under review

குமரிக் கண்டம்

From Tamil Wiki

To read the article in English: Kumari Kandam. ‎

குமரி

குமரிக் கண்டம் (1941) அல்லது கடல் கொண்ட தென்னாடு: கா.அப்பாத்துரை எழுதிய நூல். தமிழகத்தில் குமரிக்கண்டம், லெமூரியா பற்றிய நம்பிக்கையை உருவாக்கிய முதன்மை நூல். அந்நம்பிக்கையை ஓர் அரசியல்நிலைபாடாக முன்வைத்த நூலும் இதுவே. பெரும்பாலும் இலக்கியச் சான்றுகளுடன் கற்பனையையும் கலந்து உருவாக்கப்பட்டது

வெளியீடு

மார்ச் 1941-ல் இந்நூலை திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது.

உள்ளடக்கம்

குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு நூல் சிலப்பதிகாரம் உட்பட பழைய நூல்களில் கடல்கொண்ட நிலம் பற்றி கூறப்படும் செய்திகளுடன் தியோசஃபிக்கல் சொசைட்டியைச் சேர்ந்த ஐரோப்பியர்கள் தங்கள் நம்பிக்கை சார்ந்து எழுதிய லெமூரியா பற்றிய செய்திகளையும் உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது. மனித இனமே தெற்கே குமரிக்கண்டத்தில் தோன்றி வடக்கே நகர்ந்தது என்று இந்நூல் வாதிடுகிறது

இந்நூலின் அதிகாரங்கள் கீழ்க்கண்டவை

  • குமரிநாடு பற்றிய தமிழ்நூல் குறிப்புகள்
  • மொழிநூல் முடிவு
  • தென்னிந்தியாவின் பழமைக்கான சான்றுகள்
  • குமரிக்கண்டம் இலெமூரியா என்று ஒன்றிருந்ததா?
  • ஞாலநூல் காலப்பகுதிகள்
  • உலகமாறுதல்களும் இலெமூரியாக் கண்டமும்
  • இலெமூரியாவின் இயற்கை இயல்புகள்
  • இலெமூரிய மக்களின் நாகரீகம்
  • தற்கால நாகரீகமும் இலெமூரியரும்
  • இலெமூரியாவும் தமிழ்நாடும்

செல்வாக்கு

பெரும்பாலும் கற்பனை சார்ந்த ஊகங்களை முன்வைத்து எழுதப்பட்டதானாலும் இந்நூல் ஆய்வுநூலாக ஏற்கப்பட்டது. குமரிக் கண்டம் பற்றிய நம்பிக்கையை தமிழியக்கச் சூழலிலும் திராவிட இயக்கச் சூழலிலும் நிலைநாட்டியது. தேவநேயப் பாவாணர் முதல் சாத்தூர் சேகரன், குமரி மைந்தன் வரை பலர் இந்நூலை முதல்நூலாகக் கொள்கின்றனர்

மறுப்புகள்

சு.கி.ஜெயகரன்

இந்நூல் முன்வைக்கும் குமரிக்கண்ட கோட்பாட்டை முழுமையாக மறுத்து, இந்நூலின் நிலைபாடுக்கு எதிராகவே தொல்லியல் செய்திகள், நிலவியல் செய்திகள் ஆகியவை உள்ளன என்றும் இந்நூல் தியோசஃபிகல் சொசைட்டியினர் 'உள்ளுணர்வை’ நம்பி முன்வைத்த கற்பனைகளைக்கூட ஆதாரங்களாகக் கொள்கிறது என்றும், குமரிக்கண்டம் என ஒன்று இருந்ததில்லை, குமரிக்கு கீழே சில கிலோமீட்டர்கள் நிலநீட்சி மட்டும் இருந்திருக்கலாம் என்றும் சு.கி.ஜெயகரன் வாதிடுகிறார் (குமரி நில நீட்சி- சு.கி.ஜெயகரன்)

சுமதி ராமசாமி

இந்நூல் உட்பட குமரிக்கண்ட கோட்பாட்டாளர்கள் முன்வைக்கும் தரப்பு வரலாற்றாய்வுக்கான அடிப்படைகள் அற்றது என சுமதி ராமசாமியின் நூல் கூறுகிறது[1]

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page