first review completed

கண. முத்தையா

From Tamil Wiki
Revision as of 22:07, 17 September 2022 by Jeyamohan (talk | contribs)
கண. முத்தையா

கண. முத்தையா (K.N.Muthaia - 1913-1997) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர். பர்மாவில் தனவணிகன், ஜோதி இதழ்களில் பொறுப்பு வகித்தார். நேதாஜியின் ஐ.என்.ஏ.வில் அதிகாரியாகப் பணியாற்றினார். தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பகத்தைத் தோற்றுவித்தார்.

பிறப்பு, கல்வி

கண. முத்தையா, சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில், மே 24, 1913-ல் பிறந்தார். தந்தை கண்ணப்பர். செல்வச் செழிப்பு மிக்க குடும்பம். கல்விக்காக யாழ்ப்பாணம் சென்றார் கண. முத்தையா. 13 வயதில் இந்தியா திரும்பினார். சுதந்திரப் போராட்டங்களினால் ஈர்க்கப்பட்டார். அதனால் பர்மாவில் உள்ள தங்கள் கடைகளை மேற்பார்வை செய்ய குடும்பத்தாரால் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் புலமை பெற்றார்.

தனது மெட்ரிக் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டே, பர்மாவில் கடைகளை நிர்வகித்து வந்தார் கண.முத்தையா. தந்தை திடீரெனக் காலமானதால் இந்தியா திரும்பினார்.

தனி வாழ்க்கை

இந்தியா திரும்பிய கண. முத்தையா, குடும்பப் பொறுப்பை ஏற்றார். தந்தை நிர்வகித்து வந்த தொழில்களில் ஈடுபட்டு அதனை வளர்த்தெடுத்தார். தம்பி, தங்கைகளுக்கு மண முடித்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு பல போராட்டங்களில் ஈடுபட்டார்.

கண. முத்தையா (நடுத்தர வயதுப் படம்)

பர்மாவில் இதழியல் வாழ்க்கை

1936-ல் வியாபாரத்துக்காக பர்மா சென்றார் கண. முத்தையா. தனது தொழில்களினூடே 'தன வணிகன்’ இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார். 1937-ல் 'ஜோதி’ மாத இதழில் நிர்வாகப் பொறுப்பேற்றார். அவர் செய்தை நிர்வாகச் சீர்திருத்தங்களால் 'ஜோதி’ இதழ் நஷ்டத்திலிருந்து மீண்டு லாபகரமாக இயங்கத் தொடங்கியது. [1]

'ஜோதி’ இதழ்ப் பணியோடு கூடவே, ரங்கூனை அடுத்த கம்பையில் காந்தியால் திறந்து வைக்கப்பட்ட செட்டியார்கள் உயர்நிலைப் பள்ளியின் செயலராகப் பணிபுரிந்தார் கண. முத்தையா. வெ.சாமிநாத சர்மாவின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு, அவர் நூல்களை வெளியிடும் நோக்கத்தில், 'புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகம்’ என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் முதல் நூலாக 'மகாத்மா காந்தி’ என்ற நூலை வெளியிட்டார். டாக்டர் ராதாகிருஷ்ணன், மகாத்மா காந்தியின் 70-ஆவது ஆண்டு நினைவாகத் தொகுத்த நூல் அது. அதனை அனுமதி பெற்று வெ.சாமிநாத சர்மாவைக் கொண்டு மொழியாக்கம் செய்து தமிழில் வெளியிட்டார். அதன் பிறகு பிளேட்டோவின் அரசியல், ரூசோவின் நூல்கள், சன் யாட் சன் எழுதிய சுதந்திரத்தின் தேவைகள் எனப் பல நூல்களைக் கொண்டு வந்தார்.

முடிவுகளே தொடக்கமாய் - கண. முத்தையா எழுதிய நூல்

இந்திய தேசிய ராணுவத்தில் பணி

இரண்டாம் உலகப் போர் சமயம் பர்மாவில் இருந்த கண. முத்தையா, நேதாஜியின் பேச்சால் ஈர்க்கப்பட்டார் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் (I.N.A.) சேர்ந்தார். INA-வின் மக்கள் தொடர்பாளராகப்ப் பணிபுரிந்தார். நேதாஜியின் பேச்சுக்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகளைச் செய்து வந்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைக் கடைசி முறையாகச் சந்தித்த நால்வரில் கண.முத்தையாவும் ஒருவர். இதை ’முடிவுகளே தொடக்கமாய்’ நூலில் கண. முத்தையா குறிப்பிட்டுள்ளதாக அகிலன் கண்ணன் தெரிவித்துள்ளார் [2].

சிறையும் விடுதலையும்

கண. முத்தையா, பர்மாவில் நேதாஜியின் இந்திய தேசியப் படையில் பணியாற்றிய காரணத்தால், 1945, மே மாதம் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். போர்க் கைதியாக ஒரு வருடம் இருந்தார். மே மாதம் 1946-ல் இந்தியா அழைத்துவரப்பட்டு, பின் விடுதலையானார். கல்கத்தாவில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டு வந்தார்.

புரட்சி - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

தமிழ்ப் புத்தகாலயம்

தமிழகம் வந்த கண. முத்தையாவிடம், பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்து நடத்துமாறு 'சக்தி’ வை.கோவிந்தன், ஏ.கே.செட்டியார் மற்றும் முல்லை முத்தையா ஆகியோர். கேட்டுக் கொண்டனர். ஏற்கனவே அத்துறையில் நல்ல அனுபவம் பெற்றிருந்ததால் கண. முத்தையாவும் அதற்கு உடன்பட்டார். ஜூன் 1946-ல், ’தமிழ்ப் புத்தகாலயம்’ ஆரம்பிக்கப்பட்டது. முதல் நூலாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ எழுதிய 'புரட்சி’ நூலை வெளியிட்டார் கண. முத்தையா.

