under review

குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை

From Tamil Wiki
குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்
குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்

குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை (மார்ச் 19, 1913 - அக்டோபர் 29, 1979) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

திருவாரூர் மாவட்டம் குழிக்கரை என்னும் கிராமத்தில் சேது பிள்ளை - ஆயிப்பொன்னம்மாள் இணையருக்கு மார்ச் 19, 1913 அன்று ஒரே மகனாக பிச்சையப்பா பிள்ளை பிறந்தார்.

பிச்சையப்பா பிள்ளை தன் சிறிய தந்தை பெருமாள் பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்றார். பெருமாள் பிள்ளையின் மகன் குழிக்கரை காளிதாஸ் பிள்ளையுடன் இணைந்து முதலில் கச்சேரிகள் செய்த்வர், பின்னர் தனக்கென்ற குழுவை அமைத்து வாசிக்கத் தொடங்கினார்.

தனிவாழ்க்கை

குழிக்கரை அய்யாஸ்வாமி பிள்ளை வம்சாவளி, நன்றி - மங்கல இசை மன்னர்கள்
குழிக்கரை அய்யாஸ்வாமி பிள்ளை வம்சாவளி, நன்றி - மங்கல இசை மன்னர்கள்

பிச்சையப்பா பிள்ளைக்கு இரு மனைவிகள். தாய்மாமா திருவாரூர் நாராயணஸ்வாமி பிள்ளையின் மகள் ஸீதாலக்ஷ்மி அம்மாளை முதலில் மணந்தார். பின்னர் தவில்கலைஞர் திருக்கண்ணமங்கை வீராஸ்வாமி பிள்ளையின் மகள் ராஜாயி அம்மாளை மணந்தார். பிச்சையப்பா பிள்ளைக்கு பிறந்தவர்கள்:

  1. கே.எஸ்.பி. விஸ்வலிங்கம் (பாட்டுக்கலைஞர், சென்னை வானொலி)
  2. அவயானந்தம் (நாதஸ்வரம்)
  3. கோமதி
  4. ராமதிலகம்
  5. தமிழரசி
  6. கலைச்செல்வி

இசைப்பணி

பிச்சையப்பா பிள்ளை கீர்த்தனைகளை வெறும் ஸ்வரமாக வாசிக்காமல் சாஹித்யமாக பாடிப் பயிற்சி செய்து வாசித்தவர். இதனால் இவரது இசை வாய்ப்பாட்டு போல பாடல் வரிகள் வருமிடங்களில் துத்துக்காரமும் பிற இடங்களில் அகாரமுமாக அமைந்தது. பொருத்தமான ராகங்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ராகத்தையும் சிறப்பாக ராகமாலிகை வாசிப்பதும் இவரது தனிச்சிறப்பு.

பிச்சையப்பா பிள்ளை வாழ்நாள் முழுவதும் புதிது புதிதாகக் கீர்த்தனைகளைக் கற்பதில் ஆர்வம் கொண்டிருந்தவர். வயலின் வித்வான் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் பல புதிய கீர்த்தனைகளைப் பாடமாகக் கற்றிருந்தார். நாதஸ்வரக் கலைஞர்களின் முன்னேறத்துக்காக பல மாநாடுகளை நடத்துவதில் துணை புரிந்திருக்கிறார்.

திருவாவடுதுறை ஆதீன வித்வானாக இருந்த பிச்சையப்பா பிள்ளைக்கு பல சாதராக்களும் தங்கப் பதக்கங்களும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

குழிக்கரை பிச்சையப்பா பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

விருதுகள்

  • ஜவஹர்லால் நேருவிடம் தங்கப் பதக்கம்
  • லால்பகதூர் சாஸ்திரியிடமிருந்து ‘அகில பாரத நாதஸ்வர சக்கரவர்த்தி’ விருது
  • கலைமாமணி - வழங்கியது தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம்

மறைவு

குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை அக்டோபர் 29, 1979 அன்று மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page