under review

எம்.எஸ். உதயமூர்த்தி

From Tamil Wiki
எம்.எஸ். உதயமூர்த்தி ( படம் நன்றி: தென்றல் இதழ்)

எம். எஸ். உதயமூர்த்தி (மயிலாடுதுறை சிங்காரம் உதயமூர்த்தி) (ஏப்ரல் 8, 1928 - ஜனவரி 21,2013) தமிழ் எழுத்தாளர், தொழிலதிபர். தன்னம்பிக்கை நூல்கள் பலவற்றை எழுதினார். அமெரிக்காவில் பல தொழில்களைத் தொடங்கி நடத்தினார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தியா திரும்பி மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அமெரிக்க அரசின் சிறந்த ஆசிரியர் விருது, திருக்கோவிலூர் மடத்தின் கபிலர் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

எம்.எஸ். உதயமூர்த்தி, தஞ்சை மாவட்டத்தின் மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள விளநகர் என்ற கிராமத்தில், ஏப்ரல் 8, 1928-ல், சிங்காரம்-கமலம்மாள் இணையருக்குப் பிறந்தார். விளநகர், ஜில்லா போர்டு ஆரம்பப் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். நடுநிலைக் கல்வியை, செம்பொனார் கோவிலில், சுவாமிநாத ராவ் என்பவர் நடத்தி வந்த பள்ளியில் படித்தார். மயிலாடுதுறை முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வி கற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் படித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேதியியலில் (Organic Chemistry) இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்கள் பெற்றார்.

தனி வாழ்க்கை

எம்.எஸ்.உதயமூர்த்தி, சீர்காழியிலுள்ள சபாநாயக முதலியார் இந்து உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஆய்வக உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். சென்னை, கிண்டி பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

உதயமூர்த்தியின் மனைவி: சீதாலட்சுமி. மகன்கள்: சித்தார்த்தன், அசோகன். மகள்: கமலா.

இலக்கிய வாழ்க்கை

எம்.எஸ்.உதயமூர்த்தி குமுதம், கல்கி, ஆனந்த விகடன் இதழ்களை வாசித்துத் தன் இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போதே சில சிறுகதைகள் எழுதினார். கல்கி, குமுதம், ஆனந்த விகடன், பொன்னி, சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் எம்.எஸ்.உதயமூர்த்தியின் கதை, கட்டுரைகள் வெளியாகின.

எம்.எஸ்.உதயமூர்த்தி, ‘எண்ணங்கள்’ என்னும் தலைப்பில் மனித உளவியல் சார்ந்த சிந்தனைகளை ஆனந்தவிகடனில் சுமார் இருபத்தி ஆறு வாரங்கள் தொடராக எழுதினார். அது பின்னர் நூலாக வெளிவந்தது. 60-க்கும் மேல் பதிப்புகள் கண்ட அந்நூல், கல்லூரிகளில் பாட நூலாக வைக்கப்பட்டது. தொடர்ந்து ‘மனம் பிரார்த்தனை மந்திரம்’, ‘தலைவன் ஒரு சிந்தனை’, ‘உயர்மனிதனை உருவாக்கும் குணங்கள்’ போன்ற உளவியல் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த தொடர்களை எழுதினார். தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ என்னும் தலைப்பில் எழுதினார். எம்.எஸ்.உதயமூர்த்தி, 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

அமெரிக்க வாழ்க்கை

எம்.எஸ்.உதயமூர்த்தி, புல்பிரைட் திட்டத்தின் கீழ் (Fulbright program) அமெரிக்காவில் மேற்கல்வி கற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். ‘புல்பிரைட் அறிஞர்’ என்று போற்றப்பட்டார். பத்தாண்டுகள் விஸ்கான்சிலுள்ள மவுண்ட் செனாரியோ கல்லூரியிலும், மின்னசோட்டா, ஐடஹோ (Idaho) பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியராகப் பணியாற்றினார். சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் அமெரிக்கா வந்தபோது அவர்களுக்குச் சிறந்த வரவேற்பளித்துச் சிறப்பித்தார்.

தொழில் முனைவோர்

எம்.எஸ்.உதயமூர்த்தி, பேராசிரியர் பணியை விட்டு விலகி விஸ்கான்சினில் உள்ள உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் அதன் ஆலோசகராகவும், தலைமை நிர்வாகியாகவும் நான்காண்டுகள் பணியாற்றினார். பின்னர் தானே அந்த நிறுவனத்தை வாங்கிப் பொறுப்பேற்று நடத்தினார். தொடர்ந்து பல தொழில்களை மேற்கொண்டார். அமெரிக்காவின் சிறந்த தொழில் முனைவோருள் ஒருவராக மதிக்கப்பட்டார். 1982-ல் ‘பார்க்கிளே கெமிக்கல்ஸ்’ என்ற புதிய பெட்ரோலிய எண்ணெய் நிறுவனத்தைச் சொந்தமாகத் தொடங்கி நடத்தினார். 1987-ல், நிறுவனப் பொறுப்புகளை மகனிடம் ஒப்படைத்துவிட்டு, தமிழகம் திரும்பினார்.

அமைப்புப் பணிகள்

எம்.எஸ்.உதயமூர்த்தி, இளைஞர்களின் ஆற்றல்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். தமிழ்நாட்டில் பல்வேறு தொழில் வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப் பட வேண்டும் என்று எண்ணினார். அதற்காக வாஜ்பாய், சந்திரசேகர், அத்வானி உள்ளிட்டோரைச் சந்தித்து ஆதரவு கோரினார். கிராமப்புற முன்னேற்றமே அவரது முதல் லட்சியமாக இருந்தது. கிராம முன்னேற்றத்திற்காக காந்தி கிராமம் அமைப்பினருடன் இணைந்து பல சமூக நற்பணிகளை மேற்கொண்டார்.

