திருப்பதி முனிராமய்யா
திருப்பதி முனிராமய்யா (அக்டோபர் 19, 1923 - மே 27, 1984) ஒரு தவில் கலைஞர்.
இளமை, கல்வி
இன்றைய ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்த்திக்கு அருகே பொக்கஸம்பாலம் என்னும் கிராமத்தில் அக்டோபர் 19, 1923 அன்று சிந்தெபல்லி முனுஸ்வாமி - வெங்கமாம்பா இணையருக்கு முனிராமய்யா பிறந்தார். இவரது தந்தை முனிராமய்யாவை பண்ட்லூரி வீராஸ்வாமி என்பவரிடம் நாதஸ்வரம் கற்க வைத்தார். ஐந்து ஆண்டுகள் நாதஸ்வரம் பயின்று கச்சேரிகளும் செய்யத் தொடங்கிய முனிராமய்யா லயத்தில் தனக்கு அதிக ஈடுபாடு உண்டாகவே தஞ்சை மாவட்டம் நரசிங்கன்பேட்டையில் இருந்த நாகப்பத் தவில்காரரிடம் தவில் கற்றார். தவில் கலைஞராகவே வாழ்வை அமைத்துக் கொண்டார்.
தனிவாழ்க்கை
முனிராமய்யா ரமணம்மா என்பவரை மணந்து இவர்களுக்கு முனிப்பிரகாச நாரயணா (கர்னூல் அரசு இசைக் கல்லூரியில் மிருதங்க ஆசிரியர்), ரவிகுமார் என்ற இரு மகன்களும், வரலக்ஷ்மியம்மா, சரஸ்வதி, பார்வதி, பத்மாவதி, பத்மஜா என ஐந்து மகள்களும் பிறந்தனர்.
இசைப்பணி
திருப்பதி முனிராமய்யா திருமலை - திருப்பதி ஆஸ்தான வித்வானாக இருந்தவர். திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர கலா பீடத்தில் சில காலம் ஆசிரியராக இருந்தார். பின்னர் தன் இல்லத்திலேயே குருகுலம் தொடங்கி நாதஸ்வரம், தவில் இரண்டும் கற்பித்தார். ஆந்திர மாநிலத்தில் உள்ள மங்கள இசைக் கலைஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி 'மங்கள வாத்திய கலாசார சங்கம்’ என்ற அமைப்பு உருவாகக் காரணமாக இருந்தவர் முனிராமய்யா.
திருப்பதி முனிராமய்யா ஆந்திர மாநிலத்து தவில் கலைஞர்களில் தமிழகத்துக் கலைஞர்களிடமும் புகழ் பெற்றிருந்தவர் .
மாணவர்கள்
நண்டூரி ராமய்யா திருப்பதி முனிராமய்யாவிடம் கற்றவர்களில் முக்கியமான கலைஞர்.
உடன் வாசித்த கலைஞர்கள்
திருப்பதி முனிராமய்யா கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- தோமட சிட்டு அப்பாயி
- தாலிபர்த்தி பிச்சஹரி
- ஆம்பூர் சிகாமணி
- ஷேக் சின்னமௌலா
- மதுரை சேதுராமன் சகோதரர்கள்
- நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்
- கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை
- குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை
- திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளை
- ஏ.கே.ஸி நடராஜன் (கிளாரினெட்)
மறைவு
திருப்பதி முனிராமய்யா மே 27, 1984 அன்று திருப்பதியில் காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
18-Jun-2023, 07:09:55 IST