கதப்பிள்ளையார்
கதப்பிள்ளையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் ஐந்து. புறநானூறு மற்றும் நற்றிணையில் முறையே ஒரு பாடலும் குறுந்தொகையில் மூன்று பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
கதப்பிள்ளையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். நற்றிணைப் பாடல் தவிர பிற நான்கு பாடல்களையும் இயற்றியவர் கருவூர் கதப்பிள்ளை என்று மர்ரே ராஜம் பதிப்பு கூறுகிறது. இவர் பெயர் கருவூர் கந்தப்பிள்ளை என்று வழங்கப்படுவதாக உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகிறார். இவர் கருவூர் கதப்பிள்ளை சாத்தனார், கதப்பிள்ளை, கந்தப்பிள்ளை என்று பலவாறான பெயர்களில் அறியப்படுவதாக தனது நற்றிணை வரலாறு நூலில் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் குறிப்பிடுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
கதப்பிள்ளையார் பாடிய ஐந்து பாடல்கள் புறநானூறில் 380-ம் பாடலாகவும் நற்றிணையில் 135-ம் பாடலாகவும் குறுந்தொகையில் முறையே 64, 265, 380-ம் எண்ணில் அமைந்த பாடல்களாகவும் இடம்பெற்றுள்ளன.
பாடாண் திணையில் இயன்மொழி என்னும் துறையில் அமைந்துள்ள புறநானூறு 380-ம் பாடலில் நாஞ்சில் வள்ளுவன் என்னும் பாண்டிய நாட்டு சிற்றரசனின் வீரத்தையும் கொடையையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
நற்றிணை 135-ம் பாடல் தலைவியை மணம்புரியாது காலம் கடத்தியபடி ரகசியமாக வந்து சந்திக்கும் தலைவனிடம், விரைந்து மணம் புரிக என்று குறிப்புணர்த்துவதாக தோழி கூற்றாக நெய்தல் திணையில் அமைந்துள்ளது.
குறுந்தொகை 64 மற்றும் 380-ம் பாடல்கள் இரண்டும் தலைவனின் பிரிவால் வாடும் தலைவியின் கூற்றாக முறையே முல்லைத் திணை மற்றும் பாலைத் திணைகளில் அமைந்துள்ளன. 265-ம் பாடல் தலைவனை திருமணத்திற்கான பொருள் சேர்த்தலுக்காக பிரிந்திருக்கிறான். உன்னை வந்து மணம் புரிந்து கொள்வான் என்று தலைவிக்கு தோழி கூறுவதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
புறநானூறு 380
- நாஞ்சில் நாடு பலாமரங்கள் மிகுதியாக உடையது. நாஞ்சில் வள்ளுவனின் படைவீரர்கள் தென்கடலில் விளைந்த முத்துக்களால் செய்யப்பட்ட ஆரத்தை ஆணிவர். வடமலையில் விளைந்த சந்தனத்தை குளிர்ச்சிக்காக தம் மார்பில் பூசிக்கொள்வர். நாஞ்சில் வள்ளுவன் குளவி. கூதளம் ஆகிய பூக்களாலான மாலையை அணிவான்.
- நாஞ்சில் வள்ளுவனை எதிர்க்க வலிமையுள்ளவர்களும் அஞ்சுவர். அவர்களின் தாக்குதலுக்கு ஆட்படாத வலிமையுடன் உயர்ந்து நிற்பவன். அவனை நாடி அடைக்கலம் புகுந்தோருக்கு உள்ளங்கை போல் அண்மையில் உள்ளவன்.
- நாஞ்சில் வள்ளுவன் சிறுபிள்ளை போல் நல்லுள்ளம் கொண்டவன். தான் ஆளும் நாட்டிற்கே வறுமை வந்தாலும் தன்னை நாடி வந்தோரை கைவிடாத உயர் பண்பு கொண்டவன்.
நற்றிணை 135
- கடல் கரையோரத்தில் இருக்கும் பனைமரக்காடுகள் சூழ்ந்த நெய்தல் நிலத்து சிற்றூரின் சித்திரம் காணப்படுகிறது. நீண்டு வளர்ந்து தொங்கும் ஒலைகளும் பருத்த அடியுமுடைய பனைமரங்கள் காணப்படும் ஊர். ஊருக்கு வரும் விருந்தினர்களுக்கு பனைமரத்தடியில் பலவகை பொருட்களையும் விருந்திட்டு மகிழ்வர்.
