under review

தினமலர்

From Tamil Wiki
தினமலர் - முதல் இதழ்

தினமலர் (1951) தமிழ் நாளிதழ். கன்னியாகுமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும், அதற்காகப் போராடிய நாஞ்சில் நாட்டு மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரவும், மக்களுக்குத் தொண்டாற்றும் நோக்கத்திலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் தோற்றுவிக்கப்பட்டது. எஸ். வையாபுரிப்பிள்ளை தினமலரின் அலுவலகத்தைத் தொடங்கி வைத்தார். டி.வி. ராமசுப்பையர் தினமலர் இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர். குழந்தைசாமி செய்தி ஆசிரியராகப் பணியாற்றினார். டி.வி. ஆருக்குப் பின் இரா. கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் மறைவுக்குப் பின் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு, தினமலர் இதழின் ஆசிரியராக உள்ளார். ரா. லட்சுமிபதி இணை ஆசிரியர்.

தோற்றம், வெளியீடு

தினமலர் இதழ் நிறுவனர், ஆசிரியர், டி.வி. ராமசுப்பையர்

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னும் கன்னியாகுமரி மாவட்டம், கேரளாவின் திருவிதாங்கூரைச் சேர்ந்ததாக இருந்தது. அதனால் அங்கு வசித்த தமிழர்கள் பலரும் கன்னியாகுமரியைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் பல போராட்டங்களை முன்னெடுத்தனர். அதனை ஆதரிக்கும் வகையிலும், மக்களுக்குத் தொண்டாற்றும் நோக்கிலும் டி.வி. ராமசுப்பையர், செப்டம்பர் 06, 1951 அன்று, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான திருவிதாங்கூரில் 'தினமலர்' நாளிதழைத் தொடங்கினார். திருவிதாங்கூர் சர்வகலாசாலைப் பேராசிரியர், ராவ்பகதூர் எஸ். வையாபுரிப்பிள்ளை தினமலர் நிறுவனத்தின் அலுவலகத்தைத் தொடங்கி வைத்தார்.

இதழ் அமைப்பு

தினமலர் தொடக்க காலத்தில் ஆறு பக்கங்களுடன் வெளியானது. தனிப்பிரதி ஒன்றின் விலை ஓரணாவாக இருந்தது. ஆண்டுச் சந்தா ஒரு வருடத்திற்கு 21/- ரூபாயாக இருந்தது. முதல் இதழின் முதல் பக்கத்தில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கீழ்க்காணும் வாழ்த்துப் பாடல் இடம்பெற்றது.

ஈசன் அருளால் எழுத்தாளர் ஒத்துழைப்பால்
வாசகரின் ஆசி வலிமையால் - பேசுபுகழ்
தென்னனந்தை பூத்த 'தினமலர்' வாடாது
மன்னுலகில் வாழ்க வளர்ந்து.

இதழின் முகப்புப் பக்கத்தில் நாளிதழின் பெயர் இரண்டு பக்கங்களாகப் பிரிக்கப்பட்டு நடுவில் தாமரை மலரின் படம் இடம் பெற்றது. அதன் கீழ் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் பெயர் அச்சிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பெயர், விலை, பக்கங்கள் முதலிய செய்திகள் இடம்பெற்றன.

நோக்கம்

இதழின் நோக்கமாக, முதல் இதழின் தலையங்கத்தில் டி.வி. ராமசுப்பையர், "ஜனசமூகம் இன்னல்கள் நீங்கி, இன்ப நிலை அடைவதற்கு எமது சக்திக்கு இயன்ற அளவு தொண்டாற்றும் ஒரே நோக்கத்துடன், 'தினமலர்'ப் பத்திரிக்கையைத் தொடங்கியிருக்கிறோம். சுபிட்சம் நிலவவும், மக்கள் எல்லோரும் சமாதானத்துடன் இன்பமாக வாழவும் இடையறாது உழைத்து வரும் ஜனசக்திகளுக்கு எதிராகச் செல்லாமல், அவற்றிற்கு ஒரு சிறு அளவேனும் உதவி செய்யும் வகையில், 'தினமலர்' தினந்தோறும் பணியாற்றி வரும் என்று உறுதி கூறுகிறோம்." என்று குறிப்பிட்டார்.

