under review

வீ.கே. கஸ்தூரிநாதன்

From Tamil Wiki
வீ.கே. கஸ்தூரிநாதன்

வீ.கே. கஸ்தூரிநாதன் (வீ. கருப்பையன்) (நவம்பர் 18, 1952 - 2020) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர். பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றினார். சிறார் நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார். தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது (மறைவுக்குப் பின்) பெற்றார்.

பிறப்பு, கல்வி

வீ. கருப்பையன் இன்னும் இயற்பெயர் கொண்ட வீ.கே. கஸ்தூரிநாதன், அரியலூர் மாவட்டத்தில் (அன்றைய திருச்சி மாவட்டம்) உள்ள சுண்டக்குடி என்ற ஊரில், நவம்பர் 18, 1952 அன்று, கு. வீராச்சாமி - பாப்பாத்தியம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வி கற்ற இவர், தமிழ், ஆங்கிலம், வரலாறு என மூன்று முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். ஆசிரியர் பயிற்சியில் பட்டயம் (D.T.Ed) பெற்றார் கல்வியியலில் இளநிலை மற்றும் முதுநிலை (பி.எட், எம்.எட்.) பட்டங்களைப் பெற்றார். முனைவர் பட்டம் பெற்றார். தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் புலமை பெற்றார்.

கல்விப் பணிகள்

வீ.கே. கஸ்தூரிநாதன், புதுக்கோட்டை மாவட்டம், குழிபிறையில் உள்ள வள்ளுவர் நடுநிலைப்பள்ளியில் 35 ஆண்டுகள் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப் பின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியில் ஆங்கிலத்துறையில் உதவிப்பேராசியராகப் பணியாற்றினார்.

தனி வாழ்க்கை

வீ.கே. கஸ்தூரிநாதன் மணமானவர். மனைவி: சுகுமாரி. மகன்: அன்பரசன்.

கவிஞர் வீ.கே. கஸ்தூரிநாதன்

இலக்கிய வாழ்க்கை

வீ.கே. கஸ்தூரிநாதன், மரபுக் கவிஞராகத் தன் இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். புதுக்கவிதைகளும் எழுதினார். சிறார்களுக்காகப் பல பாடல்களை, நாடகங்களை, சிறுகதைகளை எழுதினார். அவை, 'தினமலர் சிறுவர்மலர்', 'தினமணி சிறுவர்மணி', 'கோகுலம்' போன்ற இதழ்களில் வெளியாகின. அழ.வள்ளியப்பா தன்னைச் சிறார் இலக்கியம் எழுதத் தூண்டியதாகவும், சிறார் இலக்கிய எழுத்தாளர்கள், ரா. பொன்ராசன், செல்லகணபதி, குழ. கதிரேசன், தேவி நாச்சியப்பன் போன்றோர் சிறார் இலக்கியம் படைக்கத் தன்னை ஊக்கப்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.

தினமணி, தினமலர், தினகரன், மாலைமுரசு, ஆனந்த விகடன், கல்கி, அமுதசுரபி, ஏழைதாசன், தேவி, ராணி, முல்லைச்சரம், தமிழ்ப்பாவை போன்ற இதழ்களிலும், இலக்கியச் சிற்றிதழ்களிலும், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதினார். சிறுகதை, கவிதை, பக்திப்பாடல்கள், நாடகங்கள், குறுங்காவியம் என பதினேழு நூல்களை எழுதினார். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின், மேற்சான்றிதழ் நிலை ஒன்றுக்கான பாடங்கள் சிலவற்றை எழுதினார்.

நாடகம்

வீ.கே. கஸ்தூரிநாதன், பள்ளி மாணவர்களுக்காகவும், வானொலி சிறுவர் நிகழ்ச்சிகளுக்காகவும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார். அவற்றில் ஆறு நாடகங்களைத் தேர்வு செய்து அதை 'வீரத்தின் விளைநிலம் எங்கள் பாரதம்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். 'அப்பான்னா அப்பாதான்', 'அன்பின் அலைகள்' போன்ற நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகின. இவை தவிர்த்து பெரியோர்களுக்கான இரண்டு வானொலி நாடகங்களையும், நான்கு மேடை நாடகங்களையும் எழுதினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

வீ.கே. கஸ்தூரிநாதன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட வழக்காடு மன்றங்கள், கவியரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். உலகத்தமிழ் மாநாடு, உலகத் திருக்குறள் மாநாடு, கம்பராமாயண மாநாடு போன்ற மாநாடுகளில் பங்கேற்றார்.

பொறுப்பு

புதுக்கோட்டை கம்பன் கழக இணைச் செயலாளர்

பதிப்பு

வீ.கே. கஸ்தூரிநாதன், 'சுகுமாரி பப்ளிஷ்ங்' என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். அதன் மூலம் சில நூல்களை எழுதி வெளியிட்டார்.

விருதுகள்

  • இலட்சியக் கவிஞர்
  • குளிர்விக் கொண்டல்
  • கவிதைக் கனல்
  • கவிஞர் திலகம்
  • கவிச்செம்மல்
  • செந்தமிழ்ச் சுடரொளி
  • தேசியக்கவிஞர்
  • திருச்சி ரோட்டரி சங்கப் பரிசு
  • பன்மலர் இலக்கிய இதழ்ப் பரிசு

மறைவு

வீ.கே. கஸ்தூரிநாதன், கோவிட் நோய்த்தாக்குதலால் 2020-ல் காலமானார். அவரது மறைவுக்குப் பின் தமிழக அரசு தமிழ்ச்செம்மல் விருது அளித்தது.

மதிப்பீடு

வீ.கே. கஸ்தூரிநாதன் புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராகவும், கவிஞராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • தனிமனித தியாகங்கள்
  • இந்திய இளைஞனே உன் கடமைகள் இவை
  • பெண்ணுக்கு உரிமை தாரீர்
  • இன்னொரு சுதந்திரப் போர்
  • நேர்மை ஒரு குற்றமா?
  • அவள் சின்னப்பெண்ணா?
  • அட்சய பாத்திரத்தில் அழுக்குப்படியாது
  • வீரத்தின் விளைநிலம் எங்கள் பாரதம்
  • மறுமலர்ச்சி கவிஞர்களின் உணர்ச்சிமிகு பாடல்கள்
  • வழிதவறிய ஆடுகள்
  • இயற்கை வளங்களைப் போற்றுவோம்
  • கம்பன் காலடியில் ஓடிய கவிதை ஆறு
  • கம்பன் காட்டும் மனிதநேயம் (மறைவுக்குப் பின் வெளியான நூல்)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 19:13:27 IST