under review

இரா. குமரவேலன்

From Tamil Wiki
இரா. குமரவேலன்

இரா. குமரவேலன் (முனைவர் இரா. குமரவேலன்; பேராசிரியர் இரா. குமரவேலன்; இரா. குமரவேல்; இரா. குமரவேலனார்; பூங்குன்றன்) (அக்டோபர் 19, 1938 - டிசம்பர் 30, 2012) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

இரா. குமரவேலன், அக்டோபர் 19, 1938 அன்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்பாதிமங்கலத்தில், அ. இராசபூபதி - பாலகுசலாம்பாள் இணையருக்குப் பிறந்தார். திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 'கம்பராமாயணத்தில் பரதனின் பாத்திரப் படைப்பு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.லிட். பட்டம் பெற்றார்.

தமிழ் நாடகங்கள் குறித்து 'தமிழ் நாடக வரலாறு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். மதுரைப் பல்கலைக் கழக மான்யக் குழுவின் ஆதரவில் மொழியியல், சித்தாந்தம் குறித்துப் பயின்று பட்ட மேற்படிப்பு பட்டயச் சான்று (பி.ஜி. டிப்ளமோ) பெற்றார். பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளைப் பயின்று பட்டயம் பெற்றார்.

பேராசிரியர், முனைவர் இரா. குமரவேலன்

தனி வாழ்க்கை

இரா. குமரவேலன் மணமானவர். மனைவி தமிழரசி, ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையின் மகள். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன்.

கல்விப் பணிகள்

இரா. குமரவேலன் தான் படித்த பச்சையப்பன் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பிரெஞ்சு மொழி விரிவுரையாளராகவும், பின் தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1967-ல், பேராசிரியராகப் பணி ஓய்வு பெற்றார். பணி நிறைவுக்குப் பிறகு திருவள்ளூரில் அமைந்துள்ள திருமுருகன் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வராக மூன்றாண்டுகள் பணியாற்றினார்.

25-க்கும் மேற்பட்ட மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுக்கும், மேலும் பல மாணவர்களின் இளம் முனைவர் பட்ட ஆய்வுக்கும் நெறியாளராகச் செயல்பட்டார். தமிழக அரசின் பாடத்திட்டங்கள் சிலவற்றுக்கு நூலாசிரியராகப் பணியாற்றினார்.

இரா. குமரவேலன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

இரா. குமரவேலன், ரா.பி. சேதுப்பிள்ளை, மு. வரதராசன், ரா. சீனிவாசன் போன்ற பேராசிரியர்களால் இலக்கிய ஆர்வம் பெற்றார். தொடக்க காலத்தில் கவிதைகளில் ஆர்வம் கொண்டார். இதழ்களில் பல்வேறு கவிதைகளை எழுதினார். அவற்றைத் தொகுத்து 'பூங்குன்றன் கவிதைகள்' என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார். தொடர்ந்து ஆய்வு மற்றும் உரைகளில் குமரவேலனின் கவனம் சென்றது. கவிதை, கட்டுரை, உரை நூல்கள், ஆய்வு நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பழந்தமிழ் நூல்கள் சிலவற்றை மீண்டும் பதிப்பித்தார்.

சாகித்ய அகாதெமி நிறுவனத்திற்காக, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் கவிஞர் சுரதா குறித்த ஆய்வு நூலை எழுதினார். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு, கோவையில் நடைபெற்ற தமிழ்ச் செம்மொழி மாநாடு போன்றவற்றின் மலர்களில் இரா. குமரவேலனின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம் பெற்றன.

சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தஞ்சைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் போன்றவற்றில் பல அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

மொழிபெயர்ப்பு

இரா. குமரவேலன் மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டார். கலீல் ஜிப்ரான் கவிதைகளை, 'மணலும் நுரையும்' என்ற தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்தார். ஒரிய மொழி எழுத்தாளரான சந்திரசேகர் ராத் எழுதித் தொகுத்த அவரது சிறுகதைகளின் தொகுப்பான, 'க்ருததசர ஸ்வப்னா' என்ற நூலை 'கனவுகள்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார்.

நாடகம்

இரா. குமரவேலன், 'குறவஞ்சிக் கவிதை நாடகம்', சுலோச்சனா சதி, அண்ணாவின் ஓர் இரவு, இரத்தக் கண்ணீர் முதலிய அறுபதுக்கும் மேலான நாடகத் திறனாய்வுக் கட்டுரைகளை எழுதினார். 'தமிழ் நாடக ஆய்வு', 'கவிதை நாடகம் ஒரு கண்ணோட்டம்' போன்ற நாடகம் சார்ந்த ஆய்வு நூல்களை எழுதினார்.

பதிப்பு

இரா. குமரவேலனின் மனைவி தமிழரசி, 'தமிழரசி பதிப்பகம்' என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். அப்பதிப்பகம், முனைவர் இரா. குமரவேலனின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டது.

விருதுகள்

மறைவு

இரா. குமரவேலன், டிசம்பர் 30, 2012-ல் காலமானார்.

வாழ்க்கை வரலாறு

இரா. குமரவேலனின் வாழ்க்கை வரலாற்றை, ம. இளங்கோவன் எழுதினார். இந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மற்றும் மலாயா இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து, 2015-ல் வெளியிட்டது.

நாட்டுடைமை

இரா. குமரவேலனின் நூல்கள் தமிழக அரசால், 2024-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

மதிப்பீடு

இரா. குமரவேலன் கவிஞராகவும் ஆய்வாளராகவும் செயல்பட்டார். நாடக ஆராய்ச்சி முன்னோடிகளுள் ஒருவராக மதிக்கப்பட்டார். இரா. குமரவேலன் எழுதிய தமிழ் நாடக வரலாற்று நூல்கள் குறிப்பிடத்தகுந்த ஆய்வு நூல்களாக அறியப்படுகின்றன. பழந்தமிழ்ச் சொற்களின் ஆராய்ச்சிக் கட்டுரை நூலான 'சொற்செல்வம்' நூல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கவிதை, எழுத்து, உரை, நாடகம், மொழிபெயர்ப்பு எனப் பல களங்களிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியவராக பேராசிரியர், முனைவர் இரா. குமரவேலன் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • பூங்குன்றன் கவிதைகள்
  • கவிதை நாடகம்: ஒரு கண்ணோட்டம்
  • தமிழ் நாடக ஆய்வு
  • அரசியல் வளர்த்த தமிழ் நாடகம்
  • தமிழ் நாடக வளர்ச்சி: விடுதலை இயக்கமும், திராவிட இயக்கமும்
  • பொன்னி
  • சலோமி
  • நீதிநெறி விளக்கம்
  • தக்கயாகப் பரணி உரை
  • இலக்கிய நுட்பம்
  • சொற் செல்வம் - 1 & 2
  • உரைமாண்புகள்
  • மணலும் நுரையும்: கலீல் ஜிப்ரான் கவிதைகள்
  • கனவுகள்
  • திருக்குறள்: வ.உ.சிதம்பரனார் உரை

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2025, 12:13:30 IST