தினமலர், முதல் வருடத்தில் ஞாயிறு தவிரப் பிற நாட்களில் வெளிவந்தது. இரண்டாம் வருடம் முதல் ஞாயிறு அன்றும் வெளியாகத் தொடங்கியது.

தினமலர் இணைய மின்னிதழ்

பதிப்புகள்

  • தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து வெளிவந்த தினமலர் இதழ், தமிழ்நாட்டில் தன் முதல் பதிப்பை ஏப்ரல் 16, 1957-ல் அன்று திருநெல்வேலியில் தொடங்கியது.
  • தினமலர், டிசம்பர் 15, 1966 அன்று திருச்சியில் தனது இரண்டாம் பதிப்பைத் தொடங்கியது.
  • ஏப்ரல் 29, 1979-ல், சென்னையில் மூன்றாம் பதிப்பு தொடங்கப்பட்டது.
  • டிசம்பர் 26, 1980-ல், மதுரையில், தினமலரின் நான்காம் பதிப்பு வெளியானது.
  • மார்ச் 16, 1984-ல், ஈரோட்டில் ஐந்தாம் பதிப்பு தொடங்கப்பட்டது.
  • ஏப்ரல் 15, 1991-ல், பாண்டிச்சேரியில் ஆறாம் பதிப்பு வெளியானது.
  • டிசம்பர் 23, 1992-ல், கோயம்புத்தூரில் ஏழாம் பதிப்புத் தொடங்கப்பட்டது.
  • தினமலர் டிசம்பர் 13, 1993 அன்று, தனது எட்டாம் பதிப்பை வேலூரில் தொடங்கியது.
  • மார்ச் 29, 1999-ல், தினமலரின் ஒன்பதாவது பதிப்பு நாகர்கோவிலில் வெளியானது.
  • ஆகஸ்ட் 29, 2000 அன்று, தினமலர் இதழின் பத்தாவது பதிப்பு சேலத்தில் தொடங்கப்பட்டது.

தினமலர் 1979-ல், ஆப்செட் முறையில் தனது இதழை அச்சிட்டது. 1983 முதல் கணினித் தொழில்நுட்பத்தையும், வண்ண அச்சுத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியது.

தினமலர் இன்று இணைய இதழாகவும், ஈ பேப்பர் ஆகவும் வெளிவருகிறது.

உள்ளடக்கம்

தினமலர் நாளிதழ் பல்வேறு செய்திகளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அரசியல், சமூகம், பொதுசேவை, திரைப்படம், ஆன்மிகம், ஜோதிடம், பொருளாதாரம், விளையாட்டு, இலக்கியம், வரலாறு, அறிவியல் எனப் பல்வேறு பொருண்மைகளுக்கு இடமளித்தது. வெளிநாடுகளில் நிகழும் சம்பவங்கள், தமிழர்கள் வாழும் வெளிநாட்டில் நடக்கும் நிகழ்வுகள் போன்றவற்றைப் பதிவு செய்தது. தமிழக அரசியல், பொருளாதாரம், அறிவியல், பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்துச் செய்திகளை வெளியிட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித் தனிப் பத்திகளை ஒதுக்கிச் செய்திகளைத் தந்தது. மிகுதியான புகைப்படங்களை வெளியிடுவது தினமலரின் சிறப்புக்களில் ஒன்றாக அறியப்படுகிறது. தொடக்க காலத்தில் தினமலர் இதழில் தலையங்கம் இடம்பெற்றது. பிற்காலத்தில் அது இடம்பெறவில்லை.

