under review

முல்லை முத்தையா

From Tamil Wiki
முல்லை முத்தையா

முல்லை முத்தையா (ஜூன் 7, 1920 - பிப்ரவரி 9, 2000) தமிழ்ப் பதிப்பாளர். முல்லை பதிப்பகம் நடத்தியவர். பாரதிதாசனுக்கு அணுக்கமானவர், அவருடைய நூல்களை வெளியிட்டவர். எழுத்தாளர்

பிறப்பு, கல்வி

முல்லை முத்தையா தேவகோட்டை நகரில், நகரத்தார் சமூகத்தில் மாத்தூர் கோயில்ல் கண்ணூர் பிரிவைச் சேர்ந்த குடியில் பழனியப்பச் செட்டியார்- மனோன்மணி ஆச்சி இணையருக்கு ஜூன் 7, 1920-ல் பிறந்தார். இவருடைய தந்தைவழி தாத்தா நாகப்பச் செட்டியார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யின் மாணவரான கனகசபை ஐயர் என்பவரிடம் தமிழ் பயின்று செய்யுள் இயற்றும் திறமை கொண்டிருந்தார். அவருடைய தந்தை சுப்ரமணியம் செட்டியார் சுப்ரமணிய குரு என அழைக்கப்படும் ஆன்மிக அறிஞராக திகழ்ந்தார். முல்லை முத்தையாவின் தாய்வழித் தாத்தா அஷ்டாவதானம் சிவசுப்ரமணியச் செட்டியாரும் புகழ்பெற்ற தமிழறிஞர்.

முத்தையா இளமையிலேயே தமிழும் சம்ஸ்கிருதமும் பயின்றார். தேவகோட்டையில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்ததுமே நகரத்தார் குல வழக்கப்படி பர்மாவுக்கு வட்டித்தொழில் செய்யும்பொருட்டுச் சென்றார். தந்தையிடமிருந்து பெற்ற சைவநூல் கல்வியையும், தனியார்வத்தால் திருக்குறள் கல்வியையும் தொடர்ந்தார். பர்மாவில் இருக்கையில் ஆங்கிலக்கல்வியை பல ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொண்டார்

தனிவாழ்க்கை

முல்லை முத்தையாவின் முதல் மனைவி தேவகோட்டையைச் சேர்ந்த மீனாட்சி ஆச்சி. அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதனால் இரண்டாம் தாரமாக புதுவயல் ஊரைச் சேர்ந்த நாச்சம்மை ஆச்சியை 1958-ல் மணந்துகொண்டார். அவர்களுக்கு ஆறு குழந்தைகள். மனோன்மணி, பழனியப்பன், கலா சொக்கலிங்கம், உமா வெங்கசாச்சலம், இராமநாதன், கருப்பையா.

உலகப்போர் மூண்டதும் பர்மாவில் இருந்து இந்தியா வந்தார். வெ.சாமிநாத சர்மா, பாரிநிலையம் பதிப்பகம் நடத்திய செல்லப்பன் ஆகியோருடன் ஒரு பேருந்தை விலைக்கு வாங்கி இந்திய எல்லை வரை வந்து அங்கிருந்து ஊருக்கு திரும்பினார். 22 வயதில் ஊர்மீண்ட முத்தையா 1942-ல் சக்தி.வை.கோவிந்தனின் சக்தி இதழில் துணையாசிரியராகச் சேர்ந்தார்.அதில் அனுபவம் பெற்றபின் 1943-ல் முல்லை பதிப்பகத்தை தொடங்கினார்

பதிப்பக வாழ்க்கை

முல்லை முத்தையா இளமையிலேயே பாரதிதாசன் மீது தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். பாரதிதாசன் நூல்களை பதிப்பிக்கவேண்டும் என்னும் விருப்பமே அவரை பதிப்புத்துறையில் இறங்கச் செய்தது. அவர் பதிப்புத்துறையில் இறங்கும்போது மர்ரேராஜம் கம்பெனி, அல்லையன்ஸ் கம்பெனி, கலைமகள் காரியாலயம், திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவை செயல்பட்டுக்கொண்டிருந்தன. நகரத்தார்களில் சக்தி பதிப்பகம் கோவிந்தன், தமிழ்ப்பண்ணை நடத்திய சின்ன அண்ணாமலை ஆகியோர் முன்னணியில் இருந்தனர். முல்லை முத்தையா அவர்களில் ஒருவராக இணைந்தார்.

முத்தையா தினமணி, பாரததேவி முதலிய இதழ்களில் உதவியாசிரியராகப் பணியாற்றிய கே.அருணாசலம் என்பவருடன் இணைந்து கமலா பிரசுராலயம் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். ஜவகர்லால் நேருவின் மனைவி கமலா நேரு நினைவால் அப்படி பெயர்சூட்டப்பட்டது. பின்னர் முல்லை பதிப்பகத்தை தன் பொறுப்பில் தொடங்கினார். முல்லைப் பதிப்பகம் முதல் வெளியீடு பாரதிதாசனின் அழகின் சிரிப்பு. தொடந்து தமிழியக்கம், அழகின் சிரிப்பு ஆகிய பாரதிதாசனின் நூல்களையும் அவர் வெளியிட்டார். பாரதிதாசன் முல்லை பதிப்பகத்தின் முகப்பு எழுத்தாளராகத் திகழ்ந்தார்.

