message Bearers என்ற நூலை 1981-ல் க்ரியா பதிப்பகம் வழியாக வெளியிட்டார்.

தொடர்ந்து மௌனப்படங்கள் பற்றி The Eye of the Serpent: An introduction to Tamil cinema (1996) போன்ற நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். அது 1997 ஆண்டு இந்திய குடியரசுத்தலைவர் பரிசான ஸ்வர்ண கமல் விருது பெற்றது. தொடர்ந்து சினிமா குறித்த ஆய்வுநூல்களை தமிழில் எழுதியிருக்கிறார்.

தியடோர் பாஸ்கரன் பெங்களூர் தேசிய உயர்கல்வி நிறுவனத்தில் (National Institute of Advanced Studies) முதுநிலை ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். பிரின்ஸ்டன் பல்கலை, ஆஸ்திரேலிய தேசியப் பல்கலை, சிகாகோ பல்கலை உள்ளிட்ட கல்விநிலையங்களில் இந்திய திரைப்படம் பற்றி உரையாற்றியிருக்கிறார். 2001-ல் மிச்சிகன் பல்கலையில் வருகைதரு பேராசிரியராக இரண்டு மாதம் கற்பித்தார். தியடோர் பாஸ்கரன் இந்திய திரைப்பட விருதுகளுக்கான நடுவராக பணிபுரிந்துள்ளார். "அவள் பெயர் தமிழரசி" திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

சூழலியல்

ஆங்கிலத்தில் சுற்றுச்சூழலியல் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்த மா. கிருஷ்ணன் தியடோர் பாஸ்கரனின் முன்னுதாரணமாக திகழ்ந்தார். சூழலியல் சார்ந்த பயணக்குறிப்புகள், நடைச்சித்திரங்கள் ஆகியவற்றை ஆங்கில இதழ்களில் எழுதினார். உயிர்மை இலக்கிய இதழின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் கோரியதற்கேற்ப 2002-ல் சூழலியல் சார்ந்த கட்டுரைகளை தமிழிலும் எழுத ஆரம்பித்தார். ஒரு மொழியில் ஓர் அறிவுத்துறை நிலைகொள்ள வேண்டுமென்றால் அம்மொழியிலேயே கலைச்சொற்கள் தேவை என்பது தியடோர் பாஸ்கரனின் கருத்து. ஆகவே தமிழில் ஏற்கனவே இருந்து, புழக்கத்தில் இருந்து மறைந்துபோன சொற்களை கண்டடைந்து பயன்படுத்தினார். புதிய சொற்களையும் உருவாக்கினார். சூழலியல் சாந்த நூல்களையும் மொழியாக்கம் செய்தார்.

தியடோர் பாஸ்கரனின் 'இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)', 'தாமரை பூத்த தடாகம் (2008)', 'வானில் பறக்கும் புள்ளெலாம் (2011)' போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை 'கானுறை வேங்கை' (காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். காட்டுயிர் பற்றி தியடோர் பாஸ்கரன் எழுதிய The Dance of the Sarus (ஆக்ஸ்போர்ட் பல்கலை பதிப்பதம்) 1996-ல் வெளிவந்தது. பெங்குயின் பதிப்பகம் தியடோர் பாஸ்கரனை தொகுப்பாசிரியராகக் கொண்டு The Sprit of the Blackbuck நூலை 2009-ல் வெளியிட்டது.

தியடோர் பாஸ்கரன் மனைவியுடன் 1990

தியடோர் பாஸ்கரன் குரங்குகள் பாதுகாப்புக் கழகம் (International Primate Protection League) அமைப்பின் தென்னிந்திய பிரதிநிதியாக இருந்தார். தமிழக அரசால் மதிப்புறு காட்டுயிர் காவலராக நியமிக்கப்பட்டார். இரண்டு முறை இயற்கைக்கான உலக நிதியகத்தின் (WWF-India) அறங்காவலராக இருந்தார்.

விருதுகள்

  • குடியரசுத்தலைவர் வழங்கும் தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருது - The Eye of the Serpent நூலுக்காக (1997)
  • கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது (2013)
  • இயற்கை அறக்கட்டளையின் வாழ்நாள் சேவை விருது - Sanctuary Magazine (2020)
  • வாழ்நாள் சேவை விருது - Film Heritage Foundation (2024)
  • குருகு இணைய இதழ் 2023 மார்ச் மாதம் தியடோர் பாஸ்கரன் மலர் வெளியிட்டது

அறிவியக்க இடம்

தியடோர் பாஸ்கரன் தமிழ் திரைப்பட வரலாற்றாசிரியர்களில் முன்னோடியின் இடம் கொண்டவர். தமிழ் சூழியல் எழுத்திலும் முன்னோடியாக கருதப்படுகிறார். தியடோர் பாஸ்கரனின் எழுத்துநடை நுணுக்கமான செய்திகளை மிக இயல்பாக விவரிக்கும் தன்மையாலும், சங்க இலக்கியத்தில் இருந்தும் தொல்லியலில் இருந்தும் பெற்றுக்கொண்ட பண்பாட்டுக் குறிப்புகளாலும் தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தக்க இலக்கியப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது.

