under review

சாவி (எழுத்தாளர்)

From Tamil Wiki
சாவி (படம்-நன்றி: ஆனந்த விகடன்)
எழுத்தாளர் சாவி

சாவி (சா. விஸ்வநாதன்) (ஆகஸ்ட் 10, 1916-பிப்ரவரி 9, 2001) ஒரு தமிழக எழுத்தாளர். இதழாளர், பத்திரிகை ஆசிரியர். இதழ் வடிவமைப்பிலும், வெளியீட்டிலும் பல புதுமைகளைக் கையாண்டார். புதிய பல இதழ்களைத் தொடங்கி நடத்தினார். பல எழுத்தாளர்களை, இதழுலகிற்கு அறிமுகம் செய்து ஊக்குவித்தார். பத்திரிகையாளர்களை உருவாக்கினார். தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

சாவி, வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் உள்ள மாம்பாக்கத்தில், ஆகஸ்ட் 10, 1916 அன்று, சாமா சுப்பிரமணிய ஐயர்-மங்களம் அம்மாள் இணையருக்குப் பிறந்தார். சென்னை வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை உயர்நிலைப் பள்ளியில் நான்காவது ஃபாரம் வரை (அந்தக் காலத்து எட்டாம் வகுப்பு) படித்தார்.

தனி வாழ்க்கை

சாவி, சிறிது காலம் விளம்பரப் பலகைகளை வடிவமைத்து, அதற்கு வாசகங்களை எழுதினார். திரைப்படங்களுக்கு விளம்பரத் தட்டிகள் வைப்பது, போஸ்டர் விளம்பரங்களை ஒட்டுவது போன்ற பணிகளில் ஈடுபட்டார். பின் இதழியல் துறையில் இயங்கினார். மனைவி ஜானகி. மகன்கள்: பாலசந்திரன், மணி. மகள்கள்: ஜெயந்தி, ஜெயா, உமா, மாலதி.

சாவியின் ‘வெள்ளிமணி’

இதழியல் வாழ்க்கை

சாவிக்குச் சிறு வயது முதலே எழுத்தார்வம் இருந்தது. சுதேசமித்திரன், ஆனந்த விகடன் போன்ற இதழ்களை வாசித்துத் தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார்.

சாவி, சென்னையிலிருந்து வெளிவந்த ‘விசித்திரன்’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். மாம்பாக்கம் சாமா சாஸ்திரிகள் விஸ்வநாதன் என்பதன் சுருக்கமாக ‘மா.சா.வி’ என்ற பெயரில் எழுதினார். பின்னர் ‘சாவி’ என்ற பெயரில் எழுதினார். தொடர்ந்து ‘சந்திரோதயம்’ இதழில் பணியாற்றினார். தி.ஜ.ரங்கநாதனின் பரிந்துரையில் ‘ஹநுமான்’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஆனந்த விகடன்

தி.ஜ.ரங்கநாதனின் ஆலோசனையின் படி ‘கத்திரி விகடன்’ என்ற பெயரில் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க இருப்பதாக இதழ்களில் விளம்பரம் செய்தார். அதனைக் கண்ட கல்கி, சாவியை அழைத்து ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராக நியமனம் செய்தார். இரண்டு ஆண்டுகள் விகடனில் வேலை பார்த்தார் சாவி. பின்னர் சி.பா. ஆதித்தனார் நடத்திய ‘தமிழன்’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ‘தினத்தந்தி’ இதழுக்காகப் பல கட்டுரைகளை மொழிபெயர்த்தார்.

கல்கி

கல்கி விகடனிலிருந்து வெளியேறி ‘கல்கி’ இதழைத் தொடங்கி நடத்தினார். கல்கி இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார் சாவி. சில ஆண்டுகாலம் அங்கு பணியாற்றிய பின் கல்கியிலிருந்து விலகினார்.

