சாமி பழனியப்பன்
சாமி பழனியப்பன் (பிறப்பு: ஜனவரி, 27, 1926) பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். இதழாசிரியர், திராவிட இயக்க உணர்வாளர். வீரகேசரி, தமிழரசு உள்ளிட்ட இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
சாமி பழனியப்பன் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியை அடுத்துள்ள புதுப்பட்டியில் உ.வே. சாமிநாதன், இலக்குமி அம்மாள் இணையருக்கு ஜனவரி, 27, 1926-ல் பிறந்தார். தந்தை தச்சுத்தொழிலாளி, கவிஞர், பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர். மேலைச்சிவபுரிக்கு அருகில் உள்ள வலையப்பட்டி, சித்தி விநாயகர் செந்தமிழ்க் கலாசாலையில் தொடக்கக் கல்வி கற்றார். காரைக்குடி மீனாட்சி சுந்தரேசுவரர் உயர்நிலைப் பள்ளி, வலம்புரி வடுகநாதன் உயர்நிலைப் பள்ளிகளிலும் பள்ளிக்கல்வி நிறைவு செய்தார். சில காலம் மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றார். தமிழண்ணல், முடியரசன், மெ.சுந்தரம் உள்ளிட்ட அறிஞர்கள் இவருடன் பயின்றவர்கள்.
தனிவாழ்க்கை
சாமி பழனியப்பன் நவம்பர் 27, 1952-ல் சீர்திருத்த முறையில் கமலாவை மணந்தார். மகள்கள் இலட்சுமி, செல்வி, நாகம்மை, சாந்தி. மகன்கள் தமிழரசன், பாரதி (பழநிபாரதி). பழநிபாரதி கவிஞர், திரைப்படப் பாடலாசிரியராக உள்ளார்.
அரசியல் வாழ்க்கை
இந்தித் திணிப்பு முயற்சி தமிழகத்தில் தலைதூக்கியபோது அதை எதிர்த்து, வலம்புரி வடுகநாதன் உயர்நிலைப்பள்ளி அலுவலகத்தின் முன்பு சாமி. பழனியப்பன் தன் பள்ளியிறுதி வகுப்புச் சான்றிதழைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு வெளியேறினார்.
இதழியல்
பள்ளி காலத்தில் 'குமரன்' என்னும் வார இதழில் பிழைத்திருத்தும் பணி, செய்திகளைச் செப்பனிடும் பணியைச் செய்தார். தமிழரசு இதழில் செய்தியாளராகவும் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
வீரகேசரி
கொழும்பிலிருந்து வெளிவந்த வீரகேசரி இதழின் உரிமையாளரான சுப்பிரமணியன் செட்டியாரிடம் இருந்து பணியாணை பெற்று கொழும்பு சென்று வீரகேசரி இதழ் அலுவலகத்தில் துணையாசிரியராகப் பணியில் இணைந்தார். இவருக்கு முன் வீரகேசரி இதழில் வ. ரா, திரைப்படப் பாடலாசிரியர் கு.மா. பாலசுப்பிரமணியம் முதலானவர்கள் தமிழகத்திலிருந்து சென்று பணியாற்றினர். கொழும்பில் இருந்த சாமி பழனியப்பன் நெருங்கிய ஒரு நண்பரின் திருமணத்துக்குப் புதுப்பட்டிக்கு வந்தார். குடும்பச் சூழல் காரணமாக மீண்டும் இலங்கை செல்லும் வாய்ப்பு இவருக்கு அமையவில்லை.
பிற இதழ்கள்
- பொன்னி இதழின் ஆசிரியர் முருகு சுப்பிரமணியன் வழியாக அதில் துணை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு வாய்ப்பு அமைந்தது.
- பொன்னி இதழ் சென்னைக்கு இடம்பெயர்ந்ததும் காரைக்குடியில் இருந்த "யுனைட்டட் பிரிண்டர்ஸ்" அச்சகத்தில் மேலாளராகப் பணியாற்றினார்.
