under review

பி.எஸ். ரங்கநாதன்

From Tamil Wiki
பி. எஸ். ரங்கநாதன் (கடுகு, அகஸ்தியன்)
பி.எஸ். ரங்கநாதன் (கடுகு, அகஸ்தியன்)

பி.எஸ். ரங்கநாதன் (கடுகு, அகஸ்தியன்; 1932-2020) பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை நகைச்சுவை கலந்து எழுதியவர். கட்டுரைகள், நேர்காணல்கள், துணுக்குச் செய்திகள், தொடர்கதைகள் என்று தமிழின் முன்னணி இதழ்கள் பலவற்றிற்குப் பங்களித்துள்ளார். எழுத்தாளர் ‘கல்கி’யை தனது குருவாகக் கொண்டு இதழியல் உலகில் செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

பி.எஸ். ரங்கநாதன் செங்கல்பட்டில் மார்ச் 10, 1932-ல் பிறந்தார். செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் செங்கல்பட்டில் இயங்கி வந்த ’சேவா சங்கம்' என்ற அமைப்புடன் இணைந்து பல்வேறு சமூக நற்பணிகளை மேற்கொண்டார். அதன் மூலம் கல்கி, ராஜாஜி போன்றோரது அறிமுகம் கிடைத்தது.

சென்னை ஜி.பி.ஓ.வில் (தபால் துறை) பணி கிடைத்தது. கமலாவுடன் திருமணம் நிகழ்ந்தது. ஒரே மகள் ஆனந்தி, மருத்துவர்.

நாடக வாழ்க்கை

பள்ளியில் படிக்கும்போது சக மாணவர் கோபுவுடன் (பிற்காலத்தில் சித்ராலயா கோபுவாக அறியப்பட்டவர்) இணைந்து பல நகைச்சுவை நிகழ்ச்சிகளை, மிமிக்ரி நிகழ்ச்சிகளை நடத்தினார். உடன் படித்த ஸ்ரீதர் (பின்னாளில் இயக்குநர் ஸ்ரீதர்) எழுதிய நாடகங்களில் நடித்தார். ஆத்தூர் சீனிவாச ஐயர் (சோவின் தந்தை), நடிகை டி.ஏ. மதுரம் உள்ளிட்ட பலரது பாராட்டு அவற்றுக்குக் கிடைத்தது. அதுவே நாடகங்கள் பல எழுதவும், நடிக்கவும், இயக்கவும் தூண்டுகோலாக அமைந்தது.

சென்னையில் சோ, கே.பாலசந்தர் உள்ளிட்ட பலர் எழுதிய நாடகங்களை அரங்கேற்றினார். நடித்தார். ‘பணம் பேசுகிறது' என்ற தலைப்பில் பி.எஸ். ரங்கநாதன் எழுதிய நாடகத்தை கே.பாலசந்தர் இயக்கினார். வானொலிக்காக நடிகர் சிவாஜி கணேசனை நேர்காணல் செய்த அனுபவமும் ரங்கநாதனுக்கு உண்டு.

இலக்கிய வாழ்க்கை

ரங்கநாதனின் நாடகங்களால் ஈர்க்கப்பட்ட கல்கி, 1952-ல் “பொன் விளையும் பூமி” என்ற கட்டுரையை கல்கி இதழில் எழுத வாய்ப்பளித்தார். அது முதல் தொடர்ந்து பல கட்டுரைகளையும், துணுக்குகளையும் கல்கியில் எழுதினார்.

நாடகங்களோடு பேட்டிகள், கட்டுரைகள், கதைகள் எழுதி வந்த ரங்கநாதனுக்கு டெல்லிக்குப் பணிமாற்றம் நிகழ்ந்தது. அங்கு சென்றும் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். ”அரே டெல்லிவாலா” என்ற இவரது துணுக்குக் கட்டுரை குமுதத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து பல கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், பேட்டிகள் குமுதத்தில் வெளியாகின. ஆசிரியர் சாவி, தினமணி கதிருக்கு எழுதும்படி கேட்டுக் கொண்டார். அதற்காக, ’தான் மிகச் சிறியவன்’ என்று பொருள் படும்படி ‘அகஸ்தியன்’ (குறுமுனி) என்ற பெயரை தனக்கான புனை பெயராகச் சூட்டிக் கொண்டு எழுதினார். முதலில் ‘பஞ்சு கதைகள்' என்ற தலைப்பில் நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதினார். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கவே, தொடர்ந்து நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து சாவியில் நிறைய எழுதினார். கமலா, தொச்சு, பஞ்சு போன்ற கதாபாத்திரங்களை உருவாக்கி பல நகைச்சுவைத் தொடர் கதைகளை எழுதினார்.

குமுதத்தில் ‘கடுகுச் செய்திகள்' என்ற தலைப்பில் துணுக்குகளை எழுதினார். நாளடைவில், ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைக் குறிக்கும் வகையில் ‘கடுகு’ என்ற பெயரையும் தனக்கான புனை பெயராகச் சூட்டிக் கொண்டார். இவர் கல்கியில் எழுதிய “கடுகு பதில்கள்”, “கேரக்டர்” கட்டுரைகள் வரவேற்பைப் பெற்றன. தனது வாழ்க்கை அனுபவங்களை 'டில்லி வாழ்க்கை' என்ற தலைப்பில் கணையாழியில் எழுதியிருக்கிறார். கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி எனப் பல இதழ்களில் கதை, கட்டுரை, துணுக்குகள், நேர்காணல், பேட்டிகள் என பல படைப்புளைத் தந்துள்ளார் பி. எஸ். ரங்கநாதன்.

