கேசவனார்
கேசவனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் பரிபாடலில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கேசவனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கேசவன் என்பது திருமாலின் பெயர்களில் ஒன்று.
இலக்கிய வாழ்க்கை
கேசவனார் பாடிய ஒரு பாடல் பரிபாடலில் 14-வது பாடலாக அமைந்துள்ளது. செவ்வேளாகிய முருகக் கடவுளைக் குறித்து இசை அமைத்து நோதிறம் பண்ணில் பாடியுள்ளார். குறிஞ்சி திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
குன்ற சிறப்பு
- முருகன் குடிகொண்டுள்ள குன்றத்தில் கார் காலம் தோன்றி மேகங்கள் கூடி முழங்கி மழை பொழிந்தது.
- நீர் நிறைந்த சுனைகளில் பூக்கள் மலர்ந்தன. நீர் நிலைகளுக்குப் பக்கத்தில் வளைந்த காந்தள், கொடி விட்டுப் படர்ந்திருக்கும் தோன்றி, பவளம் போல் சிவந்த பூக்கள் முதலானவை மலர்ந்தன. கொன்றைப் பூக்கள் பொன்னிறத்தில் இருந்தன. வேங்கைப் பூக்கள் அகன்ற பாறைகளில் கொட்டின.
- மணக்கும் கடம்ப மலரில் அமர்ந்து வண்டுகள் தேனை உண்டு ரீங்காரமிட்டது, இசைப்பண்ணை ஒத்து இருந்தது.
- முருகேறி ஆடும் மகளிரின் தோள்கள் மலையடுக்கங்களில் இருக்கும் மூங்கிலைப் போன்று விளங்கின.
- வாகைப் பூப் போன்ற கொண்டையுடன் ஆடும் மயில் அகவும் ஓசை மணந்து பிரிந்து நிற்பவர்களை, "பிரிந்து நிற்காமல் கூடுங்கள்" என்று குரல் கொடுப்பது போல் இருந்தது.
முருகனின் வீரம்
- சூரபத்மனை வேல் - படை கொண்டு வென்றதும் பிறக்கும் போதே இந்திரன் முதலிய தேவர்கள் அச்சம் கொள்ளுமளவு வலிமையுடன் பிறந்ததும் ஆறு முகமும் பன்னிரு தோள்களும் பெற்றிருக்கும் தோற்றத்தையும் வள்ளியை மணம் புரிந்து கொண்டதும் இரண்டு பிறப்பும், இரண்டு பெயரும், ஈர நெஞ்சமும் கொண்ட அந்தணர் செய்யும் அறத்தில் நிலைநிற்றலும் சொல்லப்பட்டுள்ளது.
பாடல் நடை
பரிபாடல் - 14
- திணை:குறிஞ்சி
- துறை: பருவம் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, முருகவேளைப் பரவுவாளாய், 'இப் பருவத்தே தலைமகன் வரும்' என்பதுபடத் தோழி வற்புறுத்தியது. .
கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே;
தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே;
அடியுறைமகளிர் ஆடும் தோளே,
நெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே;
வாகை ஒண் பூப் புரையும் முச்சிய
தோகை ஆர் குரல், மணந்து தணந்தோரை,
'நீடன்மின் வாரும்' என்பவர் சொல் போன்றனவே;
நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன;
மெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின,
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப;
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்,
விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப்
பவழத்து அன்ன செம் பூத் தாஅய்,
கார் மலிந்தன்று, நின் குன்று.
போர் மலிந்து,
சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே!
கறை இல் கார் மழை பொங்கி அன்ன
நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே!
அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே!
கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை
எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே!
பிறந்த ஞான்றே, நின்னை உட்கிச்
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே!
இரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து,
ஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே!
அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை,
துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே!
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- பரிபாடல் - 14:vaiyyan
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2024, 10:50:32 IST