first review completed

கொல்லிப்பாவை

From Tamil Wiki
Revision as of 18:24, 15 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added display-text to hyperlinks)
கொல்லிப்பாவை முதலிதழ்

கொல்லிப்பாவை (1976) கொல்லிப்பாவை நாகர்கோயிலில் இருந்து வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ். முதன்மையாக சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் ராஜமார்த்தாண்டன் படைப்புகளுக்காக நினைவுகூரப்படுகிறது

வரலாறு

கொல்லிப்பாவை சிற்றிதழ் திருவனந்தபுரத்தில் பேராசிரியர் ஜேசுதாசனின் கீழ் இலக்கிய ஆய்வுமாணவராக இருந்த ராஜமார்த்தாண்டன் எம். வேதசகாயகுமார் உதவியுடன் வெளியிட்ட இதழ். முதல் இதழ் அக்டோபர் 1976-ல் வெளியானது. இதழுக்கு இந்தப் பெயரைத் தேர்ந்து சொன்னவர் அப்போது ராஜமார்த்தாண்டனுடன் இருந்த பிரமிள் என்று ராஜமார்த்தாண்டன் குறிப்பிட்டார். கொல்லிப்பாவை பெரிய அளவில், அதிகமான பக்கங்கள் கொண்ட ‘காலாண்டு ஏடு' ஆக வந்தது. முதல் இதழ் 52 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. 1977-ல் ஒரே ஒரு இதழ் வெளிவந்தது. வெவ்வேறு காலங்களிலாக 12 இதழ்கள் வெளிவந்து நின்றுவிட்டது. பின்னர் கட்டைக்காடு ஆர்.கே. ராஜகோபாலன் ஜூலை 1985 முதல் ஜூன் 1988 வரை எட்டு இதழ்களை வெளியிட்டார். மொத்தம் இருபது இதழ்கள் வெளியாயின.

ராஜமார்த்தாண்டன் தன் பேட்டி ஒன்றில் கொல்லிப்பாவை வெளிவந்ததை சொல்கிறார்[1]. ராஜமார்த்தாண்டன் கேரளப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராஅக இருந்த காலகட்டத்தில் 1975-ல் அ. திருமாலிந்திரசிங், ராஜமார்த்தாண்டன், அ. ராஜேந்திரன், ஆ. தசரதன் ஆகிய நால்வர் இணைந்து திரு மாலிந்திரசிங் ஆசிரியர் பொறுப்பில் கோகயம் என்ற இருமாதம் ஒருமுறை வெளிவரும் சிற்றிதழைத் தொடங்கினர். நான்காவது இதழுடன் பிப்ரவரி 1976-ல் கோகயம் வெளியீடு நிறுத்தப்பட்டது.

நாகர்கோவிலில் உமாபதி தெறிகள் இரண்டாவது இதழுக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். நெருக்கடி கால கெடுபிடிகளால் இரண்டாம் இதழைக் கலி என்னும் பெயரில் ஓவியர் சக்தி கணபதி (சுசீந்திரம்) யை ஆசிரியராகக் கொண்டு வெளியிட முயற்சி மேற்கொண்டார். அதுவும் சரிப்பட்டுவராமல் போகவே அட்டை உள்பட அச்சாகியிருந்த நாற்பது பக்கங்களையும் (சுந்தர ராமசாமியின் சிறுகதை, நகுலன் எழுதிய நீண்ட கவிதை, கிருஷ்ணன் நம்பி கட்டுரை, ஆனந்த விகடன் கேட்டுக்கொண்டதன்பேரில் ‘சாகித்திய அகாடமி பற்றி’ என்னும் தலைப்பில் சுந்தர ராமசாமி எழுதி, திருப்பியனுப்பப்பட்ட கடிதம்) ராஜமார்த்தாண்டனிடம் கொடுத்து கோகயத்தில் இணைத்து வெளியிடச் சொன்னார். கோகயம் இதழை மீண்டும் வெளியிடும் உத்தேசம் இல்லாததால் கலியை ராஜமார்த்தாண்டன் திருவனந்தபுரத்திலிருந்து வெளியிட முடிவுசெய்தார்.புதிதாக மேலும் சில விஷயங்களைச் சேர்க்கும் எண்ணத்துடன் பிரமிளுக்குக் கடிதம் எழுதினார்.அவர் ‘கலைஞனும் கோட்பாடும்’ என்ற கட்டுரையுடன், பத்திரிகையின் பெயரைக் கொல்லிப்பாவை என்று மாற்றி, அதற்கான வடிவமைப்பும் செய்து அனுப்பினார். அந்தக் கட்டுரையுடன் உமாபதி எழுதிய கவிதைகளையும் சேர்த்து அக்டோபர் 1976-ல் கொல்லிப்பாவை முதல் இதழ் வெளியானது.