- கடற்காற்றின் வறட்சியை மணல் மீது பரவும் நீரலைகள் போக்கும். வளம் மிக்க குடும்பத்து ஆடவர் குதிரை பூட்டிய தேரில் கடலோரம் பயணிப்பர். இளமகளிர் அவர்களை கண்டு காதல் கொள்வர்.
குறுந்தொகை 64, 265, 380
- முல்லை நிலத்தின் பசுக்கள் கூட்டம் கூட்டமாக காடுகளில் மேய்ந்து வாழும். அவற்றை ஆயர்கள் பாதுகாப்பர். மேய்ச்சலுக்காகக் காட்டில் நீண்ட தூரம் சென்றுவிட்ட கன்றுக்குட்டிகள் அவை தங்கியிருக்கும் மன்றத்தை பார்த்து ஏங்கி கத்தும்.
- கார்காலத்தில் மழை விடாமல் பெய்தது. வானம் தெரியாதபடிக்கு மேகங்கள் பரவி இடியும் மின்னலும் வந்தது அரசர்களின் போர்வெற்றி முரசு போல இருந்தது. பனிக்காலத்தில் வண்ணப்பூக்கள் உதிர்ந்து வாடுகின்றன.
- மலை நிலத்தில் காந்தள் மலர்கள் பூத்தால் அவற்றை சுற்றி வண்டுகள் பறந்து இதழ்களில் அமர்ந்து தேனருந்தும். பூவிதழில் வண்டு அமர்கையில் இதழ் விரிவது மலர் தானே விரும்பியது போல் உள்ளது என்று மனக்கருத்து ஏற்றி கூறப்பட்டுள்ளது. இக்காட்சியானது சான்றோர் முன் எளியோர் வணங்கிச் செல்வதை ஒத்திருந்தது என்று உவமிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் சான்றோரைக் கண்டால் எளியோர் அவரை வணங்குதல் வழக்கமாக இருந்துள்ளது என்று அறிய முடிகிறது.
பாடல் நடை
புறநானூறு - 380
- திணை: பாடாண் திணை
- துறை:இயன்மொழி
தென் பவ்வத்து முத்துப் பூண்டு,
வட குன்றத்துச் சாந்தம் உரீஇ,
........................................ங் கடல் தானை,
இன் இசைய விறல் வென்றி,
தென்னவர் வய மறவன்;
மிசைப் பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து,
நாறு இதழ்க் குளவியொடு கூதளம் குழைய,
வேறுபெ.............................................த்துந்து,
தீம் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்;
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்;
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்;
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல,
.....................த்தார்ப் பிள்ளை அம் சிறாஅர்;
அன்னன் ஆகன்மாறே, இந் நிலம்
இலம்படு காலை ஆயினும்,
புலம்பல் போயின்று, பூத்த என் கடும்பே.
நற்றிணை - 135
- திணை: நெய்தல்
- கூற்று: 'வரைவு நீட்டிப்ப அலர்ஆம்' எனக் கவன்ற தோழி சிறைப்புறமாகச் சொல்லியது
தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில்,
வரையாத் தாரம் வரு விருந்து அயரும்
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்
இனிது மன்றம்ம தானே-பனி படு
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய,
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும்,
வால் உளைப் பொலிந்த, புரவித்
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே.
குறுந்தொகை - 64
- திணை: முல்லை
- கூற்று: பிரிவிடை ஆற்றாமை கண்டு, 'வருவர்' எனச் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென,
புன் தலை மன்றம் நோக்கி, மாலை
மடக் கண் குழவி அலம்வந்தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்,
சேயர்-தோழி!-சேய் நாட்டோரே.
உசாத்துணை
- சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் - 2:தமிழ் பல்கலைகழகம்
- புறநானூறு - 380:puram400
- நற்றிணை - 135:Tamilvu
- குறுந்தொகை - 64:nallakurunthokai
- குறுந்தொகை - 265:nallakurunthokai
- குறுந்தொகை - 380:nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2026, 21:03:34 IST