குமரி நில நீட்சி
- குமரி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குமரி (பெயர் பட்டியல்)
To read the article in English: Kumari Nila Neetchi.
குமரி நில நீட்சி (1997) நிலவியலாளர் சு.கி.ஜெயகரன் எழுதிய நூல். தமிழக பண்பாட்டு வரலாற்றில் 1940 முதல் முன்வைக்கப்பட்டு வரும் லெமூரியா அல்லது குமரிக்கண்டம் என்னும் கருத்தாக்கத்தை மறுத்து எழுதப்பட்டது. நிலவியல் ஆதாரங்கள், தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் குமரிக்கண்டம் என ஒன்றில்லை, குமரிக்கு தெற்கே சில கிலோமீட்டர் நீண்ட சிறிய ஒரு நிலநீட்சி மட்டுமே இருந்தது என கூறுகிறது
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை 1997-ல் வெளியிட்டது
உள்ளடக்கம்
சு.கி.ஜெயகரன் மானுடவியல், நிலவியல் இரு துறைகளிலும் நீண்ட அனுபவமும் முறைமைசார்ந்த கல்வியும் கொண்ட அறிஞர். குமரிக் கண்டம் என்னும் கருத்தாக்கம் அரசியல் நோக்குடன், முறைமைசார்ந்த ஆய்வுப்பயிற்சி அற்றவர்களால், பெரும்பாலும் கற்பனையைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் உருவகம் மட்டுமே என இந்நூலில் வாதிடுகிறார். நிலவியல் சான்றுகள் குமரிக்கு தெற்கே சில கிலோமீட்டருக்கு அப்பால் நிலம் ஏதும் மூழ்கியிருக்கவில்லை என்று காட்டுகின்றன. தென்னகக் கடலோரம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது, சில சிறிய நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியிருக்கலாம். அவற்றைப் பற்றிய தொல்நூல் குறிப்புகளுடன் தியோசஃபிக்கல் சொசைட்டியினர் தங்கள் 'உள்ளுணர்வு’ வழியாக கண்டுசொன்ன கற்பனை உருவகமான லெமூரியா என்னும் கருத்தையும் இணைத்துக்கொண்டு குமரிக்கண்டம் என்னும் நவீனத் தொன்மம் உருவாக்கப்பட்டது என்று சு.கி.ஜெயகரன் வாதிடுகிறார். தியோசஃபிக்கல் சொசைட்டியினரும் அதையொட்டி ஆய்வுசெய்த குமரிக்கண்ட நம்பிக்கையாளர்களும் கண்டப்பிளவு போன்ற நிலவியல் மாற்றங்கள் பலகோடி ஆண்டுகளில் நிகழ்ந்தவை, அப்போது மானுட இனமே உருவாகியிருக்கவில்லை என்னும் அடிப்படை அறிவியல் உண்மைகளையே அறிந்திருக்கவில்லை என்கிறார்.
தொடர்புடைய நூல்கள்
- குமரிக்கண்டம் என்னும் கருத்தாக்கத்தை முன்வைத்த முதன்மைநூல் கா.அப்பாத்துரை எழுதிய குமரிக் கண்டம்
- குமரிக்கண்டம் என்னும் கருத்தை விரிவாக மறுத்த ஆய்வுநூல் சுமதி ராமசாமி எழுதிய The Lost Land of Lemuria: Fabulous Geographies, Catastrophic Histories
- குமரிக்கண்டம் என்னும் கருத்துக்காக மீண்டும் வாதிடும் நூல் குமரிமைந்தன் எழுதிய குமரிக்கண்ட வரலாறும் அரசியலும்
உசாத்துணை
- தமிழர்வரலாறு: குமரிக்கண்டம்
- குமரிக்கண்ட வரலாறும் அரசியலும்
- Sumathi RamaswamyThe Lost Land of Lemuria: Fabulous Geographies, Catastrophic Histories
- குமரி நில நீட்சி சு.கி ஜெயகரன்
- Jayakaran, S. C. (2004). "Lost Land and the Myth of Kumari Kandam". Indian Folklore Research Journal. 1(4): 94-109.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:27 IST