under review

திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்

From Tamil Wiki

திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் (முதல் பதிப்பு: 1869), திருக்குடந்தை என்று வழங்கப்படும் கும்பகோணம் தலத்தில் எழுந்தருளியுள்ள மங்களாம்பிகை மீது பாடப்பட்ட சிற்றிலக்கிய நூல். இந்நூலை இயற்றியவர் மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

வெளியீடு

திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் நூலின் முதல் பதிப்பு, பொ.யு. 1869-ல் வெளியானது. திருத்தம் செய்யப்பட்ட இந்நூலின் அடுத்த பதிப்பு, உ.வே.சாமிநாதையரால் தொகுக்கப்பட்டு, மீனாட்சிசுந்தரம் பிள்ளை நூல்களின் தொகுப்பாக வெளிவந்த, 'ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு' என்ற தலைப்பிலான நூலில் இடம்பெற்றது. இந்நூல் சென்னை வைஜயந்தி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு 1910-ல் வெளிவந்தது.

ச.வே. சுப்பிரமணியன் தொகுத்து, 2015-ல், மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்ட சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-2 நூலிலும், திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் நூல், பிற பிள்ளைத்தமிழ் நூல்களுடன் இணைந்து இடம்பெற்றது.

நூல் அமைப்பு

திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் நூலின் தொடக்கத்தில் பாயிரம் இடம்பெற்றது. அதில் ஆதி விநாயகர் மீதான வணக்கம் கடவுள் வாழ்த்தாக இடம்பெற்றது. நூலில் 101 பாடல்கள் இடம்பெற்றன.

உள்ளடக்கம்

திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் நூலின் காப்புப் பருவத்தில், பிள்ளைத்தமிழ் இலக்கணப்படி முதல் பாடலில் திருமால் வேண்டப்பட்டுள்ளார். தொடர்ந்து அமுத கும்பேசர், ஆதிவிநாயகர், முருகக்கடவுள், பிரமதேவர், இந்திரன், திருமகள், நாமகள், துர்க்கை, சப்தமாதர், முப்பத்துமூவர் மீதான 11 பாடல்கள் இடம்பெற்றன. பெண் பால் பிள்ளைத்தமிழுக்கேற்ற வகையில் இந்நூலில் தொடர்ந்து செங்கீரைப்பருவம், தாலப்பருவம், சப்பாணிப் பருவம், முத்தப்பருவம், வாரானைப்பருவம், அம்புலிப் பருவம், அம்மானைப் பருவம், நீராடற் பருவம், பொன்னூசற் பருவம் ஆகியன இடம்பெற்றன.

திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் நூலில் அம்பாளின் பெருமை, சிறப்பு, புகழ், அடியவர்களுக்கு அன்னை அருள்புரியும் விதம், புராணச் செய்திகள், வரலாற்றுச் சிறப்புகள் ஆகியன விளக்கப்பட்டுள்ளன.

பாடல்

காப்புப் பருவம்: ஆதி விநாயகர்

பார்தரு நான்முக னோர்தலை யேற்றொளிர்
பான்மையர் மான்முகி லூர்திற மேய்ப்புற
வார்தரு மோதகர் மூடிக மேற்பொலி
யாதிவி நாயகர் தாண்மல ரேத்துது
பார்தரு வார்மன னூடவிர் பேற்றினை
யோமுத லாமறை யோலிடு வாழ்க்கைமெய்
தேர்தரு தேவர்கள் சூழ்குட மூக்கமர்
தேவியை யோவலில் காவல தாற்றவே

தாலப்பருவம்

விண்ட மலர்க்கா வகத்துதய வீபத் தினைக்கண் டிளமந்தி
விழையுஞ் செந்தேத் தடையென்ன விரைந்து கடுவ னவற்பற்றக்
கண்ட புலவர் குரங்கியெனக் கரைபே ரலவற் கிரட்டலுறக்
கரைவா மெனவக் கடுவனுமாக் கவியென் பெயர்க்குத் தகவுணர்ந்து
கொண்ட பயத்தின் விடுத்திலச்சை கூர்ந்து தனது குலம்புரந்த
குனிவிற் புயத்தோன் செயனினைந்தக் கோலப்பிணவை யெழுகாதன்
மண்ட வணைக்குஞ் செழுங்குடந்தை வாழ்வே தாலோ தாலேலோ
வளங்கூர் கருணை மங்களமா மயிலே தாலோ தாலேலோ

முத்தப்பருவம்

கரிய முகிலி னளக மிருள்செய் கவுரி தருக முத்தமே
கருதி யுருகு மடிய ரிதய கமலை தருக முத்தமே
யரிய கருணை பொழியு நயன வமலை தருக முத்தமே
யழகு பொழியும் வதன பதும வபினை தருக முத்தமே
புரிய வினிய விமய முதவு புதல்வி தருக முத்தமே
பொருவில் கருணை யுருவ மருவு புனிதை தருக முத்தமே
துரிய முடிவில் வெளியின் மருவு சுமுகி தருக முத்தமே
சுவைய முத கலச முதல்வர் துணைவி தருக முத்தமே.

பொன்னூசற் பருவம்

திகழ்தரு மணிச்சிலம் பாதிபுனை பாதமுஞ் செம்பட் டுடுத்த வரையுஞ்
செய்யவற முழுதும்வள ரங்கையும் பரஞான தேசுமலி தருகொங்கையு
மிகழ்தருத லில்லாத வேயையடு தோளுமழ கியமங் கலக்கழுத்து
மிண்டைமலர் வென்றதிரு முகமுமா ரருள்பொழியு மிணைவிழியு முபமானமுற்
றகழ்தருவி னுதலுமென் புன்றுதியு மேற்றுமகி ழஞ்செவியு முகில்விளர்க்கு
மாரளக பாரமு மிகப்பொலிய வண்டபகி ரண்டங்க ளுந்தழைக்கப்
புகழ்தருந னீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே
பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே

மதிப்பீடு

மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையால் இயற்றப்பட்ட பல சிற்றிலக்கிய நூல்களுள், பிள்ளைத்தமிழ் இலக்கிய நூல்களும் உண்டு. அவற்றுள் குறிப்பிடத்தகுந்த பிள்ளைத்தமிழ் நூலாகவும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய பிள்ளைத்தமிழ் நூல்களுள் ஒன்றாகவும் திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Jul-2025, 09:54:33 IST