மக்கள் சக்தி இயக்கம்: சின்னம்

மக்கள் சக்தி இயக்கம்

பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நல்லுறவும் நட்பும் கொண்டிருந்த எம்.எஸ்.உதயமூர்த்தி, எந்த ஒரு அரசியல் இயக்கத்தையும் சாராமல், தனித்ததொரு சமூக இயக்கத்தினை உருவாக்க விரும்பினார். கார்போரண்டம் நிறுவனத்தில் நிர்வாகியாகப் பணியாற்றிய ஆபிரகாம், அதற்கு உறுதுணையாக இருந்தார். 1988-ல், சென்னை பாரதீய வித்யா பவனில் மக்கள் சக்தி இயக்கம் தோற்றம் கண்டது. நதி நீர் இணைப்பு , கிராம சுயாட்சி, கல்வித்தர மேம்பாடு, சுயப்பொருளாதார மேம்பாடு, சிறுதொழில் வளர்ச்சி, பெண்களின் நலவாழ்வு, தொழில் முன்னேற்றம், சமுதாய விழிப்புணர்வு, இளைஞர் முன்னேற்றம், போன்றவற்றை லட்சியமாகக் கொண்டு மக்கள் சக்தி இயக்கம் செயல்பட்டது.

‘நம்புங்கள், நம்மால்முடியும்’ என்பதை லட்சிய வார்த்தையாகக் கொண்டு மக்கள் சக்தி இயக்கம் இயங்கி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துதல், தகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல், மதுவிலக்கு, கல்வி மற்றும் விவசாய மேம்பாட்டில் அக்கறையுடன் மக்கள் சக்தி இயக்கத்தினர் செயல்படுகின்றனர். இளைஞன் ஒருவன் முரசறைவது ‌போன்ற படம் இந்த இயக்கத்தின் சின்னம். இவ்வியக்கத்தின் தலைமையகம் சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ளது. தமிழ்நாடு முழுதும் கிளைகள் கொண்ட இந்த இயக்கத்தில் பலர் உறுப்பினராக உள்ளனர்.

இதழியல்

எம்.எஸ்.உதயமூர்த்தி, மக்கள் சக்தி இயக்கத்தின் கொள்கைகள், நோக்கங்கள், செயற்பாடுகள் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக ‘நம்மால் முடியும்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார்.

விருதுகள்

  • அமெரிக்க அரசின் சிறந்த ஆசிரியர் விருது
  • ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது
  • இந்திய உளமருத்துவச் சங்கமும், சென்னை உளவியல் சங்கமும் இணைந்து வழங்கிய மாமனிதர் பட்டம்
  • இலங்கை, கொழும்புக் கம்பன் கழகம் வழங்கிய கம்பன் புகழ் விருது
  • திருக்கோவிலூர் மடம் வழங்கிய கபிலர் விருது

மறைவு

எம்.எஸ்.உதயமூர்த்தி, ஜனவரி 21, 2013-ல், தனது 84-ம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

எம்.எஸ்.உதயமூர்த்தி, லட்சியவாதியாகத் திகழ்ந்தார். நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்தித்து அதற்கான முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டார். இளைஞர்கள் பலரை ஒன்றிணைத்தார். தனது பேச்சு மற்றும் எழுத்து மூலம் பலரது சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்தினார். இளைஞர்கள், தொழிலதிபர்கள் என்று பலருக்கு உந்து சக்தியாக இருந்தார். சுய முன்னேற்ற நூல்களின் முன்னோடியாகக் கருதப்படும் எம்.எஸ். உதயமூர்த்தி, லட்சிய சமூகம் ஒன்றை உருவாக்க விழைந்த முன்னோடி அறிஞராக மதிப்பிடப்படுகிறார்.

எம்.எஸ்.உதயமூர்த்தி குறித்து, மரபின்மைந்தன் முத்தையா. “கீழை நாட்டில் காலங்காலமாய் மனித சக்தி குறித்து சொல்லப்பட்ட சித்தாந்தங்களை மேற்கின் மேற்கோள்களுடன் நிறுவியது அவர் செய்த மிக முக்கியப் பங்களிப்பு” என்று மதிப்பிடுகிறார்.

நூல்கள்

  • எண்ணங்கள்
  • மனம் பிரார்த்தனை மந்திரம்
  • தலைவன் ஒரு சிந்தனை
  • உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்
  • பிரச்சனைகளுக்கு முடிவு காண்பது எப்படி?
  • ஆத்ம தரிசனம்
  • தட்டுங்கள் திறக்கப்படும்
  • நாடு எங்கே செல்கிறது?
  • நீதான் தம்பி முதலமைச்சர்
  • சிந்தனை தொழில் செல்வம்
  • மனித உறவுகள்
  • நெஞ்சமே அஞ்சாதே நீ
  • தன்னம்பிக்கையும் உயர்தர்ம நெறிகளும்
  • ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்
  • வெற்றிக்கு முதற்படி
  • உலகால் அறியப்படாத ரகசியம்
  • சாதனைக்கோர் பாதை
  • சொந்தக் காலில் நில்
  • வெற்றி மனோபாவம்
  • கிழக்கே சூரியன் உதிக்கின்றான்
  • உன்னால் முடியும் தம்பி, நம்பு
  • உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்
  • தன்னம்பிகையும் உயிர் தரும்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Sep-2023, 08:03:35 IST