under review

பரிபாடல்

From Tamil Wiki
Image .jpg

பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது ஒரு பண்ணிசை இலக்கியம். ‘பரிபாட்டு’ என்னும் பெயராலும் இது வழங்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் தோன்றிய ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்திற்கு பரிபாடலே பக்திச் சுவையில் முன்னோடி.

பெயர்க்காரணம்

பரிபாடல் என்னும் பாவகையில் இயற்றப்பெற்றமையால் இந்நூல் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. பரிந்து செல்லும் ஓசையுடைய (வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களுக்கும், பல்வேறு அடிகளுக்கும் பரிந்து இடமளிக்கும்) தன்மையால் இப்பாவகை 'பரிபாடல்' எனப் பெயர் பெற்றது. பரி(குதிரை) போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்டதால் இப்பெயர் அமைந்ததாகக் கருதப்படுகிறது. எட்டுத்தொகை நூல்களில் பாவகையால் பெயர் அமைந்தவை கலித்தொகையும் பரிபாடலும்.

தொல்காப்பியர் கூறும் பரிபாடலுக்கான இலக்கணம்
  • நான்கு பாக்களின் உறுப்புகளும் கொண்ட பாடல்.
  • வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும்.
  • வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.
  • கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும்.
  • பாடுபொருள் அகத்திணை சார்ந்ததாக இருக்கும்
  • 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.

தொல்காப்பியர், இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் அனைவரும் பரிபாடல் என்னும் பாவகையில் தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றிவரும் என்று குறிப்பிடுகின்றனர்.

சங்கத்தொகை நூலான பரிபாடல் பெரிதும் தோத்திரப் பாடல்களாகவே அமைந்துள்ளது. அகப்பொருளும், புறப்பொருளும் பயின்று வருகின்றன. எனவே"தொல்காப்பியர்க்குப் பிற்பட்ட காலத்தில் புறம் பற்றிய செய்திகளும் பரிபாடலில் பாடப்பெற்றன என்பது இப்பாக்களால் தெரிகின்றது" என்று மா. இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார்.

காலம்

பரிபாடல் தோன்றிய காலம் பற்றி அறிஞர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. எஸ். வையாபுரிப் பிள்ளை அதிக வடசொற்கள் இடம்பெறுவது, பரிபாடல்களைப் பாடிய புலவருள் எவரும் பிற சங்கத்தொகை நூல்களில் பாடாதது போன்ற பல காரணங்களினால் பரிபாடல் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது என்று கருதினார். இரா. இராசமாணிக்கனார் 'தமிழ்மொழி -இலக்கிய வரலாறு' நூலில் இக்கருத்துக்களை மறுத்துரைத்து பரிபாடலும் கலித்தொகையும் பொ.மு. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார். பரிபாடல்களைப் பாடிய புலவர்கள் பிறதொகை நூற்பாக்களைப் பாடிய புலவர்களே எனக் கொண்டாலும், வேறானவர் எனக் கொண்டாலும், அவர்கள் காலம் பொ.யு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதி என்றும் அதனால் பரிபாடல் சங்க காலத்தில் இயற்றப்பட்டதே என்றும் குறிப்பிடுகிறார்.

பாடிய புலவர்கள்

பாடல்

எண்

பாடியவர் பாடுபொருள் அடிகள் இசை வகுத்தவர் பண்
1 அறிய முடியவில்லை திருமால் 65 அறிய முடியவில்லை
2 கீரந்தையார் திருமால் 76 நன்னானகார் பாலையாழ்
3 கடுவனிள எயினனார் திருமால் 94 பெட்டனாகனார் பாலையாழ்
4 கடுவனிள எயினனார் திருமால் 73 பெட்டனாகனார் பாலையாழ்
5 கடுவனிள எயினனார் செவ்வேள் 81 கண்ணனாகனார் பாலையாழ்
6 நல்லந்துவனார் வையை 106 மருத்துவன் நல்லச்சுதனார் பாலையாழ்
7 மையோடக் கோவனார் வையை 86 பித்தாமத்தர் பாலையாழ்
8 நல்லந்துவனார் செவ்வேள் 130 மருத்துவன் நல்லச்சுதனார் பாலையாழ்
9 குன்றம்பூதனார் செவ்வேள் 130 மருத்துவன் நல்லச்சுதனார் பாலையாழ்
10 கரும்பிள்ளைப் பூதனார் வையை 131 மருத்துவன் நல்லச்சுதனார் பாலையாழ்
11 நல்லந்துவனார் வையை 140 நாகார் பாலையாழ்
12 நல்வழுதியார் வையை 102 நந்தாகனார் பாலையாழ்
13 நல்லெழினியார் செவ்வேள் 64 - நோதிறம்
14 கேசவனார் செவ்வேள் 32 மருத்துவன் நல்லச்சுதனார் பாலையாழ்
15 இளம்பெருவழுதியார் திருமால் 66 மருத்துவன் நல்லச்சுதனார் நோதிறம்
16 நல்லழிசியார் வையை 55 மருத்துவன் நல்லச்சுதனார் நோதிறம்
17 நல்லழிசியார் செவ்வேள் 53 மருத்துவன் நல்லச்சுதனார் நோதிறம்
18 குன்றம்பூதனார் செவ்வேள் 53 மருத்துவன் நல்லச்சுதனார் காந்தாரம்
19 நப்பண்ணனார் செவ்வேள் 106 மருத்துவன் நல்லச்சுதனார் காந்தாரம்
20 நல்லந்துவனார் வையை 111 மருத்துவன் நல்லச்சுதனார் காந்தாரம்
21 நல்லச்சுதனார் செவ்வேள் 70 கண்ணகனார் காந்தாரம்
22 அறிய முடியவில்லை 45 அறிய முடியவில்லை

