under review

திருலோக சீதாராம்

From Tamil Wiki
Revision as of 20:14, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
திருலோக சீதாராம்

திருலோக சீதாராம் (திருவையாறு லோகநாதய்யர் சீதாராமன்; ஏப்ரல் 1,1917-1973) தமிழ் இலக்கியப் பரப்பில் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல களங்களில் செயல்பட்டவர் . 'சிவாஜி’ என்ற இலக்கியச் சிற்றிதழை நீண்ட காலம் நடத்தியவர். பாரதி பாடல்களின் புகழைப் பரப்பியவர். பாரதியின் மனைவி செல்லம்மாளுக்கு மகனைப் போல் இருந்து கடமையாற்றியவர்.

பிறப்பு, கல்வி

திருவையாறு லோகநாதய்யர் சீதாராமன் என்னும் திருலோக சீதாராம், பெரம்பலூருக்கு அருகிலுள்ள தொண்டைமான்துறையில், திருவையாறு லோகநாத ஐயர்-மீனாட்சி சுந்தரம்மாள் தம்பதியினருக்கு, ஏப்ரல் 1, 1917-ல் பிறந்தார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட குடும்பம். மூன்று வயதிலேயே தந்தையை இழந்தார் திருலோக சீதாராம். மாமா வீட்டில் தங்கி எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். பின் வேதம் கற்றுச் சிறிதுகாலம் புரோகிதர் தொழிலில் ஈடுபட்டார். ஆனால், அவருக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை. தொண்டைமான்துறையில் வாழ்ந்த அந்தகக்கவி ராமசாமி படையாச்சியிடம் முறையாகத் தமிழ் கற்றார்.

தனி வாழ்க்கை

திருலோக சீதாராம், தனது 19-ம் வயதில் 10 வயதான ராஜாமணியை மணந்தார். இவர்களுக்கு மதுரம், வசந்தா, இந்திரா என்ற மூன்று பெண்களும், பசுபதி, சுப்பிரமணியன், முரளிதரன், ராமகிருஷ்ணன் என்ற நான்கு மகன்களும் பிறந்தனர்.

இலக்கிய வாழ்க்கை

தாய் மொழி தெலுங்கு என்றாலும் தமிழின் மீது அதிக விருப்பம் கொண்டவராக இருந்தார் திருலோக சீதாராம். இளம் வயதிலேயே இவருக்குக் கவிதை எழுதுவதில் ஆர்வம் வந்ததுடன் இதழியல் துறையிலும் ஆர்வம் ஏற்பட்டது. பாரதியின் பாடல்களால் மிகவும் ஈர்க்கப்பட்ட திருலோக சீதாராம், தம்மை பாரதியின் புத்திரனாகவே வரித்துக் கொண்டு வருடா வருடம் அவருக்கான நீத்தார் சடங்குகளைச் செய்தார். தாம் செல்லும் இடங்களிலெல்லாம் பாரதியின் பாடல்களை உணர்ச்சி பொங்கப் பாடி பாரதியின் புகழைப் பரப்பினார்.

இலக்கிய நுகர்ச்சிக்காக 'தேவசபை' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். பழம்பெரும் நுல்களில் உள்ள உண்மைகளை, சிறப்புக்களை, உயர்வுகளை உலகுக்கு உரைப்பதுதான் அந்த அமைப்பின் நோக்கம். அதற்காக தமிழ்ச்சான்றோர்கள் பலரையும் அழைத்து வந்து சிறப்புரையாற்றச் செய்தார்.

இதழியல் வாழ்க்கை

இதழியல் மீது கொண்ட ஆர்வத்தால் 'இந்திய வாலிபன்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார் திருலோக சீதாராம். அதன் பின் ஸ்ரீராம சடகோபன் என்பவர் நடத்தி வந்த 'தியாகி’ இதழின் துணை ஆசிரியராகச் சில மாதங்கள் பணிபுரிந்தார். அவ்விதழில் 'மந்தஹாசன்’ என்ற புனைபெயரில் கவிதை, கட்டுரைகளை எழுதினார். அதனைத் தொடர்ந்து 1938-ல், விழுப்புரத்தில் 'பால பாரதம் என்னும் இதழைத் தொடங்கிச் சில மாதங்கள் நடத்தினார். தொடர்ந்து நகர தூதன், பேனா நண்பன், மறுமலர்ச்சி, நவசக்தி போன்ற இதழ்களில் பணியாற்றினார். பின் ஆற்காடு வட்டாரச் செய்திகளை வெளியிட்ட தமிழ் வார இதழான 'ஆற்காடு தூதன்’ என்ற இதழுக்குச் சில காலம் ஆசிரியராக இருந்தார்.

