under review

ச. தண்டபாணி தேசிகர்

From Tamil Wiki
Revision as of 03:44, 30 July 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ச. தண்டபாணி தேசிகர்

ச. தண்டபாணி தேசிகர் (சிதம்பரம் சடையப்ப தண்டபாணி தேசிகர்; மகா வித்வான் ச. தண்டபாணி தேசிகர்) (ஏப்ரல் 02, 1903 - ஏப்ரல் 25, 1990), சைவ சமய அறிஞர். சைவ சமயம் சார்ந்த நூல்களை எழுதினார். இந்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

ச. தண்டபாணி தேசிகர், ஏப்ரல் 02, 1903 அன்று, தமிழ்நாட்டின் சிதம்பரத்தை அடுத்துள்ள நன்னிலம் திருகைட்டங்குடி, கிராமத்தில், சடையப்ப தேசிகர் - பாலம்மாள் இணையருக்குப் பிறந்தார். சு. பொன்னோதுவார் மூர்த்திகள் மற்றும் மகாவித்துவான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் ஆகியோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வித்துவான் பட்டம் பெற்றார். வித்துவான் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

ச. தண்டபாணி தேசிகர், மணமானவர்.

கல்விப் பணிகள்

ச. தண்டபாணி தேசிகர், திருவாரூர் நாட்டாண்மைக் கழகக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மு. கருணாநிதி தேசிகரின் மாணவராக இருந்தார். மு.மு.இஸ்மாயில், குன்றக்குடி அடிகளார் போன்றோரும் தண்டபாணி தேசிகரிடம் தமிழ் பயின்றனர். தண்டபாணி தேசிகர் தொடர்ந்து மீனாட்சி கல்லூரி, மதுரை ஆதீனக் கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

ச. தண்டபாணி தேசிகர் நூல்கள்

ச. தண்டபாணி தேசிகர், செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, சித்தாந்தம், ஞானசம்பந்தம் போன்ற இலக்கிய மற்றும் சமயம் சார்ந்த இதழ்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். தருமை ஆதினத்தின் புலவராக இருந்தார். தலவரலாற்று நூல்களையும், ஊர்களின் வரலாற்றைக் கூறும் நூல்களையும் எழுதினார். 'பஞ்சாட்சர தீபம்' என்னும் நூல் குறிப்பிடத்தகுந்தது. இந்நூல் திருமந்திரத்திற்கான விளக்க நூல்.

ச. தண்டபாணி தேசிகர் பல்வேறு நூல்களைத் தொகுத்து வெளியிட்டார். பதிப்பித்தார். தேசிகரின் தொகுப்புப் பணிகளில், திருக்குறளின் பழைய உரையாசிரியர்களின் உரைகளைத் தொகுத்தும், வேண்டிய இடத்து விளக்கமும் அளிக்கப்பட்டு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட 'திருக்குறள் உரைக்களஞ்சியம்' நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அறியப்படுகிறது. திருவாசகம் நூலுக்கு தண்டபாணி தேசிகர் எழுதியிருக்கும் விளக்கவுரை ராஜாஜி, டி.கே. சிதம்பரநாத முதலியார், திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரது பாராட்டுதலைப் பெற்றது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகங்களுக்கு தண்டபாணி தேசிகர் அளித்திருக்கும் விளக்கவுரை முக்கியமானது.

ச. தண்டபாணி தேசிகர் சமயம், ஆன்மிகம், இலக்கியம், புராணம், தலவரலாறு, விளக்கவுரை, குறிப்புரை, தொகுப்புரை என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

விருதுகள்

  • 'பஞ்சாட்சர தீபம்' நூலுக்காக, திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய மகா வித்துவான் பட்டம்.
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அளித்த பேரவைச் செம்மல் பட்டம்
  • புதுவைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் கி.வேங்கிட சுப்ரமணியம் தலைமையில் 1000 வெள்ளி நாணயங்களுடன் அளித்த முதுமுனைவர் பட்டம்
  • தமிழக அரசு அளித்த திருவள்ளுவர் விருது
  • வாழ்நாள் பணிகளுக்காக இந்திய அரசு வழங்கிய பத்மபூஷண் விருது

மறைவு

ச. தண்டபாணி தேசிகர், ஏப்ரல் 25, 1990 அன்று காலமானார்.

நாட்டுடைமை

தமிழக அரசு, ச. தண்டபாணி தேசிகரின் படைப்புகளை 2007-ல் நாட்டுடைமையாக்கியது. வாரிசுரிமையருக்கு ரூபாய் ஆறு லட்சம் பரிவுத் தொகையை வழங்கியது.

ஆவணம்

ச. தண்டபாணி தேசிகரின் நூல்கள், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், தமிழ் மின் நூலகம், இணைய மின் நூலகம் (ஆர்கைவ் தளம்) போன்றவற்றில் சேகரிக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு

ச. தண்டபாணி தேசிகர், கல்வியாளராக நீண்டகாலம் இலக்கியம் பயிற்றுவித்தார். சங்க இலக்கியம், திருக்குறள், பக்தி இலக்கியங்கள், சமயம் சார்ந்த ஆய்வு நூல்களை எழுதினார். பல தல வரலாற்று நூல்களை எழுதினார். தமிழறிஞர், கல்வியாளர், இலக்கிய ஆய்வாளர், எழுத்தாளர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • திருக்குறள் : அழகும் அமைப்பும்
  • வள்ளுவத்தில் மெய்ப்பொருட் சுவடுகள்
  • திருக்குறள் அறத்துப்பால் : உரைவளம்
  • சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்
  • திருக்குறள் உரைக்களஞ்சியம்
  • வள்ளுவரும் கம்பரும்
  • திருமருகல் தல வரலாறு
  • கோவிலூரென வழங்கும் திருவுசாத்தான வரலாறு
  • இராமேசுவர யாத்திரை
  • பஞ்சாட்சர தீபம்
  • ஸ்ரீ வேதாரண்யேஸ்வர சுவாமி ஆலய தல வரலாறு
  • அமைதி
  • சைவத்தின் மறுமலர்ச்சி
  • முருகன்
  • ஆடல்வல்லான்
  • திருநள்ளாற்றுத் தலவரலாறு
  • திருச்சிக்கல் தலவரலாறு
  • திருவாரூர்த் தல வரலாறு
  • நக்கீரர்
  • கும்பகோணம்
  • திருவாரூர்
  • காசி யாத்திரை
  • சிதம்பரம்
  • ஆதீனக் கோயில்கள்
  • கணபதி
  • போற்றி! போற்றி! சயசய போற்றி!
  • அன்பு தந்தருள்
  • மலர்வாய்ப்பிறந்த வாசகத்தேன்
  • சைவத்தின் மறுமலர்ச்சி
  • திருச்செங்காட்டங்குடி தல வலராறு
  • நாகப்பட்டினத் தல வரலாறு
  • கோயில் திருமாகாளத் தலவரலாறு

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jul-2026, 11:40:36 IST