- 'கலைமகள் பிரஸ்' என்ற அச்சகத்தை நடத்திக்கொண்டிருந்த தி. நா. நாராயணன் "வாரச் செய்தி" என்னும் பத்திரிக்கை தொடங்க இருப்பதாக அழைத்தார். வாரச்செய்தி இதழில் சாமி. பழனியப்பன் ஏழு ஆண்டுகள் பத்திரிக்கை ஆசிரியராகப் பணியாற்றினார்.
- கவியரசு கண்ணதாசனின் 'தென்றல்' இதழில் பணிபுரிவதற்குச் சென்னைக்கு வந்தார்.
- திருச்சியிலிருந்து திருலோக சீதாராம் நடத்திய சிவாஜி இதழில் இரண்டு ஆண்டுகள் உதவி ஆசிரியராக இருந்தார்.
- மதுரையில் இருந்த பாரதி புத்தக உரிமையாளர் சோ. சாமிநாதனின் அழைப்பினை ஏற்று, பாரதியார் நூல்கள் பலவற்றைப் பிழையின்றிப் பதிப்பிக்க உதவினார்.
- சாமி. பழனியப்பன் பாரதி புத்தக நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபொழுது பாரதிதாசன் தனக்கு எழுத்து உதவியாளராக இருக்குமாறு புதுச்சேரிக்குச் அழைத்துச் சென்றார். பாரதிதாசனின் "திருக்குறள் புரட்சி உரை" பதிப்புப் பணியில் இரண்டு ஆண்டுகள் அங்கு இருந்தார். அப்பணி தமக்கு ஒத்துவராததால் சாமி. பழனியப்பன் மீண்டும் புதுப்பட்டிக்குத் திரும்பினார்.
- குன்றக்குடி அடிகளாரின் உதவியாளராகவும் அவரது தமிழகம் இதழின் ஆசிரியராகவும் அடிகளாருடன் எட்டாண்டுகள் பணியாற்றினார். அடிகளாருக்கும் தமக்கும் பிணக்கு ஏற்பட்டதால் அப்பணியிலிருந்தும் விலகினார். பின்னர் கோயம்புத்தூர் வேடப்பட்டி காந்தி நிலையத்தில் ஓராண்டு பணியாற்றினார்.
- செ. மாதவனின் பரிந்துரையால் "பனைச் செல்வம்" இதழில் மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தமிழரசு
எஸ், கருணானந்தத்தின் உதவியால் தமிழரசு இதழில் செய்தியாளராகப் பணியாற்றும் சூழல் அமைந்தது. மு. கருணாநிதி சாமி பழனியப்பனை 1972-ல் தமிழரசு இதழில் செய்தியாளராகப் பணியில் அமர்த்தினார். அதன் உதவி ஆசிரியராகப் பணியுயர்வு பெற்று, இதழாளராக 1986-ல் ஓய்வுபெற்றவர். அப்போது தமிழரசு அலுவலகப் பணியிலும் கலைவாணர் அரங்கத்துப் பணியிலும் இருந்தார். இளங்கவிஞர்கள் பலருக்குச் நெறிகாட்டி வளர்த்தெடுத்தார்.
இலக்கிய வாழ்க்கை
சாமி பழனியப்பன் பத்தாம் வகுப்பு மாணவராக இருந்தபோது இவரின் முதல் கவிதை "ஆட்சி பெறுவதெங்கே?" என்ற தலைப்பில் திராவிட நாடு இதழில் வெளிவந்தது. "பாரதிதாசன் உவமைகள்" என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை நாரண துரைக்கண்ணனின் ஆனந்தபோதினி இதழில் வெளிவந்தது. இது இதழில் வெளிவந்த இவரின் முதல் கட்டுரை. பள்ளி காலத்தில் பாரதிதாசன் குறித்த உரைகள் ஆற்றி பரிசுகள், பாரட்டுக்களைப் பெற்றார். 1947-ல் பொன்னி இதழில் இவரின் "அமைதி கொள்வாய்" என்ற கவிதை பாரதிதாசன் பரம்பரை என்ற அறிமுகத்துடன் வெளியானது.