'தமிழ் சொற்களஞ்சியத்தை செம்மைபடுத்தியதிலும் இளம் தலைமுறையினரிடம் சூழியல் தொடர்பான விழிப்புணர்வை விதைத்ததிலும் தமிழ் மொழிக்கும் அதன் பண்பாட்டிற்கும் அவருடைய பங்களிப்பானது என்றென்றைக்குமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதும் மகத்தானதுமாகும்.' என தொல்லியலாளர் ஜோப் தாமஸ் மதிப்பிடுகிறார்.

நூல்கள்

தமிழ்

சூழலியல்
  • மழைக்காலமும் குயிலோசையும் (மா. கிருஷ்ணன்), தொகுப்பாசிரியர் தியடோர் பாஸ்கரன் (2003)
  • தாமரை பூத்த தடாகம் (2005)
  • இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)
  • வானில் பறக்கும் புள்ளெலாம் (2011)
  • நம்மைச்சுற்றிக் காட்டுயிர் (2014)
  • சோலை எனும் வாழிடம் (2014)
  • இந்திய நாயினங்கள் (2017)
  • கையில் இருக்கும் பூமி, இவரது சூழலியல் கட்டுரைகளின் பெருந்தொகுப்பு (2018)
  • விண்ணளந்த சிறகு (2021)
திரைப்படம்
  • எம் தமிழர் செய்த படம் (2004)
  • சித்திரம் பேசுதடி, காலச்சுவடு, தொகுப்பாசிரியர்
  • தமிழ் சினிமாவின் முகங்கள் (2004)
  • பாம்பின் கண், The Eye of the Serpent மொழியாக்கம் (2011)
  • ராஜா சாண்டோ - டி.வி. ராம்நாத், தொகுப்பாசிரியர் தியடோர் பாஸ்கரன் (2012)
  • சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே, (2014)
  • சினிமா கொட்டகை (2018)
  • தண்டோராக்காரர்கள், The Message Bearers மொழியாக்கம் (2020)
  • திரையில் விரியும் சமூகம் 2023
  • இது நம் சினிமா (கட்டுரைகளின் பெருந்தொகுப்பு) (2026)
  • ஊருக்கு நூறு பேர். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (2026)
தொல்லியல்
  • கல் மேல் நடந்த காலம் (2016)

ஆங்கிலம்

  • தி மெசேஜ் பியரர்ஸ் - The Message Bearers: The Nationalist Politics and the Entertainment Media in South India, 1880-1945 (1981)
  • தி ஐ ஆஃப் தி செர்பெண்ட் - The Eye of the Serpent: An Introduction to Tamil Cinema (1996)
  • தி டான்ஸ் ஆஃப் தி சாரஸ் - The Dance of the Sarus: Essays of a Wandering Naturalist (1999)
  • டிரேட் யூனியனிஸம் இன் செளத் இண்டியன் ஃபிளிம் இண்டஸ்ட்ரி - Trade Unionism in South Indian Film Industry (Monograph 2002)
  • ஹிஸ்டரி துரூ தி லென்ஸ் - History through the Lens: Perspectives on South Indian Cinema (2009)
  • சிவாஜி கணேசன் - Sivaji Ganesan: Profile of an Icon (2009)
  • தி ஸ்பிரிட் ஆஃப் தி பிளாக் பக் - (ed.) The Spirit of the Black Buck, editor (2010)
  • தி புக் ஆஃப் இந்தியன் டாக்ஸ். The Book of Indian Dogs (2017) (இந்திய நாய் இனங்கள் பற்றிய கட்டுரைகள்)
  • மை நேடிவ் லேண்ட் - My Native Land. Essays on Nature. By M.Krishnan ( S.Theodore Baskaran and A.Rangarajan edited) 2019
  • ஏ டே வித் ஷாமா - A Day with the Shama (articles on birds) (2020)
  • தி ஸ்டோரி ஆஃப் மொகுல் - The Story of a Movie Mogul. S S Vasan (2020)

மொழியாக்கம்

  • கானுறை வேங்கை. உல்லாஸ் கரந்த். தமிழில் தியடோர் பாஸ்கரன். (2005)
  • சோழர் காலச் செப்புப் படிமங்கள், ஐ. ஜோப் தாமஸ், தமிழில் தியடோர் பாஸ்கரன் (2021)
  • Dark Interiors தமிழ் மூலம் Raj Gowthaman. ஆங்கிலத்தில் தியடோர் பாஸ்கரன் (2021)
  • யானைகளும் அரசர்களும், தாமஸ் டிரவுட்மன், தமிழாக்கம் தியடோர் பாஸ்கரன், ஜகநாதனுடன் இணைந்து (2022)
  • ஏழு பேராளிகள், ராமசந்திர குஹா, தமிழில் தியடோர் பாஸ்கரன் (2022)
  • இயற்கையுடன் பேசியவர்கள், ராமசந்திர குஹா, தமிழில் தியடோர் பாஸ்கரன் (2026)

உசாத்துணை

காணொளி


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Mar-2023, 19:06:39 IST