கொல்லிப்பாவை இரண்டாவது இதழ் ஜனவரி – மார்ச் 1977-ல் வெளிவந்தது. 1978-ல் மட்டுமே குறிப்பிட்டபடி நான்கு இதழ்கள் வெளிவந்தன. மூன்றாவது இதழிலிருந்து 12-வது இதழ்வரை குமரி மாவட்டத்திலிருந்து இடைவெளிவிட்டு இதழ்கள் வெளிவந்தன. ஜூலை 1985 முதல் ஆர். கே. ராஜகோபாலனை ஆசிரியராகக்கொண்டு மீண்டும் வெளிவரத் தொடங்கிய கொல்லிப்பாவை காலாண்டிதழ், அவர் குறிப்பிட்டபடி எட்டு இதழ்களுடன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது

உள்ளடக்கம்

பிரமிள், சுந்தர ராமசாமி, நகுலன், வண்ணநிலவன், ந. முத்துசாமி, எஸ்.ராமானுஜம், கி. ராஜநாராயணன், தேவதச்சன், கலாப்ரியா, சுகுமாரன் ஆகியோரின் படைப்புகள் கொல்லிப்பாவையில் வெளியாயின. 1985-ல் ஒரே இதழில் பதிமூன்று கவிதைகளை சுந்தர ராமசாமி பசுவய்யா என்ற பெயரில் எழுதினார். ராஜமார்த்தாண்டன் இளம்கவிஞர்களை விரிவாக ஆராய்ந்து எழுதிய கட்டுரைகளும் முக்கியமானவை. ஜெயமோகன் இலக்கியத்தில் நுழைந்து எழுதிய முதல் படைப்பு கைதி என்னும் கவிதை 1986 கொல்லிப்பாவை இதழில் வெளிவந்தது. சுந்தர ராமசாமியின் ‘உடல்’ நாடகம் மற்றும் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம், வெங்கட் சாமிநாதனின் ‘இரண்டு தலைமுறைகளுக்கிடையில்’ கட்டுரையும் அது தொடர்பான விவாதங்களும் குறிப்பிடத்தக்கவை. எம். வேதசகாயகுமார் இதழ்களிலிருந்து பிரதியெடுத்த புதுமைப்பித்தனின் ‘சாமாவின் தவறு’, ‘நம்பிக்கை’, ‘சாளரம்’, ‘கண்ணன் குழல்’ ஆகிய சிறுகதைகள் கொல்லிப்பாவையில் மறுபிரசுரம் செய்யப்பட்ட பின்னரே புதுமைப்பித்தன் தொகுப்புகளில் அவை இடம்பெற்றன

பங்களிப்பு

கொல்லிப்பாவை சிறு வட்டத்திற்குள் மட்டும் புழங்கிய இதழ். சுந்தர ராமசாமி காலச்சுவடு இதழை தொடங்குவதற்கு முன்பு எழுத களம் அமைத்தது. முதன்மையாக எண்பதுகளில் நிகழ்ந்த இலக்கிய விவாதங்களை வெளியிட்டமையால் நினைவுகூரப்படுகிறது. வெங்கட் சாமிநாதன் எழுதிய "இரண்டு தலைமுறைகளுக்கிடையில்’ என்னும் கட்டுரையில் கோயில் கலாச்சாரம் உயர்கலையை பேணியது என்பதை மறுத்து சுந்தர ராமசாமி எழுதிய கடித வடிவிலான கட்டுரையும் அதற்கு வெங்கட்சாமிநாதனின் பதிலும் வெளிவந்தன. அதை தொடர்ந்து 'வெகுசன ரசனையும் மதமரபும்' என்ற பிரமிளின் கட்டுரை வெளிவந்தது. சிறுகதை வடிவம் பற்றிய வேதசகாயகுமாரின் கட்டுரை, நாடக வடிவம் பற்றிய எஸ்.ராமானுஜம் கட்டுரை போன்றவை விரிவான விவாதங்களை உருவாக்கியவை.

உசாத்துணை

குறிப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.