1968-ல், பள்ளி இறுதித் தேர்வு வினா-விடையை இணைப்பாக தினமலர் வெளியிட்டது. பிற்காலத்தில் பள்ளி இறுதி வகுப்பு வினா விடையுடன், மேல் நிலை வகுப்பு வினா - விடையையும் வெளியிட்டது. அவை தினமலர் இதழுடன் தனி இணைப்பாக வெளிவந்தன. 1977-லேயே ஈ.வெ.ரா. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை தினமலர் இதழ் பின்பற்றியது. அரசு அச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் முன்பே அதனைத் தன் இதழில் கையாண்டது தினமலர்.

இன்றைய நிகழ்ச்சிகள், அணைகளில் நீர் மட்டம், நாள் பலன், நட்சத்திரப் பலன், நாளைய ராசிபலன், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சிப் பலன்கள், பங்குச் சந்தை, ஆன்மிகவாதிகளின் அருளுரைகள் போன்ற செய்திகள் நாள்தோறும் இடம்பெற்றன. 'டீ கடை பெஞ்சு' என்பது அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளின் விமர்சனமாக இடம்பெற்றது. 'இது உங்கள் இடம்' என்ற தலைப்பில் வாசகர்களின் கடிதங்கள் வெளியாகின. பக்க வாத்தியம், அக்கம் பக்கம், இது உங்கள் இடம், டவுட் தனபாலு, உரத்த சிந்தனை ஆகிய பகுதிகள் பிற்கால தினமலர் இதழில் இடம்பெற்றன.

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையும் வெளியிட்டது. விலைவாசி உயர்வு, தங்கம், வெள்ளி விலை, காய்கறி விலை நிலவரம் போன்ற நடுத்தர மக்களின் அன்றாடத் தேவைகள் குறித்த செய்திகள் விரிவாக இடம்பெற்றன. விளையாட்டுச் செய்திகளை படங்களூடன் விரிவாக வெளியிட்டது.

தினமலர் வாரமலர் இதழில் ஆண்டு தோறும் நடத்தப்படும் டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி குறிப்பிடத்தக்கது.

இணைப்பிதழ்கள்

தினமலர் - வாரமலர்
தினமலர் - வாரமலர்

ஏப்ரல் 04, 1982 முதல், தினமலர் இதழுடன் ஞாயிறுதோறும் ஓர் இலவச இணைப்பு 32 பக்கங்களில், 'வார மலர்' என்ற தலைப்பில் தனிப் புத்தகமாக வெளிவருகிறது. 'அட்டை டு அட்டை' ஏராளமான செய்திகள் என்ற குறிப்புடன் வெளிவந்த இணைப்பில் பல்வேறு செய்திகள் இடம்பெற்றன. அந்துமணி கேள்வி பதில்கள், அந்துமணி பார்த்தது - கேட்டது - படித்தது, திண்ணை, அந்தரங்கம், ஜோல்னா பையன் ஆகிய பகுதிகள் தொடர்ந்து இடம்பெற்றன. தொடர்கதைகளும் வெளியாகின. திரைத்துறை சார்ந்தவர்களின் வரலாறு அல்லது அவர்கள் வாழ்க்கை அனுபவங்கள் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தன. 'இதப்படிங்க முதல்ல' என்ற தலைப்பில் திரைப்படச் செய்திகள் படத்துடன் சிறுசிறு தலைப்புகளுடன் மூன்று அல்லது நான்கு பக்கங்களில் வெளியாகின. ஆன்மிகக் கதை, தகவல், வரலாறு அல்லது கட்டுரை இடம்பெற்றது. 'ஜோக்ஸ்' என்ற தலைப்பில் பல நகைச்சுவைத் துணுக்குகள் பவித்ரா, பீட்டர், சர்புதீன், சோப்ரா போன்றவர்களின் கேலிப்படங்களுடன் வெளியாகின. அறிவியல் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், கவிதை, சிறுகதை ஆகியவற்றுக்கும் தினமலர் வாரமலர் இடமளித்தது. அட்டையில் திரைப்பட நடிகை, நடிகர்களின் படம் இடம்பெற்றது. வார மலரில் இடம்பெற்ற குறுக்கெழுத்துப் போட்டி வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தேர்ந்தெடுத்த வாசகர்களை 'குற்றாலம் சுற்றுலா'வுக்கு அழைத்துச் சென்றது.