நூல் அமைப்பு

பரிபாடலில் திருமாலுக்கு 8, செவ்வேளுக்கு 31, வைகைக்கு 26, மதுரைக்கு 4, கொற்றவைக்கு 1 என 70 பாடல்கள் இருந்த்தாக இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது.

திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்.

இன்று இருப்பவை திருமாலுக்கு 6,முருகனுக்கு 8, வைகைக்கு 8 பாடல்கள் என 22 பாடல்கள். மேலும் தனிநிலையில் கிடைத்த 11 பாடல்கள் இந்த நூலினதாக இருக்கலாம் என்னும் கருத்தோடு ‘பரிபாடல் திரட்டு’ என்னும் தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. பரிபாடல் அகப்பொருளும் புறப்பொருளும் இணைந்த நூல்.

பரிபாடலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் (1, 22 நீங்கலாக) ஆசிரியர் பெயர், துறை, பண், பண் வகுத்தோர் பெயர் ஆகிய குறிப்புகள் உள்ளன. பரிபாடலில் அமைந்துள்ள பண்களின் அமைதி கருதியே பரிபாடலின் அமைப்புமுறை அமைந்துள்ளது.

மதுரை நகரையும், மதுரையையொட்டி ஒடுகின்ற வையை(வைகை) ஆற்றையும், திருபரங்குன்றத்தையும், திருமாலிருங் குன்றத்தையும் பாடுபொருளாகக் கொண்டு பரிபாடல் எழுந்துள்ளது என்பதனால் இந்நூலினை மதுரையைப் பற்றி எழுந்த நூல் எனலாம்.வையை(வைகை)யைப்‌ போற்றும் செய்யுட்கள்‌, அதனை ஆறாகக்‌ கொண்டு, அதன்‌ அழகை வியந்து போற்றாமல்‌, அதனை ஓரு நீர்த்‌ தெய்வமாகவே கொண்டு, அதனருளை வேண்டிப்‌ போற்‌றுகின்றன.

திருமாலின் தோற்றப்பொலிவு, திருமால் கண்ணனாக ஆயர்பாடியில் ஆய்ச்சியரோடு ஆடிய குரவைக்கூத்து,(பின்னாளில் குடக்கூத்து (3:83-85) எனப்பட்டது), திருமாலின் அவதாரப் பெருமைகள் (ஐந்து அவதாரங்கள் மட்டும் கூறப்பட்டுள்ளன) , அவனது அருள் போன்றவை இப்பாடல்களில் கூறப்படுகின்றன.

சங்க இலக்கியங்களில் மற்ற நூல்களைக் காட்டிலும் பரிபாடலிலேயே கந்தவேளைப் பற்றிய செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. பரிபாடலில் கந்தவேள் அனைவருக்கும் அருளும் தெய்வமாகவும், சூரனையழித்த தேவசேனாபதியாகவும் சித்தரிக்கப்பட்டுளார். பரிபாடலில் மற்ற தலங்களைவிட பரங்குன்றம் மட்டும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பரிபாடல் விவரமாகக் கூறும் முருகனது பிறப்பு வரலாறு கந்த புராணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது.

