under review

தி.வை. சதாசிவ பண்டாரத்தார்

From Tamil Wiki
Revision as of 09:14, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
பண்டாரத்தார் பிறந்த வீடு, திருப்பறம்பியம்
பண்டாரத்தார் கௌரவிக்கப்படுகிறார். உடன் கார்மேகக்கோனார்

தி.வை. சதாசிவ பண்டாரத்தார் (திருப்புறம்பயம் வைத்தியலிங்கப் பண்டாரத்தார் மகன் சதாசிவப் பண்டாரத்தார்) (ஆகஸ்ட் 15, 1892 – பிப்ரவரி 2, 1960) தமிழறிஞர், தமிழக வரலாற்றாய்வாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், ஆராய்ச்சி அறிஞர். சோழர்களின் முழுமையான வரலாற்றை முதன் முதலில் எழுதியவர். சோழர், பாண்டிய வரலாற்று நூல்கள் வரலாற்றாய்வாளர்களுக்கு இன்றியமையாததாக உள்ளது. தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது.

பிறப்பு, கல்வி

சதாசிவப் பண்டாரத்தார் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் ஆகஸ்ட் 15, 1892-ல் மகனாகப் பிறந்தார். (பண்டாரத்தார் என்பது வன்னியர் குலத்தின் குடிப்பட்டப்பெயர்களில் ஒன்று. சோழர்காலத்தில் அளிக்கப்படுவது. பண்டாரம் என்பது கருவூலம் என்று பொருள் வரும் சொல்) அந்தக் கால வழக்கப்படி பண்டாரத்தார் தொடக்கக்க்கல்வியை உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், நான்காம் படிவம் வரை ஆரம்பப் பள்ளியை புளியஞ்சேரிப் பள்ளியிலும், உயர்நிலைப்பள்ளிப் படிப்பைக் கும்பகோணத்திலும் (1910) படித்தார்.

தனிவாழ்க்கை

1914-ல் பண்டாரத்தார் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள குறுக்கை என்ற ஊரைச் சேர்ந்த ஆத்மலிங்கராயரின் மகள் தையல்முத்து அம்மையாரை மணந்தார். பண்டாரத்தார் குடந்தையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்பொழுது 1921-ல் அவரது மனைவி காலமானார். 1922-ல் எலத்தூரில் வாழ்ந்த சைவப்பெரியார் சதாசிவக் குருக்கள் என்பவரது மகளார் சின்னம்மாள் என்பவரை இரண்டாம் திருமணம செய்து கொண்டார்.

சதாசிவப் பண்டாரத்தார் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் முதன் முதலாகத் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக ஒன்றரை ஆண்டுகாலம் பணியாற்றினார். கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியிலும் சிறிதுகாலம் பணியாற்றினார். பின்னர் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் (1917 - 1942) தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் ,வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோர் அவருடன் சேர்ந்து பணியாற்றியவர்கள்.

1942-1953, 1953-1960 காலகட்டங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். சைவசமயப் பற்றாளராகத் திகழ்ந்தார்.

ஆய்வுப்பணி

சதாசிவப் பண்டாரத்தார் ஆசிரியப்பணியில் இருந்த பொது செந்தமிழ் என்ற மாத இதழில் இவரது கட்டுரைகள் வெளியாகின. 1930-ம் ஆண்டு 'முதலாம் குலோத்துங்க சோழன்' என்ற முதல் நூல் வெளியானது. பல இடங்களுக்கும் சென்று சோழர் வரலாற்றை ஆய்வு செய்து 'பிற்கால சோழர் சரித்திரம்' என்னும் பெரு நூலை எழுதினார். இது மூன்று தொகுதிகளாக 1949, 1951 மற்றும் 1961-ம் ஆண்டுகளில் வெளியானது. இரு தமிழ் இலக்கிய வரலாறு நூல்களும், பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். 1914-ம் ஆண்டில் செந்தமிழ் இதழில் சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய 'சோழன் கரிகாலன்’ என்பது அவரது முதல் கட்டுரை.

