சு.கி.ஜெயகரன்
சு. கி. ஜெயகரன் (பிறப்பு: 1946) தமிழ் எழுத்தாளர், அறிவியல் சார்ந்த நூல்களையும் தமிழ்ப்பண்பாடு பற்றிய ஆய்வுகளையும் எழுதி வருகிறார். தமிழகம் சார்ந்து குறிப்பிடத்தக்க நிலவியல் ஆய்வுகளைச் செய்தவர். குமரிக்கண்டம் குறித்த தமிழகத்தின் நம்பிக்கைகளை அறிவியல் தரவுகளின் அடிப்படையில் மறுத்தவர்.
பிறப்பு, கல்வி
சு.கி.ஜெயகரனின் முழுப்பெயர் சு. கிறிஸ்டோஃபர் ஜெயகரன். தமிழகத்தில் தாராபுரத்தில் தனலட்சுமி, சுந்தர ராஜ் இணையருக்கு 1946-ல் பிறந்தார். சூழியலாளர் தியடோர் பாஸ்கரன் இவருடைய அண்ணன்.
சு.கி.ஜெயகரன் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் புவியியலில் இளங்கலைப் பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், இங்கிலாந்து லஃப்பரோ பல்கலைக்கழகத்தில் நிலத்தடி நீர் ஆய்வு தொடர்பான சான்றிதழ் பட்டமும் பெற்றார்.
தனிவாழ்க்கை
சு.கி.ஜெயகரன் அரசுசாரா நிறுவனம் ஒன்றில் தமிழக நீர்வள ஆய்வுக் குழுவின் தலைவராக எழுபதுகளில் பணியாற்றினார். டான்சானியா அரசின் நிலத்தடி நீர்வள ஆலோசகராகப் பணிபுரிந்தார். காமன்வெல்த் செயலகத்திற்காக மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் பணியாற்றினார். ஜப்பானிய நிறுவனம் ஒன்றிற்காக பல மேற்கு ஆப்பிரிக்க, தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பணியாற்றிய பின், ஜெர்மானிய நிறுவனம் ஒன்றிற்காக சாம்பியாவில் பணியாற்றி விட்டு, 2011-ல் ல் ஓய்வு பெற்றபின் பெங்களூரில் வசிக்கிறார்.
ஆய்வுகள்
சு.கி.ஜெயகரன் தமிழகத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திய தொல்லியல், ஆதிமனிதக் குடியேற்றம் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர். ஆய்வுக்கட்டுரைகள் புகழ்பெற்ற சர்வதேச இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழ்ப் பண்பாட்டை நிலவியல், வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் ஆய்வு செய்தவர் ஜெயகரன். ஜப்பானிய மொழியையும், ஆப்பிரிக்க மொழிகளான கிரியோல், ஸ்வாஹிலி ஆகிய மொழிகளையும் கற்றிருக்கிறார்.
நிலவியல்
வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தின் மானுடவாழ்க்கை குறித்து சு.கி.ஜெயகரன் எழுதிய மூதாதையரைத் தேடி என்ற நூல், தமிழில் அத்துறையில் எழுதப்பட்ட முன்னோடி நூலாகக் கருதப்படுகிறது. ஜெயகரன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கண்டெடுத்த காண்டாமிருகத்தின் எலும்பின் பகுதி தமிழ் அகழ்வாய்வில் முக்கியமானதாக கருதப்படுகிறது. தமிழகத்தில் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் காண்டாமிருகங்கள் வாழ்ந்தமைக்கான சான்று இது. சென்னை அருங்காட்சியகத்தில் இந்த காண்டாமிருக எலும்பு சு.கி.ஜெயகரனின் கொடையாக வைக்கப்பட்டுள்ளது
குமரிநிலநீட்சி
சு.கி.ஜெயகரன் குமரிக் கண்டம் அல்லது லெமூரியா என்னும் கருத்தை நிலவியல் சான்றுகளின் அடிப்படையில் விரிவாக மறுத்து எழுதிய குமரி நில நீட்சி என்னும் நூல் தமிழில் விரிவாக விவாதிக்கப்பட்ட ஒன்று. தமிழகத்தின் தென் கடற்கரையில் சிறிதளவு நிலம் கடலுக்குள் மூழ்கியிருக்கலாம் என்றும், தமிழாய்வாளர் தமிழ்நூல் சான்றுகளைக் கொண்டு சொல்வது போல குமரிக்கண்டம் என்னும் பெரிய நிலப்பரப்பு மூழ்கியிருக்க வாய்ப்பே இல்லை என்றும் அந்நூலில் வாதிடுகிறார்.
கட்டுரைகள்
சு.கி.ஜெயகரன் ஆஸ்திரேலிய பழங்குடியினர், ஹைக்கூ கவிதைகள் என வெவ்வேறு தலைப்புகளைச் சார்ந்து எழுதிய கட்டுரைகள் தளும்பல், கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும் , மணல்மேல் கட்டிய பாலம் என்னும் கட்டுரைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.
பண்பாட்டு இடம்
சு.கி.ஜெயகரன் நிலவியல் சான்றுகளின் அடிப்படையில் தமிழகத் தொல்வரலாற்றை எழுத முற்பட்ட முன்னோடியாகவும், குமரிக்கண்டம் என்னும் கருத்தை நிலவியல் சான்றுகளின் அடிப்படையில் மறுத்த ஆய்வாளராகவும் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- மூதாதையரைத் தேடி
- தளும்பல்
- குமரி நில நீட்சி
- மணல்மேல் கட்டிய பாலம்
- கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளை சிங்கங்களும்
- பழையன்னூர் சகோதரர்கள் (மொழியாக்கம் சு.கி.ஜெயகரன்)
உசாத்துணை
- காலச்சுவடு- சு.கி.ஜெயகரன் பக்கம்
- மு.சிவகுருநாதன் - குமரிநில நீட்சி வாசிப்பு
- மு. சிவகுருநாதன் குமரிநில நீட்சி வாசிப்பு
- சென்னை அருங்காட்சியக வைப்பு தகவல்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Jul-2024, 11:49:26 IST