கவிதை உணர்வு நிறைந்த இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பாரதிதாசன் பரம்பரை என்னும் ஒரு குடையின்கீழ்க் கொண்டுவரும் முயற்சியைப் பொன்னி இலக்கிய இதழ் 1947-ல் தொடங்கியது. அவ்வகையில் பொன்னி இதழ் 48 கவிஞர்களைப் பாரதிதாசன் பரம்பரையினர் என்ற தலைப்பிட்டு அறிமுகம் செய்தது. மு. அண்ணாமலை, நாரா. நாச்சியப்பன், சுரதா, வாணிதாசன், முடியரசன், புதுவைச் சிவம், வா.செ.குலோத்துங்கன், புத்தனேரி சுப்பிரமணியன் முதலான கவிஞர்களின் வரிசையில் ஒருவராகக் கவிஞர் சாமி பழனியப்பனும் பாரதிதாசன் பரம்பரையில் இடம்பெற்றவர்.
திராவிடநாடு, பொன்னி, குடியரசு, பம்பாய் விந்தியா, கொழும்பு, மின்னொளி, சேரநாடு, விடுதலை, தமிழரசு முதலிய ஏடுகளில் இவர் கவிதை எழுதியுள்ளார். இவரின் கவிதைகளைத் திராவிடநாடு, குடியரசு ஆகிய ஏடுகள் மறுவெளியீடு செய்துள்ளன. சாமி பழனியப்பன் பல்வேறு கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருப்பினும் அவற்றையெல்லாம் முறைப்படித் தொகுத்துவைக்கவில்லை. பின்னாளில் சில நூல்களைச் சிறு சிறு வெளியீடுகளாக வெளியிட்டுள்ளார்.
மதிப்பீடு
"இளம் அகவையில் சாமி பழனியப்பன் வரைந்துள்ள கவிதையின் சொல்லாட்சிகளும் எடுத்துரைப்பும் இவரின் கவிதைப் பயிற்சியை அறிவிக்கும் சான்றாக விளங்குகின்றது. பாவேந்தர் கவிதைகளில் இவருக்கு இருந்த பயிற்சியும் புலப்படுகின்றது. கற்பனையாற்றல் சொல்லாட்சி, எடுத்துரைப்பு, புனைந்துரை யாவும் ஒரு தேர்ந்த கவிஞருக்கு உரிய அடையாளத்தை நமக்கு வழங்குகின்றது." என மு. இளங்கோவன் மதிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
- சிரிக்கும் வையம் (இந்தி எதிர்ப்புக் கவிதைகள்)
- பாரதியும் பாரதிதாசனும் (1953)
- புரட்சி இலக்கியம்
- புகழ்க்கன்னி
- மலரும் தமிழகம்
- காதல் உள்ளம்
- மாம்பழக் கவிச்சிங்கம்
- ஆதனூர் அண்ணல்
- பாரதி யார்?
- குறளில் விளக்கு
- அப்பரடிகள் வாழ்வும் வாக்கும்
- வள்ளுவர் தந்த அறநெறி
- வள்ளுவர் தந்த காதல் இன்பம்
- வள்ளுவர் தந்த பொருள் வாழ்வு
- அஞ்சல் தலைகளின் கதை
- சிறுவர் பூங்கா
- காதல் நெஞ்சம்
- அச்சம் தவிர்த்த அமரகவி
- வள்ளுவர் உள்ளம்
- கலைஞரின் முத்துக்குவியல்
- குழந்தையின்பம்
- ஒளவையார் அருளிய நீதி நூல்கள்
- நாடக மேதை பெர்னாட்ஷா
- மலர்கள்
- சாமி பழனியப்பன் கவிதைகள் (1984) (முழுமைப்பதிப்பு (2002)
- திருக்குறள் உரை
- குன்றக்குடி அடிகளார் பொன்மொழிகள்
- நினைவு மலர்கள் (2001)
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Feb-2026, 10:07:42 IST