நீலக்குயில் (இதழ்)
நீலக்குயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1970-களில் வெளியான ஒரு தமிழ் இலக்கிய மாதச் சிற்றிதழ்.
தோற்றம்
எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன் மற்றும் கு. அழகிரிசாமி ஆகியோரின் நண்பரான எஸ். அண்ணாமலை கோவில்பட்டியின் வணிக பிரமுகர்களில் ஒருவர். இலக்கிய ஆர்வம் கொண்டவர். தன்னிடம் இருந்த ஐந்தாயிரம் ரூபாயை மூலதனமாக வைத்து இதழைத் தொடங்கினார்.
அண்ணாமலையை ஆசிரியராகக் கொண்டு நீலக்குயில் மே 1,1974 முதல் மாத இதழாக வெளிவரத் துவங்கியது.
பெயர்க் காரணம்
பி.பாஸ்கரன் இயக்கி சத்யன் நடித்த 'நீலக்குயில்' என்ற மலையாளத் திரைப்படம் 1954-ல் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. மலையாளத்தின் முதல் தலித் திரைப்படமாகவும் அறியப்படுகிறது. இதன் திரையாக்கம் மற்றும் பாடல்களினால் கவரப்பட்ட எஸ். அண்ணாமலை தன் பத்திரிக்கைக்கு 'நீலக்குயில்' என்ற பெயரைச் சூட்டினார்.
நோக்கம்
"உண்மை இலக்கியங்களுக்கு ஒரு மேடை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் வெளியிடப்படுவதுதான் இந்த இலக்கியப் பத்திரிகை" என்று நீலக்குயில் இதழின் நோக்கம் அதன் முதல் இதழில் அறிவிக்கப்பட்டது.
படைப்புகள்/படைப்பாளிகள்
புதுக் கவிதை, சிறுகதை, கட்டுரைகளில் 'நீலக்குயில்' கவனம் செலுத்தியது. கி. ராஜநாராயணன் சேகரித்த தமிழ்நாட்டு நாடோடிப் பாடல்கள் சில இதழ்களில் வெளிவந்தன. ஆராமுதம் எழுதிய ஒரு நாடகமும் வெளிவந்தது.
முதல் இதழ்
தனி அட்டை இல்லாமல் வெளியான நீலக்குயிலின் முதலாவது இதழ் அன்றைய விகடன் அளவில் 22 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. அதில், காசி விஸ்வநாதன், தேவதச்சன், பரணிகுமார், பானு கவிதைகள் (புதுக் கவிதை), பூமணி, கௌரிஷங்கர் கதைகள், 'குறியீட்டுக் கொள்கை (Symbolism) பற்றிய ஒரு கட்டுரை ஆகியவை இடம் பெற்றிருந்தன.
கவிதைகள்
நீல பத்மநாபன், துரை சீனிச்சாமி, கல்யாண்ஜி, கே. ராஜகோபால், சி. ஆர். ரவீந்திரன், ந. ஜயபாஸ்கரன், ஷண்முகசுப்பையா, சே. சேவற்கொடியோன், தேவதேவன், தேவதச்சன் மற்றும் பலரது கவிதைகளுடன் இலங்கை எழுத்தாளர் சிறீபதியின் புதுக் கவிதை பற்றிய கட்டுரையும் இடம்பெற்றன.
நகுலன் 'அஞ்சலி' என்ற தலைப்பில் சோதனை முயற்சி செய்த ஒரு நீண்ட கவிதை தொடராக வெளிவந்தது.
சிறுகதைகள்
கி. ராஜநாராயணன், பா. செயப்பிரகாசம், பிரபஞ்சன், நீல பத்மநாபன், மாலன், வா. மூர்த்தி, சிந்துஜா, இரா. கதைப்பித்தன், காசியபன் மற்றும் பல புதிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றன. வல்லிக்கண்ணனின் 'ரசிகன்' சிறுகதை இடம்பெற்றது. சில சோவியத் சிறுகதைகளின் மொழியாக்கங்களும் இடம்பெற்றன.
கட்டுரைகள்
நீலக்குயில் பல நூல் விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டது. காரை சிபி, தமிழவன் எழுதிய கட்டுரைகளையும் நீலக்குயில் வெளியிட்டது. வல்லிக்கண்ணனின் கட்டுரைகளும் இடம்பெற்றன.
23-வது இதழில் இடம்பெற்றவை
- 'சிறந்த எழுத்துக்களைப் படைத்த பசித்த வயிறுகள்- ஒரு குறிப்பு'
- ஏ. ஏ. ஹெச்.கே. கோரியின் கவிதை
- வல்லிக்கண்ணன் கதை 'ரசிகன்'
- அகல்யாவின் 'அபிப்பிராயங்கள்'
- சோவியத் வீர விருது பெற்ற தென்னிந்தியர் பற்றிய கட்டுரை
- கி. ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் நாவலிலிருந்து சில பக்கங்கள்
- உமாபதியின் கவிதை 'என் தம்பி'
சிறப்பிதழ்
முதல் ஆண்டு முடிந்ததும், இரண்டாவது ஆண்டின் முதல் இதழ் 1975-ம் ஆண்டு மே மாதம் கடித இலக்கியச் சிறப்பிதழாக என வெளிவந்தது.