தினமணி கதிர்
வெள்ளிமணி

இதழியல் துறையில் நீண்ட அனுபவம் பெற்றிருந்த சாவி, சின்ன அண்ணாமலை உதவியுடன் ‘வெள்ளிமணி’ என்ற இதழைத் தொடங்கினார். அவ்விதழில் கல்கி, ‘என் பூர்வாசிரமம்’ என்ற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதினார். சின்ன அண்ணாமலை, நவீனன், குகப்ரியை, வேங்கடலட்சுமி உள்ளிட்ட பலர் அவ்விதழில் எழுதினர். ‘சந்தனு’வின் அரசியல் கருத்துப் படங்களுடன் வெள்ளிமணி வெளிவந்தது. முதன்முதலில் சிறுகதைகளுக்கு வண்ணத்தில் படம் வெளியிட்டது வெள்ளிமணி. பொருளாதாரக் காரணங்களால் வெள்ளிமணி நின்றுபோனது.

மீண்டும் கல்கி, விகடன்

பின் மீண்டும் கல்கியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார் சாவி. ‘மாறுவேஷத்தில் மந்திரி’, ‘சூயஸ் கால்வாயின் கதை’ போன்ற பல தொடர்களை எழுதினார். பின் கல்கியிலிருந்து வெளியேறி மீண்டும் விகடனில் உதவி ஆசிரியரானார். சாவியின் முயற்சியால் ஜெயகாந்தன் உள்ளிட்ட பல பிரபல எழுத்தாளர்களின் ‘முத்திரைக் கதைகள்’ விகடனில் தொடர்ந்து வெளியாகின. பத்தாண்டு காலம் ஆனந்த விகடனில் பணியாற்றினார் சாவி.

தினமணி கதிர்

விகடனுக்குப் பின் தினமணிகதிர் ஆசிரியரானார் சாவி. இதழில் பல புதுமைகளைக் கையாண்டார். சுஜாதா, கண்ணதாசன், மு.கருணாநிதி உள்ளிட்டோரை கதிரில் எழுத வைத்தார். இதழின் விற்பனையை ஒரு லட்சம் அளவிற்கு உயர்த்தினார். எம்.ஜி.ஆரின் படத்தை தினமணி கதிர் அட்டையில் வெளியிட சாவி மறுத்ததால், சாவி அமெரிக்கா சென்றிருந்த சமயத்தில் கதிரிலிருந்து நீக்கப்பட்டார்.

குங்குமம் முதல் இதழ் (படம் நன்றி: நவீன்குமார், சிற்றிதழ் சேகரிப்பாளர்)
குங்குமம்

சாவி மீது கொண்ட நட்பின் காரணமாக, ‘குங்குமம்’ இதழை ஆரம்பித்து சாவியை அதன் ஆசிரியராக்கினார் மு. கருணாநிதி. கருணாநிதியின் குறளோவியம், அகிலன், பி.வி.ஆர், சுஜாதா, ராஜேந்திரகுமார், பி.எஸ். ரங்கநாதன் (அகஸ்தியன்), சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களின் சி்றுகதைகள், சாவியின் பதில்கள், திரைப்பட, அரசியல், பேட்டிக் கட்டுரைகள், கலை விமர்சனங்கள், துணுக்குச் செய்திகள் எனப் பல்சுவை இதழாக வெளிவந்தது குங்குமம்.

ஓராண்டு அங்கு பணி செய்த சாவி, பின் சொந்த இதழை ஆரம்பிக்க எண்ணி குங்குமத்திலிருந்து விலகினார்.

மோனா

நாவல்களுக்கென்றே தனியாக சாவி ஆரம்பித்த முதல் இதழ் மோனா. மோனாவின் முதல் நாவலை லக்ஷ்மி எழுதினார். தொடர்ந்து சுஜாதா, ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், கோவி. மணிசேகரன் உள்ளிட்ட பலரது நாவல்கள் மோனாவில் வெளியாகின.

சாவி, சுஜாதா, சுப்ரமண்ய ராஜூ, மாலன், பாலகுமாரன், ஜெயராஜ், ராணிமைந்தன், பிரியா ராஜ், ரவிச்சந்திரன், பாலசந்திரன் மற்றும் பல எழுத்தாளர்கள் (படம் நன்றி: கே.ஜே. அசோக்குமார்)
சாவி இதழ் - மணியன் செல்வன் முகப்போவியத்துடன் (படம் நன்றி: கார்டூனிஸ்ட் மதி)
சாவி இதழ்