தினமலர் - சிறுவர் மலர்
தினமலர் - சிறுவர் மலர்

நவம்பர் 22, 1985 முதல் தினமலர் இதழுடன் 'சிறுவர் மலர்' என்ற ஓர் இலவச இணைப்பு வெளியாகிறது. வெள்ளி தோறும் வெளிவந்த அச்சிறுவர் மலர் இணைப்பிதழில் சிறார்களுக்கான பல்வேறு சிறுகதைகள், பாடல்கள், பொது அறிவுத் துணுக்குகள், ஓவியங்கள், அறிவுத் திறன் போட்டிகள் இடம்பெற்றன. 'பலமுக மன்னன் ஜோ', 'எக்ஸ்ரே கண் சிறுவன்' எனப் பல சுவையான மொழிபெயர்ப்புப் படக்கதைகளை சிறுவர் மலர் வெளியிட்டது. வண்ணம் தீட்டுக, வித்தியாசம் காண்க, வழிகண்டுபிடி போன்ற போட்டிகள் இடம்பெற்றன. தொடர்கதைகள், பழங்காலப் புராணக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள் போன்றவையும் தினமலர் - சிறுவர் மலரில் வெளியாகின. சிறார்களின் படங்களை முகப்பு அட்டையில் வெளியிட்டு அவர்களை ஊக்குவித்தது.

சிறார்கள் பலரை வாசிப்புலகத்தை நோக்கி ஈர்த்த இதழ்களில் தினமலர் - சிறுவர் மலருக்கு மிக முக்கிய இடமுண்டு.

தினமலர் - தீபாவளி மலர்

தினமலர் இதழ், தீபாவளி மலர்களை 1988-ம் ஆண்டு முதல் வெளியிட்டது. சிறார்களுக்கான பக்கங்கள், திரைப்பட ரசிகர்களுக்கான பக்கங்கள், திரைக்கலைஞர்கள் பற்றிய கட்டுரைகள், பேட்டிகள், இலக்கிய வாசிப்பாளர்களுக்கான சிறுகதைகள், எழுத்தாளர்களின் நேர்காணல்கள், மறைந்த முன்னோடி எழுத்தாளர்களின் 'அமரர் கதைகள்' பகுதி ஆகியன இடம்பெற்றன. ஆன்மிகத்திற்கு மிக முக்கியப் பங்களித்ததுடன் தெய்வங்களின் படங்களும் மலரில் இடம்பெற்றன. கட்டுரைகள், துணுக்குகள், உலக நிகழ்வுகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவை தீபாவளி மலர்களில் இடம்பெற்றன. நடிக, நடிகையரின் ஆளுயர ஃப்ளோ அப்களும் இலவச இணைப்பாக வழங்கப்பட்டன.

தொடக்க காலத்தில் தீபாவளி மலர்களுடன் பரிசுப் பொருட்கள் சிலவும் அளிக்கப்பட்டன. 'தினமலர் - தீபாவளி மலர்' வாங்கும் தேர்தெடுக்கப்பட்ட வாசகர்களை, வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தது.

தினமலர் - கதை மலர்

1991 முதல் தினமலர் இதழுடன் சனிக்கிழமை தோறும் 'கதைமலர்' என்ற ஓர் இலவச இணைப்பு வெளியானது. அதில் பல்வேறு சிறுகதைகள், தொடர்கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் இடம்பெற்றன. ஆன்மிகச் செய்திகள், திரைப்படம் சார்ந்த நிகழ்வுகள், 'என்ன பெயர் சூட்டலாம்' பகுதி, பிறந்தநாள் பலன்கள் ஆகியன இடம்பெற்றன. சிலகாலம் வெளிவந்த கதைமலர் பின் நின்றுபோனது. சில ஆண்டுகளுக்குப் பின் தனி இணைப்பாக அல்லாமல் நாளிதழோடு இணைந்து வெளியாகிப் பின் நின்றுபோனது.