கல்கி பக்தர்

தனக்கு முதன் முதலில் எழுத வாய்ப்பளித்த கல்கி மீது பி. எஸ். ரங்கநாதனுக்கு மிகுந்த மதிப்புண்டு. தன்னைக் ‘கல்கி பக்தன்’ என்றே அழைத்துக் கொண்டார். கல்கியையே தனது எழுத்துலக குருவாகக் கொண்டு செயல்பட்டார். சென்னையில் தான் கட்டிய வீட்டுக்குக் ‘கல்கி' என்று பெயர் சூட்டினார். தன் மகளுக்கு ‘ஆனந்தி' என்று பெயர் சூட்டியவர், தன் புத்தகங்களைப் பிரசுரிக்கும் நிறுவனத்துக்கு ‘நந்தினி' என்று பெயர் வைத்தார்.

பிரபந்த நூல்கள் வெளியீடு

பி.எஸ். ரங்கநாதன், தன் மனைவி கமலாவுடன் இணைந்து “நாலாயிர திவ்யப் பிரபந்தம்” நூலை பதம் பிரித்து பெரிய எழுத்துருவில் வெளியிட்டார். இரண்டு பாகங்கள் கொண்ட, எண்ணூறு பக்கங்களுக்கு மேற்பட்ட அந்த நூலை லாப நோக்கற்று மிகக் குறைந்தவிலையில் வெளியிட்டார். அதே போல் விஷ்ணு சஹஸ்ரநாமம் பெரியஎழுத்தில் அச்சில் கொண்டு வந்து பலருக்கு அளித்தார்.

எழுத்துருப் பங்களிப்புகள்

எழுத்து, நாடகம் மட்டுமல்லாமல், விளம்பரத் துறை மற்றும் கணிப்பொறித் துறையிலும் ரங்கநாதன் ஆர்வம் மிக்கவராக இருந்தார். தாமே எழுத்துரு அமைக்கக் கற்றுக் கொண்டார். தான் உருவாக்கிய எழுத்துருக்களுக்கு கல்கியை நினைவு கூரும் விதத்தில், ‘சிவகாமி’, ‘குந்தவை’, ‘நந்தினி’, ‘வந்தியத்தேவன்’, ‘புலிகேசி’, ’ராஜராஜன்’, ‘காவேரி’, ‘தாமிரபரணி’, ‘பாலாறு’, ‘வைகை’, ‘பொன்னி’, ‘பொருநை’ என்று பெயர் சூட்டினார். ‘ஆனந்தி’ என்ற தமிழ் மென்பொருளையும் இவர் உருவாக்கியுள்ளார். பலரும் பயன்படுத்தும் ’அழகி’ மென்பொருளில் பயன்படுத்தப்படும் தமிழ் எழுத்துருக்கள் ரங்கநாதன் உருவாக்கியவைதான். ஆனந்த விகடனின் ஆரம்ப காலத்தில் அதன் எழுத்துரு உருவாக்கத்திலும் இவரது பங்களிப்பு இருந்தது. “Stereogram” எனப்படும் 3டி படங்களை உருவாக்குவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது கருத்துக்களை, வாழ்க்கை மற்றும் இலக்கிய அனுபவங்களை தனது ‘Kadugu தாளிப்பு’ என்னும் இணையதளத்தில் [1] தொடர்ந்து எழுதி வந்தார்.

விருதுகள்

  • எழுத்தாளர் தேவனின் அறக்கட்டளை சார்பில் 'தேவன் விருது' இவருக்கு வழங்கப்பட்டது.
  • அப்புசாமி சீதாப்பாட்டி அறக்கட்டளை அமைப்பு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பித்தது.

மறைவு

பி.எஸ். ரங்கநாதன், உடல் நலக் குறைவால், ஜூன் 02, 2020 அன்று, அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் காலமானார்.

இலக்கிய இடம்

எஸ்.வி.வி., கல்கி, துமிலன், தேவன், சாவி, நாடோடி வரிசையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியவர் பி. எஸ். ரங்கநாதன். இவரது பெரும்பாலான படைப்புகள் மத்திய தர பிராமணக் குடும்ப வாழ்க்கை நிகழ்வுகளைப் பிரதிபலிப்பவை. எளிமையான நடையில் எழுதப்பட்டவை.

“நடுத்தர மக்களின் வாழ்க்கையைச் சித்திரித்து படிப்பவர் மனதில் தாக்கத்தை உண்டாக்கும் அளவுக்கு எழுத்துகளைக் கையாளத் தெரிந்தவர். டெல்லியில் இருந்துகொண்டே தமிழகத்தைக் கலக்கியவர்.” என்கிறார், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்.

பி.எஸ். ரங்க்நாதனின் புத்தகம்

நூல்கள்

  • பஞ்சு கதைகள்
  • அலை பாயுதே கண்ணா
  • சொல்லடி சிவசக்தி
  • கைதி எண் 46325
  • கமலாவும் நானும்
  • கமலாவும் கத்திரிகாய் கூட்டும்
  • ரொட்டி ஒலி
  • ஐயோ பாவம் சுண்டு
  • என்ன தவம் செய்தேனோ
  • கமலா டியர் கமலா
  • கமலா கல்யாண வைபோகமே

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page