under review

நல்லந்துவனார்

From Tamil Wiki

நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்க இலக்கிய பாடல்களில் நல்லந்துவனார் பாடியனவாக 39 பாடல்கள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

அந்துவன் என்னும் பெயரைக்கொண்டு இவர் சேரர் குடியைச் சேர்ந்தவர் எனக் கொள்ளலாம். நல்லந்துவனார் கலித்தொகைக் கடவுள் வாழ்த்தில் சிவனையும், பரிபாடலில்(8) செவ்வேளையும், நெய்தற் கலியில் (2, 6, 28) திருமாலையும் புகழ்ந்து பாடியிருப்பதால் சமயப் பொதுமை உடையவர் என்று தெரிகிறது. கால ஆய்வுக்குப் பயன்படும் இவர்தம் பதினோராம் பரிபாடல் இவர்தம் வானநூல் அறிவைப் புலப்படுத்தும்.

இலக்கிய வாழ்க்கை

சங்க இலக்கிய பாடல்களில் நல்லந்துவனார் பாடியனவாக 39 பாடல்கள் உள்ளன. அவை:

இவர் பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் அகத்திணை சார்ந்தவை. பதிற்றுப்பத்திலும் புறநானூற்றிலும் இவரது பாடல்கள் இடம் பெறாமையின் இவரை அகத்திணைப் புலவர் எனலாம். நெய்தல் திணை பாடுவது இவரது சிறப்பு எனப் புகழ்பெற்றாலும் குறிஞ்சி, பாலைத் திணைகளிலும் பாடல்கள் பாடியுள்ளார்.

சிறப்புகள்

நல்லந்துவனார் செவ்வேள்மீது பாடிய பரிபாடலை, மதுரை மருதன் இளநாகன் என்னும் புலவர் "அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை" என்று குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். (அகநானூறு 59)

நல்லந்துவனார் பாடல்களில் சொல்லப்பட்ட சொல் விளக்கங்கள் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.

பிற இலக்கியங்களில் பயின்று வரும்
நல்லந்துவனார் பாடல்கள் பிற நூலில் பயின்றவை பயின்ற நூல்
உயிரினுஞ் சிறந்தன்று நாண் (கலித்தொகை 147) உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்பு சிறந்தன்று தொல்காப்பியம், களவியல் 1059
வேண்டுதல் வேண்டியாங்கு எய்துதல் வாய் எனின் யாண்டும் உடையான் இசை – கலித்தொகை 143 வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும் திருக்குறள் 265
விழிக்குங்கால் மற்றுமென் நெஞ்சத்துள் ஓடி ஒளித்தாங்கே துஞ்சாநோய் செய்யும் அறனிலாளன் - கலித்தொகை 144 துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து திருக்குறள் 1218
பிறர் நோயும் தந்நோய்போற் போற்றி அறன்றிதல் – கலித்தொகை 139 அறிவினான் ஆகுவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாக்கடை திருக்குறள் 315
நோக்குங்கால் நோக்கின் அணங்காகும் சாயலாய் – கலித்தொகை 131 யான் நோக்குங்காலை நிலன் நோக்கும், நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் திருக்குறள் 1094
காமமும் கௌவையும் என்றிவை வலிதின் உயிர்க் காவாத் தூங்கியாங்கு – கலித்தொகை 142 காமமும் நாணும் உயிர்க் காவாத் தூங்கும் என் நோனா உடம்பின் அகத்து திருக்குறள் 1163
மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை – பரிபாடல் 20 மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என்று (கோவலன் மாதவியைப் பிரிந்தான்) சிலப்பதிகாரம் கானல்வரி
சங்க இலக்கியத்தில் இடம்பெறும் விலங்குகள்

சங்க இலக்கியங்களில் காணப்படும் அபூர்வமான விலங்குகளின் தன்மை நல்லந்துவனார் பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.

இசைக்கு மயங்கும், கனத்தஓசை கேட்டால் மிரளும் அசுணமா என்னும் விலங்கு பற்றியும் வேடர்கள் அசுணமாவை வேட்டையாடும் முறை பற்றியும்

மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
அறை கொன்று மற்று அதன் ஆருயிர் எஞ்ச
பறை அறைந்தாங்கு ……. கலித். 143 : 10 - 12

அன்றிலைப் போன்றே இணைபிரியாது வாழும் நீர்விலங்கான மகன்றிலைப் பற்றியும்

அடியோர் மைந்தர் அகலத்து அகலா
அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,