பண்டாரத்தார் தமிழ் வளரச்சிக்கழகம் வெளியிட்ட தமிழ்க் கலைக்களஞ்சியப் பதிப்பாசிரியர் குழுவிலும், தமிழ்ப்பொழில் இதழாசிரியர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பணியாற்றினார்.

இலக்கிய நண்பர்கள்
நூல்கள்

பண்டாரத்தார் தமது ஆசிரியர் வலம்புரி பாலசுப்பிரமணியபிள்ளையுடன் சேர்ந்து எழுதிய 'சைவசமய சிகமாணிகள் இருவர்’ என்னும் நூலும், கும்பகோணத்தில் இருந்தபோது எழுதிய கருணாகரத் தொண்டைமான் பற்றி எழுதிய நூலும் வெளிவரவில்லை.

இவர் எழுதிய 'முதல் குலோத்துங்க சோழன்' என்ற நூல் 1930-ம் ஆண்டு வெளிவந்தது. இந்நூலை கல்வெட்டாய்வாளர் வ.ரங்காச்சாரியார், உ.வே.சாமிநாதையர், திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் முதலிய அறிஞர்களாலும், செந்தமிழ், நவசக்தி முதலான இதழ்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. 1940-ம் ஆண்டில் 'பாண்டியர் வரலாறு' என்ற நூலை எழுதி வெளியிட்டார். இவ்விரு நூல்களும் தமிழ்ப் பொழில் இதழில் வெளிவந்து பின்னர் நூல் வடிவம் பெற்றன.

பண்டாரத்தார் 'திருப்புறம்பயத் தலவரலாறு', 'செம்பியன் மாதேவித் தலவரலாறு', 'காவிரிப்பூம்பட்டினம்', 'திருக்கோவலூர் புராணம்', 'தொல்காப்பியப் பாயிரவுரை' ஆகிய நூல்களையும் எழுதினார்

சோழர் சரித்திரம்

1942-ல் பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள கல்வெட்டாய்வு நூல்களைப் பயன்படுத்தி அவர் எழுதிய 'பிற்காலச் சோழர் சரித்திரம்' முதல் பாகம் 1949-ம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 1951-ம் ஆண்டிலும் பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன.

இதனைத் தொடர்ந்து சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகத்தையும், தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி. 250 - 600), தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15-ம் நூற்றாண்டுகள்) ஆகிய நூல்கள் 1955-ம் ஆண்டு பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன. 1955-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தபொழுது சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகம் அவரால் எழுதப்பெற்று 1961-ம் ஆண்டில் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்தது.

இதழியல்

கும்பகோணத்தில் பண்டாரத்தார் பணியாற்றிக் கொண்டிருந்தபோது 1933 முதல் 1938 வரை ’யதார்த்த வசனி’ என்ற இதழின் துணை ஆசிரியராக இருந்தார்.

எழுதிய இதழ்கள்

கல்வெட்டாராய்ச்சியாளர்

பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் கல்வெட்டுக்களின் வரலாறு பற்றியும், அவற்றை ஆராய்வதன் பயன்களைப் பற்றியும் வகுப்புகளில் அடிக்கடி கூறி வந்ததைக் கேட்டு பண்டாரத்தார் கல்வெட்டாராய்ச்சியில் ஈடுபாடு கொண்டார். கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் இணைத்து ஆய்வு செய்து இலக்கிய வரலாறு, நாட்டு வரலாறு, சமுதாய வரலாறு ஆகியவற்றை எழுதினார். ஆய்வுலகில் பலராலும் ஏற்கத்தக்க வகையில் தமக்கென்று ஓர் ஆராய்ச்சி நெறிமுறையை வகுத்துக்கொண்டு நடுநிலையுடன் செயல்பட்டார்.

