நல்லச்சுதனார்
நல்லச்சுதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று பரிபாடலில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
நல்லச்சுதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். அச்சுதன் என்னும் இயற்பெயர் உடையவர். அச்சுதன் என்ற பெயர் திருமாலின் நாமங்களில் ஒன்று. எனவே இவர் வைணவ சமயத்தாராக இருக்க வேண்டும் என கருதப்படுகிறது. வைணவராக இருந்தும் சமய வேற்றுமை பாராது முருகக் கடவுளை பாடியதாலும் புலமையில் சிறந்து விளங்கியதாலும் நல் அடைமொழி பெற்று நல்லச்சுதனார் என அழைக்கப்பட்டார்.
இலக்கிய வாழ்க்கை
நல்லச்சுதனார் பாடிய பாடல் பரிபாடலில் 21-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. திருப்பரங்குன்றத்தில் இருக்கும் முருகக் கடவுளின் பெருமைகளை வாழ்த்தி, முருகன் அருளால் அங்கு வரும் மக்கள் அடையும் மகிழ்ச்சிக்குரிய செயல்களை வர்ணித்தும் பாடியதாக பரிபாடல் 21 அமைந்துள்ளது. இப்பாடலுக்கு கண்ணகனார் காந்தார பண்ணில் இசையமைத்தார்.
நல்லச்சுதனார் புலவராக மட்டுமல்லாமல் பாடல்களுக்கு இசையமைக்கும் வல்லுனராகவும் செயல்பட்டுள்ளார். நல்லச்சுதனார் பரிபாடலில் நல்லழிசியார் பாடிய 16 ஆம் பாடலுக்கு நோதிறப் பண்ணிலும் குன்றம் பூதனார் பாடிய 17 மற்றும் 18-ம் பாடல்களுக்கு காந்தார பண்ணிலும் நல்லந்துவனார் பாடிய 20-ம் பாடலுக்கு காந்தாரப் பண்ணிலும் இசை வகுத்துள்ளார்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
முருகக் கடவுளின் சிறப்புகள்
- முருகன் யானையை தன் வாகனமாக கொண்டிருந்தார். அந்த யானை பகைவரை போரில் அழித்த போது ஏற்பட்ட தீயை தன் மத்தகத்தில் தாங்கியது.
- முருகனின் கால்கள் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தாமரை மலரும் குளமானது மறைநூல்களை தன்னுள் வைத்திருக்கும் சிறப்புத்தன்மை வாய்ந்ததாக போற்றப்பட்டது.
- முருகனின் ஆடையாக இருப்பது மயிற்பீலி. பாம்பு தோலால் உரித்து செய்யப்பட்ட ஆடையை போல மயிலில் இருந்து கொணரப்பட்டது.
- முருகக் கடவுள் சூரபத்மனை கொன்றதும் கிரவுஞ்சம் என்னும் அசுரப்பறவையை அழித்ததுமான வேலை தனது ஆயுதமாக கொண்டவர்.
- முருகக் கடவுள் உருண்டு திரண்ட கடம்பூ தழைகளும் சேர்த்து கட்டப்பட்ட கடம்ப மாலையை அணிந்துள்ளார்.
- முருகனின் அமரும் பீடமாக சான்றோரின் நாக்கு இருக்கிறது. அவனது இடையணி ஏழாக வளைந்து கிடக்கும் மேகலையாகும்.
- முருகக் கடவுள் பன்னிரு கையும் ஆறு முகமும் கொண்ட தோற்றத்தில் விளங்கினார்.
திருப்பரங்குன்றத்து முருகக் கடவுளை வணங்கும் மக்களின் நிலை
- திருப்பரங்குன்றத்தில் ஏறுபவர்கள் இடையில் பொன்னால் செய்த ஒட்டியாணமும் மார்பில் முத்துமாலையும் அணிந்து, சூழ ஒலிக்கும் துடி இசைக்கருவியின் தாளத்திற்கேற்ப ஆடியபடியே வருகின்றனர். அவர்கள் காய்ச்சி நறா என்னும் மதுவை அருந்தியது போல் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.
- சில பெண்கள் தம் கணவர்களுடன் பிணங்குகிறார்கள். வேறு சிலர் முழங்காலிட்டு அமர்ந்து கண்ணாடியில் தமது உருவத்தை பார்த்து ரசிக்கின்றனர்.
திருப்பரங்குன்றத்தின் தோற்றம்
- மயில்கள் ஆட்டமும் தும்பிகள் பறப்பதும் வண்டுகள் ரீங்காரமிடுவதும் அருவிகள் கொட்டும் ஓசையும் என குன்றத்தில் பலவித ஓசைகள் நிறைந்திருந்தன.
- ஆண்கள் மார்பில் அணிந்த சந்தனத்தின் மணமும் பெண்களின் தூபமிட்ட கூந்தல் மணமும் முருகக் கடவுளுக்கு எடுத்த தூப புகையின் மணமும் குன்று முழுக்க நிரம்பியிருந்தது.
- குன்றத்து கோயிலானது தாழை மலர் தோரணங்களோடு கோதை மாலைகளும் இணைத்து அழகுற அணி செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்கு வந்த மகளிர் ஒய்யாரமாக அசைந்தாடி நடந்து வந்தனர்.
- காதலர்களாகிய ஆணும் பெண்ணும் குன்றத்தில் அமைந்த சுனையில் கூட்டாக நீந்தி திளைத்து மகிழ்ந்தனர். கணவர்களும் மனைவிகளும் தம்மிடையே பிணக்குற்றனர்.
பாடல் நடை
பரிபாடல் - 21
- பாடல் வகை: கடவுள் வாழ்த்து பண்: காந்தாரம்
ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி,
பொரு சமம் கடந்த புகழ் சால், வேழம்.
தொட்டதை தைப்பு அமை சருமத்தின், தாள் இயை தாமரை
துப்பு அமை துவர் நீர்த் துறை மறை அழுத்திய,
வெரிநத் தோலொடு, முழு மயிர் மிடைந்த,
வரி மலி அர உரி வள்பு கண்டன்ன,
புரி மென் பீலிப் போழ் புனை அடையல்.
கையதை கொள்ளாத் தெவ்வர் கொள் மா முதல் தடிந்து,
புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல்;
பூண்டதை சுருளுடை வள்ளி இடை இடுபு இழைத்த
உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார்.
அமர்ந்ததை புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி,
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை
அரை வரை மேகலை, அணி நீர்ச் சூழி,
தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம்.
'குன்றத்து அடி உறை இயைக!' எனப் பரவுதும்
வென்றிக் கொடி அணி செல்வ! நிற் தொழுது.
......................................................
நன்று அமர் ஆயமோடு ஒருங்கு, 'நின் அடி உறை
இன்று போல் இயைக!' எனப் பரவுதும்
ஒன்றார்த் தேய்த்த செல்வ! நிற் தொழுதே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- பரிபாடல் - 21:vaiyan blogspot
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Mar-2025, 10:18:14 IST