சாவி, தன் பெயரிலேயே சாவி இதழைத் தொடங்கினார். சாவியின் முதல் இதழ் மே 6, 1979-ல் வெளியானது. இதழின் விலை 75 பைசா. முதல் இதழ் மூன்று லட்சம் பிரதிகள் விற்றது. தொடக்கத்தில் அமைந்தகரை அருண் ஹோட்டல் கட்டிடத்தின் கீழ்த் தளத்தில் சாவி அலுவலகம் இயங்கியது. பின்னர் இதழின் விற்பனையில் ஏற்பட்ட சரிவாலும், பொருளாதாரச் சீர்குலைவாலும் சாவி வீட்டின் கார்ஷெட்டில் அலுவலகம் இயங்கியது. சி.ஆர். கண்ணன் (அபர்ணா நாயுடு), ரவிபிரகாஷ், கே. வைத்தியநாதன் (தற்போதைய தினமணி இதழ் ஆசிரியர்) உள்ளிட்டோர் ஆசிரியர் குழுவில் பணியாற்றினர். ராணிமைந்தன் சிறப்புச் செய்தியாளராகச் செயல்பட்டார். ஓவியர் அரஸ், கார்டூனிஸ்ட் மதி எனப் பலர் ‘சாவி’ இதழில் பங்களித்தனர்.

சாவி இதழில் தான் சுஜாதாவின் ‘சலவைக் கணக்கை’ வெளியிட்டார் சாவி. ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, மாலன், பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, சிவசங்கரி, அனுராதா ரமணன், ஷ்யாமா எனப் பலரை சாவியில் எழுத ஊக்குவித்தார் சாவி. ஸ்ரீ வேணுகோபாலனை, ‘புஷ்பா தங்கதுரை’ ஆக்கியவர் சாவிதான். பல இளம் எழுத்தாளர்களது படைப்புகளைச் சாவி இதழில் வெளியிட்டார். இதழில் பல புதுமைகளைக் கையாண்டார். எழுத்தாளர்களின் படங்களை அட்டையின் முகப்பில் வெளியிட்டார்.

வெளிநாட்டுச் சுற்றுப் பயணக் கட்டுரைகள் பலவற்றை எழுதினார். 18 ஆண்டுகள் வெளிவந்த சாவி, பொருளாதாரப் பிரச்சனைகளால் நின்றுபோனது.

திசைகள்

இலக்கிய வளர்ச்சிக்காக ’திசைகள்’ என்ற இதழைத் தொடங்கிய சாவி, மாலனை அவ்விதழின் ஆசிரியராக்கினார். இளைஞர்களை முன்னிறுத்தி ’திசைகள்’ ஓர் இலக்கிய இயக்கமாகவே செயல்பட்டது. மாவட்டம் தோறும் நிருபர்கள் இயங்கினர். பல இளம் எழுத்தாளர்கள், அறிமுக எழுத்தாளர்கள் திசைகளில் எழுதினர். ஓவியர் ஜீவானந்தனின் முதல் ஓவியம் திசைகளில் வெளியானது. அமுதோன், பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, சுதாங்கன், கார்த்திகா ராஜ்குமார், நளினி சாஸ்திரி (ஆர். சேகர்), சாருப்ரபா சுந்தர், மஞ்சுளா ரமேஷ், பால கைலாசம், கல்யாண்குமார் போன்றோர் திசைகளில் எழுதினர். பட்டுக்கோட்டை பிரபாகர் முதன்முதலாக ஒரு துப்பறியும் நெடுங்கதை எழுதியது திசைகள் இதழில்தான்.

பூவாளி

ஆங்கில இதழான ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ போல் தமிழில் ஓர் இதழைத் தொடங்க விரும்பிய சாவி, அதற்காக ‘பூவாளி’ இதழைத் தொடங்கி நடத்தினார். உலகின் முக்கிய வார, மாத இதழ்களிலிருந்து சிறந்த கதை, கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகின. ராணிமைந்தன் பொறுப்பில் இவ்விதழ் வெளியானது. மொழிபெயர்ப்புக்காகவென்றே தனி ஆசிரியர் குழுவினர் செயல்பட்டனர். அதிகப் பக்கங்களோடு பத்து ரூபாய் விலையில் பூவாளி வெளியானது.

சுஜாதா

சுஜாதா என்ற சினிமா மாத இதழைத் தொடங்கினார் சாவி. பாரிவள்ளலை அதன் ஆசிரியராக நியமித்தார்.

