பாரதி படைப்புகள் உரிமை மீட்பு
பாரதி படைப்புகள் உரிமை மீட்பு இயக்கம் (1944-மார்ச் 12, 1949) பாரதியாரின் படைப்புகளுக்கான உரிமை மெய்யப்ப செட்டியாரிடம் இருந்ததை ஒட்டி எழுந்த கிளர்ச்சியின் வழியாக உந்தப்பட்டு தமிழக அரசு அவரிடமிருந்து வாங்கி நாட்டுடைமை ஆக்கியது. இது தொடர்பாக முதன்முதலாக குரலெழுப்பியவர் அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார். இதன்பொருட்டு பாரதி விடுதலைக் கழகம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக பாரதி பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.
பாரதி படைப்புகள் முடக்கம்
பாரதியாரின் பாடல் வெளியீட்டு உரிமையும், பாரதி படைப்புகளின் பதிப்புரிமையும் முதலில் விஸ்வநாத ஐயரிடம் இருந்தது. விஸ்வநாத ஐயர் பாரதியின் தந்தையின் இரண்டாம் மனைவியின் புதல்வர். சுராஜ்மல் என்ற சேட்டிடம் விஸ்வநாதய்யரால் அறுநூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட பாரதி பாடல்களை பதிவு செய்யும் உரிமையை பத்தாயிரம் ரூபாய்க்கு மெய்யப்ப செட்டியார் வாங்கினார். திரைப்படங்களிலும், வானொலியிலும் பாரதியாரின் பாடல்களை அவரின் அனுமதியில்லாமல் பாட இயலாத சூழல் நிலவியது. புத்தகத்தின் பதிப்புரிமை செல்லம்மாளிடமிருந்து விஸ்வநாத ஐயருக்குச் சென்றதாகவும், அவர் பாரதியின் படைப்புகளை நேர்த்தியாக பதிப்பிக்கும் பணிகளைச் செய்ததாகவும் ஆய்வாளர் ஆ. இரா.வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார்.
பாரதி படைப்புகள் உரிமை மீட்பு தொடக்கம்
பாரதி படைப்புகளை தேசப்பொதுவுடைமையாக்க வேண்டும் என முதன்முதலாக ஒரு அமைப்பின் மூலம் குரலெழுப்பியவர் அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார்.
1944-ல் கோயம்புத்தூரில் டி.எஸ். சொக்கலிங்கம் தலைமையில் வ.ராவால் திறந்து வைக்கப்பட்ட முதல் எழுத்தாளர் மாநாட்டில் பாரதி பாடல்களை நாட்டுடைமையாக்க வேண்டுமென்ற தீர்மானத்தை அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் கொண்டு வந்தார். அவ்வை டி.கே. ஷண்முகம் அதை வழி மொழிந்தார். 1946-ல் சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டில் ஜீவா, நாரண துரைக்கண்ணன் ஆகியோர் இக்கருத்தை தீவிரமாக வலியுறுத்தினர்.
அக்டோபர் 13, 1947 அன்று பாரதி மணிமண்டம் திறப்பு விழாவில் ப. ஜீவானந்தம் பேசினார். அதில் யாரும் பேசத்துணியாத இரு விஷயங்களை குறிப்பிட்டார். "பாரதி நூல்களை வெளியிடும் உரிமை திரு. விஸ்வநாதர் கையில் இருக்கிறது. பேசும்படம், வானொலி, இசைத்தட்டு இவைகளில் பாரதி பாடல்களைப் பாடுவதற்கான உரிமையை மெய்யப்ப செட்டியார் ஒருவர் பணம் கொடுத்துவிலைக்கு வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார்." என்று எடுத்துக் கூறி பாரதி பாடல்களும், இலக்கியமும் நாட்டிற்கு பொது என்று பிரகடனம் செய்ய மக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று பேசினார். ம.பொ.சிவஞானம் இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
தி.க.சண்முகம் தன்னுடைய 'பில்ஹணன்' நாடகத்தை திரைப்படமாக்கும் போது துணிந்து பாரதியின் 'தூண்டிற் புழுவினைப் போல்' பாடலைப் பதிவு செய்தார். பிப்ரவரி 2, 1948அன்று மெய்யப்பசெட்டியாரிடமிருந்து நோட்டீஸ் வந்தது. செட்டியார் இடைக்காலத் தடையுத்தரவு கோரி வழக்கு போட்டார். தி.க.சண்முகம் எதிர்வழக்காடினார்.
பாரதி விடுதலைக் கழகம்
'பாரதி விடுதலைக் கழகம்' பாரதி பாடல்களை நாட்டுடைமையாக்கும் லட்சியத்துடன் தொடங்கப்பட்டது. இதன் முதல் கூட்டம் மார்ச் 11, 1948-ல் ச.து.சு.யோகியார் தலைமையில் நடைபெற்றது. இக்கழகத்திற்கு வ.ரா தலைவராகவும், நாரண துரைக்கண்ணனும், சீனிவாசனும் துணைத்தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். திருலோக சீதாரமன், தி.க.சண்முகம், வல்லிக்கண்ணன் ஆகியோர் செயலாளர்களாக இருந்தனர். அ.வெ.ரா பின்னணியிலிருந்து உதவிகள் செய்தார். இந்த இயக்கம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாரதி பாடல்களை நாட்டுடைமையாக்க மக்களின் ஆதரவைத் திரட்டியது. திருநெல்வேலிக்குச் சென்று செல்லம்மா பாரதியிடமும் தங்கம்மா பாரதியிடமும் பாரதி பாடல்களைப் பொதுச் சொத்தாக்குவதற்கு அவர்களுக்கு ஏதும் மறுப்பில்லை என்ற ஏற்புக் கடிதத்தை வாங்கி வந்தனர்.
சட்டசபையில் ஆர்.வி.சுவாமிநாதன் இது தொடர்பான கேள்விகளை எழுப்பினார். டி.எஸ்.சொக்கலிங்கம், தி.க.சண்முகம் ஆகியோர் முதலமைச்சரையும், காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து இதன் தேவையை வலியுறுத்தினர்.
மீட்பு
முதலமைச்சர் மெய்யப்ப செட்டியாரை நேரில் அழைத்து பாரதி பாடல்களைக் கோரியதும் அதற்கு உடனே சம்மதித்தார். மார்ச் 12, 1949 அன்று பாரதியார் பாடல்களை தேசவுடைமையாக்கி முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆணை பிறப்பித்தார்.
நூல்கள்
- பாரதி மறைவு முதல் மகாகவி வரை - கார்த்திகேசு சிவத்தம்பி, அ.மார்கஸ் (NCBH)
- பாரதி: கவிஞனும் காப்புரிமையும் பாரதி பாடல்கள் நாட்டுடமையான வரலாறு (ஆ.இரா. வேங்கடாசலபதி) (காலச்சுவடு)
உசாத்துணை
- பாரதி மறைவு முதல் மகாகவி வரை - கார்த்திகேசு சிவத்தம்பி, அ.மார்கஸ் - NCBH
- பாரதியும் ஏவிஎம்மும் - சில உண்மைகள்
- பாரதி படைப்புகள் பொதுவுடைமையான கதை - திஇந்துதமிழ்திசை
- பாரதி - கவிஞனும் காப்புரிமையும் - மு.மணிவண்ணன் - keetru
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Aug-2025, 19:46:31 IST