தி.ஜ.ரங்கநாதன், டி.எஸ்.சொக்கலிங்கம், வல்லிக்கண்ணன், சி.ராஜகோபாலாச்சாரியார், கோவை அய்யாமுத்து, க.அன்பழகன், க.இராசாராம், எம்.எஸ்.உதயமூர்த்தி ஆகியோரின் முதல் நூல்கள் முல்லை பதிப்பக வெளியீடாகவே வந்தன.

இதழியல்

பாரதிதாசனுக்காகவே முல்லை என்னும் இதழை தொடங்கி நடத்தினார். அதில் தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராகப் பணியாற்றினார். பதிப்புரிமைத் தொகையாக பாண்டிசேரியில் பெருமாள்கோயில் தெருவில் பாரதிதாசன் வாழ்ந்த வீட்டை ரூ 4000 செலவில் விலைக்கு வாங்கி பாரதிதாசனுக்கு அளித்தார். அது பின்னர் பாரதிதாசனின் நினைவில்லமாக ஆகியது.

முல்லை முத்தையா நகரசபை என்னும் இதழையும் நடத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

தன் பதிப்பகத்துக்காக முல்லை முத்தையா சிறு நூல்களை எழுதி வெளியிட்டார். உலக இலக்கியங்களை எளிய முறையில் அறிமுகம் செய்யும் நூல்களையும், உலகசிந்தனையாளர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகளையும் சுருக்கமான நூல்களாக எழுதினார். பாரதிதாசனின் கவிதைகள், கட்டுரைகளை நூல்களாக தொகுக்கும் தொகுப்பாசிரியராகவும் திகழ்ந்தார்.

விருதுகள்

 • பாவேந்தர் விருது. தமிழக அரசும் - 1990

மறைவு

பிப்ரவரி 9, 2000 அன்று முல்லை முத்தையா மறைந்தார்

நினைவுநூல்கள்

முல்லை முத்தையா. வாழ்க்கை வரலாறு முல்லை பழனியப்பன். இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை

நூல்கள்

சிறுவர் நூல்கள்
 • ஷேக்ஸ்பியர் நீதிக்கதைகள்
 • லியோ டால்ஸ்டாயின் நீதிக்கதைகள்
 • முல்லாவின் வேடிக்கை கதைகள்
 • பீரபால் ராஜந்தந்திரக் கதைகள்
 • அப்பாஜி யுக்திக்கதைகள்
 • மரியாதைராகன் தீர்ப்புக் கதைகள்
 • பரமார்த்த குரு கதைகள்
 • மாணவர் மாணவியருக்கு நீதிக்கதைகள்
 • சிறுவர் சிறுமியருக்கு நீதிக்கதைகள்
 • தமிழக கிராமியக்கதைகள்
 • ஆயிரத்து ஓர் இரவுகள்
 • விக்ரமாதித்யன் கதைகள்
 • காதம்பரி காதல்கதைகள்
 • கதைக்கடல்
 • புகழ்பெற்ற மூன்று கதைகள்
 • மதனகாமராஜன் கதைகள்
 • மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு
 • மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்
 • முல்லை கதைகள்
 • வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்
திருக்குறள் ஆய்வுகள்
 • திருக்குறளின் பெருமை
 • திருக்குறளின் அறிவுரைகள்
 • திருக்குறள் உவமைகள்
 • திருக்குறள் முத்துக்கள்
 • திருக்குறள் கூறும் குடும்ப வாழ்க்கை
 • திருக்குறள் கூறும் இன்ப வாழ்க்கை
 • திருவள்ளுவர் அருளிய திருக்குறள்
பொதுநூல்கள்
 • அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
 • இன்பம்
 • தமிழ்ச்சொல் விளக்கம்
 • தமிழர் இனிய வாழ்வு
 • நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள்
 • பஞ்சாயத்து நிர்வாக முறை
 • பார் புகழும் பாவேந்தர்
 • பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து
 • புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்
 • புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்
 • பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்
 • பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்
 • மனம்போல வாழ்வு
வாழ்க்கை வரலாறு
 • தமிழ்த்தாத்தா உவேசா
 • நபிகள் நாயகம்
 • வேடிக்கைமனிதர் புதுமைப்பித்தன்
 • உலகஜோதி புத்தர்
 • தமிழர் தளபதி வஉசி
 • தமிழ்ப்பெரியார் திருவிக
 • தமிழகம் தந்த மபொசி
 • புரட்சிக்கவிஞர்
 • பார்புகழும் பாவேந்தர்
 • பாவேந்தருக்கு புகழஞ்சலி
 • பாரதியார் பெருமை
 • பாரதியார் விருந்து
நாவல்சுருக்கங்கள்
 • அன்னா கரீனினா
 • அம்மா
 • மேடம் பவாரி
 • மறுமலர்ச்சி
 • பெண்வாழ்க்கை
 • அதிசய மாளிகை
 • நான்கு நண்பர்கள்
 • ஐந்துசகோதரிகள்
 • நாநா
 • இன்பமும் துன்பமும்
 • வாடாமல்லிகை
 • குற்றமும் தண்டனையும்
 • ஷேக்ஸ்பியர் கதைகள்
 • யாமா
 • போரும் காதலும்
 • சீனத்து மங்கை

முல்லை முத்தையா நூல்கள் முழுப்பட்டியல் - கீற்று.காம்

உசாத்துணை