தினமலர் - வேலைவாய்ப்புக் கல்வி மலர்

ஜனவரி 13, 1994 முதல் வேலைவாய்ப்புக் கல்வி மலர் தொடங்கப்பட்டது. வேலைவாய்ப்பு, தொழில் தொடர்பான பல தகவல்கள், செய்திகள், கட்டுரைகள், விளக்கங்கள் இம்மலரில் வெளியாகின. போட்டித் தேர்வுகள் குறித்த செய்திகள், தனியார் வேலைவாய்ப்புச் செய்திகள் ஆகியனவும் வெளியிடப்பட்டன. அக்டோபர் 2001 முதல் வேலைவாய்ப்புக் கல்வி மலர் தனி இணைப்பிதழாக வெளிவராமல் இதழுடன் இணைந்தே வெளிவந்தது.

தினமலர் - கல்வி மலர்

கல்வி மலரில் உயர் மற்றும் மேற்கல்வி தொடர்பான செய்திகள், பள்ளி, கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகள், புதிய படிப்புகள் பற்றிய விவரங்கள் இடம் பெற்றன.

தினமலர் - ஆன்மிக மலர்
தினமலர் - ஆன்மீக மலர்

தினமலர் ஆன்மீக மலர் - செவ்வாய் கிழமைகளில் இலவச இணைப்பாக தினமலர் நாளிதழுடன் தரப்படுகின்ற ஆன்மீக இதழ். பல்வேறு ஆன்மிகத் தகவல்களை, கதைகளை, ஆலய வரலாறுகளை, புராணச் செய்திகளை, வரலாற்றுக் குறிப்புக்களை வெளியிட்டது.

தினமலர் - கம்ப்யூட்டர் மலர்

தினமலர் கம்ப்யூட்டர் மலர் - திங்கள் கிழமைகளில் இலவச இணைப்பாக தினமலர் நாளிதழுடன் தரப்படுகின்ற கணினி இதழ்.

தினமலர் - வருடமலர்

தினமலர் வருடமலர் 1994 முதல் வெளியானது. ஒரு ஆண்டில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்ச்சிகளின் தொகுப்பே இந்த நூல். நாள், இடம், நேரம் போன்ற புள்ளிவிவரப்படி இந்நூல் தொகுக்கப்பட்டு வெளியானது.

இவற்றுடன் மாணவர்களுக்கான இதழ் 'பட்டம்' திங்கள் தோறும் வெளியானது. போட்டித் தேர்வுத் தொகுப்புகள் வெளியாகின. தினமலர் பொங்கல் மலரை வெளியிட்டது. ஜோதிட மலர், அறிவியல் மலர், விவசாய மலர் போன்ற மலர்களையும் இணைப்பாக தினமலர் வெளியிட்டது.

மதிப்பீடு

நாஞ்சில் நாட்டு மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரவும், மக்களுக்குத் தொண்டாற்றும் நோக்கத்திலும் தொடங்கப்பட்ட இதழ் தினமலர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ். வாரம் மூன்று இணைப்பிதழ்களை வெளியிட்ட முதல் நாளிதழ். எளிய நடை, கவர்ச்சியான தலைப்பு, வண்ணப் படங்கள், அதிகமான இலவச செய்திகள், இலவச இணைப்புகள். வேலை வாய்ப்புச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற பலவற்றால் தமிழின் முன்னணி இதழ்களுள் தினமலர் இதழும் ஒன்றானது. பல்சுவை இதழாகவும், உலகத் தமிழர்களால் விரும்பி வாசிக்கப்பட்டும் இதழாகவும் அறியப்படுகிறது. விடுதலைக்குப் பின் தமிழ்நாட்டில் தோன்றிய தமிழ் நாளிதழ்களுள் முதன்மை இதழ்களுள் ஒன்றாகவும், அதிகம் வாசகர்களைக் கொண்டத் தமிழின் முன்னணி நாளிதழ்களுள் ஒன்றாகவும் தினமலர் இதழ் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2024, 19:40:23 IST