விசிட்டர் லென்ஸ்

ஆனந்த் என்பவரை ஆசிரியராகக் கொண்டு சாவி தொடங்கிய இதழ் ‘விசிட்டர் லென்ஸ்’. தமிழின் முதல் துப்பறியும் புலனாய்வு இதழாக ‘விசிட்டர் லென்ஸ்’ கருதப்படுகிறது.

மேற்கண்ட இதழ்கள் பலவும் பொருளாதாரக் காரணங்களால் படிப்படியாக நின்று போயின.

சாவி, மனைவி ஜானகியுடன்

இலக்கியச் செயல்பாடுகள்

சாவி, ‘சத்திய சபா’ என்னும் ஓர் ஆன்மிக சபையை நிறுவினார். காமராஜர் அதன் தலைவராக இருந்தார். மைசூர் மகாராஜாவையும் காமராஜரையும் வரவழைத்து, கிருபானந்த வாரியாரின் ராமாயண உபன்யாசத்தை 40 நாட்கள் தொடர்ந்து நடத்தினார்.

சாவி, தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘ஞானபாரதி’ என்ற அமைப்பைத் தொடங்கினார். கலைத்துறையிலும் பத்திரிகைத் துறையிலும் சாதனை படைத்தவர்களுக்கு ‘ஞானபாரதி’ விருது, பொற்கிழி அளித்து ஊக்குவித்தார்.

படைப்புகள்

சாவி, காமராஜரின் வாழ்க்கையை ’சிவகாமியின் செல்வன்' என்ற தலைப்பில் எழுதினார். ‘விசிறி வாழை’, ’வடம்பிடிக்க வாங்க ஜப்பானுக்கு’, ‘இங்கே போயிருக்கிறீர்களா?’, ‘கேரக்டர்’ போன்ற சாவியின் நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. சாவிக்கு நிலைத்த புகழைத் தேடித் தந்த நாவல் வாஷிங்டனில் திருமணம்.

வாஷிங்டனில் திருமணம்
வாஷிங்டனில் திருமணம்

ஆனந்த விகடனில் வெளியான இத்தொடரில் பல புதுமைகளைக் கையாண்டார் சாவி. அத்தியாய எண்களுக்குப் பதிலாக, தலைப்பில் உள்ள வா, ஷி, ங், ட, னி, ல், .... என்ற எழுத்துக்களையே அத்தியாய எண்களாக்கி, 11 வாரம் இந்தத் தொடர்கதையை வெளியிட்டார். இறுதி அத்தியாயத்தில் தான் தொடரை எழுதியவரின் பெயர் வெளியானது. இந்தத் தொடரின் வெற்றிக்கு கோபுலுவின் ஓவியங்களும் ஒரு காரணமாகின.

தமிழ்நாட்டில் நடக்கும் பிராமணக் குடும்பத் திருமணம் அமெரிக்காவில் நடந்தால் எப்படி இருக்கும், என்னென்ன சம்பவங்கள் எல்லாம் நடக்கும் என்பதைக் கற்பனை கலந்து நகைச்சுவையாக எழுதினார் சாவி. மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றது இத்தொடர்.

அரசியல்

சாவி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு, 1942-ம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார். அதற்காக அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

சாவி, மகாத்மா காந்தி தொடங்கி ராஜாஜி, காமராஜ், பெரியார், எம்.ஜி.ஆர்., கலைஞர் மு. கருணாநிதி, ஜி.டி. நாயுடு, எஸ்.எஸ். வாசன், கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்றிருந்தார். மு. கருணாநிதிக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தார். ஆத்திகராக, காஞ்சி மடாதிபதி சந்திரசேகரரின் பக்தராக இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டார்.

கலைஞர் மு. கருணாநிதியுடன் (படம் நன்றி: திரு. ரவிபிரகாஷ்)
எம்.ஜி. ராமச்சந்திரனுடன் சாவி (படம் நன்றி: ரவிபிரகாஷ்)

கைது

மே 13, 1992 தேதியிட்ட சாவியின் முகப்பு அட்டையில் நகைச்சுவைத் துணுக்கு ஒன்று வெளியானது. பி. கிருஷ்ணராஜ் என்னும் வாசகர் எழுதியிருந்த துணுக்கை, சாவி, அட்டைப் படமாக வெளியிட்டிருந்தார். முதலிரவு அறையில், மணப்பெண் ஆடையில்லாமல் கையில் பால் சொம்புடன் நின்று கொண்டிருப்பது போல (முதுகின் பின்புறம் மட்டும் தெரியும்படி) அந்தப் படம் வரையப்பட்டிருந்தது. “அத்தைதான் உங்களுக்கு 'ஆடை'யில்லாம பால் தரச் சொன்னாங்க.” என்ற வரியும் அதில் இடம் பெற்றிருந்தது.

