under review

நளினி சாஸ்திரி

From Tamil Wiki
நளினி சாஸ்திரி (ஆர். சேகர்)
நளினி சாஸ்திரி (இள வயதுப் படம்)

நளினி சாஸ்திரி (ஆர். சேகர்; சேகர் ராமமூர்த்தி; ஜனவரி 19, 1957) ஒரு தமிழக எழுத்தாளர்; இதழாளர். பொறியியலாளர். நெய்வேலி அனல் மின் நிலையத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதினார்.

பிறப்பு கல்வி

'நளினி சாஸ்திரி' என்ற புனை பெயரில் எழுதிய ஆர். சேகர், ஜனவரி 19, 1957-ல், சேலத்தில், ராமமூர்த்தி-சாரதாம்பாள் இணையருக்குப் பிறந்தார். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறையில் (BE-ECE) பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

நளினி சாஸ்திரி, நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பொறியியல் துறையில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினார். மனைவி ரமா. மகள் மதுவர்ஷினி. மகன் வினு வர்ஷித்.

இலக்கிய வாழ்க்கை

நளினி சாஸ்திரி, சுஜாதாவின் எழுத்தால் ஈர்க்கப்பட்டார். முதல் சிறுகதை ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளியானது. ‘கல்கி’யில், ‘காதலியை வெறுக்கிறேன்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. கல்கி ஆசிரியர் கி. ராஜேந்திரன் ஆர். சேகரை சினிமா விமர்சனம் எழுதப் பணித்தார். அதற்காக ராஜேந்திரன் சூட்டிய புனை பெயர் நளினி சாஸ்திரி. தொடர்ந்து அப்பெயரில் சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நாவல்கள் எழுதினார். முதல் சிறுகதைத் தொகுப்பு ‘திருப்திதானே அப்பா'. பத்துக்கும் மேற்பட்ட நாவல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் நளினி சாஸ்திரி எழுதினார்.

விக்கிரமன் மற்றும் புஷ்பா தங்கதுரையுடன்

இதழியல் வாழ்க்கை

மாலன் ஆசிரியராக இருந்த ‘திசைகள்’ இதழில் நளினி சாஸ்திரி துணை ஆசிரியராகப் பணியாற்றினார். ‘மென்மையாகக் கொலை செய்யுங்கள்’ என்ற தொடரை எழுதினார். தொடர்ந்து ‘திசைகள்’ இதழில் பல்வேறு கதை, கட்டுரைகளை எழுதினார். ஆனந்தவிகடனில் ‘ப்ரௌன் வாஷ்’ என்ற தொடரை எழுதினார். கல்கி’யில் ‘விஞ்ஞானப் பக்கங்கள்’ என்ற தொடரை எழுதினார். சுஜாதாவால் ஊக்குவிக்கப்பட்டார். அமுதசுரபி, கலைமகள், குமுதம், தமிழரசி, இதயம் பேசுகிறது, சுஜாதா, தினமலர்-வாரமலர், திண்ணை இணைய இதழ் எனப் பல இதழ்களில் எழுதினார்.

இலக்கியப் பீடம் சிறுகதைப் போட்டிப் பரிசு

விருதுகள்

  • கல்கி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு
  • கல்கி வைர மோதிரச் சிறுகதைப் போட்டியில் சுஜாதா கையால் மோதிரப் பரிசு
  • வாசுகி வார இதழ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு
  • திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு
  • இலக்கிய பீடம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு
மாலனுடன்

இலக்கிய இடம்

நளினி சாஸ்திரி, நாவல்களை விட கதை, கட்டுரைகளை அதிகம் எழுதினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகள் அனைத்துமே மத்திய தர மக்களின் வாழ்க்கையைப் பேசுபவை. அறிவியலை மையமாக வைத்தும், குற்றச் சம்பவங்களை மையமாக வைத்தும் சில படைப்புகளை எழுதினார். 1980-களில் எழுத வந்து இதழாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் செயல்பட்ட சி. ஆர். கண்ணன், ரமணீயன், அபர்ணா நாயுடு, ரவிபிரகாஷ் என்ற வரிசையில் ஆர். சேகர் இடம் பெறுகிறார்.

நூல்கள்

சிறுகதைகள்
  • ப்ராஜக்ட் சொர்க்கம்
  • மாட்டுக்கார வேலனின் காதல் கதை
  • காதலியை வெறுக்கிறேன்
  • ஓர் ஓவியனின் டைரிக் குறிப்பு
  • தண்ணீர்ப் பந்தல்
சிறுகதைத் தொகுப்பு
  • திருப்திதானே அப்பா
நாவல்
  • ஆத்மாவுக்கு ஆபத்து

உசாத்துணை


✅Finalised Page