சிவாஜி - இலக்கியச் சிற்றிதழ்
சிவாஜி இதழ்

சிவாஜி’ என்ற இதழை திருச்சியைச் சேர்ந்த சிவஞானம் பிள்ளை என்பவர் 1935-ல் தொடங்கி நடத்தி வந்தார். அந்த இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார் திருலோகசீதாராம். இவர் ஆசிரியராகப் பொறுப்பேற்றதும் இதழின் உள்ளடக்கம் மாறியது. அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த இதழை இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதழாக மாற்றினார். ந. பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், அரங்க சீனிவாசன் போன்றோரை அவ்விதழில் எழுத வைத்தார். கரிச்சான் குஞ்சு தொடர்ந்து கதை, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றை எழுதி ஓர் எழுத்தாளராகப் புகழ்பெற்றது 'சிவாஜி’ இதழ் மூலம்தான்.

இளம் எழுத்தாளர்கள், கவிஞர்களின் கதை, கட்டுரைகளை 'சிவாஜி’யில் வெளியிட்டு ஊக்குவித்தார் திருலோக சீதாராம். 'சுஜாதா’வின் முதல் சிறுகதையான 'எழுத்தில் ஹிம்சை’ சிவாஜி இதழில் தான் (1953) வெளியானது.

’சிவாஜி’ இதழ் 1968 வரை வார இதழாகவும், 1969 முதல் 1973 வரை மாத இதழாகவும் வெளி வந்தது. 1980 வரை இந்த இதழ் செயல்பட்டது.

கிராம ஊழியன்

திருச்சி மாவட்டம் துறையூரில், 1942-ல், அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் 'கிராம ஊழியன்" என்ற இதழைத் தொடங்கினார். அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார் திருலோக சீதாராம். ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் சார்பு அரசியல் இதழாக இருந்தது கிராம ஊழியன். அதனை மறுமலர்ச்சி இலக்கிய இதழாக மாற்றினார் திருலோக சீதாராம். கு.ப.ரா.வை 'கிராம ஊழியன்’ இதழின் கௌரவ ஆசிரியராக நியமிக்க ஏற்பாடு செய்தார். கு.ப.ரா.வின் காலம் முதல் அவ்விதழ் மாதம் இருமுறையாக வெளிவரத் தொடங்கியது. கு.பா.ரா.வின் மறைவிற்குப் பின் வல்லிக்கண்ணனின் எழுத்துத் திறன் அறிந்து அவரை கிராம ஊழியனுக்குத் துணை ஆசிரியராக்கினார் திருலோக சீதாராம். வல்லிக்கண்ணன் பல புனைபெயர்களில் அவ்விதழில் கட்டுரைகளை எழுதினார். புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, ஈழத்துக் கவிஞர்களான நாவற்குழியூர் நடராஜன், சோ. தியாகராஜன், க.இ. சரவணமுத்து ஆகியோரின் கவிதை, கட்டுரைகளையும் கிராம ஊழியன் வெளியிட்டது. கிராம ஊழியன் இதழில் தான் புதுமைப்பித்தன் "வேளூர் வெ.கந்தசாமி கவிராயர்" எனும் பெயரில் "ஓஹோ உலகத்தீர் ஓடாதீர்" என்னும் புகழ் மிக்க தம் அங்கதக் கவிதையை எழுதினார். கி.ரா. கோபாலன், ஸ்வாமிநாத ஆத்ரேயன், கோமதிநாயகம், தி.ஜானகிராமன் எனப் பலர் இவ்விதழுக்குப் பங்களிப்புச் செய்தனர். மே, 1947 வரை இவ்விதழ் வெளிவந்தது.