அது மிகுந்த ஆபாசமாக இருப்பதாக மாதர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. சாவியை எதிர்த்து பெண்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதற்காக சாவி, உதவி ஆசிரியர் ரவிபிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கருணாநிதியின் முயற்சியில் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மறைவு

ராணிமைந்தன் எழுதிய ‘சாவி-85’ நூல் வெளியீட்டு விழா நாரதகான சபா அரங்கில் நடைபெற்றபோது, சாவி, மேடையில் பேசிக்கொண்டிருந்த பொழுதே மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் பிப்ரவரி 9, 2001 அன்று காலமானார்.

சாவி - 85 (ராணிமைந்தன் எழுதிய நூல்)

ஆவணம்

தனது வாழ்க்கை அனுபவங்களையும் தனது நண்பர்கள், தனது முன்னோடிகள் பற்றியும் ‘என்னுரை’ என்ற நூலில் சாவி எழுதினார்.

சாவியின் வாழ்க்கை வரலாற்றை ராணிமைந்தன் ‘சாவி-85’ என்ற தலைப்பில் எழுதினார்.

சாவியின் நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

தமிழ் இணைய மின்னூலகத்தில் சாவியின் நூல்கள் சில சேகரிக்கப்பட்டுள்ளன.

இலக்கிய இடம்

சாவியின் எழுத்தின் முக்கிய பலம் நகைச்சுவை. நகைச்சுவை மூலம் சிந்திக்க வைக்கும் பல படைப்புகளைத் தந்துள்ளார். சாவியின் எழுத்துக்கள் பொதுவாசிப்புக்குரியவையாக இருந்தாலும், இலக்கியச் செறிவுடன் அமைந்திருந்தன. தனது கொள்கைகளை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் மிகப் பிடிவாதமாக இருந்து இதழியலில் தனது எண்ணங்களைச் செயல்படுத்தினார்.

சாவி, பத்திரிகையாளர்களாகவும் சிறப்பாகச் செயல்பட்டார். புதிய பல எழுத்த்காளர்களை, பத்திரிகையாளர்களை உருவாக்கினார். இளம் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்தார். எழுத்து, இதழ் என இரண்டிலுமே வெற்றிகரமாக இயங்கிய எஸ்.எஸ். வாசன், கல்கி, எஸ்.ஏ.பி., எஸ். பாலசுப்பிரமணியன் வரிசையில் சாவிக்கும் முக்கிய இடமுண்டு. கல்கி, துமிலன், தேவன், நாடோடி வரிசை நகைச்சுவை எழுத்தாளர்களில் சாவியும் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.

சாவியின் பழைய கணக்கு
நவகாளி யாத்திரை

நூல்கள்

  • மௌனப் பிள்ளையார்
  • ஆப்பிள் பசி
  • இங்கே போயிருக்கிறீர்களா?
  • ஊரார்
  • என்னுரை
  • கனவுப்பாலம்
  • கேரக்டர்
  • தந்தையும் மகளும்
  • சோம்பலோ சோம்பல்
  • வெடி நானூறு
  • சாவி-85
  • சிவகாமியின் செல்வன்
  • தாய்லாந்து
  • திருக்குறள் கதைகள்
  • தெப்போ 76
  • நவகாளி யாத்திரை
  • பழைய கணக்கு
  • வடம்பிடிக்க வாங்க ஜப்பானுக்கு
  • வத்ஸலையின் வாழ்க்கை
  • வழிப்போக்கன்
  • வாஷிங்டனில் திருமணம்
  • விசிறி வாழை
  • வேதவித்து
  • கோமகனின் காதல்
  • தாய்லாந்து
  • உலகம் சுற்றிய மூவர்
  • நான் கண்ட நாலு நாடுகள்
  • சாவியின் கட்டுரைகள்
  • சாவியின் நகைச்சுவைக் கதைகள்

உசாத்துணை


✅Finalised Page