under review

துமிலன்

From Tamil Wiki
துமிலன்

துமிலன் (என். ராமசாமி; என். ராமசுவாமி; என். ராமஸ்வாமி) (பிறப்பு: 19?? – இறப்பு: 19??) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர். பத்திரிகை ஆசிரியர். தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவர். பொது வாசிப்புக்குரிய நூல்களையும் சிறார் நூல்களையும் எழுதினார்.

பிறப்பு, கல்வி

என். ராமஸ்வாமி என்னும் இயற்பெயர் கொண்ட துமிலன், 1900-த்தின் ஆரம்பத்தில், கும்பகோணத்தில் பிறந்தார். மாயவரம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். திருச்சியில் கல்லூரிக் கல்வி கற்றார்.

மனைவி, குழந்தையுடன் துமிலன்

தனி வாழ்க்கை

துமிலன், மாயவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். தலைமை அதிகாரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பணியிலிருந்து விலகினார். மணமானவர். மகள்: பத்மா. மருமகன்: மணக்கால் ரங்கராஜன்.

துமிலன் சிறுகதை
துமிலன் பதிப்பித்த நூல்

இலக்கிய வாழ்க்கை

துமிலன், பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போது பஞ்ச், ஸ்டிராண்ட் மேகஸின், டிட்பிட்ஸ், ஹ்யூமரிஸ்ட் போன்ற ஆங்கில இதழ்களை வாசித்து இலக்கிய ஆர்வம் பெற்றார். பி.ஜி. உட்ஹவுஸின் எழுத்தால் ஈர்க்கப்பட்டார். தாருல் இஸ்லாம் இதழில் ‘ஊர் வம்பு’ என்ற தொடரை எழுதினார். 1929-ம் ஆண்டில், ஆனந்த விகடனில், ‘பி.ஏ. தேவை’ எனும் துமிலனின் கட்டுரை வெளியானது. தொடர்ந்து விகடனில் பல கட்டுரை, சிறுகதை, அரசியல் நையாண்டிகளை எழுதினார்.

கல்கி, தினமணி கதிர் போன்ற இதழ்களில் நகைச்சுவை, அரசியல், சமூகம், குடும்பம் எனப் பல்வேறு வகைமைகளில் பல கட்டுரைகளை, சிறுகதைகளை, தொடர்களை எழுதினார். சிறார்களுக்காகவும் பல நூல்களை எழுதினார். 'என்.ஆர்., காசி', 'அனுசூயை' போன்ற புனை பெயர்களிலும் செயல்பட்டார்.

தினமணி கதிரில் துமிலன் எழுதிய ‘கிராம மோகினி’ தொடர் வாசகர்களால் வரவேற்கப்பட்டது. அத்தொடர் குறித்து ஜெயமோகன், “துமிலன் எழுதிய கிராமமோகினி என்னும் நாவல் நினைவில் வருகிறது. காந்தியின் கிராம நிர்மாண இயக்கத்தால் இலட்சியத்தூண்டுதல் அடைந்து கிராமத்துக்குச் சென்று விவசாயம் செய்ய முயன்ற ரஞ்சன் என்னும் இளைஞனின் கதையை நையாண்டியாகச் சொல்லும் நாவல் அது. இலட்சியவாதக் கிறுக்குடன் நிஜக்கிறுக்கும் சேர்ந்துகொள்கிறது. ஒரு முக்கியமான காலப்பதிவு அது[1] ” என்று குறிப்பிட்டுள்ளார்.

துமிலன் 10-க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், கட்டுரை நூல்கள் என 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

இதழியல்

துமிலன், 1928-ல், பா. தாவூத் ஷா நடத்திய தாருல் இஸ்லாம் வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். கல்கியின் பரிந்துரையின் பேரில் கல்கி ஆசிரியராகச் சேர்வதற்கு முன்பே ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பணிபுரிந்தார். கல்கி விகடனிலிருந்து விலகி ‘கல்கி’ இதழைத் தொடங்கியதும், துமிலனும் விகடனிலிருந்து விலகி கல்கியில் இணைந்து பணியாற்றினார். கல்கியில் பல நகைச்சுவைக் கட்டுரை, சிறுகதைகளையும், மொழிபெயர்ப்புச் சிறுகதைகளையும் எழுதினார்.