திருலோக சீதாராம்
மநு தர்ம சாஸ்திரம்

இலக்கியப் பணிகள்

திருலோக சீதாராமின் இலக்கியத் தேர்ச்சிக்கு ஒரு சான்றாக 'இலக்கியப் படகு’ என்னும் அவரது தொகுப்பு அமைந்தது. 'சிவாஜி’ இதழில் இவர் எழுதிய முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். திருலோக சீதாராமின் எழுத்துத் திறன் கண்டு வியந்த எஸ். எஸ். வாசன் ஆனந்த விகடனில் அவரைத் தொடர் எழுதக் கேட்டுக் கொண்டார். விகடனில் திருலோக சீதாராம் எழுதிய பாரதி பற்றிய கட்டுரைகள் அவருக்குப் புகழைச் சேர்த்தன. பின்னர் அவை தொகுக்கப்பட்டு "புதுயுகக் கவிஞர்" என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. 'குருவிக்கூடு', 'உடையவர்' போன்ற நீள் கவிதைகளையும் திருலோக சீதாராம் எழுதியுள்ளார்.

'கந்தருவ கானம்' கவிதைத் தொகுப்பு திருலோக சீதாராமுக்கு மிகவும் புகழை ஏற்படுத்தித் தந்த படைப்பு. "இந்தக் கந்தர்வனில் மயங்கியே ’நாகலிங்கம்’ என்ற தன் பெயரை ’கந்தர்வன்’ ஆகச்சூடினார் முற்போக்கு எழுத்தின் முன்னோடியான எழுத்தாளர் கந்தர்வன்." என்கிறார், விகடன் கட்டுரையில் கவிஞர் நந்தலாலா. கந்தருவ கானத்தைத் திருலோக சீதாராமின் நண்பர் டி.என். ராமசந்திரன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஹெர்மன் ஹெஸ்ஸேயின் நாவலை ஜெர்மனியிலிருந்து 'சித்தார்த்தன்’ என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் திருலோக சீதாராம். ’மனுதர்ம சாஸ்திரம்’ நூலையும் தமிழில் தந்துள்ளார். ருத்ர துளசிதாஸுடன் இணைந்து தெலுங்கு ஓரங்க நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

'கவிஞன் அச்சகம்’ என்ற ஓர் அச்சகத்தை நிறுவி அதன் மூலம் நல்ல பல நூல்களை வெளியிட்டார் திருலோக சீதாராம். ஆர்வமும் திறமையும் உள்ள இளையோரை ஊக்குவித்தார். கவிஞர் வாலியை கவிஞர் ச.து. சுப்ரமண்ய யோகியாரிடமும், கி.வா. ஜகந்நாதன் அவர்களிடமும் அறிமுகப்படுத்தியவர் திருலோகசீதாராம் தான். கிராமத்து இளைஞராக இருந்த சுரதாவின் கவித் திறமையை அடையாளம் கண்டு கொண்டு அவருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், வானொலியில் கவிதை படிக்கவும் வாய்ப்பை உருவாக்கித் தந்தார். பத்திரிகை, அச்சகப் பணிக்காவும், தேசிய இயக்க நற்பணிகளுக்காகவும் தம் சொத்துக்களை இழந்தார் என்றாலும் அது குறித்துக் கவலை கொள்ளாமல் தம் இலக்கியப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார் திருலோக சீதாராம்.

சமூக, அரசியல் பணிகள்

தேசிய இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார் திருலோக சீதாராம். காமராஜர், அண்ணா, பாரதிதாசன், ஜி. டி. நாயுடு, அ.வெ. ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார், சேக்கிழார் அடிப்பொடி டி. என். ராமச்சந்திரன், எஸ்.எஸ். வாசன், கொத்தமங்கலம் சுப்பு உள்ளிட்ட பலருக்கு நண்பராக இருந்தார். 1952-ல் நடந்த தேர்தலில் ஶ்ரீரங்கத்திலும் துறையூரிலும் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியிருக்கிறார்.

பாரதி குடும்பத்தினர் மீது மிகுந்த அன்பு பூண்டிருந்தார் திருலோக சீதாராம். இறுதிக் காலத்தில் கடையத்தில் வசித்து வந்த செல்லம்மா பாரதியை திருச்சிக்கு வரவழைத்து தாமே பராமரித்தார். பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதி திருலோக சீதாராமின் மடியிலேயே தலை வைத்து உயிர் நீத்தார். பாரதியின் பாடல்கள் அரசுடைமை ஆனதில் திருலோக சீதாராமிற்கும் மிக முக்கியப் பங்குண்டு.