பரிபாடலில் ஒன்பது வையை(வைகை)ப்பாடல்கள் உள்ளன. அவற்றில் ஏழு பாடல்கள் முழுமையாகவும் ஒருபாடல் சிதைவடைந்த நிலையிலும் மற்றையது திரட்டுக்களில் இருந்து பெற்றுக்கொண்ட தனிப்பாடல்களும். வைகையைக் குறித்த செய்யுட்கள்‌ அதனை ஓரு நீர்த்‌ தெய்வமாகவே போற்றின. இவற்றை அகப்பாடல்களாகக் கருதியே துறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாண்டியனின் ஆட்சிச்சிறப்பு, கொடைச்சிறப்பு, மதுரையின் சிறப்புக்கள் கூறப்படும் பகுதிகளில் புறத்திணைக்குரிய பண்புகள் உள்ளன. வைகையின் வரவும் வளம், நீராடுவோர் இயல்புகள், நீர்ப்பண்பாடுகள், அகப்பொருள் - புறப்பொருள் தழுவிய செய்திகள், வையையை வாழ்த்துதல் ஆகியன வையைப் பாடல்களின் பொதுவான அமைப்பாக அமைந்துள்ளன. தற்காலத்தில் 'ஆடிப்பெருக்கு' எனப்படும் புதுப்புனலின் வரவும் கூறப்படுகிறது. திருவாதிரை அன்று தொடங்கி வைகையில் முதிய பெண்கள் முறைமை கூறி வழிகாட்ட கன்னியர் 'அம்பா ஆடல்' என்னும் தை நீராடிய குறிப்பு காணப்படுகிறது.

சிறப்புகள்

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே
பரிபாட் டாயிரு பாவினும்
உரிய தாகும் என்மனார் புலவர் -அகம்.: நூ. 51

என்கிற தொல்காப்பிய அகத்திணை நூற்பா அகப்பொருளை நாடக வழக்கினும், உலக வழக்கிலும் பொருத்தி அழகுறப் பாட உரியன கலிப்பாவும் பரிபாடலுமே எனக் கூறுகிறது.

பிற்காலத்தில் சைவ சமயக் குரவர் நால்வர், ஆழ்வார்கள் ஆகியோர் பாடிய பக்தி இலக்கியங்களுக்கு பரிபாடலே முன்னோடியாகக் கருதப்படுகிறது.

பண்டைத் தமிழ் நிலத்தின் வாழ்வியல், ஆன்மிகம் போன்ற பல செய்திகளை பரிபாடல் அறியத் தருகிறது.

பாடல் நடை

அனைத்தும் நீயே

பாடல் : 13 பாடியவர் : நல்லெழிநியார்

சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடுபோர் அண்ணால்!
அவை அவை கொள்ளும் கருவியும் நீயே:
முந்து யாம்கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே:
மூன்றின் உணரும் தீயும் நீயே;
நான்கின் உணரும் நீரும் நீயே,
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே,
அதனால், நின்மருங்கின்று-மூ-ஏழ் உலகமும்,
மூலமும் அறனும் முதன்மையின் இகந்த
காலமும் விசும்பும் காற்றோடு கனலும்(13)

திருமால்

பாடல்: 2 பாடியவர் : கீரந்தையார்

தொல்முறை இயற்கையின் மதியொ....
... ... ... ... ... ... ... ... மரபிற்று ஆக.
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல,
கருவளர் வானத்து இசையின் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;
செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுது.

செவ்வேள்

பாடல்:14 பாடியவர்:கேசவனார்

கறையில்‌ கார்மழை பொங்கி யன்ன
நறையின்‌ நறும்புகை நனியமர்ந்‌ தோயே! 20
அறுமுகத்‌ தாறிரு தோளால்‌ வென்றி
நறுமலர்‌ வள்ளிப்‌ பூநயந்‌ தோமே!
கெழீஇக்‌ கேளிர்‌ சுற்ற நின்னை
எழீஇப்‌ பாடும்‌ பாட்டமர்ந்‌ தேயே!
"பிறந்த ஞான்றே நின்னை உட்கிச்‌ ட 2.
சிறந்தோர்‌ அஞ்சிய சீ ருடையோயே!
இருபிறப்‌ பிருபெயர்‌ ஈர நெஞ்சத்து
... ஒருபெயர்‌ அந்தணர்‌ அறனமர்ந்‌ தோயே!
அன்னை யாகலின்‌ அமர்ந்துயாம்‌ நின்னைத்‌
துன்னித்‌ துன்னி வழிபடு வதன்பயம்‌
இன்னு மின்னுமவை ஆகுக
தொன்முதிர்‌ மரபின்‌ புகழினும்‌ பலவே!

வந்தடைந்த புதுப் புனல்-வைகை

பாடல்:11 பாடியவர் : நல்லந்துவனார்

விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்பு
எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து
தெருவிடைப் படுத்தமூன்று ஒன்பதிற் றிருக்கையுள்
உருகெழு வெள்ளிவந் தேற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்பப்; பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்தப்; புலர்விடியல்
அங்கி உயர்நிற்ப அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்குப் பாலெய்த ; இறையமன்
வில்லிற் கண்டமகரம் மேவப்; பாம்பொல்லை
மதியம் மறைய வருநாளில்,வாய்ந்த
பொதியின் முனிவன் புரைவரைக் கீறி
மிதுனம் அடைய விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைகென ; இவ்வாற்றான்
புரைகெழு சையம் பொழிம்ழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்

உசாத்துணை


✅Finalised Page