துமிலன், தினமணி கதிரில் ஆசிரியராகப் பணியாற்றினார். சரஸ்வதி ராம்நாத், எம்.எஸ். உதயமூர்த்தி, ஜோதிர்லதா கிரிஜா போன்றோரை எழுத ஊக்குவித்தார். ’சுதந்திரச் சங்கு’ என்ற பெயரில் மீண்டும் தொடங்கப்பட்ட காங்கிரஸ் சார்பு இதழில் சில மாதங்கள் ஆசிரியராகப் பணியாற்றினார். ‘மாலதி’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார்.

திரைப்படம்

துமிலன் எழுதிய ’புனர்ஜென்மம்’ என்னும் கதை, ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ என்ற தலைப்பில், 1954-ல், திரைப்படமாக வெளிவந்தது.

மறைவு

துமிலன் மறைவு பற்றிய விவரங்களை அறிய இயலவில்லை.

மதிப்பீடு

துமிலன் ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர்களால் கவரப்பட்டு அந்தப் பாணியில் தமிழில் எழுதினார். ஆங்கில நகைச்சுவைப் படைப்புகளைப் பின்பற்றி தமிழ் நகைச்சுவை எழுத்தில் பல புதுமைகளைக் கையாண்டார். துமிலனின் படைப்பாற்றல் பற்றி கல்கி, “துமிலன் -- நாம் எல்லோரும் அற்பம் என்று தள்ளிவிடும் சின்னஞ் சிறு விஷயங்களிலிருந்து அவர் இவ்வளவு நகைச்சுவையை எப்படித் தேடிப் பிடித்துக் கொண்டு வருகிறார் என்பது மிக ஆச்சரியமாகும். சின்னஞ் சிறு விஷயங்களில் உள்ள விசேஷ அம்சங்களைப் பிழிந்தெடுத்து நாம் சற்றும் எதிர்பாராத முறையில் எடுத்துக் கூறி நம்மைத் திடுக்கிடச் செய்வதுதான் அவர் கையாளும் வித்தை.” என்று குறிப்பிட்டார்.

துமிலன் கல்கி, எஸ்.வி.வி. வரிசையில், தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.

துமிலன் நூல்கள்

நூல்கள்

 • விஞ்ஞான உலகம்
 • கதாமணி
 • யுத்தக்கலை
 • கல்யாண மண்டபம்
 • குடும்பக் களஞ்சியம்
 • சம்ஸார சாகரம்
 • சி.ஐ.டி. சிறுவர்கள்
 • சிறுவர் நகைச்சுவைக் கதைகள்
 • சிறுவர்களுக்கு நேருஜி
 • செவ்வாய்க் கிரகம் சலோ
 • அறிவூட்டும் புதிர்க் கதைகள்
 • விந்தையான புத்தகங்கள்
 • டாக்டரின் கணவன்
 • துப்பறியும் சந்தர்
 • அறிவியல் கதைகள்
 • பையன் யார்?
 • மிஸ்டர் சுப்பு
 • பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ்
 • பஞ்சுவின் பட்டினப்பிரவேசம்
 • பகவதி எம்.எல்.ஏ.
 • வனிதா பி.ஏ.
 • பம்பாய்க் குடித்தனம்
 • புனர் ஜன்மம்
 • தேவி
 • குதிரைகள் ௐடுகின்றன
 • உலக ஒளி விளக்குகள்
 • சின்னஞ்சிறு கிளியே
 • தர்மபத்தினி
 • மாப்பிள்ளை வந்தார்
 • சுகபவனம்
 • லேடி மானேஜிங் டைரக்டர்
 • ஸ்ரீமதி கண்டக்டர்
 • மூன்று சகோதரிகள்
 • அரிசி முனை
 • கிராம மோகினி
 • நாதசுரச் சக்கரவர்த்தி டி, என், ராஜரத்தினம் பிள்ளை

மற்றும் பல

உசாத்துணை

அடிக்குறிப்புகள்✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Mar-2024, 18:05:04 IST