சொற்பொழிவாளர்

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில், கல்லாடமும் அதன் காலமும்’’ என்ற தலைப்பில் பண்டாரத்தார் உரையாற்றினார். தமிழோடு தொடர்புடைய பல மாநாடுகளிலும் அறிஞர் பண்டாரத்தார் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தமிழகப் புலவர் குழு முதன் முதலாகத் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் கூடியபொழுது அதன் முதல் கூட்டத்திற்கு இவர் தலைமை தாங்கி நடத்தினார்.

தஞ்சாவூரில் ஜே.எம்.சோமசுந்தரம்பிள்ளை இராசராசன் விழாவை முதன் முதலாக ஆரம்பித்தபொழுது பண்டாரத்தார் அக்கூட்டத்தில் முதற் சொற்பொழிவினை நிகழ்த்தினார்.

அரசியல்

பண்டாரத்தார் நீதிக்கட்சியின் கருத்துக்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அக்கட்சி நடத்திய ஒவ்வொரு மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

விருதுகள்

  • மார்ச் 29, 1956-ல் பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார் தலைமையில் கூடிய மதுரைத் திருவள்ளுவர் கழகம் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
  • ஏப்ரல் 7, 1956-ல் சென்னை எழுத்தாளர் சங்கம் தனது நான்காம் ஆண்டுவிழாவில் கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்களைக் கொண்டு பண்டாரத்தாருக்குக் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது
நாட்டுடைமை

சதாசிவ பண்டாரத்தாரின் படைப்புகள் 2007-ல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இறுதிக்காலம்

ஜுலை 1959-ல் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் நோய்வாய்ப்பட்டார். தமது உடல் நோயுற்ற காலத்திலலும் கல்வெட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடும் நினைவாற்றலும் கொண்டவராக காணப்பட்டார். தமது இறுதிக் காலத்திலும் தொடர்ந்து ஆய்வுப் பணி செய்துவந்தார்.

ஜனவரி 2, 1960 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக பண்டாரத்தார் சிதம்பரம் அண்ணாமலை நகரில் காலமானார்.

ஆய்வு இடம்

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் தமிழ் வரலாற்றெழுத்தில் முதன்மையிடம் பெறும் சிலரில் ஒருவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நவீன வரலாற்றெழுத்தின் முறைமைசார்ந்து தமிழக வரலாறு எழுதப்பட்டபோது அதன் தொடக்க சித்திரங்கள் ஆங்கிலேய நிர்வாகக்குறிப்புகளை எழுதிய ஜே.எச்.நெல்சன் போன்றவர்களால் உருவாக்கப்பட்டன. அதன் அடுத்த கட்டம் கல்வெட்டுகள் போன்ற தொல்லியல் தடையங்களின்அடிப்படையில் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி டி.ஏ.கோபிநாத ராவ் போன்றவர்களால் உருவாக்கப்பட்டது. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி போன்றவர்கள் தமிழ்ப்புலமை கொண்டவர்கள் அல்ல, கல்வெட்டுகள் மற்றும் நூலாதாரங்களுக்கு எஸ். வையாபுரிப் பிள்ளை போன்ற தமிழறிஞர்களையே நம்பியிருந்தார்கள். சதாசிவப் பண்டாரத்தாரை ஆழ்ந்த தமிழ்ப்புலமையும் நவீன வரலாற்றாய்வு முறைமையும் ஒருசேரக் கொண்ட முதல் தமிழ் வரலாற்றாய்வாளர் என்று வரையறுக்கலாம். அவ்வகையில் அவரே முதன்மையானவர், முன்னோடி.