வால்காவிலிருந்து கங்கை வரை
பொதுவுடைமைதான் என்ன?
தமிழ்ப் புத்தகாலய வெளியீடுகள்

ஏற்கனவே கண. முத்தையா சிறையில் இருந்தபோது ராகுல் சாங்கிருத்தியாயனின் 'சாம்ய வாத் ஹி க்யோன்’ (साम्यवाद ही क्यों?) 'வோல்கா ஸே கங்கே’ என்ற இரண்டு நூல்களையும் வாசித்திருந்தார். அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தும் வைத்திருந்தார். ராகுலின் அனுமதி பெற்று, அவற்றை, 'பொதுவுடைமைதான் என்ன?’ , ’வால்காவிலிருந்து கங்கை வரை’ என இரண்டு நூல்களாக வெளியிட்டார். அந்த நூல்களுக்கு மிக நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் நன்கு அறிந்திருந்த ராகுல், கண. முத்தையாவின் மொழிபெயர்ப்பைப் பாராட்டினார். அது மேலும் பல மொழிபெயர்ப்பு நூல்களைத் தரும் உத்வேகத்தை முத்தையாவுக்கு அளித்தது.

ஜூலிஸ் பூசிக் , மா சேதுங் , மாக்ஸிம் கார்கி , ஸ்டாலின், ஜார்ஜ் குலியா, துர்கனேவ் , பிரேம்சந்த் , எம் .டி. வாசுதேவன் நாயர் எனப் பலரது படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, க.நா .சுப்ரமணியம், பி.ஜி.கருத்திருமன்,கா.அப்பாத்துரை, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, நா.பார்த்தசாரதி, அகிலன், தொ.மு.சி.ரகுநாதன், சாமி. சிதம்பரனார், ராஜம் கிருஷ்ணன், சாலை இளந்திரையன், துரை அரங்கனார், ஹெப்சிபா ஜேசுதாசன் , இந்திரா பார்த்தசாரதி , மகரிஷி எனப் பலரது படைப்புகளைத் தமிழ்ப் புத்தகாலயம் மூலம் வெளியிட்டார்.

இலங்கை எழுத்தாளர்களான க. கைலாசபதி, செ.கணேசலிங்கன், டொமினிக் ஜீவா. டேனியல், கா. சிவத்தம்பி, திருநாதன், வேலுப்பிள்ளை, கோகிலம் சுப்பையா போன்றோரது நூல்களையும் தனது 'தமிழ்ப் புத்தகாலயம்’ மூலம் வெளியிட்டு ஊக்குவித்தார்

எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் உரை

தமிழ்ப் பணிகள், பொறுப்புகள்

நூல்களின் விற்பனையை அதிகரிக்க கல்கியின் தலைமையில் 1951-ல் ஓர் இயக்கம் தொடங்கினார் கண. முத்தையா. அந்த அமைப்பு சென்னையில் முதன் முதலாக தமிழ்ப் புத்தகக் காட்சியை நடத்தியது. 1962-ல் நடத்தப்பட்ட பாரதி விழாவில் முத்தையாவின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. அப்பணிகளுக்காக பலரால் பாராட்டப்பட்டார் கண. முத்தையா.

தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலர், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கச் செயலர், பதிப்பாளர் சங்கத் தலைவர் எனப் பல பொறுப்புகளை வகித்தார் கண. முத்தையா. பல கூட்டங்களை, கருத்தரங்குகளை, இலக்கிய மாநாடுகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார்.

காமராஜர், ஈ.வெ.ராமசாமி, அண்ணா, பக்தவத்சலம் எனப் பலருடன் முத்தையாவுக்கு நல்ல நட்பு இருந்தது. சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்களுக்காக அரசு வழங்க முற்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை கண. முத்தையா பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.

பிரபல நாவலாசிரியரான அகிலனுடைய மகன் அகிலன் கண்ணன், கண. முத்தையாவின் மகள் மீனாவை மணந்து கொண்டார். அந்த வகையில் அகிலனும், கண. முத்தையாவும் ஒருவருக்கொருவர் சம்மந்தி ஆகினர்.

மறைவு

வயது மூப்பால் உடல் நலிவுற்று நவம்பர் 12, 1997 அன்று காலமானார் கண. முத்தையா. அவரது மறைவுக்குப் பின் அவரது மருமகனான அகிலன் கண்ணன் 'தமிழ்ப் புத்தகாலயம்’ நிறுவனத்தின் பொறுப்பேற்றார்.

வரலாற்று இடம்

தமிழ் இலக்கியப் பரப்பில் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்பட்டவர் கண. முத்தையா. கவனிக்கத்ககுந்த நூல்கள் பலவற்றைப் பதிப்பித்தவர். மொழிபெயர்ப்பு நூல்கள் பலவற்றை வெளியிட்டவர். தமிழுக்கும் தமிழகத்துக்கும் எதிரான எந்த படைப்பையும் பிரசுரிப்பதில்லை என்பதைத் தனது கொள்கையாக வைத்திருந்து செயல்பட்டவர்.

நூல்கள்

  • புரட்சி (மூலம்: நேதாஜியின் சொற்பொழிவுகள்)
  • பொதுவுடைமைதான் என்ன? ( மூலம்: ராகுல் சாங்கிருத்தியாயன்))
  • வால்காவிலிருந்து கங்கை வரை (மூலம்: ராகுல் சாங்கிருத்தியாயன்)
  • பதிப்பும் படிப்பும்
  • முடிவுகளே தொடக்கமாய்

உசாத்துணை

இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.