under review

கௌரி கிருபானந்தன்

From Tamil Wiki
கௌரி கிருபானந்தன்

கௌரி கிருபானந்தன் (பிறப்பு: செப்டம்பர் 2, 1956) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து தெலுங்கிற்கும் தெலுங்கிலிருந்து தமிழுக்கும் பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்தின் எழுபக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

கௌரி செப்டம்பர் 2, 1956ல் திண்டுக்கல்லில், கிருஷ்ணமூர்த்தி, ராஜலட்சுமி இணையருக்குப் பிறந்தார். தந்தை ஆந்திராவில் பணியாற்றியதால் இவரது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு ஆந்திராவில் நிகழ்ந்தது. வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

கணவர் கிருபானந்தனுடன் கௌரி

தனி வாழ்க்கை

1976-ல் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த கிருபானந்தனை கௌரி திருமணம் செய்து கொண்டார். கணவரது வேலை நிமித்தம் தஞ்சாவூரின் மெலட்டூருக்கு வந்து வசித்தார். கணவர் கிருபானந்தன் இலக்கிய ஆர்வலர், எழுத்தாளர். நண்பர் சுந்தர்ராஜனுடன் இணைந்து ‘குவிகம்’ என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார்.

கௌரி கிருபானந்தன் தனது மொழிபெயர்ப்பு நூல்களுடன் (அல்லயன்ஸ் நிறுவனத்தில்)

இலக்கிய வாழ்க்கை

தமிழை பேச மட்டுமே அறிந்திருந்த கௌரி, மெலட்டூரில் வசித்த காலத்தில் முறையாகப் படிக்கவும் எழுதவும் கற்றார். தெலுங்கு, தமிழ் ஆகிய இருமொழி நூல்களையும் வாசித்தார். அசோகமித்திரன், தி.ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி ஆகியோரை ஆதர்ச எழுத்தாளராகக் குறிப்பிடுகிறார்.

1995-ல் கெளரி மொழிபெயர்த்த தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்தின் ‘பந்தயம்’ என்ற சிறுகதை குங்குமச் சிமிழ் இதழில் வெளிவந்தது. எண்டமூரி வீரேந்திரநாத்தின் சிறுகதை, நாவல்களை அனுமதி பெற்று தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். வீரேந்திரநாத்தின் ‘அந்தர்முகம்’ நாவல் கௌரி மொழிபெயர்ப்பில், அல்லயன்ஸ் பதிப்பகம் மூலம் வெளியானது. தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் பதிப்பகங்களுக்கும் தெலுங்கிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து தெலுங்கிற்குமாக பல நூல்களை மொழிபெயர்த்தார்.

வீரேந்திரநாத்தின் 'தளபதி', 'பிரளயம்', 'லேடீஸ் ஹாஸ்டல்', 'ரிஷி', 'தூக்கு தண்டனை', 'பணம் மைனஸ் பணம்', 'துளசிதளம்', 'மீண்டும் துளசி' போன்ற படைப்புகளை மொழிபெயர்த்தார். தெலுங்கு எழுத்தாளர் யத்தனபூடி சுலோசனா ராணியின் 'சங்கமம்', 'மௌனராகம்', 'நிவேதிதா', 'சம்யுக்தா', 'தொடுவானம்' போன்ற நூல்களை மொழிபெயர்த்தார். ஆந்திராவின் கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் தன் வரலாற்றை ‘ஆளற்ற பாலம்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். டி. காமேஸ்வரி, ஒல்கா உள்ளிட்ட பல தெலுங்கு எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழில் கொணர்ந்தார்.

தமிழிலிருந்து தெலுங்கிற்கு அசோகமித்திரன், கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன், நீல பத்மநாபன், சுஜாதா, வாஸந்தி, சிவசங்கரி, அனுராதா ரமணன், உஷா சுப்பிரமணியன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஐராவதம், தோப்பில் முகமது மீரான், பாமா, பிரபஞ்சன், பெருமாள் முருகன் போன்றோரது படைப்புகளை மொழியாக்கம் செய்தார்.

தமிழ், தெலுங்கில் பல சிறுகதைகளை எழுதினார். கணையாழி, மஞ்சரி, குங்குமம், மங்கையர் மலர், சிநேகிதி, தெலுங்கின் விபுலா எனப் பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின. இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார்.

திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் சிறப்புரை

இலக்கியப் பணிகள்

குப்பத்தில் அமைந்துள்ள திராவிடன் பல்கலைக்கழகத்தில் நடந்த மொழிபெயர்ப்பு பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியுள்ளார். மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டு மொழிபெயர்ப்பு நுணுக்கங்களைப் பற்றிய பயிற்சி அளித்துள்ளார். சாகித்ய அகாதெமி அமைப்பு நடத்தும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளார். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். தற்போது எழுத்து மற்றும் மொழிபெயர்ப்புப் பணிகளோடு, தெலுங்குத் திரைப்படங்களுக்கு தமிழில் ‘சப் டைட்டில்’ அளிக்கும் பணியையும் செய்து வருகிறார்.