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் அன்று உருவாகி வந்த தமிழியக்கத்தின் ஒரு பகுதியாகச் செயல்பட்டார். தமிழியக்கத்தின் இதழ்களான செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, தமிழ்ப்பொழில் ஆகியவற்றிலேயே அவர் எழுதினார். தமிழ்ப்பண்பாட்டின் தனித்தன்மை, தமிழ் மொழியின் தனிச்சிறப்பு ஆகியவற்றை முன்வைக்கும் நோக்கம் கொண்டது தமிழியக்கம். அன்று இந்தியாவில் தேசிய வரலாற்றியக்கம் வலுவாக இருந்தது. ஒட்டுமொத்த இந்திய வரலாற்றை ஒற்றைப்பரப்பாக கருத்தில்கொண்டு தமிழ்ப்பண்பாடு முதலிய வட்டாரப் பண்பாடுகளை இந்தியவரலாற்றின் பகுதியாக மட்டும் பார்க்கும் பார்வை கொண்டது அது. அந்த தேசிய வரலாற்று இயக்கத்திற்கு மாற்றாக உருவாகி வந்தது தமிழியக்கம். அது தமிழ் வரலாற்றை தனித்தன்மை கொண்ட ஒரு வரலாற்றுப்பரப்பாக அணுகுவது. அதற்கு பிற இந்திய வரலாற்றுடன் உள்ள உறவை அவ்வகையில் கருத்தில்கொள்வது. இந்தியாவெங்கும் அவ்வாறு வட்டார வரலாறுகளை தனித்து எழுதும்போக்கு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலுப்பெற்றது. அவ்வகையில் தமிழ்வரலாற்றை தனித்த பண்பாட்டு- வரலாற்றுப் பரப்பாக கருதி விரித்தெழுதும் வரலாற்றெழுத்து முறையின் முன்னோடி சதாசிவப் பண்டாரத்தார் என மதிப்பிடலாம்

சதாசிவப் பண்டாரத்தார் வரலாற்றாய்வில் முறையான கல்லூரிக்கல்வி பெற்றவர் அல்ல. ஆனால் தி. தேசிகாச்சாரியார் முதலியோரின் நாணய ஆராய்ச்சிகள், அக்காலத்தைய கல்வெட்டாராய்ச்சிகள் ஆகியவற்றை முழுமையாக ஆராய்ந்து, முறைமைப்படி தொகுத்து நோக்கி தன் வரலாற்றாய்வை நிகழ்த்தினார். பிற்காலச்சோழர்களின் வரலாறு முழுமையாக எழுதப்படுவது சதாசிவப் பண்டாரத்தாரின் நூல்கள் வழியாகவே. அதன்பின்னரெ பர்ட்டன் ஸ்டெயின் , நொபுரு கரஷிமா போன்ற அடுத்த கட்ட ஆய்வாளர்கள் சோழர் வரலாற்றின் சமூகவியல், பொருளியல் கூறுகலை ஆராய்ந்து விரிவாக்கி எழுதினர். அதன் பின்னர் குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற அறிஞர்கள் சோழர்காலகட்டத்தின் கலை- பண்பாட்டு கூறுகளை ஆய்வுகள் வழியாக விரிவாக்கி எழுதினர்.

நூல்கள்

  • பிற்கால சோழர் சரித்திரம் முதல் பாகம், 1949
  • பிற்கால சோழர் சரித்திரம் இரண்டாம் பாகம், 1951
  • பிற்கால சோழர் சரித்திரம் மூன்றாம் பாகம், 1961
  • சைவசமய சிகமாணிகள் இருவர்
  • முதல்குலோத்துங்க சோழன், 1930
  • பாண்டியர் வரலாறு, 1940
  • திருப்புறம்பயத் தலவரலாறு
  • செம்பியன் மாதேவித் தலவரலாறு
  • காவிரிப்பூம்பட்டினம்
  • திருக்கோவலூர் புராணம்
  • தொல்காப்பியப் பாயிரவுரை
  • திருச்செங்கோட்டு திருப்பணிமாலை
  • திருச்செங்கோட்டுச் சதகம்
  • அர்த்தநாரீச்சுர சதகம்

உசாத்துணை


✅Finalised Page