பாரதிதாசனுக்குப் பொற்கிழி அளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டவர் திருலோக சீதாராம். பல சமூக நற்பணிகளைச் செய்தவர். பிறருக்கு உதவி செய்வதையே நோக்கமாகக் கொண்டு எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த திருலோக சீதாராமை "திருலோக சஞ்சாரி" என்று பாராட்டினார் கவியோகி சுத்தானந்த பாரதியார்.

மறைவு

திருலோக சீதாராம், ஆகஸ்ட் 23, 1973 அன்று காலமானார்.

திருலோக சீதாராம் : ஆவணப்படம் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்

ஆவணம்

  • எழுத்தாளர், கவிஞர் ரவிசுப்பிரமணியன், திருலோக சீதாராம் பற்றி, "திருலோகம் என்றொரு கவி ஆளுமை" என்னும் தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார். யூ ட்யூப் தளத்தில் அது காணக்கிடைக்கிறது.
  • திருலோக சீதாராமின் வாழ்க்கை மற்றும் இலக்கிய, இதழியல் செயல்பாடுகள் பற்றி, 'சாகித்ய அகாதமி’யின் 'இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல் வரிசைக்காக, இராஜாமணி, 'திருலோக சீதாராம்’ என்ற நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

இலக்கிய இடம்

சிறந்த கவிஞராக, இதழாளராக, கவிஞர்களை, எழுத்தாளர்களை ஊக்குவிப்பவராகச் செயல்பட்டவர், திருலோக சீதாராம். "திருலோக சீதாராம் என்பவர் சதா இங்கே திரிந்துகொண்டிருக்கும் சித்த புருஷர்களில் ஒருவர். அவர் நமக்குத் தோற்றம் காட்டியதும் நம்மிடம் துலங்கியதும் ஒரு அருள்" என்று ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளார். "திருலோக சீதாராமை பாரதியின் ஆவேசம் கொண்ட ஜீவன் முக்தர் என்று சொன்னால் அது மிகையாகாது" என்கிறார், எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு.

"தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வீட்டிலே தெலுங்கு பேசுகிற பலர் பெரும் பங்காற்றியுள்ளனர். ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் என்ற இரண்டு பெயர்கள் சிறப்பாகச் சொல்லப்பட வேண்டியவை. இந்த வரிசையில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர் திருலோக சீதாராம்" என்கிறார், க.நா. சுப்ரமண்யம்

திருலோக சீதாராம் புத்தகங்கள்

நூல்கள்

  • சித்தார்த்தன் (ஹெர்மன் ஹெஸ்ஸேயின் 'சித்தார்த்தா’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு)
  • இலக்கியப்படகு (கட்டுரைத் தொகுப்பு)
  • உதயம் (கவிதைத் தொகுப்பு)
  • கந்தருவ கானம் ((கவிதைத் தொகுப்பு)
  • புதுத்தமிழ் கவிமலர்கள் (பிற கவிஞர்கள் எழுதிய சிறந்த கவிதைகளின் தொகுப்பு)
  • புதுயுகக் கவிஞர் (பாரதி பற்றிய நூல்)
  • தெலுங்கு ஓரங்க நாடகங்கள் (தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு, ருத்ர துளசிதாஸுடன் இணைந்து)
  • மனுதர்ம சாஸ்திரம் (மொழிபெயர்ப்பு)
  • உழைப்பின் உயர்வு (ஜி.டி.நாயுடு பற்றிய நூல்)
  • அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு (ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாறு)
திருலோக சீதாராம் பற்றிய பிறரது நூல்கள்
  • THE POETICAL WORKS OF TIRULOKA SITARAM WITH TRANSLATION AND NOTES - சேக்கிழார் அடிப்பொடி டி.என். ராமச்சந்திரன்
  • திருலோக சீதாராம், ராஜாமாணி, சாகித்ய அகாதமி வெளியீடு

உசாத்துணை


✅Finalised Page