சாகித்ய அகாதமி மொழியாக்க விருது 2015
புத்தகக்காட்சியில் புத்தக வெளியீடு
ஸ்பாரோ விருது

விருதுகள்

  • மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது - ‘மீட்சி’ நூலுக்காக (மூலம்: ஒல்கா எழுதிய விமுக்தா) (2015)
  • ஸ்பாரோ விருது (2016)
  • திருப்பூர் லயன்ஸ் க்ளப் விருது
சாகித்ய அகாதமி விழாவில் மாலன் மற்றும் ரவி சுப்பிரமணியனுடன்.

இலக்கிய இடம்

தெலுங்கில் இருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுங்குக்கும் மொழியாக்கம் செய்துவரும் சிலரில் ஒருவர் கௌரி கிருபானந்தன். இருமொழிகளுக்கு இடையிலான இலக்கிய உரையாடலுக்கு வழிவகுப்பவர்.

ஒரு புளியமரத்தின் கதையின் தெலுங்கு மொழியாக்கம்: ‘சிந்த செட்டு கத’ - கௌரி கிருபானந்தன்

நூல்கள்

எண்டமூரி வீரேந்திரநாத் நூல்கள்
  • அந்தர் முகம்
  • 13-14-15
  • அஷ்டாவக்ரன்
  • இருட்டில் சூரியன்
  • காஸ்நோவா 99
  • காதல் செக்
  • காதலெனும் தீவினிலே
  • லேடீஸ் ஹாஸ்டல்
  • துளசிதளம்
  • மீண்டும் துளசி
  • நெருப்புக் கோழிகள்
  • நிகிதா
  • ஒரு மழை காலத்து மாலை நேரம்
  • பணம்
  • பனிமலை
  • பணம் மைனஸ் பணம்
  • பந்தம் பவித்ரம்
  • பட்டிக்காட்டு கிருஷ்ணன்
  • பிரளயம்
  • பிரார்த்தனை
  • பிரியமானவள்
  • ரதியும் குந்திதேவியும்
  • ரிஷி
  • ஒரு பெண்ணின் கதை
  • சாகர சங்கமம்
  • ஸ்டூவர்ட்புரம் போலீஸ் ஸ்டேஷன்
  • தளபதி
  • தர்மயுத்தம்
  • தி பெஸ்ட் ஆப் எண்டமூரி
  • தூக்கு தண்டனை
  • வர்ண ஜாலம்
  • த்ரில்லர்
  • பர்ணசாலை
  • பதியன் ரோஜா
  • சொல்லாத சொல்லுக்கு விலை ஏது ?
  • போர்வைக்குள் புகுந்த பூ நாகம்
  • கொலை தூரப் பயணம்
  • அவன் அவள் காதலன்
  • அந்தியில் சூர்யோதயம்
  • நாலாவது தூண்
  • ருத்ர நேத்ரா
  • விஸ்வரூபம்
  • சாரதாவின் டைரி
  • அவள் செதுக்கிய சிற்பம்
  • அக்னி பிரவேசம்
  • சிவதாண்டவம்
யத்தனபூடி சுலோசனாராணி நூல்கள்
  • மௌன ராகம்
  • தொடு வானம்-1
  • தொடு வானம் - 2
  • நிவேதிதா
  • சம்யுக்தா
  • ஸ்நேகிதியே
  • செக்ரெட்ரி
  • கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
  • இதய கீதம்
  • முள் பாதை (இரண்டு பாகங்கள்)
  • சங்கமம் (இரண்டு பாகங்கள்)
  • அன்னபூர்ணா
  • விடியல்
பிற மொழிபெயர்ப்பு நூல்கள்
  • தொடுவானம் தொட்டுவிடும் தூரம்
  • இதய வாசல்
  • மீட்சி
  • தூக்குதண்டனை
  • சிறகுகள்
  • பணம்
  • அவன் அவள் காதலன்
  • சுஜாதா
  • பதியன் ரோஜா
  • வர்ணஜாலம்
  • அமூல்யா
  • அவள் வீடு
  • மிதுனம்
  • உள்முகம்
  • ஆளற்ற பாலம்
  • தெலுங்குச் சிறுகதைகள் - 1
  • தெலுங்குச் சிறுகதைகள் - 2
  • புஷ்பாஞ்சலி

உசாத்துணை


✅Finalised Page