"தமிழ் இலக்கிய வகைகளில் புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தின் உந்துதலில் செய்யப்பட்ட முயற்சியே இந்தக் கடித இலக்கிய சிறப்பிதழ். இதில் வெளியாகியுள்ள கடிதங்களை எழுதியுள்ளவர்கள், தங்களது இலக்கிய அனுபவத்தால், எழுத்தாற்றலால் தமிழ் மக்களின் இதயங்களில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளவர்கள். நமது பெரு மதிப்புக்கும் பேரன்புக்கும் உரியவர்கள். இதில் வெளியாகியுள்ள கடிதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியில் மிகச்சிறப்பாக அருமையாக எழுதப்பட்டுள்ளதால் இவற்றை இங்கு வெளியிடுவதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறோம்" என்ற குறிப்புடன் வெளிவந்த சிறப்பிதழில் இடம்பெற்றவை:
- டி.கே.சி. வி.வி. சீனிவாச அய்யங்காருக்கு எழுதியது,
- ராஜாஜி டி.கே.சி.க்கு எழுதியவை,
- நீதிபதி எஸ். மகாராஜன் டி.கே.சி.க்கு எழுதியவை
- கி. ராஜநாராயணன், ஆ. மாதவன், தீம். நடராஜன், டி.எஸ். சேதுராமன், சுந்தர ராமசாமி, கு. அழகிரிசாமி, கல்யாண்ஜி, வண்ணநிலவன் ஆகியோரது கடிதங்கள்
மதிப்பீடு
கோவில்பட்டியிலிருந்து வெளிவரத் தொடங்கிய நீலக்குயில், சர்ச்சைகளைப் பெரும்பாலும் தவிர்த்த ஓர் இலக்கியச் சிற்றிதழாக மற்ற அம்சங்களில் வழக்கமான இதழாக அமைந்தது. அது வெளியிட்ட 'கடித இலக்கியச் சிறப்பிதழ்' சிற்றிதழ்ப் போக்கில் வித்தியாசமான முயற்சி என கவிஞர் ராஜமார்த்தாண்டன் குறிப்பிட்டுள்ளார்.
'சிறுகதை : சில புதிய சேர்க்கைகள், (ஆய்வுத்தொடர்)' என்ற சிறுகதைகளைப் பற்றிய ஆய்வுத் தொடருக்கான அறிவிப்பு வெளிவந்தது. அந்த ஆய்வுத்தொடர் வெளிவரவில்லை. "எதிர்பார்க்க வைத்த இந்த அறிவிப்பு பின்னர் செயல் மலர்ச்சி பெறவில்லை. இப்படி ஒரு ஆய்வு வந்திருந்தால், நீலக்குயிலின் இலக்கியத் தரம் சிறப்புற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என வல்லிக்கண்ணன் குறிப்பிடுகிறார்.
நிறுத்தம்
மாத இதழாகத் தயாரிக்கப்பட்ட நீலக்குயில் அதன் மூன்றாம் ஆண்டில் காலாண்டு ஏடு ஆக மாற்றப்பட்டது.
நீலக்குயிலின் கடைசி இதழ் அக்டோபர் 1976-ல் வெளிவந்தது. இவ்விதழில் கோபல்ல கிராமம் நாவல் பற்றி நகுலன் எழுதிய மதிப்புரை, சீனக் கவிஞன் வாங் வெய் கவிதைகள்; தமிழில் துரை சீனிச்சாமி மற்றும் சில கதைகள் ஆகியவை இடம்பெற்றன.
25-வது இதழ் தயாரிக்கப்பட்டது. அது வாசகர்களுக்கு அனுப்பப்படவில்லை.
உசாத்துணை
- வல்லிக்கண்ணன் எழுதிய 'தமிழில் சிறு பத்திரிகைகள் (2004), மணிவாசகர் பதிப்பகம். (பக்கம் 89- 93)
- 'ஊர் நினைவுகள்' - கி.ராஜநாரயணன், இந்து தமிழ் திசை இணைய இதழ், ஆகஸ்ட் 2014
- 'எழுத்து முதல் கொல்லிப்பாவை வரை', ராஜமார்த்தாண்டன் கட்டுரை, அழியாச்சுடர்கள்.காம், மே 2012
- புகைப்படம் உதவி: அழகியசிங்கர் இணையதளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
28-Oct-2023, 02:10:04 IST