கள்ளில் ஆத்திரையனார்
கள்ளில் ஆத்திரையனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் குறுந்தொகையில் ஒன்றும் புறநானூறில் இரண்டு பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
கள்ளில் ஆத்திரையனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கள்ளில் என்னும் ஊரினை சார்ந்தவர். ஆத்திரையனார் என்னும் இயற்பெயர் கொண்டவர் என்பது ஔவை சு. துரைசாமிப் பிள்ளையின் முடிவு. உ.வே.சாமிநாதையர் மற்றும் எஸ். வையாபுரிப் பிள்ளை இருவரும் கள்ளில் என்பது இவர் பாடிய பாடலில் இடம்பெற்றுள்ள சிறப்பு சொல் என்றும் வேங்கட நாட்டை தன் பாடலில் குறிப்பிட்டுள்ளதால் வேங்கட நாட்டை சேர்ந்தவர் என்றும் கருதுகின்றனர். மேலும் ஆத்திரையனார் என்பது ஆத்திரேயனார் என்ற சொல்லின் மருஉ. ஆகவே இவர் அத்திரி கோத்திரத்தை சார்ந்தவர் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
இலக்கிய வாழ்க்கை
கள்ளில் ஆத்திரையனார் பாடிய பாடல்கள் குறுந்தொகையில் 293-வது பாடலாகவும், புறநானூறில் 175, 389-வது பாடல்களாகவும் இடம்பெற்றுள்ளன. குறுந்தொகை 389-ம் பாடல் பரத்தையிடமிருந்து வீடு திரும்பும் தலைவனுக்காகப் பேச வந்த தோழியிடம் தன் துயரைத் தலைவி கூறுவதாக மருதத் திணையில் அமைந்துள்ளது. புறநானூறு 175, 389 இருபாடல்களும் பாடாண் திணையில் இயன்மொழி துறையில் அமைந்து, ஆதனுங்கன் என்ற அரசனின் கொடைச் சிறப்பைப் பேசுகின்றன. புறநானூறு 175-ம் பாடலில் மௌரியர் குறித்த குறிப்பும் குறுந்தொகை 293-ம் பாடலில் ஆதி அருமன் என்ற அரசனைப் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளன.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
குறுந்தொகை - 293
- ஆதி அருமன் என்னும் அரசனின் ஊரில் பனைமரங்கள் மிகுதியாக இருந்துள்ளன. முதலில் பனை மரத்தின் கள்ளினைக் குடிக்கும் மக்கள் பின்னர் கோடை காலத்தில் பனையில் விளையும் நுங்கைச் சுவைத்து உண்பர்.
- பரத்தையர், ஆம்பல் பூக்கள் மலர்ந்திருக்கும் குளத்தில் கரையேறுகையில் ஆடவர் கண்டு மயங்கும்படி தழையாடை அணிவர். தம்மை நாடி வரும் ஆடவரை இன்பத்தில் ஆழ்த்துவர்.
- உவமை: கள் கொடுத்து பின்னர் நுங்கு தரும் பனை மரமானது ஆடவரை கவரும் பரத்தையரின் நடத்தைக்கு உவமையாக்கப்பட்டுள்ளது.
புறநானூறு - 175, 389
புறநானூறு 175, 389-ம் இருபாடல்களிலும் ஆதனுங்கன் என்ற அரசனின் வள்ளல்தன்மை கூறப்பட்டுள்ளது.
- உணவும் உறையுளுக்கு தேவையான பொருளும் அளித்து பேணுவோரை மக்கள் தந்தைக்கு நிகராக நினைத்துள்ளனர் என்பதை ஆதனுங்கனை புலவர் என் தந்தையானவனே என்று போற்றி அழைப்பதன் மூலம் அறிய முடிகிறது.
- ஆதனுங்கன் செய்த உதவி உயிர்போகும் நாள்வரை மறக்கமாட்டேன். சூரியன் தினந்தோறும் தோன்றுவது போல உள்ளத்தில் எப்போதும் நினைத்திருப்பேன் என்கிறார்.
- மௌரியர் தெற்கே படையெடுத்து வந்த பொழுது தாங்கள் செல்லும் வழியில் பாதை அமைத்தனர். அப்பாதை அமைக்கும் பணியில் வேலை செய்வோருக்கு குறைவிலாது உணவு அளிக்க அறச்சாலைகளை திறந்தனர். ஆதனுங்கனும் அது போல தன்னை நாடி வருவோர்க்கு குறைவிலாது கொடையளித்து மகிழ்பவன்.
- ஆதனுங்கன் போர் புரியும் காலத்திலும் நுங்கு விளையும் காலத்திலும் வேம்பு காய்க்கும் காலத்திலும் குளத்து நீர் வற்றி களிமண் கண்ணுக்கு தென்படும் காலத்திலும் என்று எக்காலத்திலும் நாடிவரும் புலவருக்கு கொடையளித்து சிறப்பிக்கும் தன்மை உடையவன்.
- ஆதனுங்கனின் வேங்கட நாட்டில் ஆண் யானை பிடியானையுடன் கூடி மகிழும் வளம் மிக்க காடுகள் உண்டு. அவனது மரபினரும் ஆதனுங்கனை போலவே புலவரின் வீட்டில் இறப்பினால் விளையும் நெய்தல் பறையின் ஓசை கேட்காது மட்டும் கொடையளித்து புலவரை சிறப்பிப்பாராக என்று பாடியுள்ளார்.
- உவமை: மௌரியர் சென்ற வழி சூரியனின் ஒளிப்பட்டு மொக்கவிழ்ந்த மலரினை ஒத்து இருந்ததாக உவமை கூறப்பட்டுள்ளது.
பாடல் நடை
குறுந்தொகை - 293
- திணை: மருதம்
- கூற்று:பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்கத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கள்ளிற் கேளிர் ஆத்திரை யுள்ளூர்ப்
பாளை தந்த பஞ்சியங் குறுங்காய்
ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி யருமன் மூதூ ரன்ன
அயவெள் ளாம்பல் அம்பகை நெறித்தழை
தித்திக் குறங்கின் ஊழ்மா றலைப்ப
வருமே சேயிழை யந்திற்
கொழுநற் காணிய அளியேன் யானே.
புறநானூறு - 175
- திணை: பாடாண் திணை
- துறை: இயன்மொழி
எந்தை வாழி ஆத னுங்கஎன்
நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே;
நின்யான் மறப்பின் மறக்குங் காலை
என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்
என்யான் மறப்பின் மறக்குவென் வென்வேல்
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே.
உசாத்துணை
- சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் - 2:தமிழ் பல்கலைகழகம்
- குறுந்தொகை - 293:nallakurunthogai
- புறநானூறு - 175:puram400
- புறநானூறு - 389:puram400
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Dec-2025, 16:22:10 IST