உலகியல்

நல்லந்துவனாரின் பாடல்களில் உலகியல் பற்றி குறிப்பிடும் சில சொற்றொடர்கள்

  • பாம்பும் அவைப்படின் உய்யுமாம் ( கலித்தொகை 140)
  • பூரிய மாக்கள் உண்பது மண்டி நார் அறி நறவம் உவப்ப (பரிபாடல் 6)
  • தகவுடை மங்கையர் சான்றாண்மை, சான்றோர் இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் (பரிபாடல் 20)
  • மாலை அணிய விலை தந்தான், மாதர் நின் கால சிலம்பும் கழற்றுவான் (பரிபாடல் 20)
நீதி நெறி

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் போற்றுதல் (கலித்தொகை 33)

நன்னெறி

நல்லந்துவனாரின் பாடல்களில் நன்னெறி பற்றி குறிப்பிடும் சொற்றொடர்கள்;

  • தம்புகழ் கேட்டார்போல் தலைசாத்து மரம் துஞ்ச ( கலித்தொகை 119)
  • அறஞ்செய்யான் --- நெஞ்சம்போல் --- இருள் தூர்பு ( கலித்தொகை 120 )
  • நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ( கலித்தொகை 125)
  • அரசன் பின் அல்லது --- அறநெறி நிறுக்கல்லாது ( கலித்தொகை 129)
உலகியல்

நல்லந்துவனாரின் பாடல்களில் உலகியல் பற்றி குறிப்பிடும் சில சொற்றொடர்கள்

  • பாம்பும் அவைப்படின் உய்யுமாம் ( கலித்தொகை 140)
  • பூரிய மாக்கள் உண்பது மண்டி நார் அறி நறவம் உவப்ப (பரிபாடல் 6)
  • தகவுடை மங்கையர் சான்றாண்மை, சான்றோர் இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் (பரிபாடல் 20)
  • மாலை அணிய விலை தந்தான், மாதர் நின் கால சிலம்பும் கழற்றுவான் (பரிபாடல் 20)
மெய்யுணர்வு
  • அரிதினின் தோன்றிய யாக்கை ( கலித்தொகை 141)
  • தொல்வினைக்கு என் பேதுற்றனை ( நற்றிணை 88)
உவமைகள்

நல்லந்துவனாரின் பாடல்களில் பயின்று வந்துள்ள உவமைகளில் சில;

  • செவ்வியாழ் நரம்பன்ன கிளவியார் ( கலித்தொகை 118)
  • உப்பியல் பாவை உறை உற்றது போல் ( கலித்தொகை 138)
  • மருந்து அறைகோடலின் கொடிது --- தலைவன் கைவிடல் ( கலித்தொகை 129)
  • கல்லாது முதிர்ந்தவன் கண்ணில்லா நெஞ்சம்போல் --- இருள் வர ( கலித்தொகை 130)
  • அல்லது கொடுப்பவன் அருள் கொண்ட முகம் போல --- மதி சீப்ப ( கலித்தொகை 149)
  • அறுகு பதியா அம்பி (பரிபாடல் 6)
புராணக் கதை நிகழ்வுகள்
  • நேமியான் நிறம் போல இருள்வர ( கலித்தொகை 119)
  • ஆவிரங்கண்ணி நெடியோன் மகன் (முருகன்) ( கலித்தொகை 140)
  • மாயவன் மார்பில் திருப்போல அவள் சேர ( கலித்தொகை 144)
அரச நீதி

நல்லந்துவனாரின் பாடல்களில் அரசியல் பற்றி குறிப்பிடும் சொற்றொடர்கள்;

  • போர்வல் வழுதிக்கு அருந்திறை போல ( கலித்தொகை 141)
  • முரைசு மூன்று ஆள்பவர் – கலித்தொகை 132
  • தென்னவற் தெளித்த தேஎம் போல இன்னகை எய்தினன் ( கலித்தொகை 143)
தமிழ்ச்சங்கம் பற்றிய குறிப்புகள் (பரிபாடல் 6)
  • மாசில் பனுவற் புலவர் புகல் புலநாவிற் புனைந்த நன்கவிதை
  • தமிழ்வையைத் தண்ணம்

பாடல் நடை

அகநானூறு 43

திணை:நெய்தல்

கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி,
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங்கி,
மை இருங் கானம் நாறும் நறு நுதல், 10
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை
நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும்
அளியரோ அளியர் தாமே அளி இன்று
ஏதில் பொருட்பிணிப் போகி, தம்
இன் துணைப் பிரியும் மடமையோரே!

நற்றிணை

திணை:குறிஞ்சி

யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?
வருந்தல்; வாழி! தோழி! யாம் சென்று
உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்
தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது,
கண்ணீர் அருவியாக
அழுமே, தோழி! அவர் பழம் முதிர் குன்றே.

